Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 228)

மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்

ஸ்ரீவிபீஷணனை ராவணன் குலபாம்ஸநமென்றான்; பெருமாள் இக்ஷ்வாகு வம்ச்யனாக நினைத்து வார்த்தை யருளிச்செய்கிறார்.

இதிஹாஸாதி ப்ரமாண முகத்தாலே பாகவத வைபவத்தை தர்சிப்பித்தார் கீழ்; சிஷ்டர்களுடைய வாசார முகத்தாலும் பாகவத வைபவத்தை தர்சிப்பிக்கிறார் மேல். “தர்மஜ்ஞஸமய ப்ரமாணம் ...” என்று ஆப்த ப்ரமாணமான வேதத்துக்கு முன்னே எடுக்கும்படியிறே சிஷ்டாசாரத்தினுடைய ப்ராமாண்யமிருப்பது; அதில் ப்ரதமத்திலே, அபக்ருஷ்ட ஜாதீயரானவர்கள் அந்த சரீரத்தோடே ஸஜாதீய வ்யாவ்ருத்தராய் உத்க்ருஷ்ட தமராவர்களென்று கீழ்ச்சொன்ன வர்த்தத்தை ஸ்திரீகரிக்கைக்காக, ராவணாநுஜனைக் குறித்து பெருமா ளருளிச்செய்த வார்த்தையை யருளிச்செய்கிறார் (விபீஷணனை) என்று தொடங்கி.

இதிகாசம் மற்றும் பலவிதமான ப்ரமாணங்கள் மூலமாக இதுவரை பாகவதர்களின் மேன்மையை நிரூபித்தார். வேதங்களை அதன் அங்கங்களுடன் கற்பதே தர்மம் என்றுள்ள பெரியோர்களின் ஒழுக்கம் மூலம் இதனை நிரூபிக்க உள்ளார். ஆபஸ்தம்பஸூத்ரம் – தர்மஜ்ஞஸமய ப்ரமாணம் - தர்மம் அறிந்தவர்களின் ஒழுக்கமே முதல் ப்ரமாணம் ஆகும்; வேதங்கள் அடுத்த ப்ரமாணம் ஆகின்றன - என்பதற்கு ஏற்றபடி, நம்பத்தகுந்த ப்ரமாணமாக உள்ள வேதங்களுக்கும் முன்பாக உள்ள ப்ரமாணமாக, சான்றோர்களின் ஒழுக்கம் என்பது முக்கிய ப்ரமாணமாக உள்ளது. இவற்றில் முதலில், தாழ்ந்த குலத்தில் பிறந்தவர்கள், அந்தப் பிறவியிலேயே உயர்ந்தவர்களைக் காட்டிலும் வேறுபட்டவர்களாக உள்ளனர் என்று கடந்த சூர்ணையில் கூறியதை நிலைநாட்டும் விதமாக, இராவணனின் தம்பியாகிய ஸ்ரீவிபீஷணன் குறித்து இராமன் அருளிச் செய்ததைக் காண்பிக்கிறார்.

– அதாவது, “ப்ரதீயதாம் தாசரதாய மைதிலீ” என்று தனக்கு ஹிதத்தைச் சொன்ன தர்மாத்மாவான ஸ்ரீவிபீஷணாழ்வானை பாபிஷ்டனான ராவணன் குபிதனாய், “த்வாந்து திக் குலபாம்ஸநம்” என்று - இக்குலத்துக்கு இழுக்காகப் பிறந்தவுன்னை வேண்டேன் என்று பருஷித்துத் தள்ளிவிட்டான்; இக்ஷ்வாகு குலநாதரான பெருமாள் இவனை ஆதரபூர்வகமாக வங்கீகரித்த வநந்தரம், “ஆக்க்யாஹி மம தத்வேநராக்ஷஸாநாம் பலாபலம்” என்று – “ராக்ஷஸருடைய பலாபலமிருக்கும்படியே நமக்குச் சொல்லும்” என்கையாலே, இவனை ராக்ஷஸஜாதீயனாக நினையாதே, திருத்தம்பிமாரோபாதியாக வபிமாநித்து வார்த்தையருளிச் செய்தாரென்கை. இவ்வாக்யத்திலே ராவணன் பரித்யஜித்தமையும் பெருமாள் பரிக்ரஹித்தமையும் சொல்லுகையாலே, பாகவதா நுகூல்யமுண்டாகவே ப்ராக்ருதர் “இவன் நமக் குடலல்லன்” என்று கைவிடுவர்க ளென்னுமிடமும், பகவான் விரும்பி மேல் விழுந்து பரிக்ரஹிக்கு மென்னுமிடமும் சொல்லப்பட்டது.

இராமாயணம் யுத்தகாண்டம் (14-4) - ப்ரதீயதாம் தாசரதாய மைதிலீ - சீதையை இராமனிடம் ஒப்படைப்பாயாக - என்று தனக்கு நன்மையை உபதேசித்த, தர்மத்தின் வழி நிற்கின்ற ஸ்ரீவிபீஷணனை, மிகுந்த பாவங்கள் பல செய்த இராவணன் செய்தது என்ன? அவனிடம் மிகவும் கோபம் கொண்ட இராவணன், யுத்தகாண்டம் (16-15) - த்வாந்து திக் குலபாம்ஸநம் - அரக்கர் குலத்தை அழிக்கவந்த நீ தேவை இல்லை – என்று இகழ்ந்து தள்ளினான். ஆனால் அந்த விபீஷணனை இக்ஷ்வாகு குலத்தின் நாயகனான இராமன் அன்பு முந்தி நிற்க ஏற்றுக்கொண்டான். தொடர்ந்து யுத்தகாண்டம் (19-7) – ஆக்க்யாஹி மம தத்வேநராக்ஷஸாநாம் பலாபலம் - அரக்கர்களின் பலம் மற்றும் பலவீனம் ஆகியவற்றை உரைப்பாயாக - என்று உள்ளதற்கு ஏற்ப விபீஷணனிடம் இராமன், “அரக்கர்களின் பலம் என்ன, பலவீனம் என்ன என்பதை எனக்கு உரைப்பாயாக”, என்றான். இதன் மூலம் விபீஷணனை அரக்கர் குலத்தைச் சேர்ந்தவன் என்று எண்ணாமல், தன்னுடைய சகோதரர்களில் ஒருவனாகவே எண்ணி, அவனிடம் இவ்விதம் கூறினான் என்றாகிறது. இந்த வாக்கியத்தில் இராவணன் விபீஷணனைக் கைவிட்டதையும், இராமன் அவனை ஏற்றுக் கொண்டதையும் கூறியதால் – ஒருவனுக்கு ஸர்வேச்வரனிடம் பக்தி ஏற்பட்டவுடன் பாமரமக்கள் அவனைக் குறித்து, “இவன் நம்மைச் சார்ந்தவன் அல்லன்”, என்று கைவிடுவர் என்பதும், ஸர்வேச்வரன் அப்படிப்பட்ட பக்தனை ஏற்றுக் கொள்வான் என்பதும் கூறப்பட்டது.