Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 207)

மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்

ப்ராஹ்மண்யம் விலைச்சொல்லுகிறது வேதாத்யயநாதி முகத்தாலே பகவல்லாப ஹேது வென்று; அதுதானே யிழவுக்குறுப்பாகில் த்யாஜ்யமாமிறே.

– இப்படி ஜந்மாதிகளாவரு முத்கர்ஷத்தில் பசையில்லையென்று சொல்லலாமோ சாஸ்த்ரங்களெல்லாம் ப்ராஹ்மண்யத்தை அத்யாதரம்பண்ணிச் சொல்லா நிற்கச்செய்தே யென்ன வருளிச்செய்கிறார் மேல் (ப்ராஹ்மண்யம்) என்று தொடங்கி.

– அனைத்து சாஸ்த்ரங்களும் அந்தணத்தன்மை என்பதை மிகவும் உயர்ந்த ஒன்றாகவே உரைக்கின்றன. இப்படி உள்ளபோது பிறவி போன்றவற்றால் வருகின்ற மேன்மை என்பது முக்கியத்வம் வாய்ந்தது அல்ல என்று கூறலாமா என்னும் கேள்விக்கு விடை அருளிச்செய்கிறார்.

(விலை செல்லுகையாவது) விருப்பத்துக்கு விஷயமாய்ச் செல்லுகை. (வேதாத்யயநாதிமுகத்தாலே பகவல்லாப ஹேதுவாகையாவது) – “ஸர்வே வேதா யத்பத மாமநந்தி” என்றும், “வேதைச்ச ஸர்வை ரஹமேவ வேத்ய:” என்றும் சொல்லுகிறபடியே, ஆராதந ஸ்வரூபத்தையும் ஆராத்ய ஸ்வரூபத்தையும் பூர்வோத்தர பாகங்களாலே ப்ரதிபாதியா நின்றுகொண்டு, பகவதேகபரமாயிருக்கிற வேதத்தை, “ஸ்வாத்யாயோ உத்யேதவ்ய:” என்கிற விதிபரதந்த்ரனாய் அத்யயநம் பண்ணி, மீமாம்ஸாதிகளாலே ததர்த்த நிர்ணயம் செய்து, பகவதுபாஸநாதிகளிலே யிழிந்து பகவத் விஷயத்தைப் பெறுகைக்குறுப்பாகை. (அதுதானே யிழவுக் குறுப்பாகில்) என்றது - அந்த ப்ராஹ்மண்யந்தானே அஹங்கார ஹேதுவாய்க்கொண்டு, “மத்பக்தாந் ச்ரோத்ரியோ நிந்தந் ஸத்யச் சண்டாளதாம் வ்ரஜேத்” என்கிறபடியே, பகவதத்யந்த நிக்ரஹஹேதுவான பாகவதாபசரத்தைப்பண்ணி பகவத் விஷயத்துக்கு அசலாய்ப்போகைக் குறுப்பாகி லென்றபடி. (த்யாஜ்யமாமிறே) என்று ப்ரஸித்தி தோற்ற வருளிச்செய்தது - யாதொன்று பகவல்லாபத்துக் குறுப்பு அது உபாதேயம்; யாதொன்று ததலாபத்துக் குறுப்பு அது த்யாஜ்யமாய்த்த பின்பு, இதுவு மிழவுக் குறுப்பானபோதே அப்படியாகக் குறையில்லை என்கிற நிச்சயத்தாலே.

“விலைச்செல்லுகை” என்றால் விருப்பத்திற்கு ஏற்றதாக உள்ளது என்று பொருள். ”வேதாத்யயநாதிமுகத்தாலே பகவல்லாப ஹேதுவாகையாவது” என்பது என்ன? கட உபநிஷத் – ஸர்வே வேதா யத்பத மாமநந்தி - அனைத்து வேதங்களும் எந்தப் பரம்பொருள் குறித்து முழங்குகின்றனவோ – என்றும், கீதை (15-15) – வேதைச்ச ஸர்வை ரஹமேவ வேத்ய: - அனைத்து வேதங்களாலும் அறியப்படும் பரம்பொருளாக நானே உள்ளேன் - என்றும் கூறியபடி, வேதமானது பூர்வபாகத்தில் அனைத்து தேவதைகளின் அந்தர்யாமியாக ஸர்வேச்வரன் உள்ள தன்மையையும், உத்தரபாகத்தில் அத்தகைய ஸர்வேச்வரனின் தன்மை எத்தகையது என்றும் கூறுகிறது. இப்படியாக வேதங்கள் ஸர்வேச்வரனை மட்டுமே கூறுவதாக உள்ளன. அப்படிப்பட்ட வேதத்தை - ஸ்வாத்யாயோ உத்யேதவ்ய: - வேதம் அத்யயனம் செய்யத்தக்கது – என்ற விதிக்கு ஏற்றபடி அத்யயனம் செய்து, மீமாம்ஸை மூலம் ஸர்வேச்வரனை உபாஸித்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டு என்று பொருள். “அதுதானே யிழவுக் குறுப்பாகில்” என்பது என்ன? வேதங்களால் கொண்டாடப்படும் அந்தணத்தன்மை என்பது அஹங்காரத்திற்குக் காரணமாகி, மத்பக்தாந் ச்ரோத்ரியோ நிந்தந் ஸத்யச் சண்டாளதாம் வ்ரஜேத் – ஒருவன் வேத அத்யயனம் செய்தவன் என்றாலும் எனது அடியார்களை நிந்தித்தான் என்றால் அப்போதே சண்டாளன் ஆகிறான் – என்பதற்கு ஏற்ப ஸர்வேச்வரனின் சீற்றத்துக்குக் காரணமான பாகவத அபசாரத்தைச் செய்தவன் என்பதால், ஸர்வேச்வரனால் விலக்கப்படுவதற்குக் காரணமாக அமைந்துவிடுகிறது என்று கருத்து. “த்யாஜ்யமாமிறே” என்பது என்ன? அதாவது “த்யாஜ்யமாம்” என்று மிகவும் ப்ரஸித்தி பெற்ற கருத்து என்பது தோன்றும்படியாக அருளிச்செய்தது என்னவென்றால் – எது ஸர்வேச்வரனை அடைவதற்குக் காரணமாக உள்ளதோ அது ஏற்கப்படக்கூடியது; எது அவனை அடைவதற்குத் தடையாக உள்ளதோ அது தள்ளப்படத்தக்கது; அந்தணத்தன்மை என்பது ஸர்வேச்வரனை இழப்பதற்குக் காரணமாகிறது என்று நிலையில் அதனைக் கைவிடுவது சரியே – என்பதாகும்.