Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 221)
மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்
வேதகப்பொன் போலே யிவர்களோட்டை ஸம்பந்தம்.
ஏவம்பூதமான ஜந்மக்கொத்தை கழிந்து விலக்ஷணரோடே ஸம்பந்த முண்டாகவே யிவனும் விலக்ஷணனாய் விடுமோவென்ன வருளிச்செய்கிறார் (வேதகப்பொன்) என்று தொடங்கி.
– இப்படியாக இவனுக்குப் பிறவி காரணமாக ஏற்பட்ட தோஷம் நீங்கி, மேன்மையானவன் ஆகிவிடுவானோ என்ற கேள்விக்கு விடை அருளிச்செய்கிறார்.
வேதகமென்கிறவித்தை, வேதகமென்று த்ராவிடோக்தியாலே யருளிச் செய்கிறார். (வேதகப்பொன்னாவது) அநேக ஸித்தௌஷதங்களியிட்டுப் பலகாலுருக்கி குளிகையாகப் பண்ணி ரஸவாதிகள் கையிலிருக்கும் ஸ்பர்சவேதியான பொன். அது ஸ்பர்ச மாத்ரத்தாலே இரும்பைப் பொன்னாக்குமாப்போலேயாய்த்து, ஜந்மஸித்தமான நைச்யாதிகளையுடைய விலக்ஷணரான விவர்களோட்டை ஸம்பந்தம் நிக்ருஷ்ட ஜந்மத்தால் வந்த தோஷத்தைப் போக்கி இவனையும் விலக்ஷணனாக்கிவிடும்படி.
வேதகம் என்பதான வடமொழிச் சொல்லை வேதகம் என்று தமிழ்ப்படுத்தி அருளிச்செய்கிறார். வேதகப்பொன் என்பது என்ன? பலவிதமான சித்த மருந்துகளைச் சேர்த்து, பலமுறை உருக்கி, அதனைக் குளிகை போன்று ஆக்கி, ரஸவாதிகள் தங்கள் கைகளில் வைத்திருப்பதான தொட்டவுடன் இரும்பையும் தங்கமாக்கக் கூடிய பொன் என்பதே வேதகப்பொன் எனப்படும். அத்தகைய வேதகப்பொன் என்பது இரும்பைத் தொட்டவுடன் அதனைப் பொன்னாக்கும் தன்மை கொண்டது ஆகும். அப்படி இரும்பும் பொன்னாவது போன்று, பிறப்பிலேயே தங்களுடைய தாழ்வை அறிந்தவர்களாக மேன்மையுடன் விளங்கும் பாகவதர்களின் ஸம்பந்தம் என்பது, அந்தணப்பிறவியாக உள்ளபோதிலும் அஹங்காரம் போன்றவற்றால் தாழ்ந்த பிறவி என்றே கருதும்படியாக உள்ள பிறவியின் தோஷத்தை நீக்கி, அவனையும் மேன்மையானவன் என்னும்படி மாற்றிவிடும்.