Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 237)
மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்
ராஜாவான ஸ்ரீகுலசேகரப்பெருமாள் திர்யக்ஸ்தாவர ஜந்மங்களையாசைப்பட்டார்.
பகவத் ஸம்பந்த ரஹிதமான ஜந்மாதிகள் ஸத்கர்ஹிதமென்னுமத்தை தர்சிப்பித்தார் கீழ்; தத் ஸம்பந்த ஸஹிதமான திர்யக்காதி ஜந்மமும் ஸத்ப்ரார்த்த்ய மென்னுமத்தை தர்சிப்பிக்கிறர் மேல் (ராஜாவான) என்று தொடங்கி.
– ஸர்வேச்வரனுடன் தொடர்பு இல்லாத பிறப்பு என்பது சான்றோர்களால் பழிக்கப்படுவதாகும் என்று உரைத்தார். அடுத்து ஸர்வேச்வரனுடன் தொடர்பு கொள்கின்ற விலங்குகள், தாவரங்கள் போன்ற பலவும் பெரியோர்களால் கொண்டாடப்படுகின்றன என்பதை இங்கு அருளிச்செய்கிறார்.
– அதாவது, த்விதீயவர்ணரான ஏற்றத்தையுடைய ஸ்ரீகுலசேகரப்பெருமாள், திர்யக்ஸ்தாவர ஜந்மங்களானவை, “வாசிகை: பக்ஷி ம்ருகதாம்” இத்யாதிகளாலே பாபயோநிகளாகச் சொல்லப்படாநிற்கச்செய்தே, “வேங்கடத்துக் கோனேரி வாழும் குருகாய்ப் பிறப்பேனே”, “மீனாய்ப் பிறக்கும் விதியுடையேனாவேனே”, ”செண்பகமாய் நிற்கும் திருவுடையேனாவேனே”, “தம்பகமாய் நிற்கும் தவமுடையேனாவேனே” என்று – திருமலையாழ்வாரோடு ஸம்பந்தமுடைய திர்யக்ஸ்தாவர ஜந்மங்களைப் பெறாப்பேறாக வாசைப்பட்டா ரென்றபடி.
இரண்டாவது வர்ணம் என்று கூறப்படும் உயர்ந்த க்ஷத்ரிய வம்சத்தில் பிறந்த ஏற்றத்தை உடையவர் ஸ்ரீகுலசேகராழ்வார் ஆவார். வாசிகை: பக்ஷி ம்ருகதாம் – சரீரத்தால் செய்யப்படும் பாவங்களால் மரம், செடி போன்ற பிறப்பையும், வாக்கினால் செய்யப்படும் பாவங்களால் பறவைகள் மற்றும் விலங்குகளின் பிறப்பையும் மனிதன் அடைகிறான் - என்பதற்கு ஏற்ற விலங்குகள் மற்றும் தாவரங்கள் போன்றவை பாவங்களால் உண்டான பிறவிகளாக உள்ளன. இப்படி உள்ளபோது குலசேகராழ்வார் கீழே உள்ள பல வரிகளில் அருளிச்செய்தபடி, ஆதிசேஷனின் அவதாரமாகவே உள்ள திருமலையுடன் ஸம்பந்தம் கொண்டதாலேயே, அந்தந்த விலங்குகள் மற்றும் தாவரங்களின் பிறவிகளை வியந்து பாராட்டி, இந்தப் பிறவிகள் கிடைத்தற்கு அரியவை என்று கொண்டாடினார்: பெருமாள் திருமொழி (4-1) – வேங்கடத்துக் கோனேரி வாழும் குருகாய்ப் பிறப்பேனே பெருமாள் திருமொழி (4-2) – மீனாய்ப் பிறக்கும் விதியுடையேனாவேனே பெருமாள் திருமொழி (4-4) – செண்பகமாய் நிற்கும் திருவுடையேனாவேனே பெருமாள் திருமொழி (4-5) – தம்பகமாய் நிற்கும் தவமுடையேனாவேனே