Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 234)

மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்

மாறனேரிநம்பி விஷயமாகப் பெரியநம்பி உடையவர்க்கருளிச் செய்த வார்த்தையை ஸ்மரிப்பது.

இப்படி ஸ்ரீராமாயண மஹாபாரத ஸித்தமான சிஷ்டாசாரங்களாலே பாகவத வைபவத்தை ப்ரகாசிப்பித்தார் கீழ்; இன்னமு மிவ்வர்த்த விஷயமாக பூர்வாசார்ய வசநத்தை ஸ்மரிப்பிக்கிறார் (மாறனேரி நம்பி) என்று தொடங்கி.

இப்படியாக இராமாயணம் மற்றும் மஹாபாரதம் போன்றவற்றில் காணப்படுகின்ற நல்லவர்களின் ஒழுக்கங்கள் மூலமாக பாகவதர்களின் மேன்மையை உணர்த்தினார். இனி இதே கருத்தைப் பூர்வாசார்யர்களின் சொற்கள் மூலமாகவும் உணர்த்துகிறார்.

– அதாவது, அபிமாந ஹேதுவான ஜந்ம வ்ருத்தாதிகளின்றிக்கே ஆளவந்தார் ஸ்ரீபாதத்தையுடையராய் அத்யாத்ம ஜ்ஞான பரிபூர்ணராயிருக்கிற மாறனேரிநம்பி, தம்முடைய அந்திம தசையிலே, “ஆளவந்தா ரபிமாநித்தருளின வித்தேஹத்தை ப்ரக்ருதி பந்துக்கள் ஸ்பர்சிக்கில் செய்வதென்!” என்று அதிசங்கை பண்ணி, ஸப்ரஹ்மசாரிகளான பெரியநம்பியைப் பார்த்து, “புரோடாசத்தை காய்க்கிடாதே கிடீர்” என்றருளிச்செய்து திருநாட்டுக்கெழுந்தருள; பெரியநம்பியும் அப்படியே பிறர் கையில் காட்டிக்கொடாதே தாமே பள்ளி படுத்துவந் தெழுந்தருளியிருக்க; இத்தை உடையவர் கேட்டருளி, பெரியநம்பி ஸ்ரீபாதத்திலே வந்து, “ஜீயா, மரியாதை கிடக்கக் காரியஞ் செய்யவேண்டாவோ, தேவரீர் செய்தருள வேண்டிற்றோ” என்ன, “ஆளிட்டந்தி தொழவோ? நான் பெருமாளிற்காட்டி லுத்க்ருஷ்டனோ, இவர் பெரியவுடையாரிற் காட்டி லபக்ருஷ்டரோ, “பயிலுஞ் சுடரொளி நெடுமாற்கடிமை கடலோசையோபாதியோ, ஆழ்வாரருளிச் செய்த வர்த்தத்தைச் சிறிது குறையவாகிலு மாசரிக்கவேண்டாவோ” என்றருளிச்செய்த வார்த்தை.

அஹங்காரம் போன்ற பல தாழ்வுகளுக்கும் காரணமாக உள்ள உயர்ந்த குலப் பிறப்பு, ஆசாரம் போன்ற ஏதும் இல்லாதவராக, ஸ்வாமி ஆளவந்தாரின் திருவடிகளை மட்டுமே பற்றியவராக, ஆத்மாவைப் பற்றி உள்ளது உள்ளபடி அறிந்தவராக ஸ்வாமி மாறனேரிநம்பி என்பவர் இருந்தார். அவர் தன்னுடைய அந்திமகாலத்தில், “ஸ்வாமி ஆளவந்தாரின் ஸம்பந்தம் பெற்று, அவர் அபிமானத்திருந்த இந்தச் சரீரத்தை, இந்தச் சரீரத்தின் உறவினர்களான தாழ்ந்தவர்கள் வந்து தீண்டி, இறுதிச் சடங்குகள் செய்தால் என்ன செய்வது?”, என்று எண்ணி வருந்தினார். அப்போது அங்கிருந்த ஆளவந்தாரின் மற்றோரு சிஷ்யரான ஸ்வாமி பெரியநம்பியிடம், “புரோடாசத்தை நாய்க்கு அளித்து விடாதீர் (புரோடாசம் என்றால் யாகத்தில் தேவர்களுக்கு அளிக்கப்படும் ஒருவிதமான அடை)”, என்றார் (அதாவது தனது சரீரத்தைத் தனது பந்துக்கள் தீண்டாமல் பார்த்துக் கொள்ளவேண்டும் என்றார்). அதன் பின்னர் திருநாட்டுக்கு எழுந்தருளினார். அதன் பின்னர் பெரியநம்பியும் அவர் கூறியபடி மற்றவர்கள் ஈமக்கடன்கள் செய்துவிடாதபடி, தானே முன்னின்று இறுதிச்சடங்குகளைச் செய்துவிட்டு வந்தார். இதனை உடையவர் அறிந்தார். உடனே அவர் பெரியநம்பியின் திருவடிகளில் பணிந்து அவரிடம், “ஸ்வாமி! சாஸ்த்ரங்களின் வரம்பை மீறுவதான இது போன்ற செயல்களை நீவிர் செய்யலாமோ”, என்றார். இதனைக் கேட்ட பெரியநம்பி உடையவரிடம், “நாம் செய்யவேண்டிய ஸந்த்யாவந்தனம் போன்றவற்றை மற்றொருவர் மூலமாகவா செய்ய இயலும்? நான் இராமனைக் காட்டிலும் உயர்ந்தவனோ? மாறனேர்நம்பி ஜடாயுவைக் காட்டிலும் தாழ்ந்தவரோ? (அதாவது, இராமனே ஜடாயுவுக்கு அந்திமச் சடங்குகள் செய்தபோது இந்தச் செயல் மிகவும் குறைந்ததே என்று கருத்து). திருவாய்மொழி (3-7) - பயிலும் சுடரொளி, (8-10) – நெடுமாற்கடிமை - போன்றவற்றில் நம்மாழ்வார் அருளிச்செய்த பாகவதர்களின் மேன்மை என்பது கடல் ஓசை போன்று எந்தவிதமான பயனும் இல்லாத ஓசையோ? ஆழ்வார் அருளிச்செய்த அந்தச் சொற்களை நாம் சிறிதளவாவது நடைமுறையில் செயல்படுத்த வேண்டாமோ?”, என்றார்.