Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 238)
மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்
ப்ராஹ்மணோத்தமரான பெரியாழ்வாரும் திருமகளாரும் கோபஜந்மத்தை ஆஸ்தாநம் பண்ணினார்கள்.
– இப்படி யாசைப்பட்டவளவன்றிக்கே, தாழ்ந்த ஜந்மத்தை யாஸ்த்தாநம் பண்ணினவர்களை யருளிச்செய்கிறார் (ப்ராஹ்மணோத்தமரான) என்று தொடங்கி.
இவ்விதம் ஆசைப்பட்டதுடன் நிற்காமல், தாழ்ந்த பிறவியைத் தங்கள் மீது ஏறிட்டுக் கொண்டவர்கள் (அதாவது தாங்கள் அந்தப் பிறவிகள் என்று எண்ணியவர்கள்) குறித்து இந்தச் சூர்ணையில் அருளிச்செய்கிறார்.
– அதாவது, “இனி இதுக்குமேலில்லை” என்னும்படியான வர்ணத்திலே யவதரித்து வித்யா மாஹாத்ம்யாதிகளாலே தஜ்ஜாதீய ஸகலோத்தமரான பெரியாழ்வாரும், வேதப்பயன் கொள்ளவல்ல அவர் தம்மைப்போலே பேதைப் பருவத்திலே வேத ஸாரார்த்தவித்தமை யாயிருக்கும் அவர் திருமகளான வாண்டாளும், ஸ்ரீக்ருஷ்ணவதாராநுபவத்தில் அபிநிவேசாதிசயத்தாலே, “மிடுக்கிலாமையால் நான் மெலிந்தேன் நங்காய்”, “என் மகன் கோவிந்தன்”, “பன்னிரு திங்கள் வயிற்றிற் கொண்டவப் பாங்கினால்” இத்யாதியாலும், “ஆயர்பாடிச் செல்வச் சிறுமீர்காள்”, “நாமும் நம் பாவைக்கு”, “ஆய்க்குலத்து உன்றன்னைப் பிறவி பெறுந்தனை புண்ணியம் யாமுடையோம்” இத்யாதியாலும் தானவளாகப் பேசும்படி, தாங்களவதரித்த வர்ணத்துக்கு மூன்றாம் வர்ணமாகையாலே தண்ணிதாயிருந்துள்ள அறிவொன்றுமில்லாத கோப ஜந்மத்தைப் புரையற வேறிட்டுக் கொண்டார்களென்கை.
இதற்கு மேல் சிறந்த பிறவி இல்லை என்னும்படியான உயர்ந்த குலத்தில் அவதாரம் செய்து, தன்னுடைய வித்யை போன்ற பலவற்றாலும் தன்னுடைய குலத்தில் உள்ள மற்ற அனைவரைக் காட்டிலும் உயர்ந்தவராகத் திகழ்ந்தவர் பெரியாழ்வார் ஆவார். பெரியாழ்வார் திருமொழி (2-8-10) - வேதப்பயன் கொள்ளவல்ல – என்று கூறும்படியான மேன்மை கொண்ட அவரைப் போன்றே, ஏதும் அறியாத சிறிய வயதிலேயே, வேதங்களின் சாரங்களில் உள்ள ஆழ்பொருளை அறிந்தவர்களில் தலைமையாக நிற்பவளாக அவரது திருமகளான ஆண்டாள் திகழ்ந்தாள். இவர்கள் இருவரும் க்ருஷ்ணாவதாரத்தின் மீது கொண்டிருந்த அனுபவத்தில் பேசுவதன் காரணமாகக் கீழே உள்ள பல வரிகளை அருளிச்செய்தார்கள்: பெரியாழ்வார் திருமொழி (1-1-9) - மிடுக்கிலாமையால் நான் மெலிந்தேன் நங்காய் பெரியாழ்வார் திருமொழி (1-4-1) - என் மகன் கோவிந்தன் பெரியாழ்வார் திருமொழி (3-2-8) - பன்னிரு திங்கள் வயிற்றிற் கொண்டவப் பாங்கினால் திருப்பாவை (1) - ஆயர்பாடிச் செல்வச் சிறுமீர்காள் திருப்பாவை (2) - நாமும் நம் பாவைக்கு திருப்பாவை (28) - ஆய்க்குலத்து உன்றன்னைப் பிறவி பெறுந்தனை புண்ணியம் யாமுடையோம் மேலே காணப்படும் முதல் மூன்று பாசுர வரிகளால் பெரியாழ்வார் தன்னை யசோதையாகவும், அடுத்துள்ள மூன்று வரிகளால் ஆண்டாள் தன்னை ஆயர்குலச் சிறுமியாகவும் எண்ணியது காண்க. இப்படியாக இவர்கள், தாங்கள் அவதரித்த குலத்துக்கு மூன்றாம் குலமாக உள்ளதால் தாழ்ந்துள்ளதும், திருப்பாவை (28) - அறிவு ஒன்றும் இல்லாத – என்பதற்கு ஏற்றபடி உள்ளதும் ஆகிய ஆயர்களின் குலத்தை எந்தக் குறையும் காணாமல் ஏற்றுக்கொண்டனர்.