Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 247)
மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்
இளையபெருமாளை ஸ்ரீகுஹப்பெருமாளதிசங்கை பண்ண இருவரையு மதிசங்கை பண்ணி ஸ்ரீகுஹப்பெருமாள் பரிகரம் பெருமாளை நோக்கிற்றிறே.
இவ்விஷய வைலக்ஷ்ண்ய மெல்லாரையும் மங்களாஸாஸநத்திலே மூட்டு மென்னுமிடத்துக்கு இன்னமொரு உதாஹரணம் காட்டுகிறார் (இளையபெருமாளை) என்று தொடங்கி.
– ஸர்வேச்வரனுடைய திருமேனி அழகு போன்றவை, அனைவரையும் அவனுக்குத் திருப்பல்லாண்டு பாடும்படிச் செய்யும் என்பதை மேலும் ஓர் உதாரணம் மூலம் காண்பிக்கிறார்.
– அதாவது, ச்ருங்கிபேரபுரத்திலே யெழுந்தருளி ஸ்ரீகுஹப்பெருமாளை விஷயீகரித்தருளினவன்று, பாங்கறிந்து இளையபெருமாள் படுத்துக்கொடுத்த பர்ணசய்யையிலே பெருமாளும் பிராட்டியும் பள்ளிகொண்டருளாநிற்க, “பால்யாத் ப்ரப்ருதி” ஸுஸ்நிக்தராகையாலே என்வருகிறதோ வென்றஞ்சி, முதுகிலிட்ட அம்பறாத் தூணியும் கட்டின விரற்சரடும் நாணியேறிட்டு நடுக்கொத்துப் பிடித்த வில்லும் தாமுமாய் நடையாடும் மதிள் போலே வளைய வருகிற இளையபெருமாளைக் கண்டு ஸ்ரீகுஹப்பெருமாள், ஒரு தம்பி தாயைக் கொண்டு ராஜ்யத்தை வாங்கி கட்டின காப்போடே காட்டிலே தள்ளிவிட்டான், இவனுமவ்வோபாதியொரு தம்பியன்றோ, தனியிடத்திலே என் செய்ய நினைத்திப்படி ஆயத்தமாய் நின்றானென்று தெரியாது என்றதி சங்கை பண்ணி, அப்படி யேதேனுமொரு தீங்கு நினைக்கில் இவன் றன்னைத் தீரக் காணக்கடவோமென்று வில்லும் கோலுமாய்க் கொண்டு இவரிட்டவடியிலே அடியிட்டுநிற்க; ஸ்ரீகுஹப்பெருமாள் ஏவற்றொழிற் செய்து திரியும் பரிகரம், “அவன் ஜ்ஞாதி, இவன் குறும்பனானவன்னியன், இவர்களிருவருமாக இவ்விஷயத்தை என் செய்யத் தேடுகிறார்களோ” என்று இருவரையுமதி சங்கை பண்ணி, அப்படி செய்யில் இவர்களை யழியச் செய்தும் நாமத்தலையை நோக்கக் கடவோமென்று தனித்தனியே கையும் வில்லுமாய்க் கொண்டு பெருமாளை ரக்ஷித்ததிறே என்கை. ஸ்ரீபரதாழ்வானுக்கு விசேஷம் சொல்லுகிறவிடத்திலே, ஸ்ரீகுஹப்பெருமாள் “நியம்ய ப்ருஷ்டே து தலாங்குளித்ரவாந் சரைஸ் ஸுபூர்ணாமிஷுதிம் பரந்தப: - மஹத்தநுஸ் ஸஜ்ய மபோஹ்ய லக்ஷ்மணோ நிசாமதிஷ்டத் த்வரிதோஸ்ய கேவலாம் ததஸ் த்வஹஞ்சோத்தம சாபபாண ப்ருத் ஸ்திதோபவம் தத்ர ஸ யத்ர லக்ஷ்மண: - அதந்த்ரிபிர் ஜ்ஞாதிபிராத்த கார்முகைர் மஹேந்த்ரகல்பம் பரிபாலயம் ஸ்ததா: - என்று ஒற்றை ராத்தியில் வ்ருத்தாந்தத்தைச் சொன்னானிறே.
இராமன் கானகம் எழுந்தருளியபோது ச்ருங்கிபேரம் என்ற இடத்தில் தங்கி, குஹன் என்ற ஓடக்காரனை நலம் விசாரித்தார். அங்கு தங்கியபோது இராமனுடைய திருமேனியின் மென்மையான ஸ்வபாவத்தை அறிந்த லக்ஷ்மணன், அதற்கு ஏற்றபடியாக அமைத்துக் கொடுத்த படுக்கையில், இராமனும் சீதையும் சயனித்தனர். அப்போது, இராமாயணம் பாலகாண்டம் (18-27) – பால்யாத் ப்ரப்ருதி - சிறுவயது முதலே இராமனிடம் அன்புடன் இருந்தான் - என்று கூறுவதற்கு ஏற்ப லக்ஷ்மணன் அன்புடன் இருந்த காரணத்தினால், இராமனுக்கு என்ன நேருமோ என்று அச்சம் கொண்டவனாக, முதுகில் கட்டப்பட்ட அம்பறாத்தூணியும், அம்பு விடுவதற்காக இடையில் கட்டப்பட்ட சரகும், நாணில் ஏற்றி நடுவில் பிடித்தபடி இருந்த அம்புமாக, நடமாடும் மதிள் சுவர் போன்று அவர்கள் சயனித்த இடத்தை வலம் வந்தபடி இருந்தான். இதனைக் கண்ட குஹன் தனது மனதில், “தம்பியான பரதன் தனது தாய் மூலமாக இவனிடமிருந்து நாட்டை வாங்கிக் கொண்டு, கட்டிய ஆடையுடன் கானகம் அனுப்பிவிட்டான். இவனும் அவனைப் போன்றுள்ள தம்பி அல்லவோ? யாரும் இல்லாத இடத்தில் இராமனை என்ன செய்வதற்கு எண்ணியபடி இவ்விதம் ஆயுதத்துடன் தயாராக உள்ளானோ என்று புரியவில்லையே”, என்று சந்தேகம் கொண்டான். அப்படி இவன் இராமனுக்கு ஏதேனும் தீமை செய்தால், இவனைக் கொன்றுவிடுவோம் என்று முடிவு செய்தவனாக, தனது கையில் வில்லும் அம்புமாக லக்ஷ்மணன் வைத்த ஒவ்வொரு அடியின் பின்னேயும் தானும் சென்றான். இவர்கள் இருவரையும், குஹன் இட்ட கட்டளையை ஏற்று வேலை செய்கின்ற குஹனின் வீரர்கள் கண்டனர். அவர்கள் தங்களது மனதில், “லக்ஷ்மணன் இராமனின் உறவினன், இந்த குஹன் தீமை என்பதைச் செய்யவல்ல காட்டுவாசி, இவர்கள் இருவருமாகச் சேர்ந்து இராமனுக்கு என்ன தீங்கு செய்ய எண்ணுகிறார்களோ”, என்று அஞ்சினர். இப்படியாக இவர்கள் மீது சந்தேகம் கொண்டு, இவர்கள் ஏதேனும் தீமை செய்தால் அவர்களை அழித்து, நாம் இராமனையும் சீதையையும் காப்பாற்றுவோம் என்று முடிவு செய்தனர். இப்படியாக இவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் கையில் வில்லை ஏந்தியபடி இராமனைக் காத்து நின்றனர். பரதனுக்கு ச்ருங்கிபேரத்தில் நடந்த நிகழ்ச்சியை குகன் உரைக்கும்போது பின்வருமாறு கூறினான். இராமாயணம் அயோத்யாகாண்டம் (87-22,23) - நியம்ய ப்ருஷ்டே து தலாங்குளித்ரவாந் சரைஸ் ஸுபூர்ணாமிஷுதிம் பரந்தப: - மஹத்தநுஸ் ஸஜ்ய மபோஹ்ய லக்ஷ்மணோ நிசாமதிஷ்டத் த்வரிதோஸ்ய கேவலாம் ததஸ் த்வஹஞ்சோத்தம சாபபாண ப்ருத் ஸ்திதோபவம் தத்ர ஸ யத்ர லக்ஷ்மண: - அதந்த்ரிபிர் ஜ்ஞாதிபிராத்த கார்முகைர் மஹேந்த்ரகல்பம் பரிபாலயம் ஸ்ததா: - எதிரிகளை அழிக்கவல்ல லக்ஷ்மணன் அம்புடன் நிறைந்த அம்பறாத்தூணியைத் தனது முதுகில் கட்டியவராக, பெரிய வில் ஒன்றை நாண் ஏந்திப் பிடித்தபடி, இரவுப்பொழுது முழுவதும் இராமனுக்குக் காவலாக நான்கு பக்கமும் சுற்றி வந்தார். அதன் பின்னர் நானும் உயர்ந்த அம்புகள் கொண்ட வில்லை ஏந்தியபடி, லக்ஷ்மணன் பின்னே சென்றபடி இருந்தேன். எனது இனத்தைப் சேர்ந்தவர்கள் விழிப்புடன் வில் ஏந்தி இந்திரனுக்கு நிகரான இராமனைக் காத்தபடி நின்றனர் – என்றனர்.