Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 227)

மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்

க்ஷத்ரியனான விச்வாமித்ரன் ப்ரஹ்மர்ஷியானான்.

இப்படி இதிஹாஸாதிகளிலே பாகவத வைபவம் சொல்லப்பட்டதேயாகிலும், “ந சூத்ரா பகவத்பக்தா விப்ரா பாகவதாஸ் ஸ்ம்ருதா:, ஸவிப்ரேந்த்ரோ முநிச் ஸ்ரீமாந் ஸயதிஸ் ஸச பண்டித:” என்று சொன்ன விப்ரத்வாதிகள் அர்த்தவாதமா மித்தனையல்லது, அபக்ருஷ்ட ஜந்மாவானவன் அந்த சரீரந்தன்னில் உத்க்ருஷ்டனாகக்கூடுமோ வென்ன; கூடுமென்னுமிடத்துக்கு உதாஹாரணதயா வருளிச்செய்கிறார் (க்ஷத்ரியனான) என்று தொடங்கி.

– இவ்விதமாக இதிகாசம் மற்றும் புராணங்களில் பாகவதர்களின் மேன்மை கூறப்பட்டது. ஆயினும் கீழே உள்ள வரிகள் காண்க: ந சூத்ரா பகவத்பக்தா விப்ரா பாகவதாஸ் ஸ்ம்ருதா: - ஸர்வேச்வரனின் அடியார்கள் சூத்திர குலத்தில் பிறந்தவர்கள் என்றாலும் சூத்திரர்கள் அல்லர்; அவர்கள் அந்தணர்கள், பாகவதர்களாகவும் கொள்ளத்தக்கவர்கள் ஸவிப்ரேந்த்ரோ முநிச் ஸ்ரீமாந் ஸயதிஸ் ஸச பண்டித: - அவனே அந்தணர்களில் உத்தமன், ஸந்ந்யாஸி, ஸ்ரீமாந், முனிவன் மேலே உள்ள வரிகளில் கூறப்பட்ட அந்தணத்தன்மை போன்றவை வெறும் புகழ்ச்சி உரை மட்டுமே அல்லாமல், தாழ்ந்த பிறவியில் பிறந்த ஒருவன் அந்தச் சரீரத்திலேயே உயர்ந்த பிறவி கொண்டவனாக இயலுமா என்ற கேள்விக்கு உதாரணம் மூலம் விடை அருளிச்செய்கிறார்.

– அதாவது, க்ஷத்ரிய குலோத்பவனான விச்வாமித்ரன், அஜ்ஜந்மத்திலே தான் பண்ணின தபோ விசேஷமடியாக, வஸிஷ்ட வாக்யத்தாலே க்ஷத்ரியத்வம் பின்னாட்டாதபடி ப்ரஹ்மர்ஷியாய் விட்டானிறே; ஆகையாலே, அத்யந்தாபக்ருஷ்ட குலோத்பவரானலும் அந்த சரீரந்தன்னோடே அநவதிக சக்திக பகவத் ஸம்பந்தரூப ஸம்ஸ்கார விசேஷத்தாலே, அத்யந்தோத்க்ருஷ்ட குலஜாநுவர்த்தநீயராம்படி உத்க்ருஷ்ட தமராகக் குறையில்லை யென்கை. அல்ப சக்திக வஸிஷ்டவாக்யம் செய்தபடி கண்டால், ஸர்வசக்தி ஸம்பந்த விசேஷ மென்செய்யமாட்டாது.

– க்ஷத்ரிய குலத்தில் தோன்றிய விச்வாமித்ரர், அந்தப் பிறவியில் தான் செய்த மிகப்பெரும் தவத்தின் விளைவாக, வசிஷ்டரின் வாக்கியம் மூலம், தான் மீண்டும் க்ஷத்ரியனாக மாறாதபடி, ப்ரஹ்மரிஷி ஆனார் அல்லவோ? ஆக தாழ்ந்த குலத்தில் ஒருவர் பிறந்தவர் என்றபோதிலும், அந்தப் பிறவியிலேயே, எல்லையற்ற சக்தி கொண்ட ஸர்வேச்வரனின் தொடர்பு என்ற காரணத்தால், மிகவும் உயர்ந்த பிறவி கொண்டவர்களாலும் பின்பற்றத்தக்கவர்கள் என்றபடி உயர்ந்தவர்களில் உயர்ந்தவர்கள் ஆகின்றனர் என்பதில் எந்தவிதமான ஐயமும் இல்லை. மிகவும் குறைந்த சக்தி கொண்ட வசிஷ்டரின் வாக்கியத்திற்கே இத்தனை வலிமை உள்ளது என்றால், அனைத்து சக்தியும் கொண்ட ஸர்வேச்வரனின் தொடர்பு என்பது எதனைத்தான் செய்யாது?