Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 251)
மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்
அவர்களுக்கிது காதாசித்கம்; இவர்க்கிது நித்யம்.
அவர்களைப் பற்ற இவர்க்கிதி லேற்றமேதென்ன வருளிச்செய்கிறார் (அவர்களுக்கிது) என்று தொடங்கி.
– (காதாசித்கம் என்றால் ஏதோ ஒரு காலகட்டத்தில் மட்டுமே உண்டாவது) மற்ற ஆழ்வார்களைக் காட்டிலும் திருப்பல்லாண்டு பாடும் விஷயத்தில் பெரியாழ்வாருக்கு உள்ள ஏற்றம் என்ன என்ற கேள்விக்கு விடை அருளிச்செய்கிறார்.
– அதாவது, மயர்வற மதிநலம் பெற்றமை யொத்திருக்கச் செய்தே, வயிரவுருக்காய் ஆண்களையும் பெண்ணுடை யுடுத்தும் பகவத் விக்ரஹ வைலக்ஷண்யத்தை அநுஸந்தித்தால், உத்தரோத்தராநுபவ காமராகா நிற்கும் மற்றையாழ்வார்களுக்கு பரஸம்ருத்தியே ப்ரயோஜநமான விந்த மங்களசாஸநம் எப்போதுமொக்க வன்றிக்கே எங்கேனு மொருதசையிலே தேடிப்பிடிக்கவேண்டும் படியாயிருக்கும்; தத் வைலக்ஷண்ய தர்சநாநந்தரம் ததநுபவ பரராகையன்றிக்கே, அஸ்தாநே பயசங்கை பண்ணித் திருப்பல்லாண்டு பாடும் ப்ரேம ஸ்வபாவரான விவர்க்கிந்த மங்களாசாஸநம் ஸர்வ காலார்த்தியாய்ச் செல்லுமென்கை.
மயர்வற மதிநலம் அருளப் பெற்றமை என்பது அனைத்து ஆழ்வார்களுக்கும் ஒன்றாகவே உள்ளது. வைரம் போன்ற உறுதியான நெஞ்சம் கொண்ட ஆண்களையும் பெண்களின் பாவம் (நாயகி பாவம்) கொள்ளச் செய்வதான ஸர்வேச்வரனின் திருமேனி மேன்மையை எண்ணியவுடனேயே, அவனை மேன்மேலும் அனுபவித்தபடி இருக்க வேண்டும் என்று மற்ற ஆழ்வார்கள் இருப்பர்கள். இப்படியாக உள்ள அவனுடைய சிறப்பு என்பதே அவர்களுக்குப் பயனாக இருக்கும். அவனை மங்களாசாஸநம் செய்தல் என்பது இவர்களுக்கு எப்போதும் இல்லாமல், ஏதோ சில இடங்களில் தேடிப்பிடிக்க வேண்டுவதாக இருக்கும். ஸர்வேச்வரனின் திருமேனி மேன்மையைக் கண்டவுடன் அவனை அனுபவிப்பதில் மட்டுமே ஆசை கொண்டு நிற்காமல், “இவனுக்கு என்ன ஆகுமோ” என்று பயம் கொண்டு, திருப்பல்லாண்டு பாடும்படியாக அவனிடம் பெரியாழ்வார் ப்ரேமையை இயல்பாகவே கொண்டுள்ளார். ஆகவே இவரைப் பொறுத்தவரை மங்களாசாஸநம் என்பது எப்போதும் உள்ளது என்று கருத்து.