Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 256)

மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்

அல்லாதார்க்கு ஸத்தாஸம்ருத்திகள் தர்சநாநுபவ கைங்கர்யங்களாலே; இவர்க்கு மங்களாசஸநத்தாலே.

– மயர்வற மதிநலம் பெற்றவர்க ளெல்லார்க்கும் ஸத்தாஸம்ருத்திகள் பகவத் தர்சநாநுபவ கைங்கர்யங்களாலே யாகவன்றோ தோற்றுகிறது, அவ்வாகார மிவர்க்கு மொவ்வாதோ, அப்போதைக்கு மங்களாசாஸநமே யாத்ரையாக நடக்குமென்னுமிது கூடும்படி என்னென்கிற சங்கையிலே யருளிச்செய்கிறார் (அல்லாதார்க்கு) என்று தொடங்கி.

– மயர்வற மதிநலம் அருளப்பெற்ற ஆழ்வார்கள் அனைவருக்கும் உயிர் தரித்தல், வாழ்வு போன்ற பலவும் ஸர்வேச்வரனைத் தரிசிப்பது, அவனுக்கு கைங்கர்யம் செய்வது என்பதால் அல்லவோ ஏற்படுகிறது? அப்படிப்பட்ட நிலை இவருக்கும் ஒத்துப்போகும் அன்றோ? இவ்விதம் கொள்ளும்போது, திருப்பல்லாண்டு பாடுவது மட்டுமே இவருக்கு ஒரே செயலாக இருக்கும் என்று உரைப்பது எப்படி? இந்தக் கேள்விக்கு விடை அருளிச்செய்கிறார்.

ஸத்தையாவது தாங்களுளராகை. இது பகவத் தர்சநாநுபவ கைங்கர்ய காமரான மற்றை யாழ்வார்களுக்கவனைக் காணாதபோது தரிக்கமாட்டாதே, “காணவாராய்” என்றென்று கூப்பிடுகையாலே தத்தர்சநத்தாலேயாயிருக்கும்; “அவராவி துவராமுன் – அவர் வீதியொரு நாள் – அருளாழிப் புட்கடவீர்” என்று – எங்கள் ஸத்தை கிடக்கைக்கு ஜாலகரந்த்ரத்தாலேயாகிலு மொருக்கால் காணும்படி எங்கள் தெருவே யொருநாள் போகவமையுமென்று சொல் லென்கையாலே, தர்சநமே ஸத்தா ஹேது வென்னுமிடம் ஸித்தமிறே. (ஸம்ருத்தியாவது) – உளாராயிருக்கிற மாத்ர மன்றிக்கே மேலுண்டாய்ச் செல்லுந் தழைப்பு. அது அவர்களுக்கு “அந்தாமத்தன்பு”, “முடிச்சோதி” தொடக்கமானவற்றிற் போலுண்டான அநுபவத்தாலும், “ஒழிவில் கால” த்திற்படியே செய்யும் கைங்கர்யத்தாலுமா யிருக்கும். அன்றிக்கே, தர்சநாநுபவங்களிரண்டாலும் ஸத்தையும், கைங்கர்யத்தாலே ஸம்ருத்தியுமாகச் சொல்லவுமாம். அங்ஙனுமன்றிக்கே, (அந்த ஸத்தை ப்ராவண்ய கார்யமான வநுபவமில்லாதபோது குலையும்) என்று இவர்தாமே கீழே அருளிச்செய்கையாலும், நாளை விநியோகங் கொள்ளுகிறோ மென்னில், அழுகவுங்கூட ஸத்தையில்லை என்று கைங்கர்யம் ஸத்தா ஹேதுவாக வநுஸந்தாநத்திலே சொல்லுகையாலும், “கண்டு களிப்பன்” என்று தர்சநந்தான் ஸம்ருத்தி ஹேதுவாகவும் தோற்றுகையாலும், ஸத்தைக்கும் ஸம்ருத்திக்கும் மூன்று காரணமென்னவுமாம். மயர்வற மதிநலம் பெற்ற வன்று முதல் பகவத் ஸௌகுமார்யாதிகளைக் கண்டு இவற்றுக்கென் வருகிறதோ வென்று வயிறெரிந்து மங்களாசாஸநாபி நிவிஷ்டரான விவர்க்கு, மங்களாசாஸந விச்சேதம் வரில் தாமுளராக மாட்டாமையாலும், அப்படி யவிச்சிந்நமாய்ச் சொல்லுமதுதானே தழைப்புக் குடலா யிருக்கையாலும், ஸத்தையும் ஸம்ருத்தியு மிரண்டும் மங்களாசாஸநத்தாலேயா யிருக்கும்; ஆகையா லிவர்க்கு மங்களாசாஸநம் நித்யமாய்ச் சொல்லத் தட்டில்லையென்று கருத்து.

ஸத்தை என்றால் தாங்கள் உயிர் தாங்கி நிற்பது என்று பொருள். ஸர்வேச்வரனின் தரிசனம், அவன் அனுபவம், அவனுக்குக் கைங்கர்யம் போன்றவற்றைச் செய்வதை விரும்பும் மற்ற ஆழ்வார்களுக்கு, அவனைக் காண இயலவில்லை என்றபோது உயிர் தரிக்க இயலாமையும், திருவாய்மொழி (8-5-2) - காணவாராய் – என்று அழைப்பது போன்று அவனைக் காண முடிந்தால் மட்டுமே உயிர் தரிப்பது என்னும் நிலையும் ஏற்படும். திருவாய்மொழி (1-4-6) - அவராவி துவராமுன் – அவர் வீதியொரு நாள் – அருளாழிப் புட்கடவீர் - நாங்கள் உயிர் தரிக்கும் பொருட்டு, எங்கள் வீட்டில் உள்ள ஜன்னல்களின் வழியாக நாங்கள் பார்க்கும்படி, ஒரு நாளாவது எங்கள் வீடு உள்ள தெரு வழியே சென்றால் போதுமானது என்று கூறுவதற்கு ஏற்ப, அவனைக் காண்பது என்பது மட்டுமே உயிர் தரிப்பது, உயிர் தங்குவதற்கான காரணம் என்பது தெளிவாகிறது. ஸம்ருத்தி என்பது உயிர் தரிப்பது என்பது மட்டும் அல்லாமல், அதன் பின்னர் வாழ்வது என்பதாகும். இத்தகைய வாழ்வு என்பது மற்ற ஆழ்வார்களுக்கு திருவாய்மொழி (2-5) – அந்தாமத்தன்பு, திருவாய்மொழி (3-1) – முடிச்சோதி – போன்றவற்றில் ஏற்படுகின்ற அனுபவங்கள் மூலமும், திருவாய்மொழி (3-3) – ஒழிவில் காலம் – என்பதில் ஏற்படுகின்ற கைங்கர்யம் மூலமும் ஏற்படுவதாக உள்ளது. அல்லது ஸர்வேச்வரனின் தரிசனம், அனுபவம் ஆகியவற்றின் மூலம் உயிர் தங்குதலும், கைங்கர்யம் மூலம் வாழ்வும் ஏற்படுகிறது என்றும் உரைக்கலாம். அப்படியும் இல்லாமல், மூன்றாவதாகவும் ஒரு பொருள் உரைக்கலாம். சூர்ணை 114ல் - அந்த ஸத்தை ப்ராவண்ய கார்யமான வநுபவமில்லாதபோது குலையும் – என்று இவரே முன்பு அருளிச்செய்த காரணத்தாலும்; “உம்முடைய கைங்கர்யத்தை நாளை நாம் பயன்படுத்திக் கொள்கிறோம்” என்று ஸர்வேச்வரன் உரைத்தால், “இன்று நாம் இவனுக்குப் பயன்படவிலையே” என்று அழுவதற்கும் கூட தெம்பு இன்றி இருத்தலால், உயிர் தரிப்பதற்குக் கைங்கர்யம் காரணம் என்று அநுஸந்தானம் என்னும் நூல் உரைப்பதாலும்; திருவாய்மொழி (10-8-7) – கண்டு களிப்பன் - என்று ஸர்வேச்வரனைக் காண்பதே வாழ்வதற்குக் காரணம் என்று உரைப்பதாலும் தரிசனம், அனுபவம், கைங்கர்யம் ஆகிய மூன்றுமே உயிர் தரிக்கவும், வாழ்வதற்கும் காரணம் என்றாகிறது. மயர்வற மதிநலம் அருளப்பெற்ற நாள் முதலாகவே ஸர்வேச்வரனுடைய மென்மை போன்ற தன்மைகளைக் கண்டு “அவனுக்கு என்ன ஆபத்து உண்டாகுமோ”, என்று வயிறு கலங்கி, திருப்பல்லாண்டு பாடுவதிலேயே பெரும் ஆசை கொண்டவராகவே பெரியாழ்வர் விளங்குகிறார்.அப்படிப்பட்ட அவருக்குத் திருப்பல்லாண்டு பாடுவதில் ஏதேனும் தடை ஏற்பட்டால் உயிர் தரிக்கமாட்டார் என்பதாலும், இவ்விதம் தடை இன்றி இருக்கின்ற திருப்பல்லாண்டு உரைத்தல் என்பதே இவர் வாழ்வதற்குக் காரணமாக உள்ளதாலும் - பெரியாழ்வாரைப் பொறுத்தவரையில் திருப்பல்லாண்டு என்பதாலேயே இவருக்கு உயிர் தரித்தல், வாழ்தல் என்ற இரண்டும் கூடும் என்றாகிறது. எனவே இவருக்குத் திருப்பல்லாண்டு என்பது எப்போதும் உள்ளது என்று கூறுவதில் எந்தவிதமான தோஷமும் இல்லை.