Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 253)

மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்

அவர்களுக்கு உபய சேஷத்வத்தையுமழித்து ஸ்வரூபத்தைக் குமிழ்நீருண்ணப் பண்ணுமது, இவர்க்கு உபயவ்ருத்திக்கும் ஹேதுவாய் ஸ்வரூபத்தைக் கரையேற்றும்.

அதெங்ஙனேயென்னு மபேக்ஷையிலே யருளிச்செய்கிறார் (அவர்களுக்கு உபய சேஷத்வத்தையும்) என்று தொடங்கி.

கடந்த சூர்ணையில் கூறப்பட்ட விஷயம் எப்படி ஆகிறது என்ற கேள்விக்கு விடை அருளிச்செய்கிறார்.

– அதாவது, பகவதநுபவைகபரராய் ததலாபத்தி லாற்றாமை கரை புரளும்படியிருக்கும் மற்றை ஆழ்வார்களுக்கு “கண்ணபுரமொ ன்றுடையானுக்கடியே னொருவர்க் குரியேனோ” என்றும், “உற்றது முன்னடியார்க் கடிமை” என்றும் அநுஸந்திக்கும்படி ப்ரதம மத்யம பத ஸித்தமான பகவச் சேஷத்வமும், தத்காஷ்டையான பாகவத சேஷத்வமுமாகிற உபய சேஷத்வத்தையும், “நமக்கே நலமாதலில்” என்னும்படி ஸ்வப்ரயோஜநத்திலே மூட்டியும், விளம்பரோஷத்தாலே “போகுநம்பி”, “கழகமேறேல் நம்பி” என்னும்படியாக்கியும், ஸ்வப்ரவ்ருத்தி யாகாதென்னுமளவில் “உங்களோ டெங்களிடை யில்லை” என்று உதறும்படி பண்ணியும், “வெஞ்சிறைப்புள்” இத்யாதியாலே வெறுத்து வார்த்தை சொல்லுவித்தும் அழித்து, பராதிசயகரத்வமே வடிவான ஸ்வரூபத்தை மங்களாசாஸனமென்பதொன் றறியாதபடி தன் பக்கலிலே மக்நமாகப் பண்ணுமதான பகவத் ஸௌந்தர்யம்; அந்த ஸௌந்தர்ய தர்சநத்தில் அநுபவத்திலே நெஞ்சு செல்லாதே அதுக்கென் வருகிறதோ வென்று வயிறெரிந்து காப்பிடுமவரான விவர்க்கு, “உன் சேவடி செவ்வி திருக்காப்பு”, “மங்கையும் பல்லாண்டு”, “சுடராழியும் பல்லாண்டு”, “பாஞ்சசன்னியமும் பல்லாண்டு” என்று தத்விஷயத்துக்கும் ததீயவிஷயத்துக்கும் மங்களாசாஸநம் பண்ணுவிக்கையாலே, உபய சேஷத்வவ்ருத்திக்கும் ஹேதுவாய், ஸ்வரூபத்தைத் தன்பக்கல் மக்நமாகாதபடி நடத்துமென்றபடி. ஆக, அவர்களுக்கப்படி ஸ்வரூபத்தைக் குமிழ் நீருண்ணப் பண்ணுகிறவவனுடைய ஸௌந்தர்யம் இவர்க்கிப்படி செய்கையாலே அவர்களுடைய ஆழங்கால்தானே யிவர்க்கு மேடாயிருக்கையால், அவர்களுக்குப்போலே காதாசித்கமாகையன்றிக்கே மங்களாசாஸந மிவர்க்கு நித்யமாய்ச் செல்லுமென்றதாய்த்து.

– “ஸர்வேச்வரனின் அனுபவம்” என்பதை மட்டுமே எண்ணியவர்களாக, அதிலேயே ஈடுபட்டபடி உள்ள மற்ற ஆழ்வார்களுக்கு, அந்த அனுபவம் சற்றே தடைப்பட்டாலும், அவர்களது பிரிவாற்றாமை கரைபுரண்டு நிற்பதாகிறது. இவர்களை ஸர்வேச்வரனின் அழகு என்பது என்ன செய்கிறது என்றால்: பெரியதிருமொழி (8-9-3) - கண்ணபுரமொ ன்றுடையானுக்கடியே னொருவர்க் குரியேனோ - என்றும், பெரியதிருமொழி (8-10-3) - உற்றது முன்னடியார்க் கடிமை - என்றும் உரைக்கிறபடி, ப்ரணவ மந்த்ரத்தின் முதல்பதம் மற்றும் நடுப்பதம் (ஓம், நம:) ஆகியவற்றின் மூலம் வெளிப்படுத்தப்படும் ஸர்வேச்வரனுக்கு அடிமையாக இருத்தலும், அதன் எல்லையான பாகவதர்களுக்கு அடிமையாக இருத்தலும் என்பதான இரண்டுவிதமான அடிமைத்தனங்களையும், பெரியதிருமொழி (9-3-9) - நமக்கே நலமாதலில் – என்று கூறுவதற்கு ஏற்ப தன்னுடைய சுயநலமான ஆனந்தத்தில் ஈடுபடுத்திவிடுகிறது. ஸர்வேச்வரன் வருவதற்குத் தாமதம் செய்த காரணத்தால், அந்த தாமதத்தைப் பொறுக்க இயலாமல் திருவாய்மொழி (6-2-2) - போகு நம்பீ, திருவாய்மொழி (6-2-6) – கழகம் ஏறேல் நம்பி - என்று உரைக்கும்படிச்செய்கிறது. ஸர்வேச்வரனை அடைவதற்கு நீயாகவே முயல்வது கூடாது, அது ஆத்ம ஸ்வரூபத்திற்கு ஏற்றது அல்ல என்று கூறினால், திருவாய்மொழி (8-2-7) - உங்களோ டெங்களிடை யில்லை - என்று கூறுவதற்கு ஏற்ப அவர்களை வெறுக்கும்படிச் செய்கிறது. திருவாய்மொழி (1-4-1) - வெஞ்சிறைப்புள் – என்று ஸர்வேச்வரனை அழைத்துச் சென்றுவிட்ட கருடனை வெறுத்து உரைக்கும்படியாக அழிக்கிறது. இப்படியாக ஸர்வேச்வரனுக்கு மேன்மை செய்வதையே தனது ஸ்வரூபமாகக் கொண்டதான ஜீவன், அவனுக்கு மங்களாசாஸநம் என்பதைச் செய்யவேண்டும் என்று உணராதபடி தன்னிடம் ஈடுபடுத்திவிடுகிறது ஸர்வேச்வரன் அழகு. அப்படிப்பட்ட ஸௌந்தர்யத்தின் அனுபவத்தில் ஈடுபட்டுவிடாமல் தப்பித்து, “இந்த அழகுக்கு என்ன ஆபத்து வருமோ?”, என்று அடிவயிற்றில் பயம் காரணமாக எரிச்சல் ஏற்பட்டு மங்களாசாஸநம் செய்தபடி பெரியாழ்வார் உள்ளார். ஆகவே அவர் திருபல்லாண்டு (1) – “உன் சேவடி செவ்வி திருக்காப்பு”, “மங்கையும் பல்லாண்டு”, “சுடராழியும் பல்லாண்டு”, “பாஞ்சசன்னியமும் பல்லாண்டு” – என்று அவனுக்கும் அவனது அடியார்களுக்கும் மங்களாசாஸநம் செய்கிறார். இதனால் பகவானுக்கு அடிமையாக இருத்தல், அவனது அடியார்களுக்கு அடிமையாக இருத்தல் ஆகிய இரண்டுவகையான அடிமைத்தனமும் மேன்மேலும் ஓங்கி வளர்வதற்குக் காரணமாகவும், ஜீவனின் ஸ்வரூபம் என்பது தன்னிடம் மூழ்கிவிடாதபடியும் இவர் விஷயத்தில் உள்ளது. ஆகவே மற்ற ஆழ்வார்களுக்கு தன்னுடைய அழகில் மூழ்கும்படியாகச் செய்கின்ற ஸர்வேச்வரனின் அழகு என்பது, இவரை மங்களாசாஸநம் செய்யும்படிச் செய்கிறது. ஆக அவர்களை மூழ்கும்படியாகச் செய்கின்ற ஸௌந்தர்யம், இவருக்கு மேடாக உள்ளது. எனவே “மங்களாசாஸநம் செய்தல்” என்பது அவர்களுக்கு எப்போதாவது தோன்றுவது போன்று அல்லாமல், இவருக்கு எப்போதுமே தோன்றியபடி உள்ளது.