Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 241)

மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்

த்ருஷ்டத்திலுத்கர்ஷ மஹங்காரத்திலே; அத்ருஷ்டத்திலுத்கர்ஷ மஹாங்கார ராஹித்யத்தாலே.

– இனி, அவர்களுத்க்ருஷ்டமான ஜந்மங்களை யுபேக்ஷித்து நிக்ருஷ்டமான ஜந்மங்களை விரும்புவா னென்னென்ன வருளிச்செய்கிறார் (த்ருஷ்டத்தில்) என்று தொடங்கி.

– அவர்கள் (குலசேகராழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள்) உயர்ந்த பிறவிகளை விரும்பாமல் தாழ்ந்த பிறவிகளை விரும்புவது ஏன் என்ற கேள்விக்கு விடை அருளிச் செய்கிறார்.

அதாவது ஆபிஜாத்யாதிகளும் ஐச்வர்யமுமாகிற த்ருஷ்ட புருஷார்த்தத்தி லொருவனுக் குண்டாமுயர்த்தி, விச்வாமித்ராதிகளைப்போலே தான் நின்ற நிலைக்கு மேலே உத்கர்ஷம் தேடப்பண்ணு மஹங்காரத்தாலே யுண்டாம்; சேஷத்வாதிகளும் கைங்கர்ய ஸம்பத்துமாகிற அத்ருஷ்ட புருஷார்த்தத்தில் ஒருவனுக்குண்டா முயர்த்தி, இவற்றினுடைய வபிவ்ருத்தியி லாசையாலே நிலைக்குநிலை தாழப்போம்படியான அஹங்கார ராஹித்யத்தாலே யுண்டாமென்கை.

– உயர்ந்த குலப்பிறப்பு, செல்வம் போன்ற பலவும் இந்த உலகில் ஏற்படும் பயன்கள் என்பதால் உண்டாகின்றன; ஆனால் இவற்றால் ஏற்படும் மேன்மை என்பது, விச்வாமித்ரன் போன்று, தங்களுக்குள்ள நிலையைக் காட்டிலும் உயர்வைத் தேடும்படியாகச் செய்விக்கின்ற அஹங்கரத்தால் ஏற்படுவதாகும். அவனுக்கே அடிமைப்பட்டிருத்தல், அவனுக்கே கைங்கர்யம் செய்தல் போன்ற பலவும் அந்த உலகில் ஏற்படவல்லவை ஆகும்; இவற்றால் ஒருவனுக்கு ஏற்படும் மேன்மை என்பது, இவற்றின் வளர்ச்சியில் உண்டான ஆசை காரணமாகப் படிப்படியாகத் தேய்கின்ற அஹங்காரம் இல்லாமையால் உண்டாவதாகும்.