Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 231)
மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்
ருஷிகள் தர்மவ்யாதன் வாசலிலே துவண்டு தர்மஸந்தேஹங்களை சமிப்பித்துக் கொண்டார்கள்.
அநந்தரம், ஜந்மாத்யுத்க்ருஷ்டரான ருஷிகள் ததபக்ருஷ்டன் பக்கலிலே தர்மச்ரவணம் பண்ணினபடியை அருளிச்செய்கிறார் (ருஷிகள்) என்று தொடங்கி.
– அடுத்து, பிறப்பு போன்றவற்றால் உயர்ந்தவர்களான ரிஷிகள், அவற்றால் தாழ்ந்த ஒருவனிடம் சென்று தர்மங்கள் பற்றிய சந்தேகங்கள் கேட்டதை அருளிச் செய்கிறார்.
சதுர்வேததரராய் ஸர்வோத்க்ருஷ்டராயிறே ருஷிகளிருப்பது; ஏவம் பூதரானவர்கள், வேத ச்ரவண யோக்யதையில்லாத குலத்திலே பிறந்துள்ளவனாய், ஜாதி ஸ்ம்ருதியோடே ஜாதனாகையாலே பூர்வஜந்மஸித்தமான ஜ்ஞாநத்தில் ப்ரம்சமில்லாமையாலும் மாதாபித்ரு சுச்ரூஷா விசேஷத்தாலும் ஸகல தர்மஸூக்ஷ்ம ஜ்ஞாநவானாயிருக்கும் தர்மவ்யாதன் வாசலிலே சென்று, மாதாபித்ரு சுக்ரூஷைகபரனாய் இருக்கிறவவ னவஸரம் பார்த்துத் துவண்டு ஜ்ஞாதவ்யங்களான தர்மங்களில் தங்களுக்கு ஸந்நிக்தங்களானவை யெல்லா மவன் பக்கலிலே கேட்டு, அதில் ஸந்தேஹங்களைப் போக்கிக்கொண்டார்க ளென்கை. – ”கச்சித் த்விஜாதிப்ரவரோ வேதாத்யாயீ தபோதந:, தபஸ்வீ தர்ம சீலச்ச கௌசிகோநாம பாரத ஸாங்கோபநிஷதாந் வேதாந் அதீதே த்விஜஸத்தம:, ஸவ்ருக்ஷ மூலே கஸ்மிம்ச்சித் வேதாநுச்சாரயந் ஸ்தித:, உபரிஷ்டாச்ச வ்ருக்ஷஸ்ய பலாகா ஸம்ந்யலீயத, தயாபுரீஷமுத்ஸ்ருஷ்டம் ப்ராஹ்மணஸ்ய ததோரஸி” என்று தொடங்கி – கௌசிகனென்று பேரையுடையனாய் அதீதஸாங்க ஸசிரஸ்க ஸகல வேதத்தை யுடையனா யிருப்பானெரு ப்ராஹ்மணாத்தமன், ஒரு வ்ருக்ஷ மூலத்திலே வேதங்களையு முச்சரித்துக் கொண்டு நிற்கச்செய்தே, அதின்மேலே யிருந்ததொரு கொக்கு எச்சமிட்டது தன் மார்பிலே வந்து பட்டவாறே க்ருத்தனாய், பார்த்த பார்வையிலே அது பட்டுவிழ, அத்தைக்கொண்டு, தப்தசித்தனாய்க் கனக்க சோகித்து, “ராகத்வேஷ பலாத்க்ருதராய்க் கொண்டு அக்ருத்யத்தைச் செய்தோம்” என்று பலகாலும் சொல்லிக் கொண்டு, ஆஸந்நமானதொரு க்ராமத்திலே பிக்ஷார்த்தமாகப்போய், ப்ரதமமொரு க்ருஹத்திலே சென்று, “பிக்ஷாம்தேஹி” என்று யாசித்தவளவிலே, அந்த க்ருஹீணியானவள், “நில்லும், வருகிறேன்” என்று சொல்லி, கரசுத்த்யாதிகளைப் பண்ணி பிக்ஷை கொண்டு வருவதாக உத்யோகியா நிற்கச்செய்தே, பர்த்தாவானவன் அதீவக்ஷுதார்த்தனாய் வந்து புகுர, அவள் பதிவ்ரதையாகையாலே பிக்ஷை கொண்டு வருகிறத்தை விட்டு பாத்யாசமநீயாஸந ப்ரதாநாதிகளாலே அவனை சுச்ரூஷிக்கிற பராக்கிலே ப்ராஹ்மணன் நிற்கிறத்தை மறந்து, நெடும்போது நின்று, பின்னை யவன் நிற்கிறத்தைக் கண்டு நடுங்கி, பிக்ஷை கொண்டுவந்தவளவிலே, “என்னை நிற்கச்சொல்லி இத்தனைபோது நீ புறப்படாதிருப்பானேன்?” என்று அவன் குபிதனானவாறே; அவளவனை ஸாந்த்வநம் பண்ணி, “இத்தைப் பொறுக்க வேண்டும்” என்று வேண்டிக்கொண்டு, ”நான் பர்த்தாவே தெய்வம்” என்றிருப்பா ளொருத்தி, அவனிளைத்துவருகையாலே தத்சுச்ருஷை பண்ணி நின்றேனித்தனை” என்ன; “உனக்கு பர்த்தாவையன்றோ ஸத்கரிக்க வேண்டுவது, ப்ராஹ்மணரளவில் கௌரவ ப்ரதிபத்தியில்லையே!” என்று வ்யங்க்யமாகச் சொல்லி, “க்ருஹதர்மத்திலே வர்த்திக்கிற நீ ப்ராஹ்மணரையிப்படி யவமதி பண்ணலாகாது காண்” என்ன; “நானொருக்காலும் ப்ராஹ்மணரை யவமதி பண்ணேன், ப்ராஹ்மணருடைய வைபவமெல்லாம் நன்றாக வறிவன்” என்று பரக்கச் சொல்லிக்காட்டி, “இவ்வபராதத்தைப் பொறுக்கவேணும், ‘பர்த்தாவே தெய்வம்’ என்றிருக்கையாலே தச்சுச்ரூஷையிலே பரவசையாய் நின்றே னித்தனை, என்னுடைய பதிசுச்ரூஷையினுடைய பலத்தைப் பாரீர், உம்முடைய ரோஷத்தாலே அந்தக் கொக்கு யாதொருபடி தக்தமாய்த்து அதுவுமெனக்கு விதிதங் காணும்” என்று சொல்லி, – “க்ரோதச் சத்ருச் சரீர ஸ்த்தோமநுஷ்யாணாம் த்விஜோத்தம, ய: க்ரோத மோஹௌ த்யஜதி தம் தேவா ப்ராஹ்மணம் விது:” என்று தொடங்கி, “காமக்ரோதாதிகள் ப்ராஹ்மணனுக் காகாது, ஸத்யார்ஜவாதிக ளுண்டாக வேணும்” என்று விஸ்தரேண தான் ப்ரதிபாதித்து, “பவாநபிச தர்மஜ்ஞஸ் ஸ்வாத்யாய நிரதச்சுசி:, நது தத்வேந பகவந் தர்மாந் வேத்ஸீதி மே மதி:, மாதாபித்ருப்யாம் சுச்ரூஷுஸ் ஸத்யவாதீ ஜிதேந்த்ரிய:, மிதிலாயம் வஸந் வ்யாதஸ் ஸ தே தர்மாந் ப்ரவக்ஷ்யதி, தத்ர கச்சஸ்வ பத்ரம் தே யதா காமம் த்விஜோத்தம – வ்யாத: பரமதர்மாத்மா ஸதேச்சேத்ஸ்யதி ஸம்சயாந்” என்று, “நீரும் தர்மஜ்ஞர், வேதாத்யயந நிரதர், சுத்தர், ஆயிருக்கச்செய்தேயும், தர்மங்களை உள்ளபடி யறியீர் என்றெனக்கு நினைவு, மாதாபித்ரு சுச்ரூஷுவாய் ஸத்யவாதியாய் ஜிதேந்த்ரியனாய்க் கொண்டு மிதிலையிலே யிருக்கிற வ்யாதன் உமக்கு தர்மங்களைச் சொல்லக்கடவன், அங்கே போம், உமக்கு நன்மை யுண்டாவதாக, பரமதர்மாத்மாவா யிருக்கிற அந்த வ்யாதன் வேண்டினபடி யும்முடைய ஸம்சயங்களை யெல்லாம் போக்கக் கடவன்” என்ன; அவன் ப்ரீதனாய் இவளைக் கனக்க ஸ்தோத்ரம் பண்ணி, அங்கு நின்றும் மிதிலையிலே சென்று, “பஞ்ச காநி பவித்ராணி சிஷ்டாசாரேஷு நித்யதா, ஏதந் மஹாமதே வ்யாத ப்ரப்ரவீஹி யதாததம்” என்று – ”சிஷ்டாசாரங்களிலே யெப்போது முளவாயிருக்கிற பவித்ரங்களஞ்சுமெவை? மஹாமதியானவனே! இத்தைச் சொல்லவேணும்” என்ன; “யஜ்ஞோ தாநம் தபோ வேதாஸ் ஸத்யஞ்ச த்விஜ ஸத்தம, பஞ்சைதாநி பவித்ராணி சிஷ்டாசாரேஷு நித்யதா” என்று - “யஜ்ஞமும் தாநமும் தபஸ்ஸும் வேதங்களும் ஸத்யமுமாகிற பவித்ரங்களானவிவை யைந்தும் சிஷ்டாசாரங்களிலே யெப்போது முளவாயிருக்கும்” என்று இத்யாதியாலே அவனித்தை யுபதேசிக்க, இப்படி மேன்மேலும் தனக்கு ஸம்சயமானவை யெல்லாமிவன் கேட்கக்கேட்க, உபதேசமுகத்தாலே ஸகலதர்ம ஸம்சயங்களையும் தர்மவ்யாத னறுத்த ப்ரகாரத்தை தர்மபுத்ரர்க்கு மார்க்கண்டேய னநுக்ரஹித்ததாக ஆரண்ய பர்வத்திலே இருநூறாமத்யாயம் தொடங்கிப் பதின்மூன்ற த்யாயத்தாலே பரக்கச் சொல்லப்பட்டதிறே. இன்னமு மிப்படி பலருமிவன் வாசலிலே துவண்டு தர்ம ஸந்தேஹங்கள் சமிப்பித்துக் கொண்டமை பலவிடங்களிலுமுண்டு. – இத்தால், ஜந்மாத்யுத்க்ருஷ்டரானவர்களுக்கு ததபக்ருஷ்டரானவர்கள் ஜ்ஞாநாதிகராயிருக்கில் அவர்கள் வாசலிலே துவண்டு ஜ்ஞாதவ்யார்த்தங்கள் கேட்கக் குறையில்லை யென்னுமிடம் காட்டப்பட்டது.
– ரிஷிகள் நான்கு வேதங்களை எப்போதும் அத்யயனம் செய்தபடி இருந்து, அனைவரையும்விட மேம்பட்டவர்களாக எப்போதும் இருப்பார்கள். இப்படிப்பட்ட சில ரிஷிகள் செய்தது என்னவென்றால் – வேதங்களைக் காதால் கேட்பதற்குக் கூடத் தகுதியில்லாமல் உள்ள குலத்தில் பிறந்தவனாகிய தர்மவ்யாதன் என்பவனின் வீட்டிற்குச் சென்றனர். இவன் எப்படிப்பட்டவன் என்றால் – கடந்த பிறவியில் அறிவுடன் பிறந்தவன் என்பதால் அந்தப் பிறவியில் உண்டான ஞானத்தில் இருந்து சற்று பிசகாமல், தாய்தந்தைக்குச் செய்யும் கைங்கர்யம் என்ற பெருமையைக் கொண்டபடி, தர்மங்களைப் பற்றி மிகவும் நுட்பமான கருத்துக்களையும் அறிந்தவன் ஆவான். இவர்கள் அங்கு சென்றபோது அவன் தனது தாய்தந்தைக்குப் பணிவிடைகள் செய்து கொண்டிருந்தான். அவன் அந்தச் செயல்களைச் செய்து முடிக்கும்வரை இவர்கள் அங்கேயே நின்றனர். அதன் பின்னர் தாங்கள் அறியவேண்டிய தர்மங்களைப் பற்றிய சந்தேகங்கள் பலவற்றையும் அவனிடம் கேட்டு, அந்தச் சந்தேகங்களைப் போக்கிக் கொண்டனர். – மஹாபாரதத்தில் கச்சித் த்விஜாதிப்ரவரோ வேதாத்யாயீ தபோதந:, தபஸ்வீ தர்ம சீலச்ச கௌசிகோநாம பாரத ஸாங்கோபநிஷதாந் வேதாந் அதீதே த்விஜஸத்தம:, ஸவ்ருக்ஷ மூலே கஸ்மிம்ச்சித் வேதாநுச்சாரயந் ஸ்தித:, உபரிஷ்டாச்ச வ்ருக்ஷஸ்ய பலாகா ஸம்ந்யலீயத, தயாபுரீஷமுத்ஸ்ருஷ்டம் ப்ராஹ்மணஸ்ய ததோரஸி – வேதங்களை நன்றாகக் கற்றவனும், சிறந்த தவம் என்பதையே தனது செல்வமாகக் கொண்டவனும், ஸத்வகுணம் நிரம்பப் பெற்றவனும், தர்மம் என்பதையே தனது ஒழுக்கமாகக் கொண்டவனும், அந்தணர்களில் மிகவும் உயர்ந்தவனும் ஆகிய கௌசிகன் என்னும் ஒருவன் இருந்தான். அந்தணர்களின் தலைவனும், அங்கங்கள் மற்றும் உபஅங்கங்கள் ஆகியவற்றுடன் கூடிய வேதத்தை நன்றாகக் கற்றவனும் ஆகிய அவன் ஒரு நாள் வேதங்களை உச்சரித்தபடி ஒரு மரத்தின் அடியில் அமர்ந்திருந்தான். அப்போது அந்த மரத்தின் மேல் அமர்ந்திருந்த ஒரு கொக்கு எச்சம் இட்டது. அந்த எச்சமானது கீழே அமர்ந்திருந்த கௌசிகனின் மார்பில் விழுந்தது – என்று கூறப்பட்டது. இந்த வரிகளில் கூறியபடி கௌசிகன் என்ற பெயர் கொண்டவனாக, அங்கங்கள் மற்றும் உபநிஷத்துக்கள் ஆகியவற்றுடன் கூடிய வேதங்களை நன்கு அறிந்தவனாக, அந்தணர்களின் தலைவனாக உள்ள ஓர் அந்தணன் ஒரு மரத்தின் அடியில் வேதங்களை உச்சரித்தபடி அமர்ந்திருந்தான். அப்போது மரத்தின் மேல் அமர்ந்திருந்த ஒரு கொக்கு எச்சம் இட்டது. அதன் எச்சம் தனது மார்பில் வந்து விழுந்தவுடன் மிகவும் கோபம் கொண்டான். அந்தக் கொக்கை அதே கோபத்துடன் பார்த்தான். இவன் பர்வை பட்டவுடன் அந்தக் கொக்கு இறந்து விழுந்தது. இதனைக் கண்ட அவன் மிகவும் வருந்திய மனம் கொண்டான். தனது மனதில், “ஆசை மற்றும் வெறுப்பு ஆகியவற்றால் தூண்டப்பட்டு செய்யக்கூடாத செயலைச் செய்தோமே”, என்று பலமுறை கூறியபடி அங்கிருந்து புறப்பட்டு, அருகில் உள்ள ஒரு கிராமத்திற்குப் பிச்சை எடுத்து உண்பதற்காகச் சென்றான். – அங்குள்ள முதல் வீட்டின் வாயிலில் நின்று - பிக்ஷாம்தேஹி - பிச்சை இடுவீர்களாக - என்றான். உடனே அந்த வீட்டின் பெண் இவனிடம், “சற்றே இருப்பீர். இதோ வருகிறேன்”, என்று கூறிவிட்டுச் சென்றாள். உள்ளே சென்று கைகால்களைக் கழுவி, பிச்சை அளிப்பதற்காக முயல்கின்ற நேரத்தில் அவளது கணவன் மிகுந்த பசியுடன் வீட்டிற்கு வந்தான். அவள் பதிவ்ரதை என்பதால் பிச்சை எடுத்து வருவதை நிறுத்தியவளாக, தனது கணவனுக்குக் கைகால்கள் கழுவி ஆசனம் இடுதல் போன்ற செயல்களைச் செய்தாள். இப்படியாகக் கணவனுக்கு ஏற்ற பணிவிடைகளை செய்தபடி இருந்தபோது, வாசலில் அந்தணன் ஒருவன் நிற்பதை மறந்தாள். நீண்டநேரம் கழித்து அவன் நிற்பதைக் கண்டவளாக, தான் செய்த செயலுக்கு நடுக்கம் அடைந்தவளாக, பிச்சையை எடுத்துக்கொண்டு வந்தாள். – இவளைக் கண்ட அந்தணன் மிகவும் கோபம் கொண்டவனாக, “என்னை நிற்கச் சொல்லிவிட்டுச் சென்ற நீ இத்தனை நேரம் ஏன் வராமல் இருந்தாய்?”, என்றான். அவள் அவனைச் சமாதானம் செய்தவளாக, “எனது செயலைப் பொறுத்துக் கொள்ள வேண்டும்”, என்றாள். தொடர்ந்து அவனிடம், “ஒரு பெண்ணிற்கு அவளது கணவனே உயர்ந்த தெய்வம் ஆவான். நான் இப்படிப்பட்ட எண்ணம் கொண்டவள் ஆவேன். அவர் களைப்புடன் வந்த காரணத்தினால் அவருக்கு வேண்டிய பணிவிடைகள் செய்துவிட்டு வருவதற்குத் தாமதம் ஆனது”, என்றாள். இதனைக் கேட்ட கௌசிகன் என்ற அந்த அந்தணன், “உனக்கு உன்னுடைய கணவனை உபசரிப்பதே பெரிதாக உள்ளதே! அந்தணர்களிடம் காண்பிக்கப்பட்ட வேண்டிய மரியாதை இல்லையே”, என்று குறிப்பாகக் கூறினான். தொடர்ந்து, “இல்லற தர்மத்தில் சிறந்துள்ள நீ அந்தணர்களை இவ்விதம் அவமதிப்பது கூடாது என்பதை அறிவாயாக”, என்றான். இதனைக் கேட்ட அந்தப் பெண், “நான் அந்தணர்களை எப்போதும் அவமரியாதை செய்பவள் அல்லள். அந்தணர்களின் பெருமைகளை நான் நன்றாகவே அறிவேன்”, என்று விரிவாகக் கூறினாள். மேலும் அவள், “இந்தக் குற்றத்தைத் தாங்கள் பொறுத்து கொள்ளவேண்டும். நான் ‘கணவனே தெய்வம்’ என்றுள்ளதால், அவருக்கு ஏற்ற பணிவிடைகளைச் செய்வதில் பரவசம் அடைந்து நின்றேன். இவ்விதம் எனது கணவருக்குச் செய்யும் பணிவிடைகள் மூலம் நான் பெற்ற வலிமையை நீவீர் காண்கிறீரா? உம்முடைய கோபம் காரணமாக ஒரு கொக்கு எவ்விதம் எரிந்து சாம்பலானது என்பதை நான் இங்கிருந்தபடியே அறிவேன்”, என்றாள். மஹாபாரதம் – க்ரோதச் சத்ருச் சரீர ஸ்த்தோமநுஷ்யாணாம் த்விஜோத்தம, ய: க்ரோத மோஹௌ த்யஜதி தம் தேவா ப்ராஹ்மணம் விது: – அந்தணரே! மனிதர்களுக்குக் கோபம் மற்றும் மோகம் என்பதான இரண்டு விரோதிகள் அவர்களுடைய சரீரத்திலேயே உள்ளன. யார் ஒருவன் இந்த கோபத்தையும், மோகத்தையும் விடுகிறானோ அவனைத் தேவன் என்றும், அந்தணன் என்றும் அறிகின்றனர் – என்றுள்ளதைச் சுட்டிக் காண்பித்தவளாய், “ஆசை மற்றும் வெறுப்பு போன்றவை அந்தணர்களுக்கு ஆகாது; உண்மையும், நேர்மையும் மட்டுமே அந்தணர்களுக்கு வேண்டியதாகும்”, என்று விரிவாக உரைத்தாள். மேலும் கீழே உள்ள பல வரிகளையும் உரைத்தாள்: பவாநபிச தர்மஜ்ஞஸ் ஸ்வாத்யாய நிரதச்சுசி:, நது தத்வேந பகவந் தர்மாந் வேத்ஸீதி மே மதி: - அந்தணரே! தர்மத்தை அறிந்தவராகவும், வேதங்களை விரும்புபவராகவும், சிறந்த ஒழுக்கம் உடையவராகவும் நீவிர் உள்ளபோதிலும், தர்மங்கள் பலவற்றையும் உள்ளது உள்ளபடி நீவீர் அறியவில்லை என்றே நான் எண்ணுகிறேன். மாதாபித்ருப்யாம் சுச்ரூஷுஸ் ஸத்யவாதீ ஜிதேந்த்ரிய:, மிதிலாயம் வஸந் வ்யாதஸ் ஸ தே தர்மாந் ப்ரவக்ஷ்யதி - தாய்தந்தைக்குக் கைங்கர்யம் செய்பவனும், உண்மையை மட்டுமே பேசுபவனும், புலன்களைத் தன்வசப்படுத்தியவனும், மிதிலை நகரத்தில் வாழ்பவனும் ஆகிய வ்யாதன் என்பவன் உமக்குத் தர்மங்கள் குறித்து உரைப்பான். தத்ர கச்சஸ்வ பத்ரம் தே யதா காமம் த்விஜோத்தம – வ்யாத: பரமதர்மாத்மா ஸதேச்சேத்ஸ்யதி ஸம்சயாந் - நீவிர் அந்த இடத்திற்குச் செல்வீராக. உமக்குச் சிறந்த நன்மையும் மங்களமும் ஏற்படும். தர்மத்தில் சிறந்தவனாகிய அந்த வ்யாதன் உமது விருப்பத்திற்கு ஏற்றபடி அனைத்து சந்தேகங்களையும் போக்குவான். ஆக அந்தப் பெண் கௌசிகனிடம், “நீவிர் தர்மங்களை அறிந்தவர், வேத அத்யயனம் செய்தவர், தூய்மையான எண்ணங்களுடன் உள்ளவர். ஆயினும் தர்மங்களை உள்ளது உள்ளபடி நீவிர் அறியவில்லை என்பதே எனது எண்ணம் ஆகும். தாய்தந்தைக்கு ஏற்ற பணிவிடைகள் செய்தபடி உள்ளவனாகவும், உண்மையை மட்டுமே உரைப்பவனாகவும், புலன்களை வென்றவனாகவும், மிதிலையில் வாழ்கின்றவனாகவும் உள்ள வ்யாதன் என்பவன் தர்மங்களை உமக்கு ஏற்ப உபதேசிப்பானாக. நீவிர் அங்கு செல்வீராக. உமக்கு ஏற்ற நன்மைகள் அங்கு உண்டாகும். மிகவும் உயர்ந்த தர்மங்களில் சிறந்தவனாகிய அந்த வ்யாதன், நீவிர் வேண்டியபடி உமக்குத் தெளிய வேண்டிய சந்தேகங்களையும் போக்குவான்”, என்றாள். இதனைக் கேட்ட அந்த அந்தணன் மிகவும் மகிழ்ந்து, அந்தப் பெண்ணின் உள்ளம் நெகிழும்படியாகத் துதித்து, அங்கிருந்து புறப்பட்டு மிதிலைக்குச் சென்றான். மஹாபாரதம் – பஞ்ச காநி பவித்ராணி சிஷ்டாசாரேஷு நித்யதா, ஏதந் மஹாமதே வ்யாத ப்ரப்ரவீஹி யதாததம் - மிகவும் சிறந்த ஞானம் கொண்ட வ்யாதனே! நல்லவர்களின் ஒழுக்கங்களில் மிகவும் தூய்மையானதும், எப்போதும் நிலைக்கவேண்டியும் உள்ள ஐந்து விஷயங்கள் எவை – என்றுள்ளபடி வ்யாதனிடம், “நல்லவர்களின் ஒழுக்கங்களில் எப்போதும் உள்ளதும், தூய்மையானதும் உள்ளவை என்றுள்ள ஐந்து விஷயங்கள் எவை? சிறந்த அறிவு கொண்டவனே! இதனை நீ எனக்குக் கூறவேண்டும்”, என்றான். இதனைக் கேட்ட வ்யாதன் மஹாபாரதன் – யஜ்ஞோ தாநம் தபோ வேதாஸ் ஸத்யஞ்ச த்விஜ ஸத்தம, பஞ்சைதாநி பவித்ராணி சிஷ்டாசாரேஷு நித்யதா – அந்தணர்களின் உயர்ந்தவரே! யஜ்ஞம், தானம், தவம், வேதங்கள் உண்மை ஆகிய ஐந்துமே நல்லவர்களின் ஒழுக்கங்களில் மிகவும் தூய்மையானது - என்று கூறியபடி, “யஜ்ஞம், தானம், தவம், வேதங்கள் மற்றும் உண்மை என்பதான ஐந்து தூய்மைகளே நல்லவர்களின் ஒழுக்கங்களில் காணப்படும்”, என்று தொடங்கி உபதேசம் செய்தான். இவ்விதம் கௌசிகன் தனக்கு இருந்த சந்தேகங்கள் அனைத்தையும் கேட்கக் கேட்க, உபதேசம் மூலமாக அனைத்துவிதமான தர்மங்கள் பற்றிய சந்தேகங்களை வ்யாதன் வேருடன் நீக்கினான். இப்படியாக இந்த நிகழ்வு பற்றி தர்மபுத்திரரிடம் மார்க்கண்டேய மஹரிஷி உரைத்ததாக, மஹாபாரதம் ஆரண்யபர்வம் இருநூறாம் அத்யாயம் தொடங்கி, பதின்மூன்று அத்யாயங்களில் விரிவாக உரைக்கப்பட்டது காண்க. இப்படியாக மேலும் பலரும் அந்த வேடனின் வீட்டு வாயிலுக்கு வந்து, தர்மங்கள் குறித்த சந்தேகங்கள் பற்றிய கேள்விகளை எழுப்பி, தெளிந்து சென்றனர் என்பதைப் பல இடங்களில் காணலாம். இதன் மூலம் பிறவி போன்றவற்றால் உயர்ந்தவர்களுக்கு, அவற்றால் தாழ்ந்தவர்களாக உள்ளபோதிலும், அறிவாளிகளாக இருந்தால் அவர்களது வீட்டின் வாயிலில் சென்று தெரிந்து கொள்ளவேண்டிய விஷயங்களைக் கேட்டு அறிந்து கொள்வதில் எந்தவிதமான தோஷமும் இல்லை என்று உணர்த்தப்பட்டது.