Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 249)
மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்
இவர்கள் நம்முடைய கோடியிலே யென்னும்படியாயிற்று ஆழ்வார்கள் நிலை.
இன்னமு மிவ்வர்த்தத்துக்கு உதாஹரணமாக, கீழ்ச் சொன்னவர்களைக் காட்டில் வ்யாவ்ருத்தரான ஆழ்வார்களுடைய மங்களாசஸந நிஷ்டையை யருளிச்செய்கிறார் (இவர்கள்) என்று தொடங்கி.
மேலும் இந்தப் பொருளை விளக்கும் பொருட்டு, மேலே கூறப்பட்ட உதாரணங்களைக் காட்டிலும் வேறுபட்டவர்களாகிய ஆழ்வார்களின் மங்களாசாஸநம் செய்கின்ற ஈடுபாட்டினை அருளிச்செய்கிறார்.
(இவர்கள்) என்று சக்ரவர்த்தி முதலாகக் கீழ்ச்சொன்ன வதிகாரிகளையடையப் பராமர்சிக்கிறது. ஆனால் பிராட்டியையுமொக்கச் சொல்லலாமோ வென்னில்; ஆழ்வார்களில் தலைவரான நம்மாழ்வாரிலுங் காட்டில், பெரியாழ்வார்க்கு ஏற்றம் சொல்லுகிறவோபாதி, போக பரவசையான அவளிற்காட்டில் மங்களாசாஸநத்தி லூற்றத்தாலே ஆழ்வார்களுக்கேற்றம் சொல்லக்குறையில்லை. ஆனாலும், (நம்முடைய கோடியிலே) என்னலாமோ வென்னில்; இவ்வர்த்த நிஷ்டையிலவர்களுடைய வாதிக்யத்தை தர்சிப்பிக்கைக்காகச் சொன்னதாகையாலே விரோதமில்லை. ஆகையால் இவ்விஷய வைலக்ஷண்ய கலுஷசித்தராய் இதுக்கென் வருகிறதோ வென்று பரிந்து நோக்கினவர்களாகக் கீழ்ச்சொல்லப்பட்டவர்க ளெல்லாருமென்றபடி. (நம்முடைய கோடியிலே என்னும்படியாய்த்து) என்றது - இவ்விஷயத்திலே அந்வயித்திருக்கச் செய்தேயும் ப்ரேமாபாவத்தாலே மங்களாசாஸநத்தி லூற்றமற்றிருக்கிற நம்போல்வார் மாத்ரமென்று சொல்லலாம்படியாய்த் தென்றபடி. (ஆழ்வார்கள் நிலை) என்றது - மயர்வற மதிநலம் பெற்றவர்களாகையாலே நிரதிசய ப்ரேமயுக்தரான ஆழ்வார்களுடைய மங்களாசாஸந நிஷ்ட்டையென்றபடி.
– “இவர்கள்” என்ற பதம் சூர்ணை 246ல் கூறப்பட்ட தசரதன் போன்றவர்களைக் குறிப்பதாகும். ஆனால் அவர்களைப் பொதுவாக உரைக்கும்போது, பெரியபிராட்டியான சீதையையும் சேர்த்து உரைக்கலாமோ என்ற கேள்வி எழலாம். இதற்கு விடை அளிக்கிறார். ஆழ்வார்களுக்குத் தலைவராகிய நம்மாழ்வாரைக் காட்டிலும் பெரியாழ்வாருக்குத் திருப்பல்லாண்டு மூலம் ஏற்றம் கூறுவது போன்று, இராமனுடன் இன்பத்தில் பரவசம் அடைந்து நிற்கும் பிராட்டியைக் காட்டிலும் அவனுக்குத் திருப்பல்லாண்டு பாடவேண்டும் என்று ஈடுபாடு கொண்ட ஆழ்வாகளுக்கு ஏற்றம் கூறுவதில் தோஷம் இல்லை. ஆனாலும் “நம்முடைய வரிசையில்” என்று சீதையைக் கூறலாமோ என்றால் - திருப்பல்லாண்டு பாடுவதில் ஆழ்வார்களுக்கு இருந்த ஈடுபாடு காரணமாக அந்தப் பதமானது, ஸர்வேச்வரனுடைய மென்மை மற்றும் திருமேனி அழகு போன்றவற்றைக் கண்டு கலங்கியபடி, “இவனுக்கு என்ன ஆகுமோ”, என்று பரிவுடன் நோக்குகின்ற மேலே கூறப்பட்ட அனைவரையுமே குறிக்கிறது என்று கருத்து. “நம்முடைய கோடியிலே என்னும்படியாய்த்து” என்பது என்ன? அவனுக்குத் திருப்பல்லாண்டு பாடுவதில் ஈடுபட்டுள்ளபோதிலும், ஸர்வேச்வரனிடம் ப்ரேமை கொள்ளாத காரணத்தினால் திருப்பல்லாண்டு பாடுவதில் ஈடுபாடு கொள்ளாத நம்மைப் போன்றவர்கள் என்று கூறலாம்படியாக ஆழ்வார்களுக்குத் திருப்பல்லாண்டில் உள்ள ஈடுபாடு என்று பொருள்.