Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 212)
மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்
உத்க்ருஷ்டமாக ப்ரமித்த ஜன்மம் ப்ரம்சஸம்பாவனையாலே “சரீரே ச” என்கிறபடியே பயஜநகம்.
அத்தை உபபாதிக்கிறார் (உத்க்ருஷ்டமாக) என்று தொடங்கி.
– கடந்த சூர்ணையில் “ஒத்தது ஆகாது” என்று கூறியதை மேலும் விளக்கும் பொருட்டு தொடங்குகிறார்.
ஆபிஜாத்யாதிகளாலே அஹங்கரித்து நசிக்கைக்குறுப்பாகையாலே அபக்ருஷ்டமாயிருக்கிறவித்தை உத்க்ருஷ்டமாக நினைத்து ப்ரச்நம் பண்ணிற்று அதஸ்மிந் தத்புத்தியாலே என்னுமிடந்தோற்ற (உத்க்ருஷ்டமாக ப்ரமித்த ஜந்மம்) என்கிறார். (ப்ரம்ச ஸம்பாவநையாவது) - உபாயாந்தரங்களி லந்வயத்தாலே அநந்யோபாயத்வமாகிற வதிகாரத்தினின்றும் நழுவுதல் வருகைக்கு யோக்யமாயிருக்கை. (சரீரேச என்கிறபடியே பய ஜநகம்) என்றது. “காலேஷ்வபிச ஸர்வேஷு” என்று தொடங்கி, உபாயாந்தராநுஷ்டாநத்துக்கு யோக்யங்களாகையாலே பயஹேதுக்களான வற்றைச் சொல்லிவருகிற வடைவிலே அவை யெல்லாவற்றிலும் ப்ரதாநமாக, “சரீரேச வர்த்ததே மே மஹத்பயம்” என்று சொல்லுகிறபடியே ஸ்வரூப யாதாத்ம்ய வித்துக்களாய் உபாயாந்தரகந்தாஸஹரா யிருக்கு மதிகாரிகளுக்கு இது இருக்கவிருக்க என்செய்யத் தேடுகிறதோ! என்னும் பயத்தை விளைக்குமதா யிருக்குமென்றபடி.
உயர்ந்த பிறவி போன்ற பலவற்றால் அஹங்காரம் கொண்டு, ஆத்மா ஸ்வரூபம் அழிவதற்குக் காரணமாக இந்தச் சரீரம் உள்ளது; ஆகவே தாழ்ந்ததாக உள்ள இந்தச் சரீரம், மிகவும் உயர்ந்தது என்று எண்ணி கேள்வி கேட்கப்பட்டது (சூர்ணை 210). உயர்வாக இல்லாத ஒன்றை உயர்ந்தது என்று எண்ணிய காரணத்தால் மட்டுமே இந்தக் கேள்வி கேட்கப்பட்டது என்பதை உணர்த்தும்விதமாக “உத்க்ருஷ்டமாக ப்ரமித்த ஜன்மம்” என்றார். ” ப்ரம்ச ஸம்பாவநை” என்பது என்ன? கர்மம், ஞானம், பக்தி போன்ற உபாயங்களில் ஈடுபடுவதன் காரணமாக, மற்ற உபாயங்களில் தொடர்பு கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்பதான தகுதி தனக்கு உள்ளதாக எண்ணி மயங்குகிறான்; இதற்குக் காரணமாக சரீரம் உள்ளது (அதாவது உயர்ந்த பிறவியில் பிறந்த ஒருவன், தனக்குத் தகுதி இல்லாத பல உபாயங்களைக் கைக்கொள்ள முயல்வான் என்று கருத்து) “சரீரேச என்கிறபடியே பய ஜநகம்” என்பதால் என்ன கூறப்படுகிறது? ஜிதந்தே ஸ்தோத்ரம் – காலேஷ்வபிச ஸர்வேஷு - அனைத்து காலங்களைப் பார்த்தாலும், புண்ணியமான இடங்களைப் பார்த்தாலும், எனது சரீரத்தைப் பார்த்தாலும் எனக்கு அச்சம் ஏற்படுகிறது - என்று தொடங்கி, மற்ற உபாயங்களைக் கைக்கொள்ளத் தகுதி உள்ளவை என்பதாலேயே ஒரு சில காரணங்களைக் காணும்போது பயம் ஏற்படுகிறது என்று கூறப்பட்டது; இவற்றுள் மிகவும் முக்கியமான காரணம் அல்லது முதன்மையான காரணம் என்று - சரீரேச வர்த்ததே மே மஹத்பயம் – சரீரத்தைக் காணும்போது எனக்கு மிகவும் அச்சம் ஏற்படுகிறது - என்று கூறப்பட்டது; இதன் மூலம் ஆத்மாவின் ஸ்வரூபம் எத்தகையது என்பதை உள்ளது உள்ளபடி அறிந்தவர்களாகவும், மற்ற உபாயங்கள் எதனையும் சற்றும் பொறுத்துக் கொள்ள இயலாமல் உள்ளவர்களாகவும் இருப்பவர்களுக்குக்கூட, “இந்தச் சரீரம் தொடரத்தொடர என்ன ஆகுமோ?”, என்று அச்சத்தை ஏற்படுத்துவதாக இந்தச் சரீரம் உள்ளது என்று கருத்து.