Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 239)
மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்
கந்தல் கழிந்தால் ஸர்வர்க்கும் நாரீணாமுத்தமையுடைய அவஸ்தை வரக்கடவதாயிருக்கும்.
இப்படியாசைப்படுகையும் ஆஸ்தாநம் பண்ணுகையுமொழிய, கந்தல் கழிந்தால் ஸ்வரூபமிருக்கும்படிதா னென்னென்ன வருளிச்செய்கிறார் (கந்தல்கழிந்தால்) என்று தொடங்கி. அன்றிக்கே, இப்படி விசிஷ்டவேஷ ப்ரயுக்தமான தாரதம்யா வஸ்தைகளின்றிக்கே கந்தல் கழிந்தால் ஸகலாத்மாக்களுக்கும் வருமவஸ்தைதான் ஏதென்ன வருளிச்செய்கிறா ராகவுமாம் (கந்தல் கழிந்தால்) இத்யாதி.
– இப்படியாக ஆசைப்பட்டதும், தங்களை அவர்களாகவே எண்ணிக் கொண்டதும் இருக்கட்டும்; சரீரம் நீங்கிய பின்னர் ஆத்மாவின் ஸ்வரூபம் எப்படி இருக்கும் என்ற கேள்விக்கு விடை அருளிச்செய்கிறார். அல்லது சரீரத்துடன் கூடியுள்ளபோது காணப்படும் ஏற்றத்தாழ்வுகள் அல்லாமல், சரீரம் நீங்கிய பின்னர் அனைத்து ஆத்மாக்களுக்கும் ஏற்படும் நிலை என்ன என்று கேட்பதாகவும் கொள்ளலாம்.
– அதாவது, ஆத்மஸ்வரூபத்தை யுள்ளபடி ப்ரகாசியாதபடி அநாதிகால மபிபவித்துப் போந்த வந்தேறியான அவித்யாதி தோஷம் பகவத் ப்ரஸாத விசேஷத்தாலே பின்னாட்டாதபடி ஸவாஸநமாகப் போனால், ஸகலாத்மாக்களுக்கும், “ஸர்வ லக்ஷண ஸம்பந்நா நாரீணா முத்தமாவதூ:” என்கிறபடியே – ஸ்த்ரீத்வ லக்ஷணங்களெல்லாவற்றிலும் குறைவற்று ஸ்வேதர ஸகல ஸ்த்ரீணாமுத்தமையா யிருக்கும் பெரியபிராட்டியாருடைய நிலை தன்னடையே வரக்கடவதாயிருக்குமென்கை.
– ஆத்மஸ்வரூபமானது உள்ளது உள்ளபடி பிரகாசிக்காதபடி, எல்லையற்ற காலமாக அந்தப் பிரகாசத்தை மறைத்துக் கொண்டு இருப்பதும், ஆத்மாவிற்கு இயல்பாக இல்லாமல் நடுவில் வந்து புகுந்து கொண்டதுமாக அவித்யை போன்ற தோஷங்கள் உள்ளன. இவை ஸர்வேச்வரனின் கருணை காரணமாக மீண்டும் வந்து தலைக்காட்டாதபடி அடியுடன் நீங்கக்கூடும். இவ்விதம் நீங்கினால், இராமாயணம் பாலகாண்டம் (1-27) - ஸர்வ லக்ஷண ஸம்பந்நா நாரீணா முத்தமாவதூ: - பெண்களுக்கு உரிய அனைத்துவிதமான லக்ஷணங்களுடன் கூடியவளும், அனைத்துப் பெண்களிலும் உயர்ந்தவளாக இருப்பவளும் ஆகிய சீதை - என்று கூறுவதற்கு ஏற்ப, பெண்களுக்கு இருக்கவேண்டிய அனைத்துத் தன்மைகளும் சற்றும் குறைவில்லாமல் உள்ளவளாக, தன்னைத் தவிர மற்ற பெண்கள் அனைவரையும்விட உயர்ந்தவளாக இருக்கின்ற பெரியபிராட்டியாரின் நிலை தானாகவே அந்த ஆத்மாவிற்கு வந்து சேரும் என்று கருத்து.