Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 220)
மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்
ஜந்மத்துக்குக் கொத்தையும் அதுக்குப் பரிஹாரமும் “பழுதிலா வொழுகல்” என்கிற பாட்டிலே யருளிச்செய்தார்.
– ஜந்மத்துக்குக் கொத்தையேது? தத்பரிஹாரமேதென்னு மாகாங்க்ஷையிலே யருளிச்செய்கிறார் (ஜந்மத்துக்கு) என்று தொடங்கி.
பிறவிக்கு ஏற்படும் தோஷம் என்ன? அந்த தோஷம் நீங்குவதற்கான பரிகாரம் என்ன? இந்தக் கேள்விகளுக்கான விடையை அருளிச்செய்கிறார்.
– அதாவது, மயர்வற மதிநல மருளப்பெற்று தத்வவிதக்ரேஸரராய் ததீய சேஷத்வ ஸீமாபூமியான ஸ்ரீதொண்டரடிப்பொடியாழ்வார், “பழுதிலா வொழுகல்” இத்யாதியாலே, ப்ரஹ்மா தொடங்கி தங்களளவும் வர நெடுகப்போருகிற வம்ச ப்ரவாஹத்திலொரு தோஷமின்றிக்கேயிருக்குமவர்களாய் பலராயிருக்கிற சதுர்வேதிகாள்! இதில் கீழ்ப்பட்டதில்லையென்னும் நிஹீந குலத்திலே பிறந்தார்களேயாகிலும், என்னோடுண்டான வஸாதாரண ஸம்பந்தத்தையறிந்து அந்த ஜ்ஞாநாநுரூபமான ஸ்வாசாரத்தையுடையராகில், நீங்களவர்கள் காலிலே விழுந்து ஆராதியுங்கோள். அவர்களுங்கள் பக்கலிலே ஜ்ஞாநாபேக்ஷை பண்ணில் நீங்களாதரித்துச் சொல்லுங்கோள். அவர்கள் பகவத் ஜ்ஞாநத்தை யுங்களுக்கு ப்ரஸாதிக்கில், கேட்டு க்ருதார்த்தராகுங்கொள். எனக்கு மேல் பூஜ்யரில்லாமையாலே என்மாத்ரமாகிலு மவர்களை யாராதித்து நல்வழி போகுங்கொள் என்று இந்த பரமரஹஸ்யத்தை, “பத்தி ரஷ்டவிதாஹ் யேஷா யஸ்மிந் ம்லேச்சேபி வர்த்ததே, தஸ்மை தேயம் ததோ க்ராஹ்யம் ஸ ச பூஜ்யோ யதாஹ்யஹம்” என்று – பரமாப்தரான தேவரருளிச் செய்த பின்பு இதிலொரு ஸம்சயமுண்டோ? இப்படி யுபதேச மாத்ரமாய்ப் போகாதே கோயிலிலே வந்தருளி லோகஸாரங்கமஹாமுநிகள் தலையிலே திருப்பாணாழ்வாரை வைத்து இவ்வர்த்தத்தை வ்யாபித்துக் காட்டிற்றிலீரோவென்ன; இப்பாட்டிலே அபிஜநாத்யபிமாந ஜந்மக்கொத்தை அந்த துரபிமாநமில்லாத விலக்ஷணரான ததீயர்களளவில் பண்ணுமநுவர்த்தந விசேஷ மதுக்குப் பரிஹாரமென்று ஸுவ்யக்தமாக வருளிச்செய்தாரென்கை.
மயர்வற மதிநலம் அருளப்பெற்று, அனைத்துவிதமான தத்துவங்களையும் அவற்றின் தன்மைகளையும் உள்ளதுஉள்ளபடி அறிந்தவர்களின் தலைவராக உள்ளவரும், அடியார்களுக்கு அடிமையாக இருத்தல் என்ற தன்மையின் எல்லையாக உள்ளவரும் ஆகிய தொண்டரடிப்பொடியாழ்வார் திருமாலையில் (42) – பழுதிலாவொழுகல் – என்று அருளிச்செய்தமை காண்க. இந்தப் பாசுரத்தில் ஆழ்வார் உரைப்பது என்னவென்றால் – நான்முகன் தொடக்கமாக உங்கள் முடிய உள்ள நீண்ட வம்சப்பரம்பரையில் ஒருவிதமான தோஷமும் அற்றவர்களாகவும், பலராக உள்ளவர்களாகவும் இருக்கின்ற நான்கு வேதமும் கற்றவர்களே! இவர்கள் எடுத்துள்ள இந்தப் பிறவியைக் காட்டிலும் தாழ்ந்த பிறவி வேறு ஏதும் இல்லை என்று கூறும்படியான தாழ்ந்த பிறப்பு கொண்டவர்கள் என்றாலும், அவர்களுக்கு என்னுடன் (ஸர்வேச்வரன் தன்னைக் கூறிக் கொள்கிறான்) உள்ள தொடர்பை அறிந்துகொண்டு, அந்த ஞானத்திற்கு ஏற்றபடியான ஒழுக்கத்துடன் இருந்தார்கள் என்றால், நீங்கள் அவர்கள் கால்களில் விழுந்து வணங்குவீர்களாக. அவர்கள் உங்களிடம் இருந்து ஏதேனும் அறிந்து கொள்ளவேண்டும் என்று விருப்பினால், நீங்கள் அதனை ஆசையுடன் உரைப்பீகளாக. அவர்கள் ஸர்வேச்வரனாகிய என்னைப் பற்றிய ஞானத்தை உங்களுக்கு உபதேசம் செய்ய எண்ணினால், நீங்கள் அந்த உபதேசத்தைக் கேட்டுப் பயன் பெற்றவர்கள் ஆகுங்கள். என்னைக் காட்டிலும் ஆராதித்து வணங்கத்தக்க உயர்ந்தவர்கள் வேறு யாரும் இல்லை என்பதால், என் அளவிற்கு அவர்களை ஆராதித்து நல்லவழியைத் தேடுவீர்களாக – என்னும் உயர்ந்த இந்த ரஹஸ்யத்தைக் கருடபுராணம் – பத்தி ரஷ்டவிதாஹ் யேஷா யஸ்மிந் ம்லேச்சேபி வர்த்ததே, தஸ்மை தேயம் ததோ க்ராஹ்யம் ஸ ச பூஜ்யோ யதாஹ்யஹம் - எட்டுவிதமான பக்தியானது மிகவும் தாழ்ந்த குலத்தில் பிறந்த ஒருவனுக்கு உள்ளது என்றால், அவனுக்கு அனைத்து சாஸ்த்ரங்களையும் உபதேசம் செய்யலாம்; நான் எவ்விதம் வணங்கத் தக்கவனோ அதே போன்று அவனும் வணங்கத்தக்கவன் – என்றது; இதனையே நான் (தொண்டரடிப்பொடியாழ்வார் கூறிக்கொள்கிறார்) மிகவும் நம்புகின்றவர்களில் உயர்ந்தவனாகிய ஸ்ரீரங்கநாதனான நீயே அருளிச்செய்த பின்னர் இந்த விஷயத்தில் ஏதேனும் சந்தேகம் ஏற்படுமோ? இவ்விதம் உபதேசம் செய்தது மட்டும் அல்லாமல், திருவரங்கம் பெரியகோயிலில் வந்து எழுந்தருளி, லோகஸாரங்கமஹாமுநிகள் தலையில் திருப்பாணாழ்வாரை எழுந்தருளச்செய்து, இந்தக் கூற்றின் உண்மையைச் செயல் அளவில் நிகழ்த்தியும் காட்டினாய் அல்லவோ? - என்று அருளிச்செய்தார். இந்தப் பாசுரத்தில், “உயர்ந்த குலப்பிறவி போன்றவற்றால் ஏற்படும் அஹங்காரம் என்பதே தோஷம் ஆகும். அத்தகைய அஹங்காரம் இல்லாத மேன்மையான பாகவதர்களுக்குச் செய்யப்படும் கைங்கர்யம் என்பதே அதற்குப் பரிகாரம்”, என்பதைத் தெளிவாக அருளிச்செய்தார்.