Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 254)
மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்
பயிநிவர்த்தகங்களுக்கு பயப்படுவது ப்ரதிகூலரையு மநுகூலராக்கிக் கொள்ளுவது, அதீத காலங்களி லபதாநங்களுக்கு உத்தரகாலத்திலே வயிறெரிவது ப்ராப்தி பலமு மிதுவே யென்பது அநிமிஷரைப் பார்த்து உறகலுறகல் என்பதாய்க் கொண்டு இதுதானே யாத்ரையாய் நடக்கும்.
– மற்றை யாழ்வார்களுக்கு மங்களாசாஸநம் கதாசித்கமாகச் செய்தே இவர்க்கு நித்யமாகைக்கு நிதான மின்னதென்று தர்சிப்பிதார் கீழ்; இதுதானிவர்க்கு நித்யமாய்ச் செல்லும்படி தன்னை வ்யக்தமாக வருளிச்செய்கிறார் மேல் (பய நிவர்த்தகங்களுக்கு) என்று தொடங்கி.
– மற்ற ஆழ்வார்களுக்கு ஸர்வேச்வரனை மங்களாசாஸநம் செய்தல் என்பது எப்போதாவது தோன்றுவதாக உள்ளதற்கும், பெரியாழ்வாருக்கு இந்த நிலை எப்போதும் உள்ளதற்கும் காரணத்தை அருளிச்செய்தார். இனி, இந்த மங்களாசாஸநம் என்பது இவருக்கு எப்போதும் உள்ளதை விரிவாக அருளிச்செய்கிறார்.
அதாவது தன் ஸௌகுமார்யத்தைக் கண்டு கலங்கி இவ்விஷயத்துக்கென் வருகிறதோவென்று மறுகுகிற விவர் பயத்தைப் பரிஹரிக்கைக்காக மல்லவர்க்கத்தை அநாயாஸேந அழித்த தோள் வலியைக் காட்ட, அந்தத் தோள் வலியை நினைத்து மதியாதே அஸுர ராக்ஷஸ யுத்தத்திலே புகுரில் என்னாகக்கடவது என்று அது தனக்கு பயப்பட்டு மங்களாசஸநம் பண்ணுவது; உண்டான அமங்களங்கள் போகைக்கும் இல்லாத மங்களங்க ளுண்டாகைக்கும் தன் கடாக்ஷமே அமைந்திருக்கிற விவள் “அகலகில்லேனிறையும்” என்று நம்மைப் பிரியமாட்டாதேயிருக்க நமக்கு வருவதொரு அமங்களங்களுண்டோ! என் செய்யப்படுகிறீர்! என்று லக்ஷ்மீ ஸம்பந்தத்தைக் காட்ட, இச்சேர்த்தி தனக்கொரு தீங்குவரிற் செய்வதென் என்றஞ்சி, “மங்கையும் பல்லாண்டு” என்று மங்களாசாஸநம் பண்ணுவது; இந்தப் பயத்தைப் பரிஹரிக்கைக்காக இச்சேர்த்திக்கொரு தீங்கு வாராதபடி கல்மதிளிட்டாப்போலே யிருக்கிற விவர்களைப் பாரீரென்று இரண்டட்டத்திலு மேந்தின ஆழ்வார்களைக் காட்ட, அவர்கள் தங்களுக்கொரு தீங்கு வரிற் செய்வதென் என்றஞ்சி, “சுடராழியும் பல்லாண்டு”, “பாஞ்சசன்னியமும் பல்லாண்டு” என்று மங்களாசாஸநம் பண்ணுவது; அநந்ய ப்ரயோஜநதயா அநுகூலரான பகவச் சரணார்த்திகளை மங்களாசாஸநத்துக்குத் துணையாகக் கூட்டிக் கொண்டவளவாலே பர்யாப்தி பிறவாமையாலே, ப்ரயோஜநாந்தர பரதயா ப்ரதிகூலரான கேவலரையும் ஐச்வர்யார்த்திகளையும் திருத்தி மங்களாசாஸநத்துக் காளாம்படி யநுகூலராக்கிக் கொள்வது; “இலங்கை பாழாளாகப் படை பொருதானுக்குப் பல்லாண்டு கூறுதும்” இத்யாதியாலே கீழ்க் கழிந்த காலத்தி லவன் செய்த அபதாநங்களுக்குப் பிற்காலத்திலே ஸமகாலத்திற் போலே வயிறெரிந்து மங்களாசாஸநம் பண்ணுவது; “சூழ்ந்திருந்தேத்துவர் பல்லாண்டு” என்று பகவத் ப்ராப்திக்குப் பலமுமிந்த மங்களாசாஸநமே யென்பது; “ஸ்நேஹா தஸ்த்தாநரக்ஷா வ்யஸநிபிரபயம் சார்ங்க சக்ராஸி முக்க்யை” என்கிறபடியே - அஸ்தாந ரக்ஷா வ்யஸநிகளாகையாலே அநிமிஷராயிருக்கிற திவ்யாயுதாழ்வார்கள் முதலானாரைப் பார்த்து குணவித்தராய் நஞ்சுண்டாரைப் போலே உந்தாமை யறியாதிருத்தல் அநுபவத்திலே யிழிந்து கைங்கர்ய பரராயிருத்தல் செய்யாதே உணர்ந்து நோக்குங்கோளென்று பலகாலும் சொல்லுவதாய்க் கொண்டு இம்மங்களாசாஸநமே வ்ருத்தியாய்ச் செல்லுமென்கை.
– ஸர்வேச்வரனின் மென்மையான திருமேனியைக் கண்டு கலங்கிய பெரியாழ்வார், “இவனுக்கு என்ன ஆபத்து வருமோ”, என்று உருகினார். இவரது அச்சத்தைப் போக்கும்விதமாக அவன் மல்லர்களை மிகவும் எளிதாக அழித்த தனது தோள் வலியைக் காண்பித்தான். இதனைக் கண்ட இவர் அந்தத் தோள்வலியைப் பாராட்டாமல், அசுரர்களும் தேவர்களும் செய்கின்ற போரின் நடுவில் இவன் புகுந்தால், இந்தத் தோள்களுக்கு என்ன ஆகுமோ என்று அச்சம் கொண்டு, இந்தத் தோள்களுக்கு மங்களாசாஸநம் செய்கிறார் (மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா - என்றது காண்க). ஒருவனுக்கு ஏற்பட்ட அமங்களங்கள் அனைத்தும் நீங்கவும், அவனிடம் இல்லாத மங்களங்கள் வந்து சேரவும் காரணமாக உள்ளவள் பெரியபிராட்டியார் ஆவாள்; அவள் நம்முடன், திருவாய்மொழி (6-10-10) – அகலகில்லேன் இறையும் என்று – என்பதற்கு ஏற்ப எப்போதும் பிரியாமல் உள்ளபோது நமக்கு ஏதேனும் அமங்களம் ஏற்படுமோ என்று மஹாலக்ஷ்மியுடனான ஸம்பந்தத்தை இவருக்குக் காண்பித்தான். உடனே இவர், “இந்தச் சேர்த்திக்கு ஒரு தீமை ஏற்பட்டால் என்ன செய்வது”, என்று எண்ணியவராக அச்சம் கொண்டு - மங்கையும் பல்லாண்டு - என்று மங்களாசாஸநம் செய்தார். – இதனைக் கண்ட ஸர்வேச்வரன் இவருக்கு ஏற்பட்ட பயத்தை நீக்க எண்ணியவனாக, “நம்முடைய இந்தச் சேர்த்திக்கு எந்தவிதமான தீமையும் ஏற்படாத விதமாக, கற்கள் கொண்டு மதிள் சுவர் எழுப்பப்பட்டது போன்று, நமக்கு இருபக்கமும் இருக்கின்ற இவர்களைப் பாரீர்”, என்று கூறி சங்கு மற்றும் சக்கரங்களைக் காண்பித்தான். இதனைக் கண்ட ஆழ்வார், “இவர்களுக்கு ஒரு தீமை ஏற்பட்டால் என்ன செய்வது”, என்று அச்சம் கொண்டவராக - சுடராழியும் பல்லாண்டு, பாஞ்சசன்னியமும் பல்லாண்டு – என்று அவற்றுக்கும் மங்களாசாஸநம் செய்தார். “ப்ரதிகூலரையு மநுகூலராக்கிக் கொள்ளுவது” என்றால் என்ன? ஸர்வேச்வரனின் திருவடிகள் தவிர மற்ற எந்தவிதமான பயன்களையும் விரும்பாமல் உள்ளதால், அநுகூலர்களாக ஸர்வேச்வரனின் திருவடிகளைப் பணிந்து நிற்பவர்களைத் தனது மங்களாசாஸநத்துக்குத் துணையாகக் கூட்டிக் கொள்கிறார் (இதனை – வாழாட்பட்டு உள்ளீரேல் – என்பதில் காண்க). ஆயினும் இவர் மனம் சமாதானம் அடையவில்லை. ஆகவே மற்ற பலன்களை எண்ணுவதால் ப்ரதிகூலராக உள்ள கைவல்ய நிஷ்டர்களையும், செல்வத்தை விரும்புகிறவர்களையும் திருத்தி, தன்னுடைய மங்களாசாஸநத்துக்குத் துணையாக நிற்கும்படியாக அவர்களையும் அநுகூலராக்குகிறார் என்று கருத்து. இதனை - ஏடு நிலத்தில் – என்ற பாசுரத்தில் காணலாம். “அதீத காலங்களி லபதாநங்களுக்கு உத்தரகாலத்திலே வயிறெரிவது” என்றால் என்ன? திருப்பல்லாண்டு (5) - பாழாளாகப் படை பொருதானுக்குப் பல்லாண்டு கூறுதும் - என்பது போன்ற பாசுரங்கள் மூலம், இதற்கு முன்பு கடந்து சென்ற காலங்களில் இவன் செய்தருளின செயல்களைக் கண்டார்; ஆனால் அதனை எண்ணி, பிற்காலத்தில், அதே காலத்தில் வாழ்கின்றவர் போன்று வயிறு கலங்கி மங்களாசாஸநம் செய்தல் என்பதாகும். “ப்ராப்தி பலமு மிதுவே யென்பது” என்றால் என்ன? திருப்பல்லாண்டு (12) – சூழ்ந்து இருந்து ஏத்துவர் பல்லாண்டே - என்று கூறுவது போன்று ஸர்வேச்வரனைப் பரமபதத்தில் சென்று கிட்டுவது என்ற பலனும் இப்படி மங்களாசாஸனம் செய்தலே ஆகும் என்று பொருள். “அநிமிஷரைப் பார்த்து உறகலுறகல் என்பதாய்” என்றால் என்ன? ஸ்ரீகுணரத்நகோசம் (24) – ஸ்நேஹா தஸ்த்தாநரக்ஷா வ்யஸநிபிரபயம் சார்ங்க சக்ராஸி முக்க்யை - ஸர்வேச்வரன் மீது கொண்ட அன்பினால், எந்தவிதமான காரணமும் இன்றி அவனைக் காப்பாற்றுவதில் மட்டுமே ஈடுபட்டு நிற்கும் சார்ங்கம் என்னும் வில், சுதர்சன சக்கரம், நந்தகம் என்ற வாள் – என்று கூறுவதற்கு ஏற்ப, ஸர்வேச்வரனின் திருக்கல்யாண குணங்களில் ஈடுபட்டு, நஞ்சுண்டவர்கள் போன்று உங்களை அறியாமல் மயங்கி நிற்பதோ அல்லது அவனை அனுபவிக்கத் தொடங்கி, கைங்கர்யம் செய்தபடி உங்களை ஈடுபடுத்தி மெய்மறந்து நிற்பதோ செய்யாமல், அவனைக் காப்பாற்றுவதில் மட்டுமே நோக்கம் கொண்டு இருங்கள் - என்று பலமுறை பெரியாழ்வார் திருமொழி (5-2-9) - உறகல் உறகல் உறகல் - என்று கூறித் திருப்பல்லாண்டு பாடுதலையே மேன்மேலும் செய்தபடி இருப்பார் என்று பொருள்.