Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 255)

மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்

அல்லாதவர்களைப்போலே கேட்கிறவர்களுடையவும் சொல்லுகிறவர்களுடையவும் தனிமையைத் தவிர்க்கை யன்றிக்கே ஆளுமாளாரென்கிறவனுடைய தனிமையைத் தவிர்க்கைக்காகவாயிற்று பாஷ்யகாரருமிவரு முபதேசிப்பது.

இப்படி மங்களாசாஸநத்துக்கு ஆள் தேடி ப்ரதிகூலரை யநுகூலராக்குகைக்குப் பண்ணுகிற வுபதேசம் திருப்பல்லாண் டொன்றிலுமன்றோ வுள்ளது, மேலிவ ருபதேசித்த விடங்களில் அல்லாதா ருபதேசத்திற்காட்டில் வ்யாவ்ருத்தி என்? என்கிற சங்கையிலே யருளிச்செய்கிறார் (அல்லாதவர்களைப்போலே) என்று தொடங்கி.

இவ்விதம் திருப்பல்லாண்டு பாடுவதற்காக ஆளைத் தேடியபடி ப்ரதிகூலரையும் அநுகூலராக மாற்றுவதற்கு இவர் செய்கிற உபதேசம் என்பது திருப்பல்லாண்டு என்னும் பிரபந்தத்தில் மட்டுமே உள்ளது அல்லவோ? இந்தப் பிரபந்தத்தைத் தொடர்ந்து இவர் அருளிச்செய்த பிரபந்தங்களில் உள்ள உபதேசங்களில், மற்ற ஆழ்வார்கள் செய்த உபதேசங்களை காட்டிலும் வேறுபாடு என்ன உள்ளது என்ற சந்தேகம் எழலாம். இதற்கான விடையை அருளிச்செய்கிறார்.

– அதாவது, பரோபதேசத்தில் வந்தால், மற்றுள்ள ஆழ்வார்களையும் ஆசார்யர்களையும் போலே உபதேசிக்கிறவர்த்தங் கேட்கிற ஸம்ஸாரிகளுடைய அநாத்ய ஜ்ஞாநத்தாலே நற்றுணையான பகவத்விஷயத்தை அகன்று திரிகையால் வந்த தனிமையையும், வக்தாக்களான தங்களுடைய பகவத்குணா நுஸந்தாந தசையிலே “போதயந்த: பரஸ்பரம்” பண்ணுகைக்கு உசாத்துணை யில்லாமையால் வந்த தனிமையையும் தவிர்க்கை ப்ரயோஜநமாக உபதேசிக்கையன்றிக்கே, ஸௌகுமார்யா நுஸந்தாநத்தாலே வயிறுமறுகின ஆழ்வார் ஆராய்ந்து பார்த்தவிடத்தில், அடைய அந்யபரராய்த் தோற்றுகையாலே, உபயவிபூதியிலும் பரிகைக்காளில்லை, தம் வாசியறிந்து பரிந்து நோக்குகைக்கு ஓராளு மாளுகிறிலரே யென்று பேசும்படி யிருக்கிற நிரதிசய ஸௌகுமார்ய யுக்தனான ஸர்வேச்வரனுடைய தனிமை தீர மங்களாசாஸநத்துக்கு இவர்கள் ஆளாகவேணுமென்னுமிதுவே ப்ரயோஜநமாக வாய்த்து, ப்ராமாணிகரான வாசார்யர்களில் பாஷ்யகாரரும் மயர்வற மதிநலம் பெற்றவர்களி லிவ்வாழ்வாரு முபதேசித்தருளுவ தென்கை. ஆகையால் இவ்வாழ்வார் ப்ரதிகூலரை அநுகூலராக்க உபதேசிக்குமிடமெல்லாம் மங்களாசாஸ நார்த்தமாக வென்னக் குறையில்லையென்று கருத்து. எம்பெருமானா ரென்னாதே, பாஷ்யகாரரென்றது – ஸ்ரீபாஷ்ய முகத்தாலே வேதாந்த தாத்பர்ய நிர்ணயம் பண்ணி யருளினவ ரென்னும் வைபவந் தோற்றுகைக்காக.

– “அல்லாதவர்களைப்போலே” என்றால் - மற்றவர்களுக்கு உபதேசம் செய்யும்போது மற்ற ஆழ்வார்கள் மற்றும் ஆசார்யர்கள் போன்று - என்று பொருள். “கேட்கிறவர்களுடையவும் சொல்லுகிறவர்களுடையவும் தனிமையைத் தவிர்க்கை யன்றிக்கே” என்பதன் பொருள் – இவரது உபதேசத்தைக் கேட்ட பின்னரும் ஸம்ஸாரிகள் எல்லையற்ற காலம் அறிவற்ற நிலையிலேயே உள்ளதால், தங்களுக்குச் சிறந்த துணையாக உள்ள ஸர்வேச்வரனை விட்டு அவர்கள் அகன்று செல்கின்றனர்; இதனால் அவனுக்குத் தனிமை ஏற்படுகிறது; மேலும் ஸர்வேச்வரனின் குணங்களை எண்ணியபடி ஒருவருக்கொருவர் அதனைக் குறித்துப் பேச முற்படும்போது தகுந்த துணையின்றி அடியார்களுக்குத் தனிமை ஏற்படுகிறது; இந்தத் தனிமைகளை நீக்குவது எப்படி என்று உபதேசிக்காமல், ஸர்வேச்வரனின் மென்மையை மட்டுமே எண்ணியபடி பெரியாழ்வார் உள்ளார்; ஆகவே இவர் ஆராய்ந்து பார்க்கும்போது, மற்றவர்கள் யாரும் மங்களாசாஸநம் செய்யாதவர்கள் என்றே இவருக்குத் தோன்றுகிறது. “ஆளுமாளாரென்கிறவனுடைய தனிமையைத் தவிர்க்கைக்காக வாயிற்று பாஷ்யகாரருமிவரு முபதேசிப்பது” என்றால் என்ன? திருவாய்மொழி (8-3-3) – ஆளும் - என்று கூறுவதற்கு ஏற்ப, “நித்யவிபூதி மற்றும் லீலாவிபூதி ஆகிய இரண்டிலும் உள்ளவர்களில் ஸர்வேச்வரனாகிய என்னைப் பரிவதற்கு யாரும் இல்லை; எனது மென்மையை உள்ளது உள்ளபடி அறிந்து அன்புடன் நோக்குவதற்கும் யாரும் இல்லை” என்று கூறும்படியாக இருக்கின்ற ஈடில்லாத மென்மை கொண்ட ஸர்வேச்வரனின் வருத்தம் என்பது விலகும் பொருட்டு மங்களாசாஸநம் செய்வதற்கு, மற்ற ஆழ்வார்களையும் ஆளாக்கவேண்டும் என்பதே தாங்கள் பெறும் பயன் என்று கருதினர். யார் இவ்விதம் கருதினர் என்றால் - தகுந்த ப்ரமாணங்கள் கொண்டே எதனையும் நிலைநிறுத்தும் ஆசார்யர்களில் முக்கியமானவரான ஸ்ரீபாஷ்யகாரர் மற்றும் மயர்வற மதிநலம் அருளப்பெற்ற பெரியாழ்வார் ஆகியோர் ஆவர். ஆகவே பெரியாழ்வார் ப்ரதிகூலரை அநுகூலராக மாற்ற முயற்சிக்கும்போது உபதேசம் செய்த அனைத்துமே அவர்களை மங்களாசாஸநத்தில் ஈடுபடுத்தும் முயற்சியே என்று கொள்வதில் எந்தத் தவறும் இல்லை. எம்பெருமானார் என்று உரைக்காமல் ஸ்ரீபாஷ்யகாரர் என்றது ஏன்? ஸ்ரீபாஷ்யத்தின் மூலம் வேதாந்தங்களில் கூறப்பட்ட அனைத்தையும் உள்ளது உள்ளபடி நிரூபித்து அருளியவர் என்பது புலப்படவே ஆகும்.