Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 240)

மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்

ஆறு ப்ரகாரத்தாலே பரிசுத்தாத்ம ஸ்வரூபத்துக்கு தத்ஸாம்யமுண்டாயிருக்கும்.

அதெங்ஙனே யென்னு மபேக்ஷையிலே அத்தையுபபாதிக்கிறார் (ஆறு ப்ரகாரத்தாலே) என்று தொடங்கி.

– அத்தகைய ஒற்றுமை எப்படிப்பட்டது என்ற கேள்விக்கு விடை அருளிச் செய்கிறார்.

அதாவது அநந்யார்ஹசேஷத்வம், அநந்யசரணத்வம், அநந்யபோக்யத்வம், ஸம்ச்லேஷத்தில் தரிக்கை, விச்லேஷத்தில் தரியாமை, ததேகநிர்வாஹ்யத்வமாகிற ஆறு ப்ரகாரத்தாலே, நிச்சேஷநிவ்ருத்த அவித்யாதி தோஷதயா பரிசுத்தமானவாத்ம ஸ்வரூபத்துக்கு, ப்ரகார ஷட்க பரிபூர்ணையான பிராட்டியோடு ஸாம்யம் நைஸர்கிகமாக வுண்டாயிருக்குமென்கை. இந்த ஸாம்ய ஷட்கத்தை நினைத்திறே, “கடிமாமலர்ப்பாவை யொப்பாள்” என்று ஆழ்வாரருளிச்செய்தது. ஆக இவ்விரண்டு வாக்யமும் ப்ராஸங்கிகம்.

ஸர்வேச்வரனுக்கு மட்டுமே அடிமைப்பட்டிருத்தல் (அநந்யார்ஹசேஷத்வம்), அவனை மட்டுமே தஞ்சம் என்று நம்பியிருத்தல் (அநந்யசரணத்வம்), அவனை மட்டுமே இனிமையாக வஸ்துவாகக் கொண்டிருத்தல் (அநந்யபோக்யத்வம்), அவனுடன் கூடியிருந்தால் மட்டுமே உயிர் தாங்குதல், அவனை விட்டுப் பிரிய நேர்ந்தால் உயிர் தரியாமல் இருத்தல், அவனால் மட்டுமே காப்பாற்றப்படுதல் என்றுள்ள ஆறு தன்மைகள் மூலமாக அடியுடன் தோஷங்கள் நீங்கப் பெற்றதான தூய்மையான ஆத்ம ஸ்வரூபத்துக்கு - இத்தகைய ஆறு தன்மைகளைப் பரிபூர்ணமாக இயல்பாகவே கொண்டுள்ள பெரியபிராட்டியுடனான ஒற்றுமை ஏற்படுகிறது என்று கருத்து. இப்படிப்பட்ட ஆறு தன்மைகளால் ஒற்றுமையைத் திருவுள்ளத்தில் எண்ணியதன் காரணமாகவே பெரிய திருமொழியில் (3-7-9) - கடிமாமலர்ப்பாவை யொப்பாள் - என்று திருமங்கையாழ்வார் அருளிச்செய்தார். கடந்த இரண்டு சூர்ணைகளும் ப்ராஸங்கிகமாக வந்தன (ப்ராஸங்கிகம் என்றால் – இந்த இடத்துடன் தொடர்பு இல்லை என்றபோதிலும், கூறவேண்டும் என்னும் நினைவு வந்ததால் கூறுவதாகும்).