Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 242)

மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்

ப்ரஹ்மாவா யிழந்துபோதல் இடைச்சியாய்ப் பெற்று விடுதல் செய்யும்படியா யிருக்கும்.

இவ்வஹங்கார தத்ராஹித்யங்களிழவு பேறுகளுக்குடலாம்படியை யருளிச் செய்கிறார் (ப்ரஹ்மாவாய்) என்று தொடங்கி.

இப்படிப்பட்ட அஹங்காரம் என்பது பேற்றை இழப்பதற்கும், அஹங்காரம் இல்லாத தன்மை என்பது பேற்றை அடைவதற்கும் எவ்விதம் காரணமாகின்றன என்பதை அருளிச்செய்கிறார்.

– அதாவது, த்ருஷ்டோத்கர்ஷாதிசயத்துக்குத் தக்க அஹங்காராதிகனான ப்ரஹ்மாவாய், “த்விபரார்த்தாவஸாநே மாம் ப்ராப்து மர்ஹஸி பத்மஜ” என்றும், “கடிக்கமலத்துள்ளிருந்தும் காண்கிலான் கண்ணனடிக் கமலந்தன்னை யயன்” என்றும் சொல்லுகிறபடியே இழந்து போதல், அஹங்கார ஹேதுக்களொன்றுமில்லாமையாலே தத்ரஹிதையாய் இடக்கை வலக்கை யறியாத விடைச்சியான சிந்தயந்தியாய், “முக்திம் கதாந்யா கோப கந்யகா” என்னும்படி அவன் திருவடிகளைப் பெற்றுவிடுதல் செய்யும்படியா யிருக்கும் இவ்வஹங்கார தத் ராஹித்யங்களின் ஸ்வபாவமென்கை. இப்படி அஹங்கார தத்ராஹித்யங்கள் அவனை யிழக்கைக்கும் பெறுகைக்கு முடலாகையாலே, ஸ்ரீகுலசேகரப்பெருமாள் முதலானவர்கள் அஹங்கார ஹேதுவான ஜந்மங்களை யநாதரித்து தத் ரஹித ஜந்மங்களை யாதரித்தார்களென்று கருத்து.

இப்பிறவியில் மேன்மை உண்டாவதற்கு காரணமாக உள்ள அஹங்காரம் என்பதைக் கொண்டவனாக உள்ள நான்முகன், கீழே உள்ள வரிகளுக்கு ஏற்ப எம்பெருமானை நீண்டகாலம் இழப்பதற்கு, அவனது அஹங்காரமே காரணமாகிறது: த்விபரார்த்தாவஸாநே மாம் ப்ராப்து மர்ஹஸி பத்மஜ – தாமரையில் பிறந்த நான்முகனே! உன்னுடைய ஆயுட்காலமான இரண்டாவது பரார்த்தத்தின் முடிவில் என்னை அடைவாய் முதல் திருவந்தாதி (56) – கடிக்கமலத்துள்ளிருந்தும் காண்கிலான் கண்ணனடிக் கமலந்தன்னை யயன் இவ்விதம் அஹங்காரம் கொள்வதற்குக் காரணம் ஏதும் இல்லாததால், அஹங்காரம் அற்றவளாக, க்ருஷ்ணனைத் தவிர தனது இடதுகை மற்றும் வலதுகை வேறுபாடு கூட அறியாதவளாக சிந்தயந்தி என்ற ஆயர்குலப்பெண் இருந்தாள். இவள் ஸ்ரீவிஷ்ணுபுராணம் (4-520) - முக்திம் கதாந்யா கோப கந்யகா – கண்ணனையே எண்ணி மூச்சடைத்து முக்தி பெற்றாள் - என்று கூறுவதற்கு ஏற்ப, க்ருஷ்ணனின் திருவடிகளைப் பெற்றுத் தருவதாகவே ”அஹங்காரம் இல்லை” என்னும் தன்மை இருக்கும் என்று கருத்து. ஆகவே அஹங்காரம் மற்றும் அஹங்காரம் அற்ற தன்மை ஆகிய இரண்டும் முறையே அவனை இழப்பதற்கும், அடைவதற்கும் காரணமாக உள்ளன. இதனால்தான் குலசேகராழ்வார் போன்றவர்கள் அஹங்காரம் ஏற்படுவதற்குக் காரணமாக உள்ள உயர்ந்த பிறவிகளை எண்ணாமல், அவை இல்லாத தாழ்ந்த பிறவிகளையே எண்ணினர் என்று கருத்து.