Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 233)
மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்
பெருமாள் ஸ்ரீசபரி கையாலே அமுது செய்தருளினார்.
ஏதத்பூர்வாவதாரத்திலும் இப்படி யநுஷ்டித்த ப்ரகாரத்தை யருளிச் செய்கிறார் (பெருமாள்) என்று தொடங்கி.
இத்தகைய க்ருஷ்ணாவதாரத்திற்கு முந்தைய அவதாரமான இராமாவதாரத்திலே இது போன்றே செய்ததை அருளிச்செய்கிறார்.
– அதாவது, ரகுகுல திலகராய் ஆசார ப்ரதாநரான பெருமாள், “சபர்யா பூஜிதஸ் ஸம்யக் ராமோ தசரதாத்மஜ:” என்னும்படி – வேடுவச்சியாய் வைத்தே குரு சுச்ரூஷையிலே பழுத்து ஜ்ஞாநாதிகையாய், தன்னாவுக் கினியதாயிருந்த பல மூலதிகளெல்லா மிங்குத்தைக்கு என்று ஸஞ்சயித்துக் கொண்டு வரவு பார்த்திருந்த ஸ்ரீசபரி, தன்னாதராநுகுணமாகத் தன் கையாலே யமுது செய்யப்பண்ண, அதி ஸந்துஷ்டராயமுது செய்தாரென்கை. இத்தால் – அபிஜநாதிகளால் வருமபிமாந கந்தமற்ற ஜ்ஞாநப்ரேமாதிகருடைய அபிமாந ஸ்பர்சமுள்ளவை ஆத்மகுணைக தர்சிகளான விசேஷஜ்ஞர்க்கு அதீவ பாவந போக்யங்களாயிருக்கு மென்னுமிடம் காட்டப்பட்டது.
ரகுவம்சத்தில் தோன்றியவர்களில் உயர்ந்தவனும், ஒழுக்கத்தில் நிலைநின்றவனும் ஆகிய இராமன் செய்ததைக் காண்போம். இராமாயணம் ஆரண்ய காண்டம் (1-5-7) - சபர்யா பூஜிதஸ் ஸம்யக் ராமோ தசரதாத்மஜ: - சபரியை அடைந்த தசரதனின் புத்ரனாகிய இராமன் அந்தச் சபரியால் நன்றாக ஆராதிக்கப்பட்டான் – என்றது காண்க. சபரி என்பவள் வேடுவிச்சியாக உள்ளபோதிலும் தன்னுடைய ஆசார்யர்களுக்கு மிகவும் சிறந்த கைங்கர்யம் செய்பவளாக, ஞானத்தில் மேன்மை பெற்றவளாக, தனது நாக்கில் சுவைத்து எவை இனிமையாக இருந்தனவோ அந்தப் பழங்கள் மற்றும் கிழங்குகள் பலவற்றையும் இராமனுக்கு அளிக்கவேண்டும் என்று சேர்த்து வைத்தவளாக இருந்தாள். இராமனின் வரவை எதிர்பார்த்தபடியும் இருந்தாள். இராமன் அங்கு எழுந்தருளியபோது தனது அன்பிற்கு ஏற்றபடி, இராமனைத் தனது கையாலேயே அவற்றை உண்ணும்படிச் செய்தாள். இதனால் மகிழ்வுடன் இராமன் அவற்றை உட்கொண்டான். இதன் மூலம் (கடந்த இரு சூர்ணைகள்) உயர்ந்த குலத்தில் பிறவி போன்றவை மூலமாக உண்டாகவல்ல அஹங்காரம் கலக்காத ஞானத்தாலும், அன்பாலும் நிறைந்துள்ளவர்களுடைய அன்புடன் கலந்த அனைத்துமே, ஆத்மகுணத்தை உணர்ந்த பெரியவர்களுக்குத் தூய்மையும் இனிமையும் கூடியதாகவே இருக்கும் - என்பது கூறப்பட்டது.