Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 252)
மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்
அவர்களுடைய ஆழங்கால்தானே இவர்க்கு மேடாயிருக்கும்.
அதுக்கு ஹேதுவென்னென்ன வருளிச்செய்கிறார் (அவர்களுடைய) என்று தொடங்கி.
– கடந்த சூர்ணையில் உள்ளபடி இருப்பதற்குக் காரணம் என்ன என்பதை அருளிச்செய்கிறார்.
– அதாவது, அநுபவபரரான வவர்களை த்ருஷ்டி சித்தாபஹாரம் பண்ணி ஆழங்கால் படுத்து மவனுடைய ஸௌந்தர்யந்தானே இதுக்கென் வருகிறதோ என்றஞ்சி மேன்மேலும் காப்பிடும்படி மங்களாசாஸந பரரான விவர்க்கு தரித்து நின்று மங்களாசாஸநம் பண்ணுகைக்கீடான நிலமாயிருக்கு மென்கை.
– ஸர்வேச்வரனின் அனுபவம் என்பதில் திளைத்து நிற்கும் மற்ற ஆழ்வார்களின் கண்களையும் மனதையும் கவர்ந்து இழுத்து, தன்னிடம் மட்டுமே ஆழ்ந்து நிற்கும்படியாகச் செய்வது அவனது திருமேனி அழகு ஆகும். இந்தத் திருமேனியின் அழகு என்பதுதான், “இதற்கு என்ன வருமோ”, என்று அச்சம் கொண்டு மேன்மேலும் காப்பிட்டு, திருப்பல்லாண்டு பாடும்படியாக இவரைச் செய்வதற்கு ஏற்றதாக உள்ளது என்று கருத்து.