Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 248)
மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்
ஒரு நாள் முகத்திலே விழித்தவர்களை வடிவழகுபடுத்தும் பாடாயிற்றிது.
ஸ்ரீ குஹப்பெருமாளுக்கும் பரிகரத்துக்குமன்று கண்டமாத்ரமொழிய பெருமாளுடன் முன்பு வாஸநையில்லையே; இப்படியிருக்கச் செய்தே, இவர்களுக்கிவ் வாதரம் கூடினபடி யென்னென்ன வருளிச்செய்கிறார் (ஒரு நாள்) என்று தொடங்கி.
– குகன் மற்றும் அவனது வீரர்கள் ஆகியோருக்கு இராமனை அன்றுதான் கண்டனர் என்ற நிலை உண்டு. அவர்கள் இராமனுடன் அதற்கு முன்பாகப் பழகியது இல்லை. இவ்விதம் உள்ளபோது, இவர்களுக்கு இராமனைக் காப்பதில் இத்தகைய ஈடுபாடு தோன்றியது எப்படி என்ற கேள்வி எழலாம். இதற்கு விடை அருளிச்செய்கிறார்.
அதாவது நெடுநாள் வாஸநை பண்ணுகையன்றிக்கே ஒருநாள் முக தர்சநம் பண்ணினவர்களையும் அவன் விக்ரஹ வைலக்ஷண்யம் படுத்தும்படியாய்த் திதுவென்கை. “ஸதாபச்யந்தி” பண்ணினாரோபாதி ஸக்ருத் தர்சநம் பண்ணினாரையும் ப்ரேமாந்தராய் அஸ்தாநே பயசங்கையாலே அநுகூலரையுமதி சங்கை பண்ணிப் பரிந்து நோக்கும்படி பண்ணவற்றாயிறே பகவத் விக்ரஹ ஸௌந்தர்யமிருப்பது.
– நீண்டநாள் பழகவேண்டும் என்பது இல்லாமல், ஒரு நாள் திருமுகத்தைக் கண்டாலே போதுமானது, அவனது திருமேனியின் மேன்மையானது அவர்களைப் படுத்தும் பாடு இதுவே என்கிறார். உபநிஷத்துக்களில் – ஸதா பச்யந்தி - எப்போதுமே பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் - என்று கூறுவதற்கு ஏற்ப, அவனை எப்போதுமே பார்த்தபடி உள்ள நித்யஸூரிகள் போன்றே, ஒருமுறை கண்டவர்களும் அவன் மீது கொண்ட அன்பினால் தங்களை மறக்கிறார்கள். அவன் மீது மிகவும் அன்புடன் உள்ளவர்களைக் கண்டபோதிலும் இவர்கள், “என்ன ஆபத்து வருமோ” என்று சந்தேகம் கொண்டு, பரிவாக ஸர்வேச்வரனை நோக்கும்படியாக அல்லவோ அவன் திருமேனி அழகு உள்ளது!