Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 229)
மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்
பெரியவுடையார்க்குப் பெருமாள் ப்ரஹ்மமேத ஸம்ஸ்காரம் பண்ணியருளினார்.
இப்படி உக்திமாத்ரத்தாலன்றிக்கே, பாகவத வைபவத்தை வ்ருத்தியாலும் பெருமாள் வெளியிட்டபடியை யருளிச்செய்கிறார் (பெரியவுடையார்க்கு) என்று தொடங்கி.
இவ்விதம் தனது சகோதரர்களில் ஒருவன் விபீஷணன் என்று வார்த்தை அளவில் மட்டுமே இராமன் கூறவில்லை; பாகவதர்கள் மேன்மையை தன்னுடைய செயலாலும் வெளிப்படுத்தினான் என்பதை அருளிச்செய்கிறார்.
– ”மர்யாதாநாஞ்ச லோகஸ்ய கர்த்தா காரயிதாச ஸ:” என்கிறபடியே – லோகமர்யாதா ஸ்தாபநார்த்தமாக வவதரித்து, பித்ருவசந பரிபாலநாதிகளாலே ஸாமாந்ய தர்ம ஸ்தாபந சீலராயிருப்பா ரொருவரிறே பெருமாள்; ஏவம்பூதரானவர், பிராட்டி பிரிவுகண்டு பொறுக்கமாட்டாமல் தம்மை யழியமாறின பெரியவுடையார்க்கு, ஜந்மவ்ருத்தாதிகளா லுத்க்ருஷ்டரானவர்களுக்கு தத்புத்ர சிஷ்யர்கள் பண்ணும் ப்ரஹ்மமேத ஸம்ஸ்காரத்தை, அவருடைய ப்ரேமாதிக்யமே ஹேதுவாக, திருத்தம்பியாரும் கூட நிற்கச்செய்தே தாமே ஸாதரமாகப் பண்ணியருளினாரிறே. இத்தால் – ஜந்மாத்யுத்க்ருஷ்டரானவர்கள், அவற்றால் குறைந்திருக்கும் விலக்ஷண பாகவத விஷயத்தில் புத்ரக்ருத்ய மநுஷ்டிக்கலாமென்னுமிடம் காட்டப்பட்டது.
பெரியவுடையார் என்பது ஜடாயுவைக் குறிக்கும். இராமாயணம் ஸுந்தரகாண்டம் (35-11) – மர்யாதாநாஞ்ச லோகஸ்ய கர்த்தா காரயிதாச ஸ: - உலகில் உள்ள நான்கு வர்ணத்தினருக்கும் ஏற்ற மரியாதைகளைச் செய்பவனும், செய்யும்படிச் செய்பவனும் இராமனே - என்று கூறப்பட்ட வாக்கியத்திற்கு ஏற்ப, உலகில் உள்ள ஒழுக்கங்களை நிலைநாட்டுவதற்காக வந்து அவதரித்தான்; தந்தையின் சொல்லை நிறைவேற்றுதல் போன்ற தர்மங்களை நிலைநாட்டினான்; இப்படியாக உள்ளவன் அல்லவோ இராமன்! இப்படிப்பட்ட இராமன் செய்தது என்னவென்றால் - சீதையை இராவணன் இராமனிடமிருந்து பிரித்துச் சென்றதைக் கண்டு பொறுக்க இயலாமல் ஜடாயு இராவணனிடம் போர் செய்து தனது உயிரை விட, அந்த ஜடாயுவுக்கு - பிறவி மற்றும் ஒழுக்கத்தால் மிகவும் உயர்ந்தவர்களுக்கு அவர்களது புத்திரர்களும் சிஷ்யர்களும் செய்யவேண்டியதான ப்ரஹ்மமேத ஸம்ஸ்காரத்தைச் செய்தான். ஜடாயுவின் மீது கொண்ட மிகுந்த அன்பு காரணமாக, தனது தம்பியான லக்ஷ்மணன் அருகில் இருந்தபோது, தானே இத்தகைய ஸம்ஸ்காரத்தை அன்புடன் செய்தான். இதன் மூலம் பிறப்பு போன்றவற்றால் உயர்ந்தவர்கள், அவற்றால் தாழ்ந்து இருக்கின்ற பாகவதர்களுக்கு, அவர்களது புத்திரர்கள் செய்யவேண்டிய ஸம்ஸ்காரங்களைச் செய்யலாம் என்று கூறப்படுகிறது.