Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 230)
மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்
தர்மபுத்ரர் அசரீரிவாக்யத்தையும் ஜ்ஞாநாதிக்யத்தையும் கொண்டு ஸ்ரீவிதுரரை ப்ரஹ்மமேதத்தாலே ஸம்ஸ்கரித்தார்.
இவ்வர்த்தத்தை தர்மபுத்ர ரநுஷ்டாநத்தாலும் தெளிவிக்கிறார் (தர்மபுத்ரர்) என்று தொடங்கி.
– கடந்த சூர்ணையில் கூறப்பட்ட கருத்தை, தர்மபுத்திரரின் செய்கை மூலமும் அருளிச்செய்கிறார்.
பெருமாள் பரார்த்தமாக ஸாமாந்ய தர்மத்தைப் பண்ணிப் போந்தாரேயாகிலும், விசேஷ தர்மத்திலே திருவுள்ளம் ஊற்றிருக்கையாலே அவர்க்குச் செய்யலாம்; இவர் செய்ததிறே யரிது. ஸ்வவர்ண தர்மத்தையே உத்தேச்யமாக நினைத்து ஸர்வாவஸ்தையிலும் அதுக்கொரு நழுவுதல் வாராதபடி ஸாவதாநமாக நடத்திக்கொண்டு போருமவரிறேயிவர்; இப்படியிருக்கிறவர், ஸ்ரீவிதுரரை ஸம்ஸ்கரிக்கிற தசையில், அவருடைய வர்ணத்தைப் பார்ப்பது, ஜ்ஞாநாதிக்யத்தைப் பார்ப்பதாய், “என் செய்யக்கடவோம்” என்று வ்யாகுலப்படா நிற்கச்செய்தே “தர்மராஜஸ்து தத்ரைநம் ஸஞ்சிஸ்கரயிஷுஸ் ததா தக்து காமோபவத் வித்வாந் அதாகாசேவசோப்ரவீத்; போபோ ராஜந் நதக்தவ்யமேதத் விதுர ஸம்ஜ்ஞிதம் களேபரமிஹைதத் தே நைஷதர்மஸ் ஸநாதய: லோக வைலக்ஷணோ நாம பவிஷ்யத்யஸ்ய பார்த்திவ யதிதர்ம மவாப்தோஸௌ ந சோச பரதர்ஷப” என்று இவர் ப்ரஹ்மமேத ஸம்ஸ்காரார்ஹர் என்று சொன்ன அசரீரி வாக்யத்தாலும் ஸம்ப்ரதிபந்நமான விவருடைய ஜ்ஞாநாதிக்யத்தாலும் ஸந்தேஹமற்று வைதிகாக்ரேஸரர்க்குச் செய்யக்கடவ ப்ரஹ்மமேத ஸம்ஸ்காரத்தாலே ஸம்ஸ்கரித்தாரிறே.
ஸர்வேச்வரனாகிய இராமன் கடந்த இரண்டு சூர்ணைகளில் கூறப்பட்டபடி தர்மங்களை மற்றவர்களுக்கு உணர்த்தும் பொருட்டு தானே சில செயல்களைச் செய்தான் என்றுபோதிலும், மிகவும் விசேஷமான தர்மமாகிய “தன்னைச் சரணம் அடைந்தவனைக் காப்பாற்றுதல்” என்பதைத் திருவுள்ளத்திலே எப்போதும் நிலைநாட்டியவன் என்பதால் அவனுக்கு அப்படிப்பட்ட செயல்கள் செய்யக்கூடியதாகவே உள்ளதில் வியப்பில்லை. ஆனால் தர்மபுத்திரர் அத்தகைய செயலை ஒத்தபடி செய்தது அரிதே ஆகும் (விதுரருக்கு ப்ரஹ்மமேத ஸம்ஸ்காரம் செய்தார்). தன்னுடைய வர்ணாச்ரம தர்மத்திற்கு எப்போதும் புறம்பாக நடக்கக்கூடாது என்று எண்ணி, அதனை மட்டுமே கைக்கொண்டு, அனைத்து நிலைகளிலும் அதிலிருந்து நழுவுதல்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருந்தார். இப்படி உள்ளபோது ஸ்ரீவிதுரரை ப்ரஹ்மமேத ஸம்ஸ்காரம் செய்யவேண்டிய நிலையில், விதுரரின் பிறவி (அவர் சூத்ர ஸ்த்ரீக்குப் பிறந்தவர்) மற்றும் மேன்மையான ஞானம் ஆகிய இரண்டையும் கண்டு “நான் என்ன செய்வது?”, என்று கலங்கியபடி நின்றார். மஹாபாரதம் – தர்மராஜஸ்து தத்ரைநம் ஸஞ்சிஸ்கரயிஷுஸ் ததா தக்து காமோபவத் வித்வாந் அதாகாசேவசோப்ரவீத்; போபோ ராஜந் நதக்தவ்யமேதத் விதுர ஸம்ஜ்ஞிதம் களேபரமிஹைதத் தே நைஷதர்மஸ் ஸநாதய: லோக வைலக்ஷணோ நாம பவிஷ்யத்யஸ்ய பார்த்திவ யதிதர்ம மவாப்தோஸௌ ந சோச பரதர்ஷப - தர்மபுத்திரர் அந்தச் சூழ்நிலையில் ஸ்ரீவிதுரரை மிகவும் சிறந்த ஞானம் கொண்டவர் என்று அறிந்து சரியான மந்த்ரங்கள் மூலமாக அவரை ஸம்ஸ்காரம் செய்யவேண்டும் என்று எண்ணினார்; ஆனால் அவரது தாழ்ந்த பிறவியைக் கண்டு மந்திரங்கள் ஏதும் இன்றி ஸம்ஸ்காரம் செய்யவேண்டும் என்றும் எண்ணினார். இந்த நிலையில் ஓர் அசரீரி வாக்கியம் கேட்டது - அரசனே! விதுரர் என்ற பெயர் கொண்ட இந்தச் சரீரமானது மந்த்ரங்கள் இன்றி அப்படியே தகனம் செய்வதற்கு ஏற்றது அல்ல. தகுந்த மந்த்ரங்கள் மூலம் ஸம்ஸ்காரம் செய்வதே சரியானது; இந்த ஸநாதந தர்மம் உனக்கு முரணாக இருக்காது. அரசனே! இந்த விதுரர் ஸந்ந்யாஸியின் தர்மத்தை அடைந்தவர் ஆவார். அரசனே! இவ்விதம் இவரை நீ ஸம்ஸ்காரம் செய்யப்போவதால், மேன்மையான தர்மத்தில் நிலைநிற்பவன் என்ற நற்பெயரை நீ அடையப் போகிறாய். ஆகவே சோகம் கொள்ளாதே - என்றது காண்க. ஆக இவர் ப்ரஹ்மமேத ஸம்ஸ்காரத்திற்கு ஏற்றவர் என்று கூறப்பட்ட அசரீரி வாக்யத்தாலும், அவருடைய மேன்மையான ஞானம் என்பதாலும் தன்னுடைய சந்தேகம் நீங்கப்பெற்றார். வைதிகர்களின் தலைவர்களுக்கு மட்டுமே உரித்தான ப்ரஹ்மமேத ஸம்ஸ்காரத்தை தர்மர் விதுரருக்குச் செய்தார் அல்லவோ?