Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 244)
மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்
மங்களாசாஸநம் ஸ்வரூபவிருத்தமன்றோ வென்னில் ஜ்ஞாநதசையில் ரக்ஷ்யரக்ஷகபாவம் தன்கப்பிலே கிடக்கும்; ப்ரேமதசையில் தட்டு மாறிக் கிடக்கும்.
இந்த திநசர்யையிற் சொன்னவற்றில் விவரிக்க வேண்டுமவற்றை விவரிப்பதாகத் திருவுள்ளம் பற்றி, ப்ரதமத்தில் மங்களாசாஸநத்தை விவரித்தருளுகிறார் (மங்களாசாஸந) என்று தொடங்கி.
கடந்த சூர்ணையில் கூறப்பட்டதான, ப்ரபந்நன் தன்னுடைய அன்றாட வாழ்க்கையில் தினசரி கடைப்பிடிக்க வேண்டிய பலவற்றில், விவரிக்க வேண்டியவை சில குறித்து, மேலும் விவரிக்கத் திருவுள்ளம் பற்றினார். ஆகவே முதலில் மங்களாசாஸநம் குறித்து அருளிச்செய்கிறார்.
ஹேயப்ரத்யநீகனாய் கல்யாணைகதாநனாய் ஸ்வேதர ஸகல ரக்ஷகனாயிறே ஸர்வேச்வரனிருப்பது; இப்படி யிருக்கிற வவனைக் கொண்டு தனக்குண்டான அமங்களங்களைப் போக்கி இல்லாத மங்களங்களை யுண்டாக்கிக் கொள்ளக்கடவ தத்ரக்ஷ்ய பூதனானவிவன், தனக்கு ரக்ஷகனானவவனுக்குத் தான் மங்களங்களை யாசாஸிக்கை ததேக ரக்ஷ்யத்வரூபமான ஸ்வரூபத்துக்கு விருத்தமன்றோ வென்கிற சங்கையை யநுவதிக்கிறார் (மங்களாசாஸநம் ஸ்வரூப விருத்தமன்றோ வென்னில்) என்று. அத்தைப் பரிஹரிக்கிறார் (ஜ்ஞாந தசையில்) என்று தொடங்கி. (ஜ்ஞாந தசையாவது) - ஸர்வேச்வரனே ரக்ஷகனாகவும் தானவனுக்கு ரக்ஷ்யபூதனாகவும் ப்ரணவத்திற் சொல்லுகிறபடியே தெளியக் கண்டநுஸந்திக்கும் தசை; அந்த தசையில் “களைவாய் துன்பம் களையாதொழிவாய்” இத்யாதிப்படியே, தன்னுடைய அநிஷ்ட நிவ்ருத்த்யாதிகளுக்கவனே கடவனென்றிருக்கையாலே, ரக்ஷ்யரக்ஷக பாவம் தனக்கடைத்த ஆச்ரயத்திலே கிடக்கும். (ப்ரேம தசையாவது) – ஸர்வேச்வரனுடைய ஸௌந்தர்ய ஸௌகுமார்யங்களை யநுஸந்தித்து “இவ்விஷயத்துக்குக் கென்வருகிறதோ” என்று அஸ்தாநே பயசங்கை பண்ணி அவன் ஸ்வரூபத்தை யநுஸந்திக்க க்ஷமரன்றிக்கே நெஞ்சு மறுகும்படியான தசை; அந்த தசையில் ஈச்வரனை ரக்ஷிக்க வழிதேடித் தடுமாறுகையாலே, ஈச்வரன் பக்கலிலே ரக்ஷ்யபாவமும் சேதநன் பக்கலிலே ரக்ஷக பாவமுமாய்த் தனக்கடைத்த ஆச்ரயத்தி லன்றிக்கே மாறாடிக்கிடக்கு மென்றபடி.
அனைத்துவிதமான தாழ்வுகளுக்கும் எதிர்த்தட்டாகவும், அனைத்து திருக்கல்யாண குணங்களுக்கும் இருப்பிடமாகவும், தன்னைத் தவிர உள்ள மற்ற அனைத்திற்கும் ரக்ஷகனாகவும் ஸர்வேச்வரன் உள்ளான். இப்படியாக உள்ள ஸர்வேச்வரன் மூலமாக தனக்கு உண்டாகின்ற தாழ்வுகள் அனைத்தையும் நீக்கிக் கொண்டு, தன்னிடம் இல்லாத மக்களங்களை ஏற்படுத்திக்கொண்டு, அவனால் ரக்ஷிக்கப்படுபவனாக இந்த ஜீவன் உள்ளான். இவ்விதம் உள்ளபோது, தன்னைக் காப்பாற்றும் ஸர்வேச்ரனுக்கு மங்களம் உண்டாகவேண்டும் என்று ஜீவன் விரும்புவது, அவனால் காப்பாற்றப்படும் ஜீவனுடைய ஸ்வரூபத்திற்கு முரணாக இருக்கிறது அல்லவோ என்று சந்தேகம் எழலாம். இதனையே “மங்களாசாஸநம் ஸ்வரூப விருத்தமன்றோ வென்னில்” என்றார். இதற்கான விடையை “ஜ்ஞாந” என்று தொடங்கி அருளிச்செய்கிறார். “ஜ்ஞாந தசை” என்பது என்ன? ஸர்வேச்வரனே தன்னைக் காப்பாற்றும் ரக்ஷகன், தான் அவனால் காப்பாற்றப்படும் வஸ்து என்பதைத் திருமந்த்ரத்தின் ப்ரவணத்தில் கூறியுள்ளது குறித்து தெளிவாக அறிந்து, அதற்கேற்றபடி இருக்கின்ற தன்மை என்பதாகும். இப்படிப்பட்ட நிலையில் திருவாய்மொழி (5-8-8) – களைவாய் துன்பம் களையாதொழிவாய் - என்று கூறியதற்கு ஏற்ப, தனக்கு விருப்பம் அல்லாதவற்றை நீக்குவதற்கும், தேவையாவைற்றை அடைவதற்கும் ஸர்வேச்வரனே கதி என்று இருக்கக்கூடும். இதனால் காக்கின்ற தன்மை, காக்கப்படும் பொருளின் தன்மை ஆகியவை அந்தந்த இடங்களில் சரியாகவே பொருந்தியிருக்கும். “ப்ரேம தசை” என்பது என்ன? ஸர்வேச்வரனுடைய திருமேனி அழகையும் மென்மையையும் எண்ணிப் பார்த்து, “இவனுக்கு என்ன நேருமோ?”, என்று அச்சம் கொள்ளுதல்; அவனது உண்மையான ஸ்வரூபத்தை எண்ணிப் பார்க்கவும் பொறுமை இல்லாமல், மனம் உருகி நிற்கின்ற நிலை ஆகும். அப்போது ஸர்வேச்வரனை எப்படிக் காப்பாற்றுவது என்று புரியாமல் திகைத்து நிற்கக்கூடும். இதனால் ஸர்வேச்வரனிடம் காக்கப்படும் பொருள் என்ற நிலையும், ஜீவனிடம் காப்பாற்றுபவன் என்ற நிலையும் மாறிக் கிடப்பதைக் காணலாம்.