Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 208)
மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்
ஜன்ம வ்ருத்தங்களினுடைய உத்கர்ஷமும் அபகர்ஷமும் பேற்றுக்கு மிழவுக்கு மப்ரயோஜகம்.
– இப்படி உத்க்ருஷ்ட ஜந்மாதிக ளிழவுக் குறுப்பாமாகில் அபக்ருஷ்ட ஜந்மாதிகள்தான் பேற்றுக் குடலாமோவென்ன வருளிச்செய்கிறார் (ஜந்ம வ்ருத்தங்களினுடைய) என்று தொடங்கி.
இப்படியாக உயர்ந்த பிறவி போன்றவை ஸர்வேச்வரனை இழப்பதற்குக் காரணமாகின்றன என்றால், அவற்றால் தாழ்ந்த பிறவிகள் ஸர்வேச்வரனை அடைவதற்குக் காரணமாகுமோ என்ற கேள்விக்கு விடை அருளிச்செய்கிறார்.
அதாவது ஜந்ம வ்ருத்தங்களினுடைய உத்கர்ஷமும் பேற்றுக்கு மிழவுக்கும் ப்ரயோஜகமன்று, அவற்றினுடைய அபகர்ஷமு மிவையிரண்டுக்கும் ப்ரயோஜக மன்றென்கை. அன்றிக்கே, (இதில் ஜந்ம வ்ருத்தாதி நியமமில்லை) என்பது (இழவுக்குறுப்பாமாகில் த்யாஜ்யமாமிறே) என்பதாகா நின்றீர்; இங்ஙனே சொல்லலாமோ, வேதாத்யயாநதி முகத்தாலே பகவல்லாபஹேதுவாகையாலே ஜந்ம வ்ருத்தங்களினுடைய உத்கர்ஷம் பேற்றுக்குடலாகவும், அவற்றினுடைய வபகர்ஷம் அத்யயநாதிகளுக்கு அநர்ஹமாகையாலே இழவுக்குடலாகவும் கொள்ளவேண்டாவோ வென்ன வருளிச் செய்கிறார், (ஜந்ம வ்ருத்தங்களினுடைய) என்று தொடங்கி. அதாவது ஜந்ம வ்ருத்தங்களினுடைய உத்கர்ஷம் பேற்றுக்கு ப்ரயோஜகமன்று, அவற்றினுடைய அபகர்ஷமும் இழவுக்கு ப்ரயோஜன மன்றென்கை. பேறிழவுகளாவன - பகவல்லாப ததலாபங்கள். (ப்ரயோஜகமாவது) பலிப்பிக்குமது. உத்க்ருஷ்ட ஜந்ம வ்ருத்தங்களுடையவர்களில் சிலரிழப்பாரும் சிலர் பெறுவாருமாகக் காண்கையாலும், அபக்ருஷ்ட ஜந்ம வ்ருத்தங்களுடையவர்களிலு மப்படியே யிரண்டுவகையு முண்டாகக் காண்கையாலும் இவையிரண்டும் இரண்டுக்கும் ப்ரயோஜக மன்றென்னுமிடம் ப்ரத்யக்ஷ ஸித்தமிறே.
– (இந்தச் சூர்ணைக்கு இரண்டுவிதமான வ்யாக்யானங்களை அருளிச்செய்கிறார்). பிறப்பு, ஆசாரம் (நல்ல ஒழுக்கம்) போன்ற பலவற்றின் உயர்த்தி என்பது ஸர்வேச்வரனை அடைவதற்கும் காரணமாக இருப்பதில்லை, அவனை அடைவதற்குத் தடையாக இருந்து அவனை இழப்பதற்கும் காரணமாக இருப்பதில்லை. இதே போன்று, அவற்றின் தாழ்வு என்பதும் இந்த இரண்டு நிலைகளுக்கும் காரணமாக இருப்பதில்லை என்று கருத்து. – அல்லது, (அடுத்த பொருளை அருளிச்செய்கிறார்) வேறு பொருள் உரைப்போம். “இதில் ஜந்ம வ்ருத்தாதி நியமமில்லை” என்னும் 205வது சூர்ணையில் பாகவத அபசாரத்திற்குப் பிறப்பு மற்றும் ஆசாரம் ஆகியவற்றின் மூலம் உண்டாகும் ஏற்றத்தாழ்வுகள் காரணமாகாது என்றும், “இழவுக்கு” என்னும் 207வது சூர்ணையில் அந்தணத்தன்மை என்பது ஸர்வேச்வரனை இழப்பதற்குக் காரணமாக இருந்தால் கைவிடத்தக்கது என்றும் உரைத்தீர்கள்; இப்படிக் கூறலாமா? பிறவி மற்றும் ஆசாரம் ஆகிய இரண்டும் வேத அத்யயனம் செய்வதற்கான தகுதியை உண்டாக்குவதால், அவை ஸர்வேச்வரனை அடைவதற்கான காரணமாக உள்ளன, ஆகவே அவை பேற்றுக்கு ஆதாரமாக உள்ளன; அவற்றின் தாழ்வு என்பது வேத அத்யயனம் செய்வதற்கான தகுதியை இழக்கச்செய்வதால், அவற்றின் தாழ்வு என்பது ஸர்வேச்வரனை இழப்பதற்கும் காரணமாகின்றன என்று கொள்ளவேண்டாமோ? இந்தக் கேள்விக்கான சமாதானத்தை அருளிச்செய்கிறார். இதற்கன பதிலாக இந்தச் சூர்ணையை அருளிச்செய்கிறார் என்று கருத்து. பிறவி மற்றும் ஆசாரம் ஆகியவற்றின் உயர்வு என்பது ஸர்வேச்வரனை அடைவதற்கான காரணம் அல்ல, அவற்றின் தாழ்வு என்பது ஸர்வேச்வரனை இழப்பதற்கும் காரணம் அல்ல என்று பொருள். இங்கு பேறு என்பது அவனை அடைதல், இழவு என்பது அவனை அடைய இயலாமல் இழத்தல் என்பதாகும். ப்ரயோஜகம் என்றால் இப்படியாக உள்ள அடைதல் மற்றும் இழத்தல் ஆகியவற்றுக்குக் காரணமாக இருத்தல் என்பதாகும். உயர்ந்த பிறவி மற்றும் ஆசாரம் கொண்டவர்களில் சிலர் ஸர்வேச்வரனை அடைய இயலாமல் போவதையும், சிலர் அடைவதையும் காண்கிறோம்; இதே போன்று தாழ்ந்த பிறவி மற்றும் ஆசாரம் கொண்டவர்களில் சிலர் இப்படியாகவே இரண்டுவகையிலும் உள்ளதையும் காண்கிறோம். ஆகவே பிறவி மற்றும் ஆசாரம் என்பது ஸர்வேச்வரனை அடைவதற்கும், அடைய இயலாமல் போவதற்கும் காரணமாகாது என்பதைக் கண்கூடாகக் காணமுடிகிறது அல்லவோ?