Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 217)

மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்

“ச்வபசோபி மஹீபால”.

கடந்த சூர்ணையில் அருளிச்செய்ததற்கு ப்ரமாணம் காண்பிக்கிறார்.

இவ்வர்த்தத்துக்கு ப்ரமாணங் காட்டுகிறார் (ச்வபசோபி மஹீபால) என்று தொடங்கி.

– ”ச்வபசோபி மஹீபால விஷ்ணு பக்தோ த்விஜாதிக: விஷ்ணுபக்தி விஹீநஸ்து யதிச்ச ச்வபசாதம:” எத்தனையேனும் நிக்ருஷ்ட ஜந்மாவாயிருந்தா னேயாகிலும், பகவத் பக்தனானவன் த்விஜனிற்காட்டில் அதிகன்; உத்க்ருஷ்ட ஜந்மாவானவளவன்றிக்கே உத்தமாச்ரமியுமா யிருந்தானேயாகிலும், பகவத் பக்தி ஹீநனானவன் ச்வபசனிற் காட்டில் அதமனென்று, வர்ணாச்ரமங்களில் சரக்கறுத்து பகவத்ஸம்பந்தமே உத்கர்ஷ ஹேதுவாகச் சொல்லுகையாலே, ப்ரம்சஸம்பாவநாதி களாலே தத்ஸம்பந்த விரோதியான ஜந்மத்திற்காட்டில் ததநுரூபமான ஜந்மமே ச்ரேஷ்டமென்று கருத்து. இங்ஙனன்றாகில், கீழ்ச்சொன்ன வர்த்தத்துக்கு இது ப்ரமாணமாக மாட்டாதிறே.

ஸ்ரீமத்பாகவதம் – ச்வபசோபி மஹீபால விஷ்ணு பக்தோ த்விஜாதிக: விஷ்ணுபக்தி விஹீநஸ்து யதிச்ச ச்வபசாதம: - அரசே! மஹாவிஷ்ணுவிடம் பக்தி கொண்ட ஒருவன் நாய் இறைச்சி உண்பவன் என்றாலும், அவன் அந்தணனைக் காட்டிலும் சிறந்தவன்; மஹாவிஷ்ணுவிடம் பக்தி இல்லாத ஒருவன் அந்தண ஸந்யாஸியாக இருந்தாலும் மேலே கூறப்பட்டவனைக் காட்டிலும் தாழ்ந்தவன் – என்று கூறியது. அதாவது, ஒருவன் எத்தனை தாழ்வான பிறவியைக் கொண்டிருந்தாலும் அவன் ஸர்வேச்வரனிடம் பக்தி கொண்டவன் என்றால், இரண்டு பிறப்பு உடையவன் என்று கூறப்படும் அந்தணனைக் காட்டிலும் உயர்ந்தவன் ஆகிறான். உயர்ந்த பிறவி மட்டும் அல்லாமல், மிகவும் உயர்ந்த வர்ணாச்ரமமான ஸந்யாஸியாக ஒருவன் இருந்தபோதிலும், அவன் பகவத்பக்தி அற்றவனாக இருந்தால், அவன் நாய் இறைச்சி உண்பவனைக் காட்டிலும் தாழ்ந்தவன் ஆகிறான் – அதாவது வர்ணாச்ரமங்கள் என்னும் உயர்த்தியைக் காட்டிலும் பகவத்ஸம்பந்தமே மேலான உயர்த்தி பெறக் காரணம் எனப்பட்டது. தனக்கு ஏற்புடையதாக இல்லாத உபாயம் போன்றவற்றைக் கைக்கொண்டு, அதன் மூலம் தன்னுடைய நிலையில் இருந்து நழுவுகின்ற அபாயம் ஏற்படும்படியாகச் செய்து கொள்ளுதல் என்பது போன்றதான நிலை, பகவத்ஸம்பந்தத்திற்கு விரோதியாக உள்ள பிறவி என்றே ஆகிறது. இத்தகைய பிறவியைக் காட்டிலும் பகவத்ஸம்பத்தத்திற்குத் தகுதியான பிறவியே உயர்ந்தது என்று கருத்து. இப்படிக் கொள்ளவில்லை என்றால், கடந்த சூர்ணையில் கூறப்பட்ட கருத்துக்கு இது ப்ரமாணம் ஆகாது அல்லவோ?