Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 243)

மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்

இப்படி ஸர்வப்ரகாரத்தாலும் நாசஹேதுவான அஹங்காரத்துக்கும் அதினுடைய கார்யமான விஷயப்ராவண்யத்துக்கும் விளைநிலம் தானாகையாலே தன்னைக் கண்டால் சத்ருவைக் கண்டாற்போலேயும்; அவற்றுக்கு வர்த்தகரான ஸம்ஸாரிகளைக் கண்டால் ஸர்ப்பத்தைக் கண்டாற்போலேயும், அவற்றுக்கு நிவர்த்தகரான ஸ்ரீவைஷ்ணவர்களைக் கண்டால் பந்துக்களைக் கண்டாற்போலேயும், ஈச்வரனைக் கண்டால் பிதாவைக் கண்டாற்போலேயும், ஆசார்யனைக் கண்டால் பசியன் சோற்றைக் கண்டாற்போலேயும்; சிஷ்யனைக் கண்டால் அபிமத விஷயத்தைக் கண்டாற்போலேயும் நினைத்து, அஹங்காரார்த்த காமங்கள் மூன்றும் அநுகூலர்பக்கல் அநாதரத்தையும் ப்ரதிகூலர்பக்கல் ப்ராவண்யத்தையும் உபேக்ஷிக்குமவர்கள் பக்கலபேக்ஷையையும் பிறப்பிக்குமென்றஞ்சி, ஆத்மகுணங்கள் நம்மாலும் பிறராலும் பிறப்பித்துக் கொள்ளவொண்ணாது, ஸதாசார்ய ப்ரஸாதமடியாக வருகிற பகவத் ப்ரஸாதத்தாலே பிறக்குமத்தனை யென்று துணிந்து தேஹயாத்ரையி லுபேக்ஷையும் ஆத்மயாத்ரையி லபேக்ஷையும் ப்ராக்ருத வஸ்துக்களில் போக்யதா புத்திநிவ்ருத்தியும் தேஹதாரணம் பரமாத்ம ஸமாராதன ஸமாப்தி ப்ரஸாத ப்ரதிபத்தி யென்கிற புத்திவிசேஷமும், தனக்கொரு க்லேசமுண்டானால் கர்ம பலமென்றாதல் க்ருபா பலமென்றாதல் பிறக்கும் ப்ரீதியும், ஸ்வாநுஷ்டானத்தில் ஸாதநத்வ புத்திநிவ்ருத்தியும்; விலக்ஷணருடைய ஜ்ஞாநாநுஷ்டானங்களில் வாஞ்சையும், உகந்தருளின நிலங்களி லாதராதிசயமும், மங்களாசாஸநமும், இதர விஷயங்களில் அருசியும், ஆர்த்தியும், அநுவர்த்தந நியதியும், ஆஹாரநியதியும் அநுகூலஸஹவாஸமும், ப்ரதிகூல ஸஹவாஸ நிவ்ருத்தியும் ஸதாசார்ய ப்ரஸாதத்தாலே வர்த்திக்கும்படி பண்ணிக் கொண்டு போரக்கடவன்.

– ”தன்னைத்தானே முடிக்கையாவது” என்று தொடங்கி இவ்வளவாக, அஹங்காராதிகளின் தோஷ முபபாதிக்கப்பட்டது; அநந்தரம் ப்ராப்யப்ராபகங்களிரண்டு மவனே யென்றிருக்கும் ப்ரபந்நாதிகாரியுடைய திநசர்யா விசேஷம் சொல்லப்படுகிறது (இப்படி ஸர்வப்ரகாரத்தாலும்) என்று தொடங்கி.

“தன்னைத்தானே முடிக்கையாவது” என்றுள்ள சூர்ணை-180 தொடங்கி, கடந்த சூர்ணை முடிய உள்ள சூர்ணைகளில் அகங்காரம் போன்ற பலவற்றின் தோஷங்கள் விரிவாக உரைக்கப்பட்டது. அடுத்து, “ப்ராப்யம் என்னும் பேறு மற்றும் ப்ராபகம் என்னும் உபாயம் ஆகிய இரண்டும் ஸர்வேச்வரனே” என்று வாழ்கின்ற ப்ரபந்நர்களின் அன்றாட வாழ்க்கை முறையை இங்கு அருளிச்செய்கிறார்.

(ஸதாசார்ய ப்ரஸாதத்தாலே வர்த்திக்கும்படி பண்ணிக் கொண்டு போரக் கடவன்) என்னுமளவாக. (இப்படி) என்று – கீழுக்தமான ப்ரகாரத்தைப் பராமர்சிக்கிறது. (ஸர்வ ப்ரகாரத்தாலும் நாசஹேதுவாகையாவது) - ஸ்வரூபேண முடித்தும், பாகவத விரோதத்தை விளைத்து முடித்தும், பகவல்லாப விரோதியாயும், எல்லாப்படியாலும், “அஸந்நேவ” என்கிறபடியே - அஸத்கல்பமாம்படி ஸ்வரூபத்தை உருவழியப் பண்ணுமதாயிருக்கை. அஹங்காரந்தான், தேஹாத்மாபிமாந ரூபமாயும், தேஹாதிரிக்தாத்ம விஷயத்தில் ஸ்வாதந்த்ர்யாபிமாந ரூபமாயும், இரண்டு வகைப்பட்டிறே யிருப்பது; இவ்விடத்தில் அவை யிரண்டும் சேரச்சொல்லப்படுகிறது. (அதினுடைய கார்யமான விஷயப்ராவண்யத்துக்கும்) தேஹாத்மாபிமாநமும் ஸ்வாதந்த்ர்யாபிமாநமுமே விஷயங்களை ஸ்வபோக்யத்வேந விரும்புகைக்கு மூலமாகையாலே, விஷய ப்ராவண்யத்தை அஹங்கார கார்யமென்கிறது. விஷயசப்தத்தாலே – கீழ் அநுகூலமாகவும் ப்ரதிகூலமாகவும் சொல்லப்பட்ட விஹித நிஷித்த ரூபவிஷய த்வயத்தையுஞ் சொல்லுகிறது. (விளைநிலம் தானாகையாலே) என்றது - இவை யிரண்டுக்கும் ஜந்மபூமி பகவத் ஸ்வரூப திரோதாநாதிகளைப் பண்ணக்கடவ குண த்ரயாத்மக ப்ரக்ருதி பரிணாம ரூபமாய் ஸ்வகர்ம விசேஷாரப்தமா யிருக்கிற சரீர விசிஷ்டனான தானாகையாலே யென்றபடி. கர்மாநுகுணமாக ரஜஸ்தமஸ்ஸுக்களாலே கலங்கவடிக்கும் சரீர விசிஷ்டதையாலே மதிமயங்கித் தானல்லாத தேஹத்தைத் தானாகவும் தனக்குரிய னல்லாத தன்னை ஸ்வதந்த்ரனாகவு மபிமாநிப்பதும் தனக்கநர்த்தகரமான விஷயங்களிலே அத்யாதரத்தைப் பண்ணுவது மவன்தானேயிறே. (தன்னைக் கண்டால்) இத்யாதி - இப்படி அநாதிகாலம் போந்தவனாய் இப்போதுமதுக்கு யோக்யமான சரீரவிசிஷ்டனா யிருக்கிற தன்னை தர்சித்தால் “கொன்றல்லது விடேன்” என்று ஸாயுதனாய்ப் பல்கல்வித் திரியும் சத்ருவைக் கண்டாப்போலே குடல் கரித்து தனக்கு நாசகனாக நினைத்தும்; தங்களுடைய உக்தி வ்ருத்திகளாலே துர்வாஸநையைக் கிளப்பி அஹங்காராதிகளை மேன்மேலும் வளரும்படி பண்ணும் ததுபயவச்யரான ஸம்ஸாரிகளைக் கண்ணெதிரே கண்டால், அணுகில் மேல் விழுந்தள்ளிக் கொள்ளும் அதிக்ரூரமான ஸர்ப்பத்தைக் கண்டாப்போலே அஞ்சி நடுங்கிப் பிற்காலித்து நமக்கு பாதகரென்றே நினைத்தும்; தங்களுடைய உபதேசாநுஷ்டாநங்க ளிரண்டாலும் அஹங்காராதிகளின் தோஷ தர்சநத்தைப் பண்ணுவித்து தத்ப்ரஸங்கத்திலே பீதபீதனாம்படி பண்ணி ஸவாஸநமாக அவற்றை நிவர்த்திப்பிக்கும் மத்யமபத நிஷ்ட்டரான ஸ்ரீவைஷ்ணவர்களைக் காணப்பெற்றால், தன்னுடைய அநர்த்தாப்யுதயங்க ளிரண்டும் தங்களதாய் தீயது விலக்கி நல்லதில் மூட்டி ரக்ஷிக்கும் ஆப்தபந்துக்களைக் காண்டாப்போலே யத்யாதரம் பண்ணி நமக்கு நற்றுணையானவர்களென்று நினைத்தும்; அடியிலே கரணகளேபரங்களைத் தந்து அவற்றைக் கொண்டு வ்யபிசரியாமல் நல்வழி நடக்கும்படி சாஸ்த்ரங்களைக் காட்டி அக்ருத்யகரணாதிகளில் சிக்ஷித்து ஸர்வாவஸ்தையிலும் தன்னுடைய ஹிதமே பார்த்துப்போரு மீச்வரனை அர்ச்சா ஸ்தலங்களிலே கண்களாரக் கண்டால், உத்பாதகனாய் வித்யாப்ரதனாய் அபதே ப்ரவ்ருத்தனாகாதபடி நியமித்து நடத்திக்கொண்டு போரும் ஹிதைஷியான பிதாவைக் கண்டாப்போலே ஸ்நேஹஸாத்வஸ விநயங்களை யுடையனாய்க்கொண்டு நமக்கு ஹிதபரமென்று நினைத்தும்; அநாதிகாலம் “அஸந்நேவ” என்னும்படிகிடந்த தன்னை பகவத் ஸம்பந்தத்தை யறிவித்து ஸந்தாவானாக்கி மேன்மேனும் தன்னுபதேசத்தால் ஜ்ஞாந வைராக்ய பக்திகளை விளைத்து கையிற்கனியென்ன பகவத் விஷயத்தைக் காட்டித்தரும் மஹோபகாரகனாய் “உன் சீரேயுயிர்க்குயிராய்” என்றும், “உன்றன் மெய்யிற் பிறங்கிய சீரன்றி வேண்டிலன்” என்றும் சொல்லுகிறபடியே குணவிக்ரஹங்களாலே தனக்கு தாரகபோக்யனாயிருக்கு மாசார்யனைக் கண்ணுக் கிலக்காம்படி கண்டால், கண்ணாஞ்சுழலையிடும் பெரும் பசியன் தாரகமுமாய் போக்யமுமான சோற்றைக் கண்டாப்போலே அத்யபிநிவேசத்தோடே யநுபவித்து நமக்கு தாரக போக்யவிஷயமென்றே நினைத்தும்; ஸாத்யாந்தர நிவ்ருத்த்யாதி ஸமஸ்த ஸ்வபாவ ஸம்பந்நதயா ஸம்யக்ஜ்ஞாந ப்ரரேமவானா யிருக்கும் ஸச்சிஷ்யனைக் கண்டால், தனக்காநந்தாவஹமான அபிமத விஷயத்தைக் கண்டாப்போலே பகவத் குணாநுஸந்தாந தசையில் நாம் சொல்லுகிற பகவத் குணங்களை யாதரித்துக் கேட்பது அநுபாஷிப்பது வித்தனாவதாம் ஆகாரங்களினாலே நமக்காநந்தாவஹனென்று நினைத்தும்; – (அஹங்காரார்த்தகாமங்கள் மூன்றும்) இத்யாதி. இவை மூன்றிலும் வைத்துக்கொண்டு, அஹங்காரம் அநுகூலர்பக்கல் அநாதரத்தைப் பிறப்பிக்கும்; அதாவது – சேஷத்வத்தை தன் ஸந்நிதியில் ஜீவிக்கவொட்டாதபடியிறே அஹங்காரத்தின் பலமிருப்பது; அஹங்காரியானவன் “ந நமேயம்” என்றிருக்குமதொழிய ஒரு விஷயத்திலும் தலைதாழ்க்க விசையானே; ஆகையாலே அஹங்காரம் மேலிடுமாகில், ஸ்வரூபவர்த்தகராய்க் கொண்டு அநுகூலராயிருக்கும் ஸ்ரீவைஷ்ணவர்களைக் கண்டால் “நம்முடைய சேஷிகள்” என்று துடைநடுங்கி யெழுந்திருந்து ப்ரணாமாதிபூர்வகமாக அநுவர்த்தனங்களைப் பண்ணவொட்டாதே, தன்னை அவர்களி லதிகனாகவாதல், அவர்களைத் தன்னோடு ஸமராகவாதல் புத்தி பண்ணியநாதரித்திருக்கும்படிப் பண்ணுமென்கை. அர்த்தம் ப்ரதிகூலர் பக்கல் ப்ராவண்யத்தைப் பிறப்பிக்கும்; அதாவது – ஆரையாகிலும் சென்றநுவர்த்தித்து ஒருகாசு பெற்றதாய்விடவேணு மென்னும்படியிறே அர்த்தராகமிருக்கும்படி; ஆகையால், அது ஸ்வரூப நாசகத்வேந ப்ரதிகூலரான ஸம்ஸாரிகளைக் கண்டால் வெருவி யோடிப்போக வேண்டியிருக்க, ஒருகாசை நச்சி அவர்களோடே யுறவு பண்ணி அவர்களிருந்த விடங்களிலே பலகாலும் செல்லுவது, அவர்களை யழைத்து விருந்திடுவது, அவர்கள் குணகீர்த்தநம் பண்ணுவதாம்படி அவர்கள் விஷயத்திலே ப்ராவண்யத்தை யுண்டாக்குமென்கை. காமம் (உபேஷிக்குமவர்கள் பக்க லபேக்ஷையைப் பிறப்பிக்கும்) “காம்யத இதி காம:” என்கிறபடியே – காம சப்தத்தாலே விஷய ஸம்போக ஸுகத்தைச் சொல்லுகிறது; அது, “ஈசிபோமின்” இத்யாதிப்படியே – தாரித்ர்ய வார்த்தகாதிகளடியாக தன்னை முகம் பாராமல் தள்ளிக் கதவடைத்து உபேஷாவாதம் பண்ணும் ஸ்த்ரீகள் பக்கலிலே, “ஏழையர் தாமிழிப்பச் செல்வர்” என்கிறபடியே அவர்களுபேக்ஷாவாதம் முதலானவை தன்னையே யுத்தேச்யமாகக் கொண்டு செல்லும்படி, விலக்ஷணர் கேட்டால் சிரிக்கும்படியான ஹேயாபேக்ஷையை விளைக்குமென்கை. ஆக இப்படி அஹங்காராதிகள் மூன்றும் ஸ்வரூப வர்த்தகரை யநாதரிக்கும்படியும், ஸ்வரூப நாசகரை யாதரிக்கும்படியும், ஸ்வரூப நாசகதையோடே யுபேக்ஷகருமா யிருக்குமவர்களை யபேக்ஷிக்கும்படியும் பண்ணுமென்று அவற்றின் கொடுமைகளை யநுஸந்தித்து என் செய்யத் தேடுகிறதோ வென்றஞ்சி; (அர்த்த காமாபி மாநங்கள் மூன்றும்) என்று பாடமானாலும், “கர்வோபிமாநோஹங்கார:” என்கிறபடியே - அபிமாந சப்தத்தாலே அஹங்காரத்தைச் சொல்லுகிறதாகையாலே (அநுகூலர்பக்கல்) இத்யாதியை நிரை நிரையாக்காதே யதாயோகங்கொண்டு கீழ்ச் சொன்ன ப்ரகாரத்திலே யோஜிக்கக் கடவது; (ஆத்ம குணங்கள்) இத்யாதி. சமதமாத்யாத்மகுணங்கள், அநாதிகால மஹங்காராதிகளுக்கு விளைநிலமாய் அநாத்மகுணங்களைக் கூடுபூரித்துக்கொண்டு கர்மபரதந்த்ரராயிருக்கிற நம்முடைய யத்நத்தாலும், ஆத்ம குணோதய விரோதிகளான அஹங்காராதிகளுக்கு வர்த்தகராய் அநாத்மகுண பரிபூர்ணராய் கர்மவச்யரா யிருக்கிற பிறருடைய யத்நத்தாலும் பிறப்பித்துக் கொள்ளவொண்ணாது. ஆத்ம குணங்களுக்கெல்லாம் கொள்கலமாய் அடியிலே தன்னுடைய நிர்ஹேதுக க்ருபையாலே நம்மை யங்கீகரித்தருளி நமக்காத்ம குணங்க ளுண்டாவ தெப்போதோவென்று பலகாலும் கரைவது பகவானை யர்த்திப்பதாய்க் கொண்டு போரும் ஸதாசார்யனுடைய ப்ரஸாதமடியாகவருகிற, நம்முடைய வாத்மகுணோதய விரோதி பாபக்ஷயம் பிறக்கும்படி “அமலங்களாக விழிக்கும் பகவானுடைய பரிபூர்ண ப்ரஸாதத்தாலே பிறக்குமத்தனையென் றத்யவஸித்து. (தேஹயாத்ரையி லுபேக்ஷையாவது) - சேஷத்வமே வடிவான வாத்மாவுக்கு தாரகாதிகளான குணாநுபவ கைங்கர்ய ப்ரவ்ருத்தியில் பெற்றவளவால் த்ருப்தனாயிராதே மேன்மேலு மாசைப்படுகை. (ப்ராக்ருத வஸ்துக்களில் போக்யதா புத்திநிவ்ருத்தியாவது) - அசநாச்சாதநாதிகளுக் குறுப்பான ப்ராக்ருத பதார்த்தங்களில் ஆதரத்துக்கடியான போக்யத்வ புத்தி தவிருகை. (தேஹதாரணம்) இத்யாதி. அதாவது - அந்த ப்ராக்ருதி வஸ்துக்களில் தேஹம் தரிக்கைக்கு தக்க அளவு புஜிக்கை, பரமாத்மாவான ஸர்வேச்வரனுடைய ஸமாராதநத்தின் ஸமாப்தி ரூபையான ப்ரஸாத ப்ரதிபத்தியென்கிற புத்தி விசேஷமுமென்கை. அன்றிக்கே, (பரமாத்ம ஸமாராதந ஸமாப்தி) என்கிற புத்தி விசேஷமும், தத்ப்ரஸாத ப்ரதிபத்தி யென்கிற புத்தி விசேஷமும் என்னவுமாம்; (தனக்கு) இத்யாதி. அதாவது, முமுக்ஷுவாய் ப்ரபந்நனானாலும் ப்ராரப்த சரீர மிருக்குமளவும் தாபத்ரயம் வருகை தவிராதிறே; ஆகையாலே, இச்சரீரத்தோடேயிருக்கிற தனக்கு தாபத்ரயங்களி லேதேனுமொரு க்லேசமுண்டானால், “இது அநுபவ விநாச்யமான ப்ராரப்த கர்மபலமன்றோ, ஏவம் பூதகர்மங்களுள்ளவை கழியுமளவன்றோ இச்சரீரத்தோடே நம்மை யெம்பெருமான் வைக்கிறது, ப்ராப்தி ப்ரதிபந்தகங்களிலே யென்றாகிலுங் கழியப்பெற்றோமே” என்கிற வநுஸந்தாநத்தாலே யாதல், துர்வாஸநையாலே யிவ்வுடம்பைவிட இசையாமல் ப்ராக்ருத பதார்த்தங்களையும் ஜீவித்துக் கொண்டு ஸம்ஸாரத்துக்குள்ளே பொருந்தியிருக்கிற நம்மை துக்க தர்சநத்தைப் பண்ணுவித்து இதைப் பற்றறுத்துக் கொண்டு போக நினைக்கிற ஸர்வேச்வரனுடைய க்ருபையின் பலமன்றோவிது என்கிற அநுஸந்தாநத்தாலே யாதலுண்டாகக் கடவ ப்ரீதியு மென்கை. பூர்வாகம் உத்தராகம் ப்ராரப்தகண்டமெல்லாம் கழிக்கிறவனுக்கு, வர்த்தமான சரீரத்திலநு பாவ்ய கர்ம மித்தனையும் கழிக்கை யரிதன்றிறே; கர்மபலமான துக்க பரம்பரைகளை யநுபவியா நின்றாலும் இத்தேஹத்தை விட வென்றால் இசையாத விவனை நிர்துக்கனாக்கி வைப்போமாகில், இச்சரீரத்தோடே நெடுங்காலமிருக்க விச்சித்தல் இன்னமொரு சரீரந்தன்னை யிச்சித்தல் செய்யுமாகையால் இச்சரீரத்துக்குள்ள கர்மமநுப வித்தே யிறுக்கக் கடவனென்றிறே வைக்கிறது; ஆனபின்பு, மற்றுண்டான கர்மங்களெல்லாம் கழிந்து ஸம்ஸாரத்தில் நின்று மிவனைக் கடுகத் திருவடிகளிலே சேர்த்துக் கொள்ளுகையிலுண்டான க்ருபையாலேயானாப்போலே, இத்தனையும் கழியாமல் வைத்ததும் க்ருபையாலேயிறே. அநாதிகாலம் பரிக்ரஹித்த சரீரத்தோறு மநுபவித்த துக்கம் பகவந் நிக்ரஹபலம், இது அவனநுக்ரஹபலம்; “யஸ்யாநுக்ரஹ மிச்சாமி தஸ்யவித்தம் ஹராம்யஹம்” என்றானிறே; ஆகையாலித்தை (க்ருபாபலம்) என்கிறது. (ஸ்வாநுஷ்டாநத்தில் ஸாதத்வபுத்தி நிவ்ருத்தியாவது) - ப்ரபந்நனான தன்னுடைய வதிகாராநுகுணமாக வநுஷ்டித்துக் கொண்டு போரும் நல்லொழுக்களைப் பேற்றுக்கு ஸாதநமாக நினையாதொழிகை. (விலக்ஷணருடைய ஜ்ஞாநாநுஷ்டாநங்களில் வாஞ்சையாவது) நாட்டாரோ டியல்வொழிந்து நாரணனை நண்ணி யிருக்கையாலே நிர்மல ஜ்ஞாந பக்திகரரா யிருக்கும் விலக்ஷணரான விலக்ஷணமான வந்தஜ்ஞாநமும் அநுஷ்டாநமும் நமக்குண்டாகவேணுமென்னுமாசை. (உகந்தருளின நிலங்களி லாதராதிசயமாவது) “தானுகந்தவூர்” என்கிறபடியே - ஸர்வேச்வரனுகந்து வர்த்திக்கிற திவ்யதேசங்களென்றால், “கண்டியூரரங்கம் மெய்யங்கச்சிபேர் மல்லையென்று மண்டினார்” என்கிறபடியே - மநஸ்ஸு அங்கே மண்டி விழும்படி மேன்மேலும் பெருகுகிற ஆதரம். (மங்களாசாஸநமாவது) - அவ்வோ திவ்யதேசங்களை விரும்பி, வர்த்திக்கிற வவனுடைய ஸௌந்தர்யத்தையும் லௌகுமார்யத்தையும் வாசியறிந்து நோக்கும் பரிவரில்லாமையையும் ப்ரதிகூல வர்க்கங்களி னதிசயத்தையும் நினைத்தேங்கி, “என் செய்யத் தேடுகிறது!” என்று வயிறெரிந்து இரவும்பகலும் திருப்பல்லாண்டு பாடுகை. (இதர விஷயங்களி லருசியாவது) - பகவத் வ்யதிரிக்தங்களான ஹேய விஷயங்களில் தோஷ தர்சநாதிகளாலே விருப்பமற்றிருக்கை. (ஆர்த்தியாவது) - இதர விஷய ப்ராவண்ய ஹேதுவான விவ்வுடம்போடே இருள் தருமா ஞாலத்திலிருக்கிற விதி லடிக்கொதிப்பாலும், ப்ராப்ய வைலக்ஷண்ய தர்சநத்தால் வந்த ப்ராப்தி விளம்பாஸஹத்வத்தாலும் படும் க்லேசம். (அநுவர்த்தந நியதியாவது) - பகவத் பாகவத விஷயங்களில் ஸ்வசேஷத்வா நுகுணமாக நீசோக்தி நீச வ்ருத்திகளாலே பண்ணு மநுவர்த்தநத்தை ப்ராக்ருத விஷயங்களில் மறந்தும் செய்யாதொழிகை. (ஆஹார நியதியாவது) - ஜாத்யாச்ரய நிமித்தாநுஷ்டங்களாய், ஸர்வேச்வரனுடையவும் ததீயருடையவும் ப்ரஸாதங்களான வஸ்துக்களையே ஆஹாரமாகக் கொள்ளுமதொழிய, ததிதரங்களானவை கொள்ளக் கடவோமல்லோ மென்றிருக்கை. (அநுகூல ஸஹவாஸமாவது) - ஸ்வஸம்ஸர்க்கத்தாலே ஜ்ஞாநாநுஷ்டாநங்களை வர்த்திப்பியாநிற்கு மநுகூலரானவர்களுடனே க்ஷணகாலமும் பிரியாதே கூடிவர்த்திக்கை. (ப்ரதிகூல ஸஹவாஸ நிவ்ருத்தியாவது) -ஸ்வஸம்ஸர்க்கத்தாலே ஜ்ஞாநாநுஷ்டாநங்களை நசிப்பியா நிற்கும் ப்ரதிகூலரான வர்களுடன் க்ஷணகாலமும் கூடி வர்த்தியாதொழிகை. இங்குச் சொன்ன அநுகூலரும் ப்ரதிகூலரு மின்னாரென்னுமிடம் மேலே தாமே யருளிச் செய்யக்கடவரிறே. (ஸதாசார்ய ப்ரஸாதத்தாலே வர்த்திக்கும்படி பண்ணிக்கொண்டு போரக்கடவன்) அதாவது - கீழ்ச்சொன்ன விவையித்தனையும், ஜ்ஞாநாநுஷ்டான பரிபூர்ணனான ஸதாசார்யனுடைய ஸர்வமங்களாவஹமான ப்ரஸாதத்தாலே தன்னடையே மேன்மேலு மபிவ்ருத்தமாம்படி செய்து கொண்டு போரக்கடவனென்றபடி. ஸதாசார்ய ப்ரஸாதத்தாலே வர்த்திக்கும்படி யிவன் பண்ணிக்கொண்டு போருகையாவது – தத்ப்ரஸாதங்களைச் செய்து கொண்டு போருகை. தத்ப்ரஸாதங்களாவன - இதினுடைய வுபபாதந ஸ்தலத்தி லருளிச் செய்கிறவை. (போரக்கடவன்) என்று விதிரூபேண வருளிச் செய்தது - இதினுடைய அவச்யாநுஷ்டேயத்வம் தோற்றுகைக்காக.

– “இப்படி” என்ற பதம் சூர்ணைகள் 189 தொடங்கி, 241 முடிய உள்ளவற்றில் கூறப்பட்டதை உணர்த்துகிறது. (ஸர்வ ப்ரகாரத்தாலும் நாசஹேதுவாகையாவது) - தன்னுடைய ஆத்ம ஸ்வரூபத்திற்கு அழிவை ஏற்படுத்திக்கொள்ளுதல், பாகவதர்களின் விரோதத்தை சம்பாதித்துக் கொண்டு அழிதல், ஸர்வேச்வரனை அடைவதற்கு விரோதியாக இருத்தல், தைத்திரீயம் – அஸந்நேவ - ப்ரஹ்மம் இல்லை என்பவன் இல்லாதவன் ஆவான் - என்பதற்கு ஏற்ப அறிவற்ற வஸ்துக்கள் போன்று தன்னுடைய ஸ்வரூபம் உருமாறும்படியாகச் செய்தல் – போன்றதாகும். அஹங்காரம் என்பது – சரீரத்தையே ஆத்மாவாக எண்ணுகின்ற நினைவின் வடிவமாகவும், சரீரத்தைக் காட்டிலும் வேறுபட்டதான ஆத்மாவானது தனக்கே உரியது என்ற எண்ணத்தின் வடிவமாகவும் இரண்டுவிதமாக உள்ளது. இந்தச் சூர்ணையில் உள்ள அஹங்காரம் என்ற பதம் மூலம் இந்த இரண்டும் ஒன்றாகச் சேர்த்து உரைக்கப்படுகிறது. (அதினுடைய கார்யமான விஷயப்ராவண்யத்துக்கும்) - சரீரத்தையே ஆத்மாவாக நினைக்கிற எண்ணம், ஆத்மா சுதந்திரமானது என்ற எண்ணம் ஆகிய இரண்டும்தான் உலகில் உள்ள விஷயங்களைத் தனக்கு இன்பம் அளிக்கவல்லவை என்று எண்ணி அவற்றின் மீது ஆசை கொள்வதற்கு மூலகாரணங்களாக உள்ளன; ஆக இந்த ஆசை என்பதே அகங்காரத்தின் செயல் என்றார். “விஷய” என்னும் பதம் மூலம் – சூர்ணை 183 முதல் உரைக்கப்பட்டதான தனது மனைவியுடன் சேர்தல் போன்ற விதிக்கப்பட்ட விஷயங்களும், மற்றவர் மனைவியை நாடுதல் போன்ற தள்ளப்பட்ட விஷயங்களும் – கூறப்பட்டது. (விளைநலம் தானாகையாலே) – அகங்காரம் மற்றும் உலக விஷயங்களில் நாட்டம் ஆகிய இரண்டிற்கும் பிறப்பிடம் எது என்றால்: ஸர்வேச்வரனின் ஸ்வரூபத்தை மறைத்தல் போன்ற பலவற்றையும் செய்வதாகவும், ஸத்வ ரஜோ தமஸ் ஆகிய மூன்று குணங்களும் இணைந்த ப்ரக்ருதியின் பரிணாமமாக உள்ளதாகவும், தன்னுடைய கர்மத்தின் காரணத்தால் உண்டான சரீரத்துடன் கூடியதாகவும் இருக்கிற “தான்” என்பதால் - என்று பொருள். கர்மங்களுக்கு ஏற்றபடி ரஜஸ் மற்றும் தமஸ் குணங்களால் கலங்க வைக்கின்ற சரீரத்தின் பிடியில் உள்ளதால் அறிவு மயங்குகிறது; இதனால் தன்னைக் காட்டிலும் வேறுபட்டதான சரீரத்தைத் ”தான்” என்றும், தனக்கே உரியவனாக அல்லாத தன்னை சுதந்திரமானவன் என்றும் எண்ணுகிறான்; தனக்குக் கேடு விளைவிப்பதான உலக விஷயங்களின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டபடி இருப்பதும் ஜீவாத்மாவே ஆவான். (தன்னைக் கண்டால் சத்ருவைக் கண்டாற்போலேயும்) - இப்படியாகவே எல்லையற்ற காலமாக நடந்துவருகிறான். இப்போதும் அதன்படியே நடந்து கொள்வதற்கான தகுதி கொண்ட சரீரத்துடன் கூடிய தன்னைக் கண்டால் [அதாவது தன்னை யார் என்று உணர்ந்து கொண்டு, தனது ஸ்வரூபத்தை உணர்ந்து, அகங்காரம் ஆகியவை அழியப் பெற்ற “தான்”], “கொலை செய்யாமல் விடமாட்டேன்” என்று ஆயுதத்தைக் கையில் எடுத்து, தன் எதிரே பல்லைக் கடித்தபடி நிற்கும் பகைவர்களைக் கண்டது போன்று வயிறு எரிந்து தன்னை அழிக்க வந்தவனாக எண்ணுதல். தங்களது சொற்கள் மற்றும் செயல்கள் ஆகியவற்றால் தீய எண்ணங்கள் மேன்மேலும் வளரும்படிச் செய்கின்றனர். (அவற்றுக்கு வர்த்தகரான ஸம்ஸாரிகளைக் கண்டால் ஸர்ப்பத்தைக் கண்டாற்போலேயும்) - இப்படியாக உள்ள இரண்டு தன்மைகள் கொண்ட [அகங்காரம் மற்றும் புலன் இன்பங்கள்] ஸம்ஸாரிகளைக் கண்டால், அருகில் செல்ல முனையும்போது மேலே விழுந்து கடித்து இறந்து போகும்படிச் செய்கின்ற மிகவும் கொடிய நாகத்தைக் கண்டது போன்று அச்சம் கொண்டு நடுங்கியபடியே பின்வாங்கி, அவர்கள் நமக்குத் தீமை செய்வார்கள் என்று எண்ணுதல். (அவற்றுக்கு நிவர்த்தகரான ஸ்ரீவைஷ்ணவர்களைக் கண்டால் பந்துக்களைக் கண்டாற்போலேயும்) - தங்களது உபதேசம், வாழ்க்கைமுறை போன்ற பலவற்றால் அகங்காரம், உலகவிஷயங்களில் உள்ள பற்றுதல் போன்றவற்றின் தோஷங்களை மற்றவர்களுக்குச் சிலர் அறிவிப்பர்; இவர்கள் இவற்றைப் பற்றி மற்றவர்கள் பேசுவதைக் கேட்டால் அச்சம் கொண்டு நடுங்குவர்; அவற்றை அடியுடன் நீக்குபவர்களாக இருப்பர்; இவ்விஷயங்களை அவற்றின் வாசனையுடன் நீக்கவல்லதான திருமந்த்ரத்தின் நடுப்பதமான “நம:” என்பதிலேயே நிஷ்டை கொண்டு இருப்பர்; இப்படிப்பட்ட ஸ்ரீவைஷ்ணவர்களைக் காண நேரிட்டால் – மற்றவர்களின் நன்மை மற்றும் தீமை ஆகிய இரண்டையும் தங்களுக்கு வந்ததாகவே எண்ணி, தீமையை விலக்கி, நன்மையை மட்டுமே ஏற்கும்படிச் செய்து காப்பாற்றுகின்ற நல்ல உறவினர்களைக் கண்டது போன்று விரும்பவேண்டும்; “இவர்கள் நமக்குச் சிறந்த துணையாவர்கள்” என்று எண்ணவேண்டும். (ஈச்வரனைக் கண்டால் பிதாவைக் கண்டாற்போலேயும்) – ஸ்ருஷ்டியின் தொடக்கத்தில் சரீரம் மற்றும் இந்த்ரியங்கள் ஆகியவற்றை நமக்கு அளிக்கிறான்; அவற்றைக் கொண்டு நாம் தவறான வழியில் செல்லாமல் தடுத்து, நல்ல வழியில் செல்வதற்கு ஏற்றபடி சாஸ்த்ரங்களை உணர்த்துகிறான்; சாஸ்த்ரங்கள் கூறும் மார்க்கத்திற்கு விரோதமாகச் சென்றால் தண்டித்துத் திருத்துகிறான்; அனைத்து நிலைகளிலும் நம்முடைய நன்மையை மட்டுமே எண்ணியபடி உள்ளான். இப்படிப்பட்ட ஸர்வேச்வரனை அர்ச்சாவதார விக்ரஹமாகக் கோயில்களில் கண்ணாரக் காணும்போது, “இவனே நம்மைப் படைத்தவன், நமக்குக் கல்வி புகுத்தியவன்”, என்று எண்ணவேண்டும். மேலும் தீய மார்க்கங்களில் நாம் செல்லாதபடி நம்மை நியமித்து நடத்திக் கொண்டு போகின்ற, நமது நலத்தை மட்டுமே விரும்பும் தந்தையைக் கண்டது போன்று அன்பு, அச்சம் மற்றும் அடக்கம் ஆகியவற்றுடன் நிற்கவேண்டும். “இவன் நம்முடைய நன்மையை மட்டுமே கருத்தாகக் கொண்டவன்” என்று எண்ணவேண்டும். (ஆசார்யனைக் கண்டால் பசியன் சோற்றைக் கண்டாற்போலேயும்) - எல்லையற்ற காலமாக தைத்திரீய ஆநந்தவல்லியில் – அஸந்நேவ - ப்ரஹ்மஞானம் இல்லாதவன், இல்லாதவனாகவே ஆவான் – என்று கூறுவதற்கு ஏற்ப நாம் இல்லாதவனாகவே இருந்தோம். இப்படிப்பட்ட நமக்கு பகவத் ஸம்பந்தம் குறித்து உணர்த்தி, நம்மை “உள்ளவன்” என்று ஆக்குகிறார். மேலும் தன்னுடைய உபதேசம் மூலமாக ஞானம், வைராக்யம், பக்தி போன்றவற்றை நமக்கு ஏற்படுத்தி, உள்ளங்கை நெல்லிக்கனி போன்று நமக்கு ஸர்வேச்வரனைக் காட்டித் தரும் மிகப் பெரிய உதவியைப் புரிகிறார். இத்தகையவர் நம்முடைய ஆசார்யன் ஆவார். இராமாநுஜ நூற்றந்தாதி (25) - உன் சீரேயுயிர்க்குயிராய் – என்றும்,(104) - உன்றன் மெய்யிற் பிறங்கிய சீரன்றி வேண்டிலன் – என்றும் கூறுவதற்கு ஏற்ப தனது உயர்ந்த குணங்களாலும், அழகான திருமேனியாலும் நமக்கு இனிமையாகவும், நாம் உயிர் வாழக் காரணமாகவும் உள்ள ஆசார்யனைக் காணும்போது – மிகுந்த பசி காரணமாகக் கண்கள் இருட்டிக்கொண்டு கீழே விழும் நிலையில் உள்ள ஒருவன், தன்னை வாழ வைக்கவல்ல இனிமையான உணவைக் கண்டால் மகிழ்வது போன்று, மிகுந்த ஆசையுடன் அவரை அனுபவிக்கவேண்டும்; “நம்மை வாழ வைத்து, நமக்கு எப்போதும் இனிமையாக உள்ளவர்” என்று எண்ணவேண்டும். (சிஷ்யனைக் கண்டால் அபிமத விஷயத்தைக் கண்டாற்போலேயும் நினைத்து) - மற்ற எந்தவிதமான பலன்களையும் விரும்பாமல் இருத்தல் போன்ற பல உயர்ந்த தன்மைகளால் நிறைவாக உள்ளதால் சிறந்த ஞானம் மற்றும் பக்தியைக் கொண்டபடி ஒரு சிஷ்யன் இருப்பான். இப்படிப்பட்ட சிஷ்யனைக் கண்டால் - நமக்கு ஆனந்தத்தை அளிக்கவல்ல மனைவியைக் கண்டது போன்று எண்ணவேண்டும். ஸர்வேச்வரனின் திருக்கல்யாண குணங்கள் குறித்து உரையாடும் போது, “நாம் கூறும் பகவத் குணங்கள் பற்றி விருப்பத்துடன் இவன் கேட்கிறான், அதனை மீண்டும் உரைக்கிறான், அவற்றை எண்ணி எண்ணி வியத்தல் போன்றவற்றைச் செய்வதன் மூலம் இவன் நமக்கு ஆனந்தம் அளிக்கிறானே”, என்று எண்ணவேண்டும். (அஹங்காரார்த்த காமங்கள் மூன்றும்) - அஹங்காரம், செல்வம், காமம் ஆகிய மூன்றில் அஹங்காரம் என்பது நமக்கு ஏற்றவர்களாக உள்ள பாகவதர்களிடம் அன்பு இல்லாத தன்மையைக் கொண்டு வருவதாகும். வேறு ஒருவருக்கு அடிமைப்பட்டுள்ள தன்மையை, நான் உள்ள இடத்தில் இருக்கவிடாமல் செய்வது என்பது அஹங்காரத்தின் வலிமை ஆகும். அஹங்காரத்துடன் உள்ளவன், இராமாயணம் யுத்தகாண்டம் (36-11) - ந நமேயம் – நான் தலை வணங்கமாட்டேன் - என்று கூறும்படியாக உள்ள இராவணன் போன்று இருப்பானே அல்லாமல், யாருக்கும் தலை தாழ்த்தி நிற்கமாட்டான். இப்படிப்பட்ட அஹங்காரம் ஒருவனுக்கு ஓங்கி நிற்கும்போது, தங்களது ஸ்வரூபத்தை வளர்ப்பவர்களாக உள்ள ஸ்ரீவைஷ்ணவர்களை அவன் கண்டவுடன், “இவர்கள் நமது எஜமானர்கள்” என்று அச்சத்துடன் சட்டென்று எழுந்து வணங்கி நிற்பது போன்ற செயல்களைச் செய்ய இயலாதபடி தடுத்துவிடும். மேலும் தான் அவர்களைக் காட்டிலும் உயர்ந்தவன் என்ற எண்ணத்தையும், அவர்கள் தன்னை ஒத்தவர்களே என்ற எண்ணத்தையும் உண்டாக்கி, அவர்கள் பக்கம் சேராதபடி செய்துவிடும். இதனால் அஹங்காரம் குறித்து அச்சம் கொண்டிருக்கவேண்டும். (அர்த்தம் ப்ரதிகூலர் பக்கல் ப்ராவண்யத்தைப் பிறப்பிக்கும் என்று அஞ்சி) - அர்த்தம் என்பதான செல்வம் பாகவதர்களிடம் பக்தியற்றவர்கள் விஷயத்தில் ஈடுபாட்டை ஏற்படுத்திவிடும். அதாவது யாரையாவது அண்டிச் சென்று, அவர்களுக்கு ஏதேனும் செய்து, ஒரு காசேனும் பெற்றுவிடவேண்டும் என்ற அளவிற்குப் பொருள் ஆசை இருக்கும். இந்த நிலை ஆத்ம ஸ்வரூபமான ஸர்வேச்வரனுக்கு அடிமை என்ற நிலையை மாற்றிவிடும் என்பதால், பகவத் விரோதிகளாக உள்ள ஸம்ஸாரிகளைக் கண்டாலேயே ஓடி விடவேண்டும்; ஆனால் அவ்விதம் செய்யாமல் அவர்கள் உள்ள இடத்திற்குப் பலமுறை சென்று, அவர்களைத் தமது இருப்பிடத்திற்கு அழைத்து விருந்து வைத்து, அவர்களைப் புகழ்ந்து பாடியபடி இருத்தல் போன்ற பலவற்றால் அவர்கள் மீது உள்ள ஈடுபாடு அதிகரித்துவிடும் என்று அஞ்சவேண்டும். (காமம் உபேக்ஷிக்குமவர்கள் பக்கல் அபேக்ஷையைப் பிறப்பிக்கும் என்று அஞ்சி) – ”காம்யத இதி காம:” விரும்பப்படுவதால் காமம் எனப்படும் - என்பதற்கு ஏற்ப காமம் என்ற பதம் பெண்கள் மூலம் ஏற்படும் இன்பத்தைக் கூறுவதாகும். அத்தகைய காமம் என்பது பெரியதிருமொழி (1-3-8) – ஈசிபோமின் – என்ற பாசுரத்தில் உரைப்பதற்கு ஏற்ப தங்களிடம் இன்பம் நாடி வருபவர்களிடம் உள்ள ஏழ்மை, வயோதிகம் போன்ற காரணங்களால் அவர்களைக் கண் எடுத்தும் பாராமல், தங்கள் வீட்டு வாயிற்கதவுக்கு வெளியே தள்ளிக் கதவடைக்கும் பெண்கள் உண்டு. ஆனால் இப்படிப்பட்ட பெண்களிடமும் திருவாய்மொழி (4-1-5) – ஏழையர்தாம் இழிப்பச் செல்வர் – என்று கூறுவதற்கு ஏற்ப, அந்தப் பெண்கள் தங்களை வெறுத்தல் போன்றதான செயல்களைச் செய்தாலும், அவர்களையும் அச்செயல்களையும் தங்களுக்கு ஏற்றதாகவே சிலர் கொண்டு அவர்களிடம் செல்வர். இச்செயலைப் பெரியவர்கள் கேள்விப்பட்டால் சிரிக்கும்படியான தாழ்ந்த ஆசையை ஏற்படுத்தும் என்று கருதி அச்சம் கொள்ளவேண்டும். ஆகவே இப்படியாக அஹங்காரம், பொருள் மற்றும் காமம் ஆகிய மூன்றும் ஆத்மஸ்வரூபத்தை வளர்க்கின்ற ஸ்ரீவைஷ்ணவர்களிடம் உள்ள அன்பைப் போக்கி அவர்களை விரும்பாதபடியும், ஆத்மஸ்வரூபத்தை அழிப்பத்துடன் அல்லாமல் தங்களை வெறுத்துத் தள்ளும் குணங்கள் கொண்ட பெண்களை விரும்பும்படியும் செய்துவிடும். இப்படியாக இவை செய்வதைக் குறித்து எண்ணி, “இவை நம்மை என்ன செய்து விடுமோ?” என்று அஞ்சியபடி இருக்கவேண்டும். “அஹங்கார அர்த்த காமம்” என்று படிப்பதற்குப் பதிலாக “அர்த்த காம அபிமானங்கள்” என்றும் சிலர் படிப்பர். கர்வோபிமாநோஹங்கார: - கர்வம், அபிமாநம், அஹங்காரம் ஆகிய மூன்றும் அஹங்காரத்தைக் குறிக்கும் சொற்கள் – என்பதற்கு ஏற்ப அபிமானம் என்ற பதம் அஹங்காரத்தைக் கூறுகிறது. ஆகவே “அநுகூலர் பக்கல்” என்று தொடங்குகின்ற வாக்கியத்திற்கு வரிசைப்படி விவரணம் செய்யப்பட்டது என்று கொள்ளாமல், வரிசை மாறிப் பொருள் கூறப்பட்டதாகக் கொள்ளவேண்டும். (ஆத்மகுணங்கள் நம்மாலும் பிறராலும் பிறப்பித்துக் கொள்ளவொண்ணாது) - எல்லையற்ற காலமாக மேலே கூறப்பட்ட அஹங்காரம் போன்ற பலவும் உற்பத்தி ஆகின்ற இடமாகவும், ஆத்மகுணங்கள் அல்லாதவற்றை வளர்ப்பவராகவும் கர்ம வசப்பட்டுள்ள நாம் உள்ளோம். வேறு சிலரும் ஆத்மகுணங்கள் வளர்வதற்குத் தடையாக உள்ள அஹங்காரம் போன்றவற்றை வளர்ப்பவராகவும், ஆத்மகுணங்கள் அல்லாத தன்மைகள் நிறைந்தவராகவும் கர்மவசப்பட்டபடி இருக்கக்கூடும். இப்படியாக உள்ள நமது முயற்சியாலும், வேறு ஒருவர் முயற்சியாலும் உட்புலன் மற்றும் வெளிப்புலன் ஆகியவற்றை அடக்குவதான ஆத்மகுணங்களைப் பிறப்பித்துக் கொள்ள இயலாது. (ஸதாசார்ய ப்ரஸாதமடியாக வருகிற பகவத் ப்ரஸாதத்தாலே பிறக்குமத்தனை யென்று துணிந்து) – ஆத்மகுணங்கள் அனைத்திற்கும் இருப்பிடமாக உள்ளவர், தொடக்கம் முதலாகவே எந்த ஒரு காரணமும் இன்றி ஏற்பட்ட கருணை காரணமாக நம்மை ஏற்றுக் கொண்டவர், நமக்குத் தேவையான ஆத்மகுணங்கள் நமக்கு எப்போது ஏற்படும் என்று பலமுறை நமக்காக ஏங்கித் தவிப்பவர், நமக்காகப் பலமுறை ஸர்வேச்வரனிடம் வேண்டியபடி உள்ளவர் - இப்படியாக உள்ள நம்முடைய ஆசார்யனின் அருளால் நமக்கு ஆத்மகுணங்கள் தோன்றுகின்றன. ஆயினும் இவை ஏற்படத் தடையாக உள்ள நமது பாவங்கள் அனைத்தும் அழிந்து, திருவாய்மொழி (1-9-9) – அமலங்களாக விழிக்கும் - நமது அறியாமை ஆகியவை நீங்கும்படியாக நம்மை விழித்துப் பார்க்கும் கண்கள் – என்பதற்கு ஏற்ப ஸர்வேச்வரனின் பரிபூர்ண கடாக்ஷம் காரணமாக இந்த ஆத்ம குணங்கள் உண்டாகும் என்று உறுதியுடன் இருத்தல். (தேஹயாத்ரையி லுபேக்ஷையும்) – சரீரத்தைக் காப்பாற்றவேண்டும் என்பதான செயல்களில் விருப்பம் அற்ற தன்மை ஏற்படவேண்டும். (ஆத்மயாத்ரையி லபேக்ஷையும்) - ஸர்வேச்வரனுக்கு அடிமையாக இருத்தல் என்பதையே தன்னுடைய ஸ்வரூபமாகக் கொண்டது ஆத்மாவாகும்; இப்படிப்பட்ட ஆத்மாவைத் தரிப்பதும், வளர்ப்பதும், அதற்கு இனிமையாக உள்ளதும் எது என்றால் ஸர்வேச்வரனின் திருக்கல்யாண குண அனுபவங்கள் மற்றும் அவனது கைங்கர்யங்களில் ஈடுபடுதல் போன்றவையே ஆகும். இவற்றை அடைந்த பின்னர் அப்படியே இருந்துவிடாமல், மேன்மேலும் இவற்றில் ஆசை ஏற்படவேண்டும். (ப்ராக்ருத வஸ்துக்களில் போக்யதா புத்திநிவ்ருத்தியும்) - உண்பதற்கும், உடுத்துவதற்கும் தேவையான பொருள்களில் ஈடுபாடு உண்டாவதற்குக் காரணம் “அவை மிகவும் இனியவை” என்ற எண்ணமாகும்; இந்த எண்ணத்தைத் தவிர்க்கவேண்டும். (தேஹ தாரணம்) – உலகத் தொடர்புடைய பொருள்களில், இந்தச் சரீரம் உயிருடன் உள்ள அளவிற்குத் தேவையான அளவு மட்டுமே உண்ணுதல். (பரமாத்ம ஸமாராதன ஸமாப்தி ப்ரஸாத ப்ரதிபத்தி யென்கிற புத்திவிசேஷமும்) – பரமாத்மாவான ஸர்வேச்வரனின் திருவாராதனத்தின் இறுதியில் அவனுக்கு அளிக்கப்படும் ப்ரஸாதத்தை ஏற்றுக் கொள்ளுதல் மட்டுமே சிறந்தது என்ற மேன்மையான எண்ணம் என்று பொருள். அல்லது ஸர்வேச்வரனின் திருவாராதனத்தின் நிறைவுப் பகுதி என்னும் எண்ணம் மற்றும் அவனது ப்ரஸாதத்தை ஏற்பது என்னும் எண்ணம் என்றும் கொள்ளலாம். – (தனக்கொரு க்லேசமுண்டானால் கர்ம பலமென்றாதல் க்ருபா பலமென்றாதல் பிறக்கும் ப்ரீதியும்) - ஒருவன் மோக்ஷத்தில் விருப்பம் கொண்டுள்ள ப்ரபந்நன் என்றபோதிலும், பலன் அளிக்கத் தொடங்கிவிட்ட கர்மங்களின் காரணமாக உண்டான இந்தச் சரீரம் உள்ளவரை மூன்றுவகையான துன்பங்களான ஆதிபௌதிகம், ஆத்யாத்மிகம் மற்றும் ஆதிதைவிகம் ஆகியவை அவனை நெருங்காமல் இருக்காது அல்லவோ? ஆகவே இந்தச் சரீரத்துடன் உள்ளபோது, ஒருவனுக்கு இந்த மூன்றுவிதமான துன்பங்களில் ஏதாவது ஒன்றின் மூலம் துக்கம் ஏற்படலாம். அப்போது, “இந்தத் துன்பம் என்பது அனுபவித்தால் மட்டுமே கழியவல்ல பலன் அளிக்கத் தொடங்கிவிட்ட கர்மங்களின் மூலம் விளைவது அல்லவோ? இத்தகைய கர்மங்கள் அனைத்தும் கழியும் வரை மட்டுமே இந்தச் சரீரத்துடன் நம்மை எம்பெருமான் விட்டுவைக்கிறான். ஆக ஸர்வேச்வரனை அடையத் தடையாக இருந்த ஏதோ ஒரு கர்மத்தையாவது நாம் இப்போது கழித்தோமே”, என்று எண்ணிய நினைவால் ஏற்படும் மகிழ்ச்சி. அல்லது, “எல்லையற்ற காலமாகத் தொடர்ந்து வரும் வாசனையால் உண்டாகின்ற தீய பழக்கங்களால் இந்தச் சரீரத்தை விடுவதற்கு விரும்பாமல் நாம் உள்ளோம். இந்த உலகில் உள்ள பொருள்கள் பலவற்றையும் அனுபவித்தபடி, இந்த ஸம்ஸாரத்துடன் நன்கு பொருந்தி நிற்கிறோம். இப்படிப்பட்ட நம்மை, துன்பங்களை அனுபவிக்கச் செய்து, இந்தப் பற்றுதல்களை அறுத்து, நம்மை விரைவாகக் கொண்டு போக எண்ணும் ஸர்வேச்வரனின் கருணையின் பலம் அல்லவோ இது”, என்று எண்ணியதால் உண்டாகும் மகிழ்ச்சி. ஸர்வேச்வரன் நம்மைத் துன்பத்தை அனுபவிக்குமாறு செய்கிறான் என்று கூறிய பின்னர் அவனது கருணையின் பலம் என்று எவ்விதம் கூற இயலும் என்ற கேள்விக்கு விடை அருளிச்செய்கிறார். இதனை “பூர்வாகம்” என்று தொடங்கி உரைக்கிறார். ஸர்வேச்வரனைப் பற்றுவதற்கு முன்பாகச் செய்த வினைகள், அவனைப் பற்றிய பின்னர் தன்னை அறியாமலே செய்யும் வினைகள், பலன் அளிக்கத் தொடங்கிவிட்ட கர்மங்களின் மீதம் உள்ள வினைப்பயன்கள் ஆகிய அனைத்தையும் நீக்கவல்ல ஸர்வேச்வரனுக்கு, இந்தச் சரீரத்தில் இருந்தபடி இன்னமும் கழிக்க வேண்டிய வினைப்பயன்களை நீக்குவது அரிதான செயல் அல்ல. ஆயினும் ஏன் அவ்விதம் செய்வதில்லை என்பதற்கு விடை அளிக்கிறார் “கர்மபலன்களை” என்று தொடங்கி. கர்மங்களின் பலன்களால் ஏற்படுவதான துன்பங்களைத் தொடர்ந்து அனுபவித்தடி இருந்தாலும், இந்தச் சரீரத்தை விடுவதற்கு இந்த ஜீவன் எளிதில் ஒப்புக் கொள்வதில்லை. இப்படிப்பட்ட இவனை, இந்தச் சரீரத்தில் இருந்து கழிக்கவேண்டிய பாவங்களை நீங்கி, துன்பம் அற்றவனாக மாற்றிவிட்டால், அதன் பின்னர் இந்தச் சரீரத்துடன் நீண்டகாலம் இருப்பதையே விரும்புவான். ஆகையால்தான் இந்தச் சரீரத்திற்கான கர்மங்களை அனுபவித்தே தீரவேண்டும் என்று ஸர்வேச்வரன் வைத்துள்ளான். ஆகவே, முன்னர் செய்த வினைகள் அனைத்தையும் நீக்கி இவனை ஸம்ஸாரத்தில் இருந்து மீட்டு, விரைவாகத் தன்னுடைய திருவடிகளில் சேர்த்துக் கொள்ளவேண்டும் என்பது ஸர்வேச்வரனின் கருணையால் ஏற்படும் நிலை என்பது போன்றே, இதனை நீக்காமல் வைத்துள்ளதும் அவனது கருணையாலேயே ஆகும். எல்லையற்ற காலமாக எடுத்த சரீரம் ஒவ்வொன்றிலும் அனுபவித்த துக்கம் என்பது ஸர்வேச்வரனின் தண்டனையால் ஏற்படுவதாகும்; இது போன்று சரீரத்தில் இருந்து விடுவிப்பதும் அவனது கருணையாலேயே ஆகும். இராமாயணம் யுத்தகாண்டம் (36-11) – யஸ்யாநுக்ரஹ மிச்சாமி தஸ்யவித்தம் ஹராம்யஹம் - யாருக்கு நான் அனுக்ரஹம் செய்யவேண்டும் என்று எண்ணுகிறேனோ, அவனது செல்வத்தை முதலில் அழிக்கிறேன் - என்று அவனே கூறினான் அல்லவோ? எனவேதான் இதனைக் கருணையின் பலன் என்கிறார். – (ஸ்வாநுஷ்டாநத்தில் ஸாதத்வபுத்தி நிவ்ருத்தியாவது) - ஸர்வேச்வரனிடம் சரணம் புகுந்த ப்ரபந்நன் தன்னுடைய அதிகாரத்திற்கு ஏற்றபடியாகத் தான் பின்பற்றி வருகின்ற நல்ல நடத்தைகளே, தான் பெற்ற பேற்றுக்கு உபாயமாக இருந்ததாக எண்ணாமல் இருக்கவேண்டும். (விலக்ஷணருடைய ஜ்ஞாநாநுஷ்டாநங்களில் வாஞ்சையாவது) - திருவாய்மொழி (10-6-2) – நாட்டாரோடு இயல்வொழிந்து நாரணனை நண்ணி - என்று கூறுவதற்கு ஏற்ப தோஷங்கள் ஏதும் இல்லாத ஞானம், பக்தி போன்றவற்றைக் கொண்டுள்ள மேன்மையான முன்னோர்களின் உயர்ந்த ஞானம் மற்றும் நல்நடத்தை நமக்கு ஏற்படவேண்டும் என்ற ஆசையுடன் இருத்தல் வேண்டும். (உகந்தருளின நிலங்களி லாதராதிசயமாவது) - திருநெடுந்தாண்டகம் (6) – தான் உகந்த ஊர் - என்று கூறுவதற்கு ஏற்ப ஸர்வேச்வரன் மிகவும் மகிழ்வுடன் கோயில் கொண்டுள்ள திவ்யதேசங்களை மனதால் எண்ணியவுடன், திருக்குறுந்தாண்டகம் (19) – கண்டியூரரங்கம் மெய்யங்கச்சிபேர் மல்லையென்று மண்டினார் – என்று கூறுவதற்கு ஏற்ப மனம் அங்கேயே விருப்பம் கொண்டு, நிலை நிற்கும்படியாக, மேன்மேலும் ஆசை பெருக வேண்டும். (மங்களாசாஸநமாவது) - அந்த திவ்ய தேசங்களில் விருப்பம் கொண்டு வாசம் செய்கின்ற ஸர்வேச்வரனுடைய அழகு, மேன்மை போன்றவற்றை உணர்ந்து அவனை நன்றாகக் கவனித்துக் கொள்பவர்கள் இல்லாமை, அவனுக்குத் தீமையை எண்ணும் கூட்டத்தினரின் மிகுதி ஆகியவற்றை எண்ணி ஏங்கவேண்டும்; “இவனது இந்த நிலைக்கு, நாம் என்ன செய்யப் போகிறோம்” என்று அச்சம் கொண்டு, வயிறு கலங்கி, இரவும் பகலும் அவனுக்காகத் திருப்பல்லாண்டு பாடியபடி இருத்தல் வேண்டும். (இதர விஷயங்களி லருசியாவது) – ஸர்வேச்வரனைத் தவிர உள்ள மற்ற தாழ்ந்த விஷயங்களில் உள்ள குற்றங்களைக் கண்ட பின்னர், அவற்றில் விருப்பம் இல்லாதபடி இருத்தல் வேண்டும். (ஆர்த்தியாவது) - ஸர்வேச்வரன் தவிர மற்ற உலகவிஷயங்களில் ஏற்படும் ஆசைக்குக் காரணமாக உள்ள இந்தச் சரீரத்துடன், திருவாய்மொழி (10-6-1) – இருள்தரு மாஞாலம் – என்று கூறுவதற்கு ஏற்ப உள்ள இந்த உலகத்தில் இருக்கமுடியாமல் தவிப்பதும்; தான் அடையக்கூடிய பேற்றின் மேன்மையைக் கண்ட பின்னர், அப்படிப்பட்ட பேற்றை உடனே அடைய இயலாமல் ஏற்படும் காலதாமதத்தைப் பொறுக்க இயலாததும் ஆர்த்தி எனப்படும் துன்பம் ஆகும். (அநுவர்த்தந நியதியாவது) - ஸர்வேச்வரனிடமும், அவனது அடியார்களிடமும் தான் கொண்டுள்ள அடிமைத்தனம் காரணமாக, அந்த அடிமைத்தனத்திற்கு ஏற்றபடிப் பேசும் பணிவான சொற்கள் மற்றும் அடக்கமான செயல்கள் ஆகியவற்றை மற்ற எந்த ஸம்ஸாரிகளிடமும் மறந்தும் பேசாதபடியும் செய்யாதபடியும் இருத்தல் வேண்டும். (ஆஹார நியதியாவது) - ஜாதி, ஆச்ரயம் மற்றும் நிமித்த தோஷங்கள் அற்றதாக உள்ளதும், ஸர்வேச்வரன் மற்றும் அவனது அடியார்கள் ஆகியவர்களின் ப்ரஸாதங்களாக உள்ளதும் ஆகிய பொருள்களை மட்டுமே உணவாக எடுத்துக்கொள்வோம்; இவற்றிலிருந்து ஒழிந்த எதனையும் உணவாக ஏற்கமாட்டோம் என்னும் உறுதி கொள்ளவேண்டும் (பூண்டு, முறுங்கை, வெண்கத்திரிக்காய், சுரைக்காய் போன்றவை ஜாதி தோஷம் கொண்டவை; மற்ற தெய்வங்களின் தொடர்புடையதும், ஆசாரம் அல்லாத மனிதர்களிடம் உள்ளதும் ஆச்ரய தோஷம் கொண்டவை; சிரார்த்தம் போன்ற இடத்தில் உள்ள உணவு, விலைக்கு வாங்கும் உணவு ஆகியவை நிமித்த தோஷம் கொண்டவை). (அநுகூல ஸஹவாஸமாவது) - தங்களுடைய தொடர்பு என்பதன் மூலமாக நமது ஞானம் மற்றும் ஒழுக்கம் ஆகியவற்றை மேன்மேலும் ஓங்கி வளரச் செய்யும் ஸ்ரீவைஷ்ணவர்களுடன் ஒரு நொடிப்பொழுது கூடப் பிரியாமல் சேர்ந்து வசித்து வரவேண்டும். (ப்ரதிகூல ஸஹவாஸ நிவ்ருத்தியாவது) - தங்களுடைய தொடர்பு என்பதன் மூலமாக நமது ஞானம் மற்றும் ஒழுக்கம் ஆகியவற்றை அடியுடன் நீக்கவல்ல மனிதர்களுடன் ஒரு நொடிப்பொழுது கூடச் சேராமல் வாழவேண்டும். இங்கே கூறப்பட்ட அநுகூலர் மற்றும் ப்ரதிகூலர் யார் என்பதை இவரே பின்னே உள்ள சூர்ணைகளில் அருளிச்செய்ய உள்ளார். (ஸதாசார்ய ப்ரஸாதத்தாலே வர்த்திக்கும்படி பண்ணிக்கொண்டு போரக்கடவன்) - இதுவரை கூறப்பட்ட அனைத்தையும், ஞானம் மற்றும் நன்னடத்தை ஆகியவற்றால் நிறைந்துள்ள ஆசார்யனுடைய அனைத்து நன்மைகளையும் அளிக்கவல்ல க்ருபை மூலமாக, தானாகவே மேன்மேலும் வளரும்படியாக அமைத்துக்கொண்டு வாழவேண்டும். அதாவது, அவருடைய நல்ல அருள் வளர்வதற்கு ஏற்றபடியான செயல்களை இவன் செய்தபடி வாழ்தல். அந்தச் செயல்கள் எத்தகையவை என்பதை இவரே மேலே அருளிச்செய்ய உள்ளார். (போரக்கடவன்) - இவை அனைத்தும் அவசியம் அன்றாட வாழ்க்கையில் கடைப்பிடிக்கப்படவேண்டும் என்று உணர்த்துவதற்காக “கடவன்” என்று விதிமுறை போன்று அருளிச்செய்கிறார்.