Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 236)

மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்

பாகவதனன்றிக்கே வேதார்த்தஜ்ஞாநாதிகளையுடையவன் குங்குமம் சுமந்த கழுதையோபாதியென்று சொல்லாநின்றதிறே.

பாகவதர்களன்றென்னா அவர்களுக்குண்டான வேதவித்யாதிகள் வ்யர்த்தமாமோவென்ன; அப்படி ப்ரமாணம் சொல்லா நின்றதிறே யென்கிறார் (பாகவத னன்றிக்கே) என்று தொடங்கி.

பாகவதர்கள் அல்லாதவர்களுக்கு வேதங்களில் உள்ள அறிவு போன்றவை வீணாகப்போகுமோ என்ற கேள்வி எழலாம். இதற்கு, “வீணாகப்போகும் என்றே ப்ரமாணம் உரைக்கிறது”, என்று அருளிச்செய்கிறார்.

– அதாவது, ”சதுர்வேத தரோ விப்ரோ வாஸுதேவம் நவிந்ததி, வேத பார பராக்ராந்தஸ் ஸவை ப்ராஹ்மண கர்தப:” என்று வேத தாத்பர்யமான பகவத் ஜ்ஞாநாதிக ளில்லாமையாலே, பாகவதனன்றிக்கே வேதாத்யயநத்தோடே அதில் ஸ்தூலார்த்த ஜ்ஞாநாதிகளை யுடையனா யிருக்குமவன், போகிகளாயிருப்பார் விரும்பும் பரிமள த்ரவ்யமான குங்குமத்தைச் சுமந்து திரியா நிற்கச்செய்தே அதின் வாசியறியாத கழுதை போலே, பூர்வோத்தர பாகங்களால் ஆராதந ஸ்வரூபத்தையும் ஆராத்ய ஸ்வரூபத்தையும் ப்ரதிபாதியாநின்று கொண்டு பகவதேகபரமாயிருக்கிற வேதமாகிற விலக்ஷண வஸ்து பாரத்தைக் கினியச் சுமந்து கொண்டிருக்கச் செய்தே அதன் சுவடறியாத ப்ராஹ்மணக் கழுதை யென்று வேதோபப்ரும்ஹணமான ப்ரமாணம் சொல்லாநின்றதிறே யென்கை.

சதுர்வேத தரோ விப்ரோ வாஸுதேவம் நவிந்ததி, வேத பார பராக்ராந்தஸ் ஸவை ப்ராஹ்மண கர்தப: – ஓர் அந்தணன் நான்கு வேதங்களை அறிந்தவனாக உள்ளபோதிலும் எங்கும் நிறைந்த வாஸுதேவனை அறியவில்லை என்றால் அவன் வேதங்கள் என்னும் பாரத்தைச் சுமக்கின்ற அந்தணக்கழுதையே ஆகிறான் - என்றது காண்க. ஆகவே பாகவதன் அல்லாதவன் வேதங்களை எப்போதும் அத்யயனம் செய்து, அவற்றில் உரைக்கப்பட்ட பொருளை மேலோட்டமாக அறிந்துள்ளான் என்று வைத்துக் கொள்வோம்; இவன் பாகவதன் அல்லாத காரணத்தால் அந்த வேதங்களால் கூறப்படும் ஸர்வேச்வரன் பற்றி எந்தவிதமான ஞானமும் இல்லாதவன் ஆகிறான். இவன் எப்படிப்பட்டவன் என்பதை அடுத்து உரைக்கிறார். இன்பத்தில் மட்டுமே ஆசை கொண்டுள்ளவர்கள் விரும்புகின்ற பரிமளம் வீசுவதான குங்குமத்தைச் சுமந்து நின்றபோதிலும் அதன் வேறுபாட்டினை, அதனைச் சுமக்கின்ற கழுதை எப்போதும் அறியாது. அது போன்று - வேதங்களின் பூர்வபாகம் எனப்படும் கர்மகாண்டத்தில் ஸர்வேச்வரனுடைய ஆராதனையின் தன்மை குறித்தும், உத்தரபாகம் எனப்படும் ஞானகாண்டத்தில் ஸர்வேச்வரனின் தன்மை குறித்தும் கூறப்பட்டதால், ஸர்வேச்வரனை மட்டுமே அறிவிக்கின்றது என்ற பெருமை கொண்ட வேதங்களின் மேன்மையான பாரத்தை நன்றாகச் சுமந்தபடி உள்ளான்; அதாவது வேதங்களின் இனிமையை அறியாத அந்தணக்கழுதை என்றே வேதங்களின் ஆழ்பொருளை உணர்த்துகின்ற இதிகாசங்கள் கூறுகின்றன.