Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 232)

மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்

க்ருஷ்ணன் பீஷ்மத்ரோணாதிகள் க்ரஹங்களை விட்டு ஸ்ரீவிதுரர் திருமாளிகையிலே அமுது செய்தான்.

– அநந்தரம், “யத்யதாசரதி ச்ரேஷ்ட:” என்று க்ருஷ்ணனாசரித்த படியை யருளிச் செய்கிறார் (க்ருஷ்ணன்) என்று தொடங்கி.

அடுத்து கீதையில் (3-21) – யத் யத் ஆசரதி ச்ரேஷ்ட: - உயர்ந்தவர்கள் எந்தக் கர்மங்களை இயற்றுகிறார்களோ (அந்தக் கர்மங்களை மற்றவர்களும் இயற்றுகிறார்கள்) என்று தான் கூறியதற்கு ஏற்ப க்ருஷ்ணன் தானே நடந்துகொண்டதை அருளிச் செய்கிறார்.

தர்ம ஸம்ஸ்தாபநார்த்தமாக வவதரித்தருளி, “லோக ஸங்க்ரஹமேவாபி ஸம்பச்யந் கர்த்துமர்ஹஸி” என்று – ”ஜ்ஞாநியானாலும் லோக ஸங்க்ரஹத்தைப் பார்த்து வர்ணாச்ரம தர்மங்களை நன்றாக வநுஷ்டிக்கவேணும்” என்று உபதேசித்தும், “யதிஹ்யஹம் நவர்த்தேயம் ஜாது கர்மண்யதந்த்ரித:, மம வர்த்மாநுவர்த்தந்தே மநுஷ்யா, பார்த்த ஸர்வச:” என்று “ஒருக்கால் கர்மத்தில் சோம்பாதே நான் ப்ரவர்த்தியேனாகில் மநுஷ்யரெல்லாம் மென்வழியைப் பின்செல்லும்” என்றபடியே பரார்த்தமாகத் தான் குறிக்கொண்ட நுஷ்டித்துப் போரும் ஸ்வபாவனிறே க்ருஷ்ணன்; ஏவம் பூதனானவன் ஸ்ரீதூதெழுந்தருளினபோது, “பீஷ்மத்ரோணா வதிக்ரம்ய மாஞ்சைவ மதுஸூதந, கிமர்த்தம் புண்டரீகாக்ஷ புக்தம் வ்ருஷல போஜநம்” என்னும்படி - உத்க்ருஷ்ட வர்ண வ்ருத்தராய் இங்கே யெழுந்தருளுவரென்று பார்த்துக் கொண்டிருந்த பீஷ்மாதிகளுடைய க்ருஹங்களை யுபேக்ஷித்து, வர்ணாத் யுத்கர்ஷ ரஹிதராய் அத்தாலே இங்கே யெழுந்தருளுவரென்னும் நினைவுமற்றிருந்த ஸ்ரீவிதுரர் திருமாளிகையிலே ஸாதரமாகச் சென்று புக்கு, “ஸம்ப்ரமைஸ் துஷ்ய கோவிந்த ஏதந் ந: பரமம் தநம்” என்று – பக்திபரவசரான வவர் பண்ணின ஸம்ப்ரமங்களை யெல்லாங்கண்டுகந்து, “விதுராந்நாதி புபுஜே சுசீநி குணவந்திச” என்கிறபடியே - அஹங்காரோபஹத மல்லாமையாலே பரமபாவநமாய், பக்தியுபஹ்ருத மாகையாலே பரமபோக்யமாயிருக்கிற அந்நத்தை, அந்த பாவநத்வ போக்யத்வங்களடியாக அத்யாதரம் பண்ணி யமுதுசெய்தானிறே.

தர்மமார்க்கத்தை நிலை நாட்டவேண்டும் என்பதற்காக க்ருஷ்ண அவதரித்தருளினான். கீதை (3- 20) – லோக ஸங்க்ரஹமேவாபி ஸம்பச்யந் கர்த்துமர்ஹஸி – உலகத்தில் உள்ளவர்களின் நன்மையைக் கருதி கர்மங்களை இயற்றியபடி இருத்தல் வேண்டும் - என்று கூறுவதற்கு ஏற்ப, ”ஞானியாக உள்ளபோதிலும் உலகினரின் நன்மையைக் கருத்தில் கொண்டு வர்ணாச்ரம தர்மங்களைச் செவ்வனே இயற்ற வேண்டும்”, என்று உபதேசித்தான். மேலும் கீதை (3-23) - யதிஹ்யஹம் நவர்த்தேயம் ஜாது கர்மண்யதந்த்ரித:, மம வர்த்மாநுவர்த்தந்தே மநுஷ்யா, பார்த்த ஸர்வச: – அர்ஜுனா! நான் சோம்பல் இல்லாமல் எப்போதும் கர்மத்தில் ஈடுபடாமல் இருந்தேன் என்றால், இந்த உலகமக்கள் என்னைப் பின்பற்றத் தொடங்கிவிடுவர் - என்றது காண்க; அதாவது, “நான் எனக்கு உரிய கர்மங்களைச் சோம்பல் இன்றி இயற்றவில்லை என்றால் அனைத்து மனிதர்களும் இதே வழியைப் பின்பற்றுவர்”, என்றான். ஆகவே மற்றவர்களின் பொருட்டு தனது கர்மங்களை இயற்றியபடி உள்ள ஸ்வபாவம் கொண்டவனாக க்ருஷ்ணன் இருந்தான். இப்படிப்பட்ட க்ருஷ்ணன் பாண்டவர்களின் பொருட்டு துரியோதனனிடம் தூது சென்றான். அப்போது மஹாபாரதம் உத்யோகபர்வம் – பீஷ்மத்ரோணா வதிக்ரம்ய மாஞ்சைவ மதுஸூதந, கிமர்த்தம் புண்டரீகாக்ஷ புக்தம் வ்ருஷல போஜநம் – மதுசூதனா! தாமரை போன்ற கண்கள் கொண்டவனே! பீஷ்மர், துரோணர் மற்றும் என்னையும் விடுத்து தாழ்ந்த குலத்தவரான விதுரர் வீட்டில் எவ்விதம் உணவு உட்கொண்டாய் - என்றது காண்க. அதாவது உயர்ந்த குலம், ஒழுக்கம் போன்றவற்றைக் கொண்டவர்களான பீஷ்மர் போன்றவர்கள் க்ருஷ்ணன் இங்கே தங்களது இல்லத்திற்கு எழுந்தருள்வான் என்று எதிர்பார்த்தபடி இருந்தனர். ஆனால் இந்த வீடுகளை விரும்பாமல், பிறப்பு போன்றவற்றால் எந்தவிதமான உயர்வும் இல்லாதவரும், இதன் காரணமாகத் தனது வீட்டிற்கு க்ருஷ்ணன் எழுந்தருள்வான் என்ற நினைவு அற்றவருமாகிய விதுரரின் இல்லத்திற்கு க்ருஷ்ணன் தானாகவே விருப்பத்துடன் எழுந்தருளினான். அங்கு விதுரர், மஹாபாரதம் உத்யோகபர்வம் - ஸம்ப்ரமைஸ் துஷ்ய கோவிந்த ஏதந் ந: பரமம் தநம் – கோவிந்தா! உன்னுடைய இந்த வருகை என்பது எங்களுக்கு மிகவும் உயர்ந்த செல்வம் ஆகும், இதனைக் கண்டு நீ மகிழ்வாயாக - என்று கூறியதற்கு ஏற்ப விதுரர் பக்திப் பரவசத்துடன் செய்தருளிய செயல்களைக் கண்டு மிகவும் உகப்படைந்தான். மஹாபாரதம் உத்யோகபர்வம் – விதுராந்நாதி புபுஜே சுசீநி குணவந்திச - தூய்மையானதாகவும், அன்பு கலந்ததாகவும் இருந்த விதுரர் அளித்த உணவை க்ருஷ்ணன் உட்கொண்டான் - என்றுள்ளது காண்க; அதாவது அஹங்காரம் கலக்காமல் உள்ளதால் மிகவும் தூய்மை கொண்டதாகவும், பக்தியும் இருந்ததால் மிகவும் இனிமையாகவும் விளங்கிய உணவைக் கண்ட க்ருஷ்ணன், அந்தத் தூய்மை மற்றும் இனிமைக்காகவே உண்டான்.