Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 245)
மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்
அவன் ஸ்வரூபத்தை யநுஸந்தித்தால் அவனைக் கடகாகக் கொண்டு தன்னை நோக்கும், ஸௌகுமார்யத்தை யநுஸந்தித்தால் தன்னைக் கடகாகக் கொண்டு அவனை நோக்கும்.
உக்தார்த்தத்தை விசதீகரிக்கிறார் (அவன் ஸ்வரூபத்தை) என்று தொடங்கி.
கடந்த சூர்ணையில் கூறப்பட்டதை மேலும் விவரிக்கிறார்.
– அதாவது, ப்ரதமாக்ஷரத்தில் சொல்லுகிறபடியே ஸர்வஜ்ஞனாய் ஸர்வசக்தியாய் ஸர்வரக்ஷகனான வவனுடைய ஸ்வரூபத்தை யநுஸந்தித்தால், அவனை தனக்கநிஷ்ட நிவாரகனாகக் கொண்டு, அஜ்ஞனாய் அசக்தனாய் அப்ராப்தனான தன்னை ரக்ஷித்துக்கொள்ளும்; பேசப் பிசகும்படியான வவனுடைய ஸௌகுமார்யத்தை யநுஸந்தித்தால், அவனுடைய ஸர்வசக்தித்வாதிகளை மறந்து குழைச்சரக்காக நினைத்துத் தன்னை ரக்ஷகனாகக் கொண்டு மங்களாசாஸநம் பண்ணி அவனை ரக்ஷிக்குமென்கை. இவ்விடத்தில் ஸௌந்தர்யம் சொல்லிற்றில்லையேயாகிலும், அதுவும் மங்களாசாஸந ஹேதுவாகையாலும் மேலே சொல்லுகையாலும் ஸௌகுமார்யமிதுக்கு முபலக்ஷணம்.
ப்ரணவத்தின் முதல் எழுத்தாகிய “அ” என்பதால் உரைக்கப்பட்டபடி ஸர்வேச்வரன் அனைத்தைம் அறிந்தவனாகவும், அனைத்து சக்தியும் கொண்டவனாகவும், அனைத்தையும் காப்பாற்றுபவனாகவும் உள்ளான். இப்படிபட்ட அவன் ஸ்வரூபத்தை உணர்ந்து கொண்டால், தனக்கு விருப்பம் அல்லாதவற்றை அவனே நீக்கிவிடுவான் என்ற சிந்தனை ஏற்பட்டுவிடும்; இதனால், தான் ஏதும் அறியாதவன், எந்தச் சக்தியும் அற்றவன், தன்னைக் காப்பாற்றிக் கொள்ள மற்றவர்களை நாடவேண்டும் என்ற சிந்தனை போன்றவற்றைக் கொண்ட தன்னை அவன் காப்பாற்றுவான் என்று இருந்து, தன்னைக் காப்பாற்றிக் கொள்வான். ஆனால், “அவனது திருமேனி குறித்துப் பேசினால் கூட வாடிவிடும்படியான மென்மை கொண்டவன்” என்று எண்ணியபடி சிலர் இருக்கக்கூடும். இவர்கள் அவனது அனைத்து சக்திகளையும் குழைந்து போகும் பொருள் போன்று எண்ணி, தான் அவனைக் காப்பாற்றுவதாக எண்ணிக் கொண்டு, அவனுக்குத் திருப்பல்லாண்டு கூறி, அவனைக் காப்பாற்ற முயல்வார்கள். இங்கு மென்மையுடன் சேர்த்து திருமேனியின் அழகு பற்றி ஏதும் கூறவில்லை என்றாலும், அதுவும் திருப்பல்லாண்டு பாடுவதற்குக் காரணமே என்பதாலும், கடந்த சூர்ணையில் கூறப்பட்டதாலும் மென்மை என்பது அழகையும் சேர்த்தே உணர்த்துகிறது என்று கொள்க.