Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 226)
மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்
இவ்வர்த்தம் இதிஹாஸ புராணங்களிலும், பயிலுஞ் சுடரொளி நெடுமாற் கடிமையிலும் கண்சோர வெங்குருதியிலும் நண்ணாதவாளவுணரிலும் தேட்டருந் திறல் தேனிலும், மேம்பொருளுக்கு மேலில் பாட்டுக்களிலும் விசதமாகக் காணலாம்.
– இப்படியிந்த பாகவதவைபவம் ஆப்தவசநங்களில் விசதமாகக் காணலாம் இடங்களுண்டோவென்ன வருளிச்செய்கிறார் (இவ்வர்த்த மிதிஹாஸ புராணங்களிலும்) என்று தொடங்கி.
– இவ்விதமாக உள்ள பாகவதர்களின் மேன்மை குறித்து நம்பத்தகுந்தவர்களின் வாக்கியங்களில் விரிவாகக் கூறப்பட்டுள்ளன என்றுள்ள இடங்களைக் காண்பிக்க இயலுமா என்ற கேள்விக்கு விடை அருளிச்செய்கிறார்.
(இவ்வர்த்தம்) என்று - கீழ் விஸ்தரேணோக்தமான பாகவத வைபவத்தைப் பராமர்சிக்கிறது. மஹாபாரதத்திலே, “மத் பக்தம் சூத்ர ஸாமாந்யா தவமந்யந்தி யே நரா: நரகேஷ்வவதிஷ்டந்தி வர்ஷகோடீர் நராதமா:; சண்டாளமபி மத்பக்தம் நாவமந்யேத புத்திமாந், அவமாநாத் பதத்யேவ ரௌரவே நரகேச ஸ:” இத்யாதியாலும், “நசூத்ரா பகவத் பக்தா விப்ரா பாகவதாஸ் ஸம்ருதா:, ஸர்வ வர்ணேஷு தே சூத்ரா யேஹ்ய பக்தா ஜநார்தநே” இத்யாதியாலும், “மத்பக்த ஜநவாத்ஸல்யம் பூஜாயாஞ்சாநுமோதநம், ஸ்வயமப்யர்ச்சநஞ்சைவ மதர்த்தே டம்ப வர்ஜநம், மத் கதா ச்ரவணே பக்திஸ் ஸ்வர நேத்ராங்க விக்ரியா, மமாநுஸ்மரணம் நித்யம் யச்ச மாம் நோபஜீவதி; பக்தி ரஷ்டவிதாஹ்யேஷா யஸ்மிந் ம்லேச்சேபி வர்த்ததே ஸவிப்ரேந்த்ரோ முநிச் ச்ரீமாந் ஸயதிஸ் ஸச பண்டித:, நமே பூஜ்யச் சதுர்வேதீ பூஜயந் பக்திவர்ஜித:; ஸ மே பூஜ்யஸ் ஸதாசாஸௌ மத்பக்தச் ச்வபசோபி ய:, தஸ்மை தேயம் ததோக்ராஹ்யம் ஸசபூஜ்யோ யதாஹ்யஹம்” இத்யாதியாலும் பலவிடங்களிலும் பாகவத வைபவம் ப்ரதிபாதிதம்; இதிஹாஸோத்தமத்திலே, “சூத்ரம்வா பகவத்பக்தம் நிஷாதம் ச்வபசம் ததா, வீக்ஷதே ஜாதி ஸாமாந்யாத் ஸ யாதி நரகம் நர:” இத்யாதியாலே - பாகவத ப்ரபாவம் ப்ரகீர்த்திதம்; இன்னமு மிதிஹாஸத்திலே பலவிடங்களிலும் - பாகவத மஹாத்ம்ய ப்ரதிபாதநம் வந்தவிடங்களிலே கண்டு கொள்வது; ஸ்ரீவராஹபுராணத்திலே, “மத்பக்தம் ச்வபசம்வாபி நிந்தாம் குர்வந்தி யே நரா:, பத்மகோடி சதேநாபி நக்ஷமாமி வஸுந்தரே” இத்யாதியாலே – பாகவத வைபவம் ப்ரோக்தம்; ஸ்ரீபாகவதத்திலே, “ச்வபசோபி மஹீபால விஷ்ணுபக்தோ த்விஜாதிக: விஷ்ணுபக்தி விஹீநஸ்து யதிச்ச ச்வபசாதம:”. “விப்ராத் த்விஷட்குணயுதாத் அரவிந்தநாப பாதாரவிந்த விமுகாச் ச்வபசம் வரிஷ்டம், மந்யே ததர்ப்பிதமநோ வசநே ஹிதார்த்த ப்ராண: புநாதி ஸகலம் நது பூரிமாந:” இத்யாதிகளாலே பாகவத வைபவம் பலவிடங்களிலும் அபிஹிதம்; லைங்கத்திலும், “வைஷ்ணவாநாம் விசேஷோஸ்தி விஷ்ணோராயதநம் மஹத் ஜங்கம ஸ்ரீ விமாநாநி ஹ்ருதயாதி மநீஷிணாம். ய: பச்யதி சுபாசாரம் வைஷ்ணவம் வீதகல்மஷம், யஸ்மிந் கஸ்மிந் குடூலஜாதம் ப்ரணமேத் தண்டவத்புவி” இத்யாதியாலே - பாகவத வைபவம் ப்ரதிபாதிதம். இப்படி பாகவத மாஹாத்ம்ய ப்ரதிபாதநம் பல புராணங்களிலுமுண்டாகையாலே, அந்தவந்த ஸ்தலங்களிலே கண்டுகொள்வது; – இதிஹாஸாதிகளில் உபாத்த வசநங்களிலே பாகவதர்களை ஜந்மநிரூபேணந அவமதி செய்தால் வருமநர்த்த விசேஷமும், பாகவதரானபோதே யவர்களபக்ருஷ்ட ஜாதீயரல்லர் உத்க்ருஷ்ட ஜாதீயதுல்ய ரென்னுமிடமும், உத்க்ருஷ்ட ஜாதீயரிலும் ச்ரேஷ்டராய் அவர்களுக்கு ஜ்ஞாந ப்ரதாத்ருதயா குருக்களுமாய் பரம சேஷியான ஈச்வரனோபாதி பூஜ்யருமாவர்களென்னுமிடமும், அவர்கள் திறத்தில் அபசாரம் காலதத்த்வமுள்ளதனையுமீச்வரன் பொறானென்னுமிடமும் கரணத்ரய வ்யாபாரத்தோடு அர்த்தத்தோடு ப்ராணாதிகளோடு வாசியற பகவத்விஷயத்திலே ஸமர்ப்பித்து நிரபிமாநராயிருக்குமவர்கள் ஸ்பர்சபாவநரென்னுமிடமும், அவர்களுடைய ஹ்ருதயமீச்வரனுக்கு ஜங்கமவிமாநமென்னுமிடமும், அவர்களைக் கண்டால் தண்டவத் ப்ரணாமம் செய்வானென்னுமிடமும் சொல்லப்பட்டதிறே; இப்படி இதிஹாஸ புராணங்களிலும். நம்மாழ்வார், “பாற்கடல் சேர்ந்த பரமனைப் பயிலுந் திருவுடையார் பயிலும் பிறப்பிடைதோ றெம்மையாளும் பரமர்” என்று தொடங்கி - பகவத் குணசேஷ்டிதாதிகளிலே ப்ரவணரான பாகவதர்களே தமக்கு சேஷிகளென்னுமிடத்தை ப்ரதிபாதித்தருளுகிறவிடத்தில், “யவரேலுமவர்கண்டீர்”, “கும்பி நரகர்களேத்துவரேலு மவர் கண்டீர்”, “எத்தனை நலந்தானிலாத சண்டாள சண்டாளர்களாகிலும்” என்று ஜந்மாதிகளாலெத்தனையேனும் தண்ணியரேயாகிலும் சேஷத்வ விரோதியான ஜந்மாத் யபிமாநமில்லாதவர்கள் கிடீர் நமக்கு மிகவுமுத்தேச்யரென்றருளிச்செய்த “பயிலுஞ் சுடரொளியிலும்”, “கொடு மாவினையே னவனடியாரடியே கூடு மிதுவல்லால் வியன் மூவுலகு பெறினும் விடுமா றென்பதென் னந்தோ” என்று தொடங்கி - பாகவதர்களே தமக்கு பரமப்ராப்யரென்னுமிடத்தை ப்ரதிபாதிக்கிறவளவில், ஜந்ம வ்ருத்தாதி விபாகமின்றிக்கே, “சயமே யடிமை தலைநின்றார்”, “அவனடியார்”, “மணிமலை போல் கிடந்தான் தமர்கள்”, “கோதிலடியார்”, “நீக்கமில்லாவடியார்” என்று – பகவத் ஸௌந்தர்யாதிகளிலே தோற்றிருக்குமாகாரமே யவர்களுக்கு நிரூபகமாக வருளிச்செய்த ”நெடுமாற் கடிமையிலும்”; திருமங்கையாழ்வார், “தண்சேறையெம்பெருமான் தாள் தொழுவார் காண்மினென் தலைமேலார்” என்று தொடங்கி - அர்ச்சாவதார ப்ரவணரான ஸ்ரீவைஷ்ணவர்கள் எனக்கு சிரஸாவாஹ்யர், ஸதாத்யேயர், ஸூரிகளிலும் கைங்கர்ய ஸம்ருத்தியுடையவர்கள், அவர்களையொரு க்ஷண காலமும் பிரிய க்ஷமனல்லேன், அவர்களுக்கென் ஹ்ருதயம் தேனூறி யெப்பொழுதுமினியதாகா நின்றது, அவர்களைக் கண்ட மாத்திரத்திலே கண்டிகோளே யென்னுடைய மநோ த்ருஷ்டிகள் களிக்கிறபடி, அவர்களளவிலே யாகாநின்றது என்னன்பானது, அவர்களை நெஞ்சாலே நினைக்கவே ம்ருத்யுவுக்கும் பாபத்துக்கு மஞ்சவேண்டா, என்னுடைய ஹ்ருதயமவர்கள் விஷயத்திலே யிழிகிறபடி கண்டிகோளே என்று இப்படியருளிச் செய்கிறவிடத்தில், ஜந்மாதி ப்ரஸங்கமற வருளிச்செய்த “கண்சோர வெங்குருதியிலும்”; “கடன்மல்லைத் தலசயன மாரெண்ணும் நெஞ்சுடையாரவரெம்மை யாள்வாரே” என்று - ஏதேனும் ஜந்மவ்ருத்தாதிகளை யுடையராகவுமாம், திருக்கடல்மல்லைத் தலசயனத்தை யநுஸந்திக்குமவர்கள் நின்ற நிலைகளிலே ப்ரமாணம் காட்டாதே நம்மைக் காரியங்கொள்ள வுரியாரென்று தொடங்கி, ”ஞானத்தினொளியுருவை நினைவா ரென்னாயகர்”, ”அவரெங்கள் குலதெய்வமே” என்று – உகந்தருளின நிலத்திலே ப்ரவணரா யிருக்குமவர்களே நமக்கு சேஷிகள் என்றருளிச் செய்த ”நண்ணாதவாளவுணரிலும்”; ஸ்ரீகுலசேகரப்பெருமாள், “மெய்யடியார்கள் தம் மீட்டங் கண்டிடக்கூடுமே லதுகாணும் கண்பயனாவது”, “தொண்டரடிப்பொடியாட நாம் பேறில் கங்கை நீர் குடைந்தாடும் வேட்கை யென்னாவது” இத்யாதிகளாலே தம்முடைய பாகவத ப்ரேம ப்ரகர்ஷத்தை ப்ரதிபாதிக்கிறவளவில், ஐந்மாத் யுத்கர்ஷாபகர்ஷ ப்ரஸங்கமின்றியே பகவத் பக்தி பாரவச்யமே யவர்களுக்கு நிரூபகமாக வருளிச்செய்த “தேட்டருந் திறல் தேனிலும்”; ஸ்ரீதொண்டரடிப்பொடியாழ்வார் த்வயநிஷ்டர்பக்க லீச்வரனுக்குண்டான வுகப்பை யருளிச்செய்த “மேம்பொருள்” என்கிற பாட்டுக்கு மேலில் - எத்தனையேனும் தண்ணிய ஜந்மங்களிலே பிறந்தார்களே யாகிலும், மேம்பொருளில் சொன்ன ஜ்ஞாநத்திலே நிஷ்டையுடையராகில் திருத்துழாயோபாதி ஈச்வரனுக்கு சிரஸாவாஹ்ய ரென்றும், ஜந்மத்தாலே வந்த தண்மையே யன்றிக்கே எத்தனையேனும் தண்ணிய வ்ருத்தமுடையாரு மிந்த ஜ்ஞாந நிஷ்டராகில் அந்த துஷ்க்ருத பலமநுபவியாரென்றும், தங்களுக்கு ஜந்ம வ்ருத்தாதிகளால் வரும் குறையில்லாமையே யன்று, தங்களோடு ஸம்பந்தித்த ஸம்ஸாரிகளும் தங்கள் ப்ரஸாத ஸ்வீகாரத்தால் பரிசுத்தராம்படியான உத்கர்ஷமுடையாரென்றும், ஜந்ம வ்ருத்தாதிகளால் குறைய நின்றேயிந்த ஜ்ஞாநமுடையவர்கள் இந்த ஜ்ஞாந விதுரராய் ஜந்ம வ்ருத்தாதிகளா லுயர்ந்தவர்களுக்கு ஸர்வேச்வரனோபாதி பூஜ்யராய் ஜ்ஞாந தாந ப்ரதிக்ரஹங்களுக்கு அர்ஹராவரென்றும், ஜந்ம வ்ருத்தாதிகளுக்கு மேலே ஜ்ஞாநாதிகருமானவர்கள் ஜந்ம வ்ருத்தாதி வைலக்ஷண்யமின்றிக்கே இந்த ஜ்ஞாநமுடையரானவர்களை பகவத் ப்ரபாவத்தால் வந்த வைலக்ஷண்யத்தை புத்தி பண்ணாதே கர்ம நிபந்தநமான ஜந்மாத்யபகர்ஷத்தையே புத்தி பண்ணித் தாழ நினைத்தார்களாகில் அந்த க்ஷணத்திலே யவர்கள் கர்மசண்டாளராவ ரென்றும், இப்படி ப்ரஸாதித்த வர்த்தங்கள் ஸம்பவிக்குமென்னுமிடம் ப்ரஹ்மாதிகளுக்கும் துர்லபமான பேற்றை திர்யக் ஜாதியிலே பிறந்தானொருவன் பெற்ற பின்பு சொல்ல வேணுமோ வென்று அருளிச்செய்த ஆறு பாட்டுக்களிலும், (விசதமாகக் காணலாம்) என்றது - ஸம்சய விபர்யயமற தர்சிக்கலாமென்றபடி.
– “இவ்வர்த்தம்” என்பதன் மூலம் கடந்த சூர்ணையில் விரிவாக உரைக்கப்பட்ட பாகவதர்களின் மேன்மை கூறப்பட்டது. மஹாபாரதத்தில் கீழே காண்பிக்கப்பட்டுள்ள பல வரிகளில் பாகவதர்களின் பெருமை கூறப்பட்டுள்ளது: மத் பக்தம் சூத்ர ஸாமாந்யா தவமந்யந்தி யே நரா: நரகேஷ்வவதிஷ்டந்தி வர்ஷகோடீர் நராதமா: - எந்த மனிதர்கள் எனது பக்தன் சூத்திரனாக உள்ளதால் அவமானப்படுத்துகிறார்களோ (அல்லது எனது பக்தனைச் சூத்திரனுக்குச் சமானமாக எண்ணியபடி உள்ளார்களோ), அவர்கள் மிகவும் தாழ்ந்தவர்கள் ஆவர்; அவர்கள் கோடிக்கணக்கான வருடங்கள் நரகத்தில் வீழ்வர். சண்டாளமபி மத்பக்தம் நாவமந்யேத புத்திமாந், அவமாநாத் பதத்யேவ ரௌரவே நரகேச ஸ: – என்னுடைய பக்தன் சண்டாளனாகவே இருந்தாலும் அவனை ஞானம் கொண்ட எந்த ஒரு மனிதனும் அவமதித்தல் கூடாது. அவ்விதம் அவமானப்படுத்தினால் அவன் ரௌரவம் என்ற நரகத்தில் விழக்கடவன். நசூத்ரா பகவத் பக்தா விப்ரா பாகவதாஸ் ஸம்ருதா:, ஸர்வ வர்ணேஷு தே சூத்ரா யேஹ்ய பக்தா ஜநார்தநே - ஸர்வேச்வரனின் அடியார்கள் பிறப்பிலேயே சூத்திரர்கள் என்றபோதிலும், அவர்கள் சூத்திரர்கள் அல்லர், அவர்கள் அந்தணர்களை ஒத்தவர்கள் என்று எண்ணப்படவேண்டும். ஆனால் ஜநார்த்தனனிடம் பக்தி அற்ற ஒருவன் எந்தப் பிறவியில் பிறந்துள்ளபோதிலும் அவன் சூத்திரனே ஆவன். மத்பக்த ஜநவாத்ஸல்யம் பூஜாயாஞ்சாநுமோதநம், ஸ்வயமப்யர்ச்சநஞ்சைவ மதர்த்தே டம்ப வர்ஜநம், மத் கதா ச்ரவணே பக்திஸ் ஸ்வர நேத்ராங்க விக்ரியா, மமாநுஸ்மரணம் நித்யம் யச்ச மாம் நோபஜீவதி; பக்தி ரஷ்டவிதாஹ்யேஷா யஸ்மிந் ம்லேச்சேபி வர்த்ததே ஸவிப்ரேந்த்ரோ முநிச் ச்ரீமாந் ஸயதிஸ் ஸச பண்டித:, நமே பூஜ்யச் சதுர்வேதீ பூஜயந் பக்திவர்ஜித:; ஸ மே பூஜ்யஸ் ஸதாசாஸௌ மத்பக்தச் ச்வபசோபி ய:, தஸ்மை தேயம் ததோக்ராஹ்யம் ஸசபூஜ்யோ யதாஹ்யஹம் - என்னுடைய அடியார்களிடம் அன்பு; என்னை ஆராதிப்பதில் மகிழ்ச்சி, நானே திருவாராதனம் செய்யப்பட வேண்டியவன்; எனக்குக் கைங்கர்யம் செய்யும்போது ஆரவாரம் மற்றும் ஆடம்பரம் இல்லாமை; என் சரிதங்களைக் கேட்பதில் மிகுந்த ஆசை; அவ்விதம் கேட்கும்போது குரல் தழுதழுப்பது, ஆனந்தக்கண்ணீர் பெருகுவது, மயிர்க்கூச்சல் எடுப்பது போன்ற மாற்றங்கள் அடைதல்; எப்போதும் என்னையே நினைத்து த்யானித்தல், என்னை விட்டு வாழ இயலாது என்பதான எட்டுவிதமான பக்தியும் எத்தகைய தாழ்வான ஒருவனிடம் இருந்தாலும் அவன் அந்தணர்களில் உத்தமன், அவனே ஸந்ந்யாஸி, அவனே பண்டிதன் ஆவான். ஆனால் நான்கு வேதங்களை அறிந்துள்ளபோதிலும் என்னிடம் எந்தவிதமான பக்தியும் இன்றி என்னை ஆராதித்தவன் என்றால், அவன் என்னால் விரும்பப்படுபவன் அல்லன். நாய் இறைச்சி உண்பவனாக இருந்தாலும், என்னிடம் ப்ரேமை கொண்டிருந்தால், அவன் எப்போதும் என்னால் விரும்பப்படுபவன் ஆவான். இப்படிப்பட்டவனிடமிருந்து ஞானம் பெற்றுக் கொள்ளவேண்டும். என்னைப் போன்றே அவனும் வழிபடத்தக்கவன் ஆவான். – இதிஹாஸ உத்தமத்தில் – சூத்ரம்வா பகவத்பக்தம் நிஷாதம் ச்வபசம் ததா, வீக்ஷதே ஜாதி ஸாமாந்யாத் ஸ யாதி நரகம் நர: - ஸர்வேச்வரனுடைய பக்தன் ஒருவன் சூத்திரனாக உள்ளபோதிலும், வேடனாக உள்ளபோதிலும், சண்டாளனாக உள்ளபோதிலும் அவனை யார் ஒருவன் தாழ்ந்த பிறவியாகப் பார்க்கிறானோ அவன் நரகம் செல்வான் – என்றது காண்க. இதன் மூலம் பாகவதர்களின் ப்ரபாவம் வெளிப்படை ஆகிறது. மேலும் இதிஹாஸங்களில் பல இடங்களில் பாகவதர்களின் மாஹாத்ம்யம் குறித்து கூறப்பட்டதைக் கண்டு கொள்க. – ஸ்ரீவராஹபுராணத்தில் - மத்பக்தம் ச்வபசம்வாபி நிந்தாம் குர்வந்தி யே நரா:, பத்மகோடி சதேநாபி நக்ஷமாமி வஸுந்தரே - என்னுடைய பக்தன் ஒருவன் சண்டாளனாகவே உள்ளபோதிலும் அவனை அவமதிப்பவர்களை நான் பலகோடி கல்ப காலங்கள் ஆனாலும் பொறுத்துக் கொள்ளமாட்டேன் – என்பதன் மூலம் பாகவதர்களின் மேன்மை கூறப்பட்டது. ஸ்ரீமத்பாகவதத்தில் – ச்வபசோபி மஹீபால விஷ்ணுபக்தோ த்விஜாதிக: விஷ்ணுபக்தி விஹீநஸ்து யதிச்ச ச்வபசாதம: - அரசனே! விஷ்ணுபக்தி கொண்டவர்கள் நாய் இறைச்சி உண்பவன் என்றாலும், அவன் அந்தணன் ஒருவனைக் காட்டிலும் உயர்ந்தவன்; விஷ்ணுபக்தி அற்ற ஒருவன் உயர்ந்த பிறவியில் பிறந்த ஸந்ந்யாஸி என்றாலும் அவன் நாய் இறைச்சி உண்பவனைக் காட்டிலும் தாழ்ந்தவனே ஆவான் - என்று கூறப்பட்டது. மேலும் ஸ்ரீமத்பாகவதத்தில் - விப்ராத் த்விஷட்குணயுதாத் அரவிந்தநாப பாதாரவிந்த விமுகாச் ச்வபசம் வரிஷ்டம், மந்யே ததர்ப்பிதமநோ வசநே ஹிதார்த்த ப்ராண: புநாதி ஸகலம் நது பூரிமாந: - பத்மநாபன் திருவடிகள் மீது பக்தி இல்லாத ஒருவன் பன்னிரண்டு குணங்களுடன் கூடிய அந்தணன் என்றாலும், அவனைக் காட்டிலும் விஷ்ணுபக்தி கொண்ட நாய் இறைச்சி உண்ணும் சண்டாளன் உயர்ந்தவன் என்றே நான் எண்ணுகிறேன்; இப்படிப்பட்ட சண்டாளன் ஸர்வேச்வரனின் திருவடிகளில் தனது மனம், வாக்கு, சரீரம், ப்ராணன் பலவற்றுடன் உள்ளான் என்பதால் அவன் அனைத்தையும் தூய்மை ஆக்குகிறான்; அஹங்காரத்துடன் கூடிய அந்தணன் இவ்விதம் எதனையும் தூய்மைப்படுத்துவதில்லை - என்று பாகவதர்களின் மேன்மை குறித்து பல இடங்களிலும் உரைக்கப்பட்டது. லைங்க புராணத்தில் – வைஷ்ணவாநாம் விசேஷோஸ்தி விஷ்ணோராயதநம் மஹத் ஜங்கம ஸ்ரீ விமாநாநி ஹ்ருதயாதி மநீஷிணாம் - ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு ஒரு தனியான சிறப்பு உண்டு; அது என்னவென்றால் அவர்கள் விஷ்ணுவின் இருப்பிடமாக உள்ளனர்; அவர்களில் சிறந்த ஞானம் கொண்டவர்களின் மனம் என்பது நடமாடும் கோவில்கள் என்றே ஆகின்றன - எனப்பட்டது. மேலும் அதிலேயே – ய: பச்யதி சுபாசாரம் வைஷ்ணவம் வீதகல்மஷம், யஸ்மிந் கஸ்மிந் குடூலஜாதம் ப்ரணமேத் தண்டவத்புவி - சிறந்த ஒழுக்கம் கொண்டவன், எந்தவிதமான குற்றமும் அற்றவன் என்னுபடி உள்ள ஒரு ஸ்ரீவைஷ்ணவன் எந்தக் குலத்தில் பிறந்தவனாக உள்ளபோதிலும், அவனைக் காண்பவன் அவன் முன்பாக ஒரு தடி போன்று தரையில் விழுந்து வணக்கவேண்டும் - போன்ற பல வரிகளால் பாகவதர்களின் மேன்மை கூறப்பட்டது. இப்படியாக பாகவதர்களின் மேன்மை குறித்து பல புராணங்களில், பல இடங்களில் கூறப்பட்டுள்ளதால், அவற்றை அந்தந்த இடங்களில் காண்க. மேலே நாம் பார்த்த பலவிதமான இதிஹாஸ புராண ப்ரமாணங்களில் கீழே கூறப்பட்ட பல விஷேஷங்கள் உரைக்கப்பட்டதைக் காண்க: பாகவதர்களின் பிறவியைக் கருத்தில் கொண்டு அவர்களைத் தாழ்வாக நினைத்தால் ஏற்படும் தீமை பாகவதர்கள் என்று ஆனபோதே அவர்கள் தாழ்ந்தகுலம் அல்லர், அவர்கள் உயர்ந்த குலத்தினர்களுக்கு ஒத்தவர்கள் உயர்ந்த குலத்தில் பிறந்தவர்களைக் காட்டிலும் அவர்கள் உயர்ந்தவர்கள் என்பதால், உயர்ந்த குலத்தில் பிறந்தவர்களும் அவர்களிடம் உபதேசம் பெறுகின்றனர் என்பதால் ஆசார்யர்கள் போன்றும், அனைத்திற்கும் எஜமானனாகிய ஸர்வேச்வரன் போன்றும் வணங்கத்தக்கவர்கள் ஆவர் அவர்களிடம் செய்யப்படும் அபசாரம் என்பதை காலம் என்பது உள்ளவரை ஸர்வேச்வரன் பொறுத்துக் கொள்ளமாட்டான் மூன்று கரணங்களையும் (மனம், வாக்கு, சரீரம்), செல்வங்களையும், ப்ராணன் போன்ற அனைத்தையும் ஸர்வேச்வரனுக்குச் சமர்பாணம் செய்துவிட்டு, எந்தவிதமான அஹங்காரமும் இல்லாமல் உள்ள இவர்கள், தங்களுடைய தொடுதல் என்பதாலேயே அனைத்தையும் தூய்மைப்படுத்த வல்லவர் ஆவர் அவர்களது இதயம் என்பது ஸர்வேச்வரனுக்கு நடமாடும் கோயிலாகவே உள்ளது அவர்களைக் கண்டால் தடி போன்று தரையில் விழுந்து வணங்கவேண்டும் இப்படியாக இதிஹாஸம் மற்றும் புராணங்களில் கூறப்பட்டது. – நம்மாழ்வார் திருவாய்மொழியில் (3-7-1) – பாற்கடல் சேர்ந்த பரமனைப் பயிலுந் திருவுடையார் பயிலும் பிறப்பிடைதோ றெம்மையாளும் பரமர் – என்பது தொடக்கமாக ஸர்வேச்வரனின் திருக்கல்யாண குணங்கள் மற்றும் லீலைகள் ஆகியவற்றில் ஈடுபட்டவர்களான பாகவதர்களே தனக்கு எஜமானர்கள் என்பதை அருளிச் செய்கிறார். அப்போது (3-7-1) - யவரேலுமவர்கண்டீர் - என்றும், (3-7-8) – கும்பி நரகர்களேத்துவரேலு மவர் கண்டீர் – என்றும், (3-7-9) – எத்தனை நலந்தானிலாத சண்டாள சண்டாளர்களாகிலும் - என்றும் அருளிச்செய்தார். ஆக ”பயிலும் சுடரொளி” என்று திருவாய்மொழி மூலமாக, பிறவி போன்ற பலவற்றாலும் ஒருவன் எத்தனை தாழ்ந்தவன் என்றபோதிலும், தொண்டுகள் செய்வதற்குத் தடையாக வரக்கூடிய பிறவி– ஞானம்–ஒழுக்கம் என்பதால் ஏற்படக்கூடிய கர்வம் மற்றும் அஹங்காரம் அற்றவர்கள் அல்லவோ நமக்கு மிகவும் வேண்டியவர்கள் – என்றார். அடுத்து தனது திருவாய்மொழியில் (8-10-1) - கொடு மாவினையே னவனடியாரடியே கூடு மிதுவல்லால் வியன் மூவுலகு பெறினும் விடுமா றென்பதென் னந்தோ - என்பது தொடக்கமாக பாகவதர்களே, தான் சென்று அடையக்கூடியவர்களில் மிகவும் உயர்ந்தவர்கள் – என்பதை அருளிச்செய்தார். அந்தத் திருவாய்மொழியில் பிறவி, ஒழுக்கம் போன்றவற்றில் வேறுபாடுகள் காணமல் (8-10-2) - சயமே யடிமை தலைநின்றார் – என்றும், (8-10-7) - அவனடியார் - என்றும், (8-10-8) – மணிமலை போல் கிடந்தான் தமர்கள் - என்றும், (8-10-8) – கோதிலடியார் – என்றும், (8-10-10) - நீக்கமில்லாவடியார் - என்றும் அருளிச்செய்தார். ஆக “நெடுமாற்கடிமை” என்னும் திருவாய்மொழி மூலமாக - ஸர்வேச்வரனின் அழகு போன்ற தன்மைகளில் ஈடுபட்டு, தங்களை மறந்திருக்கும் நிலை என்பதே அவர்களுக்கு அடையாளம் – என்கிறார். அடுத்து திருமங்கையாழ்வார் பெரியதிருமொழியில் (7-4-1) – தண்சேறையெம்பெருமான் தாள் தொழுவார் காண்மினென் தலைமேலார் – என்று தொடங்கும் ஒன்பது பாசுரங்களில் கூறியதை இங்கு காண்பிக்கிறார். ஸர்வேச்வரனின் அர்ச்சாவதாரத் திருமேனியில் ஈடுபட்ட ஸ்ரீவைஷ்ணவர்களே எனது தலையின் மீது இருக்கத்தக்கவர்கள்; எப்போதும் த்யானிக்கத் தக்கவர்கள்; நித்யஸூரிகளைக் காட்டிலும் உயர்ந்த கைங்கர்யச் செல்வம் கொண்டவர்கள்; அவர்களை ஒரு நொடிப்பொழுது கூட என்னால் பிரிய இயலாது; அவர்களுக்காக எனது மனம் தேன் ஊறி எப்போதும் இனிமையாகவே இருக்கிறது; அவர்களைக் கண்டவுடன் எனது மனமும் கண்களும் இன்பம் அடைவதைப் பார்த்தீர்களா; என்னுடைய அன்பு என்பது அவர்கள் பக்கம் மட்டுமே நிற்கிறது; அவர்களை உள்ளத்தால் நினைத்தாலே போதுமானது, அதன் பின்னர் யமனைக் கண்டும் பாவங்களைக் கண்டும் அச்சம் கொள்ளவேண்டாம்; எனது இதயம் அவர்கள் விஷயத்தில் இப்படியாக ஈடுபட்டு நின்றதைப் பார்த்தீர்களா? - என்று அருளிச்செய்கிறார். ஆக பெரியதிருமொழி (4-7-1) – கண்சோர வெங்குருதியிலும் - என்பதில் பிறவி உள்ளிட்ட பலவற்றால் வேற்றுமை இல்லாத பாகவதர்களின் மேன்மை குறித்து அருளிச்செய்கிறார். அடுத்து பெரியதிருமொழி (2-6-2) - கடன்மல்லைத் தலசயன மாரெண்ணும் நெஞ்சுடையாரவரெம்மை யாள்வாரே - என்று எப்படிப்பட்ட பிறவிகளில் பிறந்துள்ளபோதிலும், அவர்கள் எப்படிப்பட்ட ஒழுக்கம் போன்றவற்றை உடையவராக இருந்தாலும், திருக்கடல்மல்லைத் தலசயனம் என்னும் திவ்யதேசத்தை எண்ணுவார்கள் என்றால், தாங்கள் உள்ள நிலை எதுவாக இருந்தாலும், எந்தவிதமான அடிமைத்தன ஓலை ஆதாரத்தையும் காண்பிக்க வேண்டிய அவசியம் இல்லாதபடி, நம்மை ஏவி, தங்களுடைய செயல்களை நிறைவேற்றிக் கொள்ளும் தகுதி படைத்தவர்கள் – என்று தொடங்குகிறார். மேலும் பெரியதிருமொழி (2-6-3) - ஞானத்தினொளியுருவை நினைவா ரென்னாயகர் – என்றும், (2-6-4) – அவரெங்கள் குலதெய்வமே – என்றும் கூறுவதன் மூலம் திவ்யதேசங்களின் மீது மிகுந்த அன்புடன் உள்ளவர்களே தமக்கு எஜமானர்கள் என்று உணர்த்தினார். இதனைப் பெரியதிருமொழி (2-6) – நண்ணாதவாளவுணர் – என்பதில் அருளிச்செய்தார். – அடுத்து ஸ்ரீகுலசேகராழ்வார் பெருமாள்திருவாழி (2-1) – மெய்யடியார்கள் தம் மீட்டங் கண்டிடக்கூடுமே லதுகாணும் கண்பயனாவது – என்றும், (2-2) - தொண்டரடிப்பொடியாட நாம் பேறில் கங்கை நீர் குடைந்தாடும் வேட்கை யென்னாவது – என்றும் அருளிச்செய்த பாசுரங்கள் மூலம் பாகவதர்களின் மீது தனக்கு இருந்த ப்ரேமையின் மிகுதியை உணர்த்தினார். அப்போது பிறவி போன்றவற்றின் ஏற்றத்தாழ்வு ஏதும் கூறாமல், ஸர்வேச்வரனிடம் கொண்ட பக்தியின் மூலம் பரவசப்பட்ட நிலையில் உள்ளதே அவர்களது அடையாளம் என்று (2-2) – தேட்டரும் திறல் தேனிலும் - என்பதில் அருளிச்செய்தார். அடுத்து ஸ்ரீதொண்டரடிப்பொடியாழ்வார் திருமாலை (38) – மேம்பொருள் - என்ற பாசுரத்தில் த்வயமந்த்ரத்தில் எப்போதும் ஈடுபட்டு உள்ளவர்கள் மீது ஸ்ரீரங்கநாதனுக்கு ஏற்படுகின்ற மகிழ்வை அருளிச்செய்தார். அந்தப் பாசுரத்தைத் தொடர்ந்து உள்ள ஆறு பாசுரங்களில் கீழே உள்ளவற்றை அருளிச்செய்கிறார்: எத்தனை தாழ்ந்த பிறவியில் பிறந்தவர்களாக உள்ளபோதிலும் அவர்கள் “மேம்பொருள்” என்ற பாசுரத்தில் கூறப்பட்ட ஞானத்தில் நிலையாக நின்றால், ஸர்வேச்வரன் எவ்விதம் துளசியைத் தனது தலையால் ஏற்கிறானோ அது போன்று இவர்களும் அவன் தனது தலையால் தாங்கும்படியான தகுதி கொண்டவர்கள் பிறவி மூலம் ஏற்பட்ட தாழ்வு மட்டும் அல்லாமல், ஒழுக்கம் காரணமாகவும் தாழ்வுடன் ஒருவர் இருக்கலாம். அவரும் மேலே கூறப்பட்ட ஞானத்தில் நிலை நின்றால் தீய வினைகளின் பயனை அடையமாட்டார். தங்களுக்கு பிறவி மற்றும் ஒழுக்கம் ஆகியவற்றால் எந்தவிதமான குறையும் இன்றி சிலர் இருக்கக்கூடும். அவர்கள் மேலே கூறப்பட்ட ஞானத்தை அடைந்தவர்கள் என்றால், தங்களுடன் கூடிய ஸம்ஸாரிகள், தாங்கள் உண்டு மீதம் வைத்துள்ள உணவை உட்கொண்டாலே தூய்மையாகும்படியான உயர்த்தியை உடையவர்கள் ஆவர். பிறவி மற்றும் ஒழுக்கம் ஆகியவற்றால் தாழ்ந்த ஒருவர் இந்த ஞானத்தில் நிலை நிற்கக்கூடும். அப்படிப்பட்டவர்கள், இத்தகைய ஞானம் இன்றி, பிறவி மற்றும் ஒழுக்கத்தால் உயர்ந்தவர்களால் ஸர்வேச்வரன் எவ்விதம் ஆராதிக்கப்படுவானோ அது போன்று ஆராதிக்கப்படும் தகுதி கொண்டவர்கள் ஆவர்; அவர்களிடமிருந்து அனைவரும் உபதேசம் பெறலாம். ஒரு சிலர் பிறவி மற்றும் ஒழுக்கம் ஆகியவற்றால் மேன்மை பெற்றதுடன், இத்தகைய ஞானத்திலும் நிலையாக நிற்கக்கூடும். அவர்கள் - பிறவி மற்றும் ஒழுக்கத்தால் சிறப்பின்றி, இந்த ஞானத்தை மட்டுமே கொண்டவர்களுக்கு, ஸர்வேச்வரனின் பெருமை காரணமாக ஏற்பட்ட அவர்களது சிறப்பை அறியாமல், அவர்களுக்குக் கர்மம் காரணமாக உண்டான தாழ்வை மட்டுமே எண்ணி, அவர்கள் தாழ்ந்தவர்கள் – என்று எண்ணக்கூடும். இவ்விதம் எண்ணியபோதே அவர்கள் சண்டாளர்கள் ஆகின்றனர். இவ்விதம் கூறப்பட்டவை அனைத்தும் நிச்சயமாக நடக்கும் என்பதை, நான்முகன் போன்றவர்களுக்குக் கூடக் கிட்டாத அரிய பேற்றை, விலங்காகப் பிறந்த கஜேந்திரன் அடைந்ததைக் கண்ட பின்னரும், தனியாகக் கூறவும் வேண்டுமோ – என்றார். ”விசதமாகக் காணலாம்” என்றால் எந்தவிதமான சந்தேகமும் இல்லாமல் காணலாம் என்று பொருள்.