Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 223)
மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்
அதாவது, ஆசார்யதுல்யரென்றும் ஸம்ஸாரிகளிலும் தன்னிலு மீச்வரனிலும் அதிகரென்றும் நினைக்கை.
இத்தை விவரிக்கிறார் (அதாவது) என்று தொடங்கி.
– கடந்த சூர்ணையில் கூறப்பட்டதை விவரிக்கிறார்.
(ஆசார்ய துல்யரென்று நினைக்கையாவது) “குருரேவ பரம்ப்ரஹ்ம” இத்யாதிப்படியே தனக்கு ஸர்வப்ரகாரோத்தேச்யனான ஆசார்யனோடு இவர்களை ஸமராக ப்ரதிபத்தி பண்ணுகை. (ஸம்ஸாரிகளிலதிகராக நினைக்கையாவது) - ஜாத்யாதிகளையிட்டு ஸம்ஸாரிகளோடு ஸமபுத்தி பண்ணாதே, ஜ்ஞாநாதிகளால் வந்த வ்யாவ்ருத்தியாலே தததிகரென்று ப்ரதிபத்தி பண்ணுகை. (தன்னிலதிகரென்று நினைக்கையாவது) ஸம்ஸாரிகளில் வ்யாவ்ருத்தி தனக்குமுண்டாகையாலே அத்தையிட்டுத் தன்னோடொக்க நினைத்திருக்கையன்றிக்கே, தனக்கு சேஷிகளான ஆகாரத்தாலே தன்னிலதிகரென்று ப்ரதிபத்தி பண்ணுகை. (ஈச்வரனிலதிகரென்று நினைக்கையாவது) – சேஷித்வத்தையிட்டு நமக்கவனு மிவர்களு மொக்குமென்றிராதே கர்மாநுகுணமாக லீலையிலும் விநியோகங் கொள்ளக்கடவனாய் ஸ்வசரணகமல ஸமாச்ரயண தசையில் புருஷகாரம் வேண்டும்படியாய் உகந்தருளின நிலங்களிலே ஸந்நிஹிதனாயிருக்கச் செய்தேயும் அர்ச்சாவதார ஸமாதியாலே வாய்திறந்தொரு வார்த்தை சொல்லக்கடவனுமன்றிக்கே யிருக்குமவனைப் போலன்றியே, ஸ்வரூபாநு குணமாகவே விநியோகங் கொள்ளுமவர்களாய், ஸ்வாச்ரயணத்தில் புருஷகார நிரபேக்ஷராய், வாய்திறந்து த்யாஜ்யோபாதேயங்களை யுபதேசித்து நோக்கிக் கொண்டு போருமவர்களாகையாலே தததிகரென்று ப்ரதிபத்தி பண்ணுகை.
“ஆசார்ய துல்யரென்று நினைக்கையாவது”: ஸ்ரீஸாத்வத தந்த்ரத்தில் – குருரேவ பரம்ப்ரஹ்ம - ஆசார்யனே பரம்பொருள் - என்று கூறுவதற்கு ஏற்ப அனைத்து வகையிலும் மிகவும் போற்றத்தக்க ஆசார்யனோடு இந்தப் பாகவதர்கள் ஒத்தவர்கள் என்று எண்ணுவதே கூறப்பட்டது. “ஸம்ஸாரிகளிலதிகராக நினைக்கையாவது”: அவர்களுடைய பிறவி போன்றவற்றை முன்னிட்டு அவர்களை ஸம்ஸாரிகளுடன் ஒத்தவர்கள் என்று எண்ணாமல், அவர்களுக்கு உள்ள ஞானம் போன்றவை காரணமாக ஸம்ஸாரிகளைக் காட்டிலும் உயர்ந்தவர்கள் என்று எண்ணுவதாகும். “தன்னிலதிகரென்று நினைக்கையாவது”: ஸம்ஸாரிகளைக் காட்டிலும் வேறுபாடு என்பது, சிறந்த உள்ள தனக்கும் ஏற்படுவதால், அதன் காரணமாக அவர்கள் தன்னுடன் ஒத்தவர்கள் என்று எண்ணாமல், தனக்கு சேஷியாக உள்ள தன்மையால் தன்னைக் காட்டிலும் உயர்ந்தவர்கள் என்று எண்ணுவதாகும். “ஈச்வரனிலதிகரென்று நினைக்கையாவது”: சேஷியாக உள்ள தன்மை காரணமாக ஸர்வேச்வரனும் இவர்களும் ஒத்தவர்கள் என்று எண்ணாமல் ஸர்வேச்வரனைக் காட்டிலும் உயர்ந்தவர்கள் என்று எண்ணவேண்டும். எப்படி? நம்முடைய முன்வினைப்பயன் காரணமாக இந்த லீலாவிபூதியில் நம்மை வைக்கக்கூடியவன், தனது திருவடித்தாமரைகளை ஒருவன் பற்றும்போது அதற்கு சிபாரிசு என்பதான புருஷகாரம் இருக்கவேண்டும் என்று எண்ணுபவன், தான் மிகவும் மகிழ்வுடன் எழுந்தருளியுள்ள திவ்யதேசங்களில் சேதநர்களுக்கு மிகவும் அருகாமையில் உள்ள போதிலும் அர்ச்சாவதாரத்தின் உறுதி காரணமாகத் திருவாய் மலர்ந்து யாரிடமும் ஏதும் பேசாதவன் என்பதான தன்மைகள் கொண்டவனாக ஸர்வேச்வரன் உள்ளான். ஆனால் இவர்கள் இது போன்று இல்லாமல் - தங்கள் ஸ்வரூபத்திற்கு ஏற்றபடி நம்மை ஏற்றுக் கொள்பவர்களாகவும், தங்களை அண்டும் விஷயத்திற்காக எந்த ஒரு புருஷகாரத்தையும் எதிர்பாராமல் உள்ளவர்களாகவும், தங்களது திருவாய் திறந்து நாம் கைக்கொள்ள வேண்டியவை எவை என்றும் கைவிடத்தக்கவை எவை என்றும் உபதேசம் செய்ய வல்லவர்களாகவும் இருந்து நம்மைக் காப்பாற்ற எண்ணுபவர்கள் என்பதால் இவர்கள் அவனைக் காட்டிலும் உயர்ந்தவர்கள் என்று கொள்ளவேண்டும்.