Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 210)

மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்

பகவத்ஸம்பந்த முண்டானா லிரண்டு மொக்குமோ என்னில்.

உத்க்ருஷ்டாபக்ருஷ்ட ஜந்மாக்களிருவர்க்கும் பகவத் ஸம்பந்தமுண்டானால் பாகவதத்வ ஸாம்யமன்றோ உள்ளது, அத்தோடே ஜந்மோத்கர்ஷ முடையவன் மற்றையவனைப்பற்ற விசிஷ்டனன்றோவென்று நினைத்துப் பண்ணுகிற ப்ரச்நத்தை யநுவதிக்கிறார்.

உயர்ந்த பிறவி, ஆசாரம் போன்றவற்றை உடையவன் மற்றும் அவற்றால் தாழ்ந்தவன் ஆகிய இருவருக்கும் பகவத் ஸம்பந்தம் ஏற்பட்டவுடன், அவர்கள் இருவருக்கும் பாகவதர்கள் என்ற ஒற்றுமை ஏற்படுகின்றது அல்லவோ? இவ்விதம் கொள்ளும்போது, பாகவதனாகவும் உள்ளான் மற்றும் பிறப்பிலும் உயர்ந்தவனாக உள்ளான் என்றுள்ள ஒருவனுக்கு, மற்றவனைக் காட்டிலும் சிறப்பு உள்ளது என்று அல்லவோ ஆகிறது? இப்படிப்பட்ட எண்ணம் காரணமாக உண்டாகும் கேள்வியைக் கூறுகிறார்.

(பகவத் ஸம்பந்தமுண்டானா லிரண்டுமொக்குமோ வென்னில்) என்று, (இரண்டும்) என்று உத்க்ருஷ்டாபக்ருஷ்ட ஜந்மங்களைச் சொல்லுகிறது.

”இரண்டும்“ என்பதன் மூலம் உயர்ந்த பிறவி மற்றும் தாழ்ந்த பிறவு ஆகிய இரண்டும் கூறப்பட்டது.