Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 246)
மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்
இவ்வர்த்தம் சக்ரவர்த்தி, ஸ்ரீஜநகராஜன் திருமகள், விச்வாமித்ரன், ஸ்ரீதண்டகாரண்ய வாஸிகளான ருஷிகள், திருவடி, மஹாராஜர், நந்தகோபர், ஸ்ரீவிதுரர், பிள்ளையுறங்காவில்லிதாஸர் தொடக்கமானவர்கள் பக்கலிலே காணலாம்.
இப்படி ஸௌகுமார்யாதிகளைக் கண்டு கலங்கி ரக்ஷகனான வவனுடைய சக்திவைபவத்தை மறந்து தானவனை ரக்ஷிக்குமென்கிற விவ்வர்த்த மெங்கே காணலாமென்னு மபேக்ஷையிலே, இது சிஷ்டாசார ஸித்தமென்னுமிடங் காட்டுகிறார் மேல் (இவ்வர்த்தம்) என்று தொடங்கி.
இப்படியாக ஸர்வேச்வரனின் மென்மை, அழகு போன்றவற்றைக் கண்டு, “இவனுக்கு என்ன ஆகுமோ?” என்று கலக்கம் கொண்டு, அனைவரையும் காப்பாற்றும் அவனுடைய வலிமை என்ன என்பதையும் மறந்து, தான் அவனைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபடுவான் என்று கடந்து சூர்ணையில் கூறப்பட்டது. இத்தகைய நிகழ்வை எங்கே காணலாம் என்ற கேள்விக்கு, “உயர்ந்தவர்கள் பலரிடம் இதனைக் காணலாம்”, என்று காண்பிக்கிறார்.
சக்ரவர்த்தி, பெருமாள் பிராட்டியைத் திருமணம் புணர்ந்து மீண்டெழுந் தருளா நிற்க, பரசுராமன் வந்து தோற்றின வளவிலே, தாடகாதாடகேய நிரஸநங்களாலே யிவருடைய சக்திவைபவத்தை வ்யக்தமாக அறிந்திருக்கச் செய்தேயும், இவருடைய பால்யத்தையும் ஸௌகுமார்யத்தையும் பார்த்து, “என்னாகப் புகுகிறதோ!” என்று பீதனாய், தான் முன்னேயோடிச் சென்றும், “க்ஷத்ர ரோக்ஷாத் ப்ரசாந்தஸ் த்வம் ப்ராஹ்மணச்ச மஹாயசா:, பாலாநாம் மம புத்ராணாமபயம் தாதுமர்ஹஸி” என்று சரணம் புக்கு, பின்னையுமவன் பெருமாள் மேலே அடர்ந்து செல்லுகிறபடியைக் கண்டு நிஷ்ப்ராணனாய் நின்று, “கதோ ராம இதி ச்ருத்வா ஹ்ருஷ்ட: ப்ரமுதிதோ நிருப:, புநர் ஜாதம் ததா மேநே ஸுதா நாத்மாநமேவச” என்கிறபடியே – அவன் தோற்று மீண்டு போனானென்று கேட்டபின்பு, தானும் பிள்ளைகளும் மறுபிறவி பிறந்ததாக நினைத்திருந்தானிறே. ஸ்ரீஜநகராஜன் திருமகள், தலைநீர்ப்பாட்டிலே யிவருடைய வைபவமெல்லா மறியுமவளா யிருக்கச் செய்தேயும், திருவபிஷேகம் பண்ணுகைக்காக அலங்க்ருத திவ்ய காத்ரராய்க் கொண்டு சக்ரவர்த்தி திருமாளிகைக் கெழுந்தருளுகிற போது, இவரழகிலே தோற்று “இதுக்கென் வருகிறதோ” என்று ப்ரேமத்தாலே கலங்கி, “பதி ஸம்மாநிதா ஸீதா பர்த்தாரமஸிதேக்ஷணா, ஆத்வாரமநுவவ்ராஜ மங்களாந் யபி தத்யுஷீ” என்று - திருவாசலளவும் தான் மங்களாசாஸநம் பண்ணிக்கொண்டு பின் சென்று, “பூர்வாம் திசம் வஜ்ரதரோ தக்ஷிணாம் பாது தே யம:, வருண: பச்சிமாமாசாம் தநேசஸ்தூத்தராம் திசம்” என்று – திக்பாலர்களை யிவர்க்கு ரக்ஷகராக அபேக்ஷித்தாளிறே. “ஸ்ரீஜநகராஜன்” என்றும், “திருமகள்” என்றும் பிரித்துச் சொல்லவுமாம். அப்போதைக்கு ஸ்ரீஜநகராஜன், மஹேச்வர தநுர்பங்கத்தாலே பெருமாளுடைய சக்திவைபவத்தைக் கண்டிருக்கச் செய்தேயும், “இயம் ஸீதா மம ஸுதா ஸஹதர்மசரீ தவ, ப்ரதீச்சசைநாம் பத்ரந் தே பாணிம் க்ருஹ்ணீஷ்வ பாணிநா” என்று “ஆபிஜாத்யாதிகளால் வீறுடையளான விவளைக் கைக்கொண்டருளும்” என்று காட்டிக் கொடுக்கிறவளவிலே, இவருடைய வழகையும் ஸௌகுமார்யத்தையும் கண்டு கலங்கி, இச்சேர்த்திக்கொரு தீங்கு வாராதொழியவேணும் என்று “பத்ரம் தே” என்று மங்களாசாஸநம் பண்ணினானென்கை. விச்வாமித்ரன், தன்னுடைய அத்வர த்ராணார்த்தமாகப் பெருமாளை யழைத்துக் கொண்டு போருகிறபோது, நடுவே தாடகை பெரிய ஆர்ப்பரவத்தோடே ஆக்ரமித்துக் கொண்டு வருகிறபடியைக் கண்டு, “அஹம் வேத்மி மஹாத்மாநம் ராமம் ஸத்ய பராக்ரமம்” என்கிறபடியே - பெருமாளுடைய சக்தி வைபவத்தை யறிந்திருக்கச் செய்தேயும், ஸௌகுமார்யத்தைப் பார்த்துக் கலங்கி, “விச்வாமித்ரஸ்து ப்ரஹ்மர்ஷிர் ஹுங்காரேணாபிபர்த்ஸ்ய தாம், ஸ்வஸ்தி ராகவயோரஸ்து ஜயஞ்சை வாப்யபாக்ஷத” என்கிறபடியே – தான் முன்னே நின்று அவனை ஹுங்கரித்து, பெருமாளுக்கும் திருத்தம்பியார்க்கும் ஒரு தீங்கு வாராமைக்காக மங்களாசாஸநமும் செய்தானிறே. ஸ்ரீதண்டகாரண்யவாஸிகளான ருஷிகள், “தே தம் ஸோமமிவோத்யந்தம் த்ருஷ்ட்வாவை தர்மசாரிண: மங்களாநி ப்ரயுஞ்ஜாநா: ப்ரத்யக்ருஹ்ணந் த்ருடவ்ரதா:” என்று தங்களாபந் நிவ்ருத்தியையும் அபிமத ஸித்தியையும் பண்ணித்தருவாரிவரேயென்று ஸாதநாநுஷ்டாநம் பண்ணுகிற தாங்கள், இவர் ஸந்நிஹிதரானவாறே அவற்றை மறந்து, இவர் வடிவழகிலே துவக்குண்டு மங்களாசாஸநம் பண்ணினார்களிறே. திருவடி, ப்ரதம தர்சநத்தில் “ஆயதாச்ச ஸுவ்ருத்தாச்ச பாஹவ: பரி கோபமா: ஸர்வ பூஷண பூஷார்ஹா: கிமர்த்தம் நவிபூஷிதா:” என்று கணையங்கள் போலே இருக்கிற திருத்தோள்களில் மிடுக்கைக் கண்டு, “நமக்கிவர் ரக்ஷகராகக் குறைமில்லை” என்று புத்தி பண்ணாநிற்கச்செய்தே, அவற்றினழகைக் கண்டு ஈடுபட்டு, “பிறர் கண்ணெச்சில் படில் செய்வதென்” என்றதிசங்கை பண்ணி, “திருவாபரணங்களாலே யித்தை மறைத்திட்டு வையாதே யிப்படி வெளியிடக்காரணமென்” என்று வயிறு பிடித்து, பின்பும், பெருமாளுடைய சக்திவிசேஷத்தை பஹுமுகமாகக் காணா நிற்கச் செய்தேயும், ஸௌகுமார்யாநுஸந்தாநத்தாலே “இவர்க்கென் வருகிறதோ” என்று துணுக்குத் துணுக்கென்று ஸர்வ தசையிலும் கூட நின்று நோக்கிக்கொண்டு திரிந்தானிறே. மஹாராஜர், வாலிவதாதிகளாலே பெருமாளுடைய சக்தி கௌரவத்தைக் கண்டிருக்கச் செய்தேயும், ஸௌகுமார்யத்தையே பார்த்துக் கலங்கி, ஸ்ரீவிபீஷணாழ்வான் நாலு பேரும் தானுமாய் வந்து தோற்றினபோது, “ஏஷ ஸர்வாயுதோ பேதச் சதுர்ப்பிஸ் ஸஹ ராக்ஷஸை:, ராக்ஷஸோப்யேதி பச்யத்வம் அஸ்மாந் ஹந்தும் ந ஸம்சய:” என்று – நமக்கெல்லாம் ஓருயிரான பெருமாளை நலிகிற வழியாலே நம்மை யெல்லாரையும் முடிப்பதாக வருகிறானிவன் என்றறுதியிட்டு, முதலிகளுக்குக் காட்டி, “ராகவம் சரணம் கத:”, “நிவேதயத மாம் க்ஷிப்ரம்” என்று உக்திகளைக் கேட்டு வைத்தும், “வத்யதாமேஷ தீவ்ரேண தண்டேந ஸசிசைஸ் ஸஹ, ராவணஸ்ய ந்ருசம்ஸஸ்ய ப்ராதா ஹ்யேஷ விபீஷண:” என்று – ராவண ஸம்பந்தத்தையே பார்த்து இவனை சித்ரவதம் பண்ண வேணுமென்பது, “ராவணேந ப்ரணிஹிதம் தமமைஹி நிசாசரம், தஸ்யாஹம் நிக்ரஹம் மந்யே க்ஷமம் க்ஷமவதாம்வர” என்று ராவணன் வரவிட வந்தவனென்றே யவனைத் திருவுள்ளம் பற்றவேணும், அவனை தண்டிக்கையே ப்ராப்தமென்று புத்தி பண்ணா நின்றேன் என்பதாய் இப்புடைகளிலே பலவற்றையுஞ் சொல்லி, “இவனை ஸர்வதா கைக்கொள்ளவொண்ணாது” என்று ஒரு நிலைநின்று, “பிசாசாந் தாநவாந்” இத்யாதியாலே நம்முடைய பலத்தைக் காட்டியும், கபோதோபாக்க்யாநம் கண்டூபாக்க்யாநம் இவை யருளிச் செய்தும் தெளிவித்து பயத்தைக் கெடுத்து, “ஆநயைநம் ஹரிச்ரேஷ்ட” என்ன வேண்டும்படி பெருமாளைக் குழைச்சரக்காக நினைத்துக் காத்துக் கொண்டு போந்தாரிறே. “மஹாராஜர்” என்கிறது ஸ்ரீஜடாயுமஹாராஜரை யென்றும் சொல்லுவர்கள். அதாவது ஸ்ரீஜடாயுமஹாராஜர், பிராட்டிக்காக ராவணனோடே பொருது குற்றுயிராய்க் கிடக்கிற தம்மைப் பெருமாள் வந்து கண்டவளவிலே, ஜநஸ்தாநத்திலிருந்த பதினாலாயிரம் ராக்ஷஸரையும் தனி வீரஞ்செய்து நின்று கொன்ற தோள்வலியை யறிந்திருக்கச் செய்தேயும், “யாமோஷதி மிவாயுஷ்மந் அந்வேஷஸி மஹாவநே, ஸாதேவீ மமசப்ராணா ராவணேநோபயம் ஹ்ருதம்” என்று “அருமருந்து தேடுவார் அடவிதோறுந் தடுமாறுமாப்போலே யாவளொருத்தியை யிந்தப் பரந்த காட்டிலே தேடிக்கொண்டு திரிகிறீர், உமக்கு நித்யம் ப்ராண ஸமையான வவளும் என்னுடைய ப்ராணங்களு மிரண்டும் ராவணானாகிற பையலாலே அபஹ்ருதமாய்த்துக்காணும்” என்று சொல்லா நிற்கச்செய்தே; இவருடைய விரஹக்லேசத்தால் வந்த தளர்த்தியையும் ஸௌகுமார்யத்தையும் ராக்ஷஸரோட்டை வான் பகையையும் நினைத்து “என்னாகத் தேடுகிறதோ” என்றஞ்சி, “ஆயுஷ்மந்” என்று ஆயுஸ்ஸை ப்ரார்த்தித்தாரிறே. ஸ்ரீநந்தகோபர், பூதநா நிரஸநத்தாலே க்ருஷ்ணனுடைய திவ்ய சக்தி யோகத்தைக் கண்டிருக்கச் செய்தேயும், சைசவ ப்ரயுக்தமான ஸௌகுமார்யத்தையே பார்த்துக் கலங்கி வயிறெரிந்து, “ரக்ஷது த்வாம் அசேஷாணாம் பூதாநாம் ப்ரபவோ ஹரி: யஸ்ய நாபி ஸமுத்பூத பங்கஜா தபவஜ் ஜகத்” என்று – “ஸர்வ ஜகத்காரண பூதனாய் ஸகல விரோதி நிரஸநசீலனான ஸர்வேச்வரன் உம்மை ரக்ஷிப்பானாக” என்று ரக்ஷை யிட்டாரிறே. ஸ்ரீவிதுரர், க்ருஷ்ணனுடைய ஸர்வஜ்ஞத்வ ஸர்வசக்தித்வாதிகளை அறிந்திருக்கச் செய்தேயும், துர்யோதந கோஷ்டியில் எழுந்தருளினபோது பொய்யாஸநமிட்ட படியைக் கண்டஞ்சி ப்ரேமாந்ததையாலே, “ஸம்ஸ்ப்ருசந் நாஸநம் சௌரேர் விதுரஸ்ஸ மஹாமதி:” என்று – தம்முடைய திருமாளிகையில் தாமிட்ட ஆஸநத்தையு மதிசங்கை பண்ணித் தன் கையாலே அமுக்கிப் பார்த்தாரிறே. பிள்ளையுறங்காவில்லி தாஸர், அத்தலையில் ஜ்ஞாந சக்தியாதிகளெல்லா மறிந்து, “பெருமாள் நமக்கு ரக்ஷகர்” என்றிராநிற்கச் செய்தேயும், ப்ரேம பரவசராகையாலே, “பெருமாளுலாவி யருளும்போது எங்கேனுமொரு சலநம் பிறக்கில் நம் பிராணனை விடுமித்தனை” என்று சொட்டையை யுருவிப் பிடித்துக் கொண்டு ஸேவிப்பரென்று ப்ரஸித்தமிறே. (தொடக்கமானவர்கள்) என்கிற வித்தால் – “ஸ்த்ரியோ வ்ருத்தஸ் தருண் யச்ச ஸாயம் ப்ராதஸ் ஸமாஹிதா:, ஸர்வாந் தேவாந் நமஸ்யந்தி ராமஸ்யார்த்தே யசஸ்விந:” என்கிற திருவயோத்யவாஸி ஜநங்கள்; “யந் மங்களம் ஸுபர்ணஸ்ய விநதா கல்பயத் புரா, அம்ருதம் ப்ரார்த்தயாநஸ்ய தத்தே பவது மங்களம்” என்ற ஸ்ரீகௌஸலையார்; “ஜாதோஸி தேவதேவேச சங்கசக்ர கதாதர! திவ்யரூபமிதம் தேவ ப்ரஸாதே நோபஸம்ஹர” என்று ஸ்ரீவஸுதேவர்; “உபஸம்ஹர ஸர்வாத்மந் ரூபமேதச் சதுர்புஜம், ஜாநாது மாவதாரம் தே கம்ஸோயம் திதி ஜந்மஜ:” என்கிற தேவகிப்பிராட்டி முதலானோரையெல்லாம் நினைக்கிறது.
இராமன் சீதையைத் திருமணம் செய்து கொண்டு அயோத்திக்கு மீண்டும் திரும்பும்போது, அவன் எதிரில் பரசுராமன் தோன்றினான். தாடகை மற்றும் அவளது புத்திரர்கள் ஆகியவர்களை இராமன் அழித்ததன் மூலம் அவனுடைய சக்தியின் மேன்மையை தசரதர் நன்கு உணர்ந்தார். ஆயினும் இராமனின் பால்யம் மற்றும் மென்மை ஆகியவற்றை ஆராய்ந்து, பரசுராமனுக்கு முன்பாக தான் சென்று நின்றார். “இவனால் நம் இராமனுக்கு என்னவாகுமோ”, என்று கலங்கினார். அந்த அச்சத்துடன் ஓடிச்சென்று பரசுராமனிடம், “இராமாயணம் பாலகாண்டம் (75-6) - க்ஷத்ர ரோக்ஷாத் ப்ரசாந்தஸ் த்வம் ப்ராஹ்மணச்ச மஹாயசா:, பாலாநாம் மம புத்ராணாமபயம் தாதுமர்ஹஸி – நீவிர் அரசர்கள் மீது கொண்டுள்ள சீற்றம் தணிந்தவராகவும், மிகவும் புகழ் கொண்டவராகவும், அந்தணராகவும் உள்ளீர்கள். எனவே மிகவும் சிறிய வயது கொண்ட எனது புத்திரர்களுக்கு நீவிர் அபயம் அளிக்கவேண்டும்”, என்று சரணம் புகுந்தார். இவ்விதம் உரைத்த பின்னரும் பரசுராமன் இராமன் மீது கோபத்துடன் உள்ளதைக் கண்டு, தனது உயிர் நின்றுவிடும்படியாக ஆனார். அதன் பின்னர், இராமாயணம் பாலகாண்டம் (77-5) - கதோ ராம இதி ச்ருத்வா ஹ்ருஷ்ட: ப்ரமுதிதோ நிருப:, புநர் ஜாதம் ததா மேநே ஸுதா நாத்மாநமேவச – பரசுராமன் இராமனிடம் தோற்றுப்போனான் என்ற செய்தியைக் கேள்விப்பட்ட தசரதன் மகிழ்ச்சி அடைந்தார்; மிகுந்த ஆனந்தம் கொண்டார்; தானும் தனது புத்திரர்களும் மறுபிறவி எடுத்தாகவே எண்ணினார் - என்று கூறுவதற்கு, பரசுராமன் தோற்றுப்போய் அங்கிருந்து சென்றுவிட்டான் என்பதைக் கேள்விபட்ட பின்னர் தானும் தனது புத்திரர்களும் மறுபிறவி எடுத்துப் பிறந்ததாக எண்ணினார் அல்லவோ? சீதை இராமனின் மேன்மைகள் அனைத்தையும் நேரடியாக அறிந்தவள் ஆவாள். ஆயினும் அவள் செய்தது என்ன? இராமன் பட்டாபிஷேகம் செய்து கொள்ளும் பொருட்டு, தனது திருமேனி முழுவதும் நன்றாக அலங்கரித்துக்கொண்டு, தசரதனின் மாளிகைக்கு எழுந்தருளியபோது, அவனது வடிவழகில் சீதை மயங்கி நின்றாள். அவன் மீது கொண்ட மாறாத காதலால், “இவனுக்கு என்ன ஆபத்து ஏற்படுமோ”, என்று கலங்கினாள். இராமாயணம் அயோத்யாகாண்டம் (19-2) – பதி ஸம்மாநிதா ஸீதா பர்த்தாரமஸிதேக்ஷணா, ஆத்வாரமநுவவ்ராஜ மங்களாந் யபி தத்யுஷீ - தனது கணவனாகிய இராமனால் நன்கு கௌரவிக்கப்பட்டவளும், கருமையான விழிகளைக் கொண்டவளும் ஆகிய சீதை, இராமனை மங்களாசாஸநம் செய்தபடியே அவனைத் தொடர்ந்து வாசல்வரை சென்றாள் – என்று கூறுவதற்கு ஏற்ப தன்னுடைய மாளிகையின் வாசல் முடிய அவனுக்குப் பல்லாண்டு பாடியபடியே சென்றாள். அத்துடன் நிற்காமல், இராமாயணம் அயோத்யாகாண்டம் (16-24) – பூர்வாம் திசம் வஜ்ரதரோ தக்ஷிணாம் பாது தே யம:, வருண: பச்சிமாமாசாம் தநேசஸ்தூத்தராம் திசம் – உம்மைக் கிழக்குத் திசையில் இந்த்ரனும், தென் திசையில் யமனும், மேற்குத் திசையில் வருணனும், வடக்குத் திசையில் குபேரனும் பாதுகாப்பார்களாக – என்று கூறுவதற்கு ஏற்ப, திக்பாலகர்களை இராமனுக்குப் பாதுகாவலர்களாக இருக்க விரும்பினாள் அல்லவோ? சூர்ணையில் உள்ள “ஸ்ரீஜநகராஜன் திருமகள்” என்பதை “ஸ்ரீஜநகராஜன்”, “திருமகள்” என்று தனித்தனியாகப் பிரித்தும் பொருள் உரைக்கலாம். இவ்விதம் கொண்டால், சிவனின் வில்லை இராமன் உடைத்ததன் மூலம், இராமனது சக்தியின் மேன்மையை ஜனகன் நேரடியாகவே கண்டார். ஆயினும் அவர் செய்தது என்ன? இராமாயணம் பாலகாண்டம் (73-27) - இயம் ஸீதா மம ஸுதா ஸஹதர்மசரீ தவ, ப்ரதீச்சசைநாம் பத்ரந் தே பாணிம் க்ருஹ்ணீஷ்வ பாணிநா – எனது பெண்ணாகிய இந்தச் சீதை நீவிர் செய்யும் அனைத்து தர்மங்களுக்கும் துணையாக நிற்பாள்; இப்படிப்பட்ட இவளை நீவிர் திருக்கரம் பற்றவேண்டும்; உமக்கு மங்களங்கள் உண்டாகட்டும்; இவளை ஏற்றுக்கொள்வீராக - என்று கூறியதற்கு ஏற்ப, “உயர்ந்த பிறப்பு போன்றவற்றால் சிறந்த இவளைத் திருக்கரம் பற்றவேண்டும்”, என்று பாணிக்ரஹணம் செய்வித்தார். அப்போது சீதையுடன் சேர்ந்த இராமனின் திருமேனி அழகு, மென்மை ஆகியவற்றை கண்டு நெகிழ்ந்து, கலங்கி, இந்தச் சேர்க்கைக்கு எந்தவிதமான தீமையும் வரக்கூடாது என்று எண்ணியவராக, “பத்ரம் தே - மங்களம் உண்டாகட்டும்”, என்று வாழ்த்தினார் அல்லவோ? – விச்வாமித்திரர் தனது யாகத்தைக் காப்பாற்றும் பொருட்டு இராமனை அழைத்துக்கொண்டு செல்லும்போது நடுவில் மிகப் பெரிய ஆரவாரத்துடன் தாடகை எதிர்த்து வருவதைக் கண்டார். அப்போது அவர் இராமாயணம் பாலகாண்டம் (19-14) - அஹம் வேத்மி மஹாத்மாநம் ராமம் ஸத்ய பராக்ரமம் – மஹாத்மாவும், உண்மையான பராக்ரமம் கொண்டுள்ளவனும் ஆகிய இராமனை நான் அறிவேன் – என்பதற்கு ஏற்ப இராமனின் வலிமையை அவர் முழுமையாக அறிந்துள்ளபோதிலும் அவனுடைய மென்மையைக் கண்டு கலங்கினார். இதனால் இராமாயணம் பாலகாண்டம் (26-14) – விச்வாமித்ரஸ்து ப்ரஹ்மர்ஷிர் ஹுங்காரேணாபிபர்த்ஸ்ய தாம், ஸ்வஸ்தி ராகவயோரஸ்து ஜயஞ்சை வாப்யபாக்ஷத - ப்ரஹ்மரிஷியான விச்வாமித்திரர் தனது ஹும் என்ற ஒலியால் தாடகையை விரட்டினார்; ரகுவம்சத்தில் வந்த உங்கள் இருவருக்கும் வெற்றி, மங்களம் உண்டாகட்டும் என்றார் - என்று கூறுவதற்கு ஏற்ப, தான் தாடகையின் முன்பாக நின்று அவளை “ஹும்” என்று அதட்டி, இராமனுக்கும் லக்ஷ்மணனுக்கும் எந்தத் தீமையும் வராமல் இருப்பதற்காகப் பல்லாண்டு கூறினார் அல்லவோ? – ஸ்ரீதண்டகாரண்யத்தில் வசிக்கும் முனிவர்கள் இராமாயணம் ஆரண்யகாண்டம் (1-11) - தே தம் ஸோமமிவோத்யந்தம் த்ருஷ்ட்வாவை தர்மசாரிண: மங்களாநி ப்ரயுஞ்ஜாநா: ப்ரத்யக்ருஹ்ணந் த்ருடவ்ரதா: – தர்மத்தைச் செய்பவர்களும், உறுதியான விரதங்கள் பூண்டவர்களும் ஆகிய அந்த ரிஷிகள், உதிக்கின்ற சந்திரன் போன்ற இராமனைக் கண்டார்கள்; அவனைப் பார்த்தபடி அவனுக்கு மங்களாசாஸநம் செய்தார்கள் – என்று கூறியபடியே தங்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்திலிருந்து காப்பாற்றவும், தங்களுக்கு விருப்பமானவற்றை அளிக்கவும் செய்பவன் இராமனே என்று அறிந்து அவனைக் குறித்தே தவம் இயற்றியபடி உள்ளபோதிலும், இராமன் தங்களுடைய அருகாமையில் வந்தவுடன் அவற்றை மறந்து, இவன் வடிவழகில் கலங்கிப் போய் மங்களாசாஸநம் செய்தார்கள் அல்லவோ? – அனுமன் முதன்முதலாக இராமனைக் கண்டபோது இராமாயணம் கிஷ்கிந்தா காண்டம் (3-14) – ஆயதாச்ச ஸுவ்ருத்தாச்ச பாஹவ: பரி கோபமா: ஸர்வ பூஷண பூஷார்ஹா: கிமர்த்தம் நவிபூஷிதா: - நீண்டிருப்பவையும், அழகுடன் திரண்டுள்ளவையும், உலக்கை போன்றுள்ளவையும், அனைத்து ஆபரணங்கள் மூலம் மறைக்கப்பட வேண்டியவையும் ஆகிய திருக்கரங்கள் ஏன் அலங்கரிக்கப்படவில்லை – என்று கூறியதற்கு ஏற்ப, உலக்கை போன்ற உறுதியான திருத்தோள்களின் வலிமையைக் கண்டவுடன், “நம்மைக் காப்பாற்றுபவராக இவர் நிச்சயம் இருப்பார்”, என்று எண்ணினான். ஆனால் உடனே அந்த திருத்தோள்களின் அழகில் ஈடுபட்டு நின்று, “யாருடைய கண் த்ருஷ்டியாவது பட்டுவிடப் போகிறதே” என்று சந்தேகப்பட்டு, “திருவாபரணங்கள் கொண்டு மறைக்கவேண்டிய இந்த அழகை இவ்விதம் வெளியிட்ட காரணம் என்ன?”, என்று வயிறு கலங்கினான். இராமனின் வலிமையைப் பல இடங்களில் கண்டுள்ளபோதிலும், “இவனுக்கு என்ன நேரப்போகிறதோ?”, என்று எப்போதும் அவனை விட்டுப் பிரியாமல் நின்று, அவனைக் காப்பாற்றியபடி இருந்தான் அல்லவோ? – சுக்ரீவன் இராமனின் வலிமைக்கு உள்ள மேன்மையை வாலி வதை போன்ற பல இடங்களில் நேரடியாகப் பார்த்துள்ளான். ஆயினும் இராமனின் மென்மையான திருமேனியைக் கண்டு கலங்கினான். ஸ்ரீவிபீஷணன் தன்னுடன் நான்கு அரக்கர்கள் சூழ வந்தபோது இராமாயணம் யுத்தகாண்டம் (17-5) - ஏஷ ஸர்வாயுதோ பேதச் சதுர்ப்பிஸ் ஸஹ ராக்ஷஸை:, ராக்ஷஸோப்யேதி பச்யத்வம் அஸ்மாந் ஹந்தும் ந ஸம்சய: - இந்த அரக்கன் தன்னுடன் நான்கு அரக்கர்களுடன் கூடியவனாக நம்மைக் கொல்ல வந்துள்ளான். இதில் ஐயம் இல்லை, பார்த்தீர்களா – என்று கூறுவதற்கு ஏற்ப, நம் அனைவருக்கும் உயிராக உள்ள இராமனை அழிப்பதன் மூலம் நம் அனைவரையும் முடிப்பதற்காகவே இவன் வருகிறான் என்று முடிவு செய்தான். அவனை மற்ற வானர வீரர்களுக்கும் காண்பித்தான். இராமாயணம் யுத்தகாண்டம் (17-16) - ராகவம் சரணம் கத: – இராமனைச் சரணம் அடைகிறேன், யுத்தகாண்டம் (17-13) - நிவேதயத மாம் க்ஷிப்ரம் – விபீஷணனாகிய என்னைப் பற்றி இராமனுக்குத் தெரிவியுங்கள் – என்றும் கூறியபடி விபீஷணன் வந்தான். ஆயினும் இந்தச் சொற்களைக் கேட்ட பின்னரும், இராமாயணம் யுத்தகாண்டம் (17-27) - வத்யதாமேஷ தீவ்ரேண தண்டேந ஸசிசைஸ் ஸஹ, ராவணஸ்ய ந்ருசம்ஸஸ்ய ப்ராதா ஹ்யேஷ விபீஷண: – இந்த விபீஷணனை அவனது மந்திரிகளுடன் சேர்த்து மிகவும் கடுமையான தண்டனை அளித்துக் கொல்லவேண்டும்; இவன் இராவணனின் தம்பி அல்லவோ - என்று கூறுவதற்கு ஏற்ப இராவணனுடன் இவனுக்கு உள்ள ஸம்பந்தத்தை ஆராய்ந்து, இவனைச் சித்ரவதை செய்யவேண்டும் என்றான். மேலும் சுக்ரீவன் இராமனிடம், இராமாயணம் யுத்தகாண்டம் (17-24) - ராவணேந ப்ரணிஹிதம் தமமைஹி நிசாசரம், தஸ்யாஹம் நிக்ரஹம் மந்யே க்ஷமம் க்ஷமவதாம்வர – பொறுமை உள்ளவர்களில் உயர்ந்தவனே! இந்த அரக்கன் இராவணனால் அனுப்பப்பட்டவன் என்பதை அறிவாயாக; எனவே இவன் தண்டிக்கப்படவேண்டியவன், இவனுக்குத் தக்க தண்டனை அளிப்பதே சிறந்தது என்று நான் எண்ணுகிறேன் - என்று கூறுவதற்கு ஏற்ப, “இவன் இராவணன் அனுப்பி இங்கே வந்தவன் என்பதை உமது திருவுள்ளத்தில் கொள்ளவேண்டும். இவனைத் தண்டிப்பதே ஏற்றது என்று நான் எண்ணுகிறேன்”, என்பது போன்ற சொற்கள் பல உரைத்தான். மேலும், “இவனை எப்போதும் நாம் கைக்கொள்ளக்கூடாது”, என்று உறுதியாக நின்றான். அப்போது இராமன், இராமாயணம் யுத்தகாண்டம் (18-23) – பிசாசாந் தாநவாந் – சுக்ரீவனே! பிசாசுகள், தானவர்கள், யக்ஷர்கள், உலகில் உள்ள அசுரர்கள் என்றுள்ள அனைவரையும் நான் விரும்பினால் எனது விரல் நுனி மூலமே கொல்ல இயலும் – என்று தனது வலிமையைச் சுக்ரீவனுக்கு உணர்த்தி, ஒரு சரிதங்களை அவனுக்கு எடுத்துரைத்து, அவன் மனதைத் தெளிய வைத்து, அவன் அச்சத்தை நீக்கினான். மேலும் இராமாயணம் யுத்தகாண்டம் (18-34) – ஆநயைநம் ஹரிச்ரேஷ்ட - வானரர்களின் தலைவனே! அவனை இங்கே அழைத்து வாரும் – என்று வேண்டும்படி, இராமனைக் காக்கப்பட வேண்டிய ஒருவனாகவே சுக்ரீவன் நினைத்தான் அல்லவோ? சூர்ணையில் உள்ள மஹாராஜர் என்ற பதம் மூலம் ஜடாயுவைக் குறிப்பதாகவும் கொள்ளலாம். அதாவது மஹாராஜர் என்று ஸ்ரீஜடாயுமஹாராஜரையும் உரைப்பார்கள். சீதைக்காக இராவணனுடன் சண்டையிட்டு, குற்றுயிராகக் கிடந்த ஜடாயு, தன்னைக் காண வந்த இராமனைப் பார்த்தார். இராமன், தான் உள்ள இடத்திலிருந்த பதினாலாயிரம் அரக்கர்களைத் தனி ஒருவனாகவே நின்று அழித்த தோள் வலிமையைப் பற்றி நன்றாக அறிந்திள்ளபோதிலும், இராமாயணம் ஆரண்யகாண்டம் (67-15) – யாமோஷதி மிவாயுஷ்மந் அந்வேஷஸி மஹாவநே, ஸாதேவீ மமசப்ராணா ராவணேநோபயம் ஹ்ருதம் – தீர்க்கமான ஆயுள் கொண்ட இராமா! எந்த ஒரு சீதையை, இத்தனை பெரிய கானகத்தில் உயிர்காக்கும் மூலிகைக் கொடியைத் தேடுவது போன்று தேடுகிறாயோ, அந்தப் பிராட்டி மற்றும் எனது உயிர் ஆகிய இரண்டுமே இராவணனால் கவரப்பட்டது - என்று கூறுவதற்கு ஏற்ப, “அரியவகை மூலிகையைத் தேடுபவர்கள் ஒவ்வொரு காட்டிலும் தடுமாறியபடி உள்ளது போன்று, நீவிர் எந்த ஒரு பிராட்டியைத் தேடுகிறீர்களோ, உமக்கு நித்யமான உயிர் போன்றுள்ள அந்தப் பிராட்டியும் எனது உயிரும் இராவணன் என்ற அற்பனால் அபகரிக்கப்பட்டது”, என்று உரைத்தார். சீதையைப் பிரிந்த துன்பத்தால் வாடுகின்ற நிலையில் இராமனுக்கு ஏற்பட்ட தளர்ச்சி மற்றும் மென்மை, அரக்கர்களுடன் இராமனுக்கு உள்ள பகை ஆகியவற்றை எண்ணிப் பார்த்து, “இவனுக்கு என்ன ஆகுமோ”, என்று பயந்து, ஆயுஷ்மந் – நீண்ட ஆயுள் கொண்டவனே என்று வாழ்த்தினார் அல்லவோ? பூதனையைக் கொன்ற செயல் மூலமாக க்ருஷ்ணனுடைய திவ்யமான வலிமையை நந்தகோபர் நேரடியாகவே பார்த்துள்ளார். ஆயினும் அவனது மென்மையை எண்ணிப் பார்த்து உள்ளம் கலங்கினார். இதனால் மஹாபாரதம் – ரக்ஷது த்வாம் அசேஷாணாம் பூதாநாம் ப்ரபவோ ஹரி: யஸ்ய நாபி ஸமுத்பூத பங்கஜா தபவஜ் ஜகத் – யாருடைய திருநாபியில் தோன்றிய தாமரை மலரிலிருந்து அனைத்து உலகங்களும் தோன்றினவோ, உலகின் காரணமாக உள்ள அந்த ஸ்ரீஹரி உன்னைக் காப்பாற்ற வேண்டும் – என்று கூறுவதற்கு ஏற்ப, “அனைத்து உலகங்களுக்கும் காரணமாக உள்ளவனும், அனைத்து விரோதிகளையும் அழிப்பவனுமாகிய ஸர்வேச்வரன் உன்னைக் காப்பாற்றுவானாக”, என்று காப்பு உரைத்தார் அல்லவோ? க்ருஷ்ணனின் அனைத்தும் அறிகின்ற வலிமை, அனைத்தும் செய்யவல்ல திறமை போன்றவற்றை விதுரர் நன்கு அறிவார். ஆயினும் அவன் துரியோதனனின் அவைக்கு எழுந்தருளியபோது, அவனுக்கு அளிக்கப்பட்ட பொய்யான ஆசனத்தைக் கண்டு அச்சம் கொண்டார். அவன் மீது கொண்ட ப்ரேமையால், அவனது வலிமை பற்றி மறந்தவராக, மஹாபாரதம் உத்யோக பர்வம் - ஸம்ஸ்ப்ருசந் நாஸநம் சௌரேர் விதுரஸ்ஸ மஹாமதி: - மிகுந்த ஞானம் கொண்ட விதுரர் க்ருஷ்ணனுக்கு அளிக்கப்பட்ட ஆசனத்தைத் தனது கரங்களால் அழுத்திப் பார்த்தார் - என்று கூறுவதற்கு ஏற்ப, தனது திருமாளிகையில், தான் க்ருஷ்ணனுக்கு அளித்த ஆசனத்தின் மீதே சந்தேகம் கொண்டவராக ஒருமுறை நன்றாக அழுத்திப் பார்த்தார் அல்லவோ? ஸ்ரீரங்கநாதனின் ஞானம், சக்தி போன்ற அனைத்தையும் பிள்ளயுறங்கா வில்லிதாஸர் என்பவர் நன்கு அறிவார். “இந்த நம்பெருமாளே நம்மைக் காப்பவன்”, என்பதையும் நன்கு அறிவார். ஆயினும் திருவரங்கன் மீது கொண்டிருந்த ஆழ்ந்த ப்ரேமை காரணமாக, “நம்பெருமாள் திருவீதியில் எழுந்தருளும்போது அவனுக்கு ஏதேனும் சிறிய அசைவு உண்டானால் கூட நாம் நமது உயிரை மாய்த்துக்கொள்வோம்” என்று எண்ணியபடி நம்பெருமாள் அருகிலேயே ஒரு சிறிய உடைவாளை ஏந்தியபடி வருவார் என்பது மிகவும் ப்ரஸித்தம் ஆகும். – சூர்ணையில் உள்ள “தொடக்கமானவர்கள்” என்று கூறப்பட்ட பதம் மூலம் கீழே உள்ள பலரையும் எண்ணவேண்டும்: இராமாயணம் அயோத்யாகாண்டம் (2-52) – ஸ்த்ரியோ வ்ருத்தஸ் தருண் யச்ச ஸாயம் ப்ராதஸ் ஸமாஹிதா: ஸர்வாந் தேவாந் நமஸ்யந்தி ராமஸ்யார்த்தே யசஸ்விந: - அயோத்தியில் உள்ள வயதான பெண்கள், ஆண்கள், இளைய பெண்கள் என்று பலரும் இராமனின் நலத்தை முன்னிட்டு காலை மற்றும் மாலை நேரங்களில் அனைத்து தேவர்களையும் வணங்கியபடி உள்ளனர் – என்று கூறப்படும் திருஅயோத்தியில் உள்ள மக்கள். இராமாயணம் அயோத்யாகாண்டம் (52-33) – யந் மங்களம் ஸுபர்ணஸ்ய விநதா கல்பயத் புரா, அம்ருதம் ப்ரார்த்தயாநஸ்ய தத்தே பவது மங்களம் - தனது தாயான விநதைக்காக கருடன் அமிர்தத்தைத் தேடிச் சென்றபோது, கருடனின் பொருட்டு விநதை எத்தகைய மங்களத்தை வேண்டினாளோ அத்தகைய மங்களம் உனக்கு ஏற்படவேண்டும் – என்று உரைத்த இராமனின் தாயான கௌஸலை. ஸ்ரீவிஷ்ணுபுராணம் (5-3-10) - ஜாதோஸி தேவதேவேச சங்கசக்ர கதாதர! திவ்யரூபமிதம் தேவ ப்ரஸாதே நோபஸம்ஹர - தேவர்களின் தலைவனே! சங்கு சக்கரம் கொண்டவனே! சங்கு சக்கரத்துடன் காட்சி அளிக்கின்ற இந்த திவ்யமான ரூபத்தை நீ கருணையுடன் மறைத்துக் கொள்ளவேண்டும் - என்று வேண்டிய வஸுதேவர். ஸ்ரீவிஷ்ணுபுராணம் (5-3-13) - உபஸம்ஹர ஸர்வாத்மந் ரூபமேதச் சதுர்புஜம், ஜாநாது மாவதாரம் தே கம்ஸோயம் திதி ஜந்மஜ: - அனைத்திற்கும் ஆத்மாவாக உள்ளவனே! நான்கு திருத்தோள்களுடன் கூடிய இந்த திவ்யமான ரூபத்தை மறைத்துக் கொள்வாயாக. அசுரனாகிய கம்ஸன் இந்த அவதாரத்தை அறிதல் கூடாது - என்று வேண்டிய தேவகிப்பிராட்டி.