Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 206)
மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்
இவ்வர்த்தம் கைசிகவ்ருத்தாந்தந்திலும், உபரிசரவஸுவ்ருத்தாந்தத்திலும் காணலாம்.
– இவ்வர்த்தங் காணலாமிட முண்டோவென்ன வருளிச்செய்கிறார் (இவ்வர்த்தம்) என்று தொடங்கி.
– கடந்த சூர்ணையில் கூறப்பட்ட விஷயத்திற்கான உதாரணம் எங்காவது உண்டா என்ற கேள்விக்கு விடை அருளிச்செய்கிறார்.
– அதாவது, சரக குலோத்பவனான ஸோமசர்மாவாகிற ப்ராஹ்மணன், யாகத்தைச் செய்வதாக வுபக்ரமித்து யதாக்ரம மநுஷ்டியாமல் அது ஸமாபிப்பதுக்கு முன்னே மரிப்பதும் செய்கையாலே ப்ரஹ்மராக்ஷஸனாய்ப் பிறந்து திரியாநிற்க, “மத்பக்தம் ச்வபசம் வாபி” என்கிறபடியே – ஜந்மஸித்தமான நைச்யத்தை யுடையராய் பகவத் பக்தியே நிரூபகமாம்படி யிருப்பாரொரு பாகவதர், உத்தாந ஏகாதசியினன்று ராத்ரி ஸித்தாச்ரமமான திருக்குறுங்குடியிலே நம்பியைப் பாடிப் பறை கொள்வதாக வீணாபாணி யாய்க் கொண்டு போகாநிற்கச் செய்தே, அவரை பக்ஷிப்பதாக வந்தடர்க்க, அவர் மீண்டு வருகைக்குறுப்பான அனேக சபதங்களைப் பண்ணிக் கொடுத்து ததநுமதிகொண்டுபோய் யதாமநோரதம் ஸேவித்து ஹ்ருஷ்டராய், அந்த ப்ரஹ்மராக்ஷஸன் நிற்கிறவிடத்திலே மீளவும் விரைந்து வந்து, “யதேஷ்டம் இனியென் சரீரத்தை நீ புஜி” என்ன; அவன், அவருடைய ஸத்யவாதித்வாதி வைபவத்தைக் கண்டு, “நீ இன்று பாடின பாட்டின் பலத்தைத் தா, நானுன்னை ப்ராணனோடே போகவிடும்படி” என்ன; அவரதுக் கிசையாதொழிய; அர்த்தராத்ரத்தில் பலம், ஏகயாமத்தில் பலம் என்றாப்போலே சொல்லிக் கொண்டு வந்தவளவிலும், “நானது செய்வதில்லை, முன்பு நீ சொன்னபடியே என்னை பக்ஷிக்குமத்தனை” என்று ஒரு நிலைநின்றபடியாலே, “த்வம் வை கீதப்ரபாவேந நிஸ்தாரயிது மர்ஹஸி, ஏவமுக்த்வாத சண்டாளம் ராக்ஷஸச் சரணம் கத:” என்கிறபடியே – ”நீ யுன்னுடைய கீத ப்ரபாவத்தாலே என்னையிப் பாபத்தினின்றும் கரையேற்றவேணும்” என்று சரணம் புகுர; அந்த பாகவதர் “யந்மயா பச்சிமம் கீதம் ஸ்வரம் கைசிகமுத்தமம்”; இத்யாதிப்படியே – தாம் பின்பு பாடின கைசிகமாகிற பண்ணின் பலத்தைக் கொடுத்து, கர்மதோஷத்தால் வந்த ராக்ஷஸ வேஷத்தைக் கழித்து, முன்பு போலே ப்ராஹ்மணனாய் அதுக்குமேலே பாகவதனுமா யுஜ்ஜீவிக்கும்படி பண்ணினார் என்கிற கைசிக வ்ருத்தாந்தத்திலே – ஜந்மாதிகளா லுத்க்ருஷ்டரான பாகவதர்களோட்டை ஸம்பந்தமே யுஜ்ஜீவந ஹேதுவாவது, அவற்றா லபக்ருஷ்டரானவர்களோட்டை ஸம்பந்தமுஜ்ஜீவந ஹேதுவாகாது என்கிற நியமமில்லை யென்னுமது காணலாம். ருஷிகளும் தேவர்களும் தன்பக்கலிலே தர்மஸந்தேஹம் கேட்கும்படி வித்யாதிகனுமாய், ஸ்வவர்ணாநுரூப வ்ருத்தி மாத்ரமன்றிக்கே ஸாத்வததந்த்ர நிஷ்ணாதனாய், பகவதாராதந தத்பரனாய்க் கொண்டு போருகையாலே வந்த வ்ருத்தாதிகனுமாய், ஸ்வதபோ பலத்தாலே ஸவாஹந பரிவாரனாய்கொண்டு அந்தரிக்ஷ சரனாய்த் திரியும் உபரிசரவஸு என்கிற மஹாராஜாவானவன்; யாகார்த்தமான பசு நிமித்தமாக ருஷிகளும் தேவர்களும் தங்களில் விவாதம் பண்ணுகிறவளவிலே, “மார்க்காகதோ ந்ருபச்ரேஷ்டஸ் தம்தேசம் ப்ராப்தவாந் வஸு:, அந்தரிக்ஷ சரச் ஸ்ரீமாந் ஸமக்ரபலவாஹந: தம் த்ருஷ்ட்வா ஸஹஸாயாந்தம் வஸும் தேத்வந்தரிக்ஷகம், ஊசுர் த்விஜாதயோ தேவா ஏஷச்சேத்ஸ்யதி ஸம்சயம்” என்று ஆகாசத்திலே போகாநின்ற விவனைக் கண்டு, இவன் நம்முடைய ஸம்சயத்தை யறுக்க வல்லன் என்றறுதியிட்டு, இவனைச் சென்று கிட்டி, “செய்ய வடுப்பதேது” என்று கேட்க, அவன் ”உந்தாமுடைய மதங்களைச் செல்லுங்கோள்” என்ன, “தாந்யைர் யஷ்டவ்யமித்யேஷ பக்ஷோ ஸ்மாகம் நராதிப, தேவதாநாம் ஹி பசுபி: பக்ஷோ ராஜந் வதஸ்வந:” என்று – ”தாந்யங்களாலே யஜிக்கப்படுமென்று எங்களுக்கு பக்ஷம், பசுக்களாலே யஜிக்கவேணுமென்று தேவர்களுக்கு பக்ஷம், நாங்கள் செய்யுமதென்? சொல்” என்று ருஷிகள் கேட்க; “தேவாநாந்து மதம் ச்ருத்வா வஸுநா பக்ஷ ஸம்ச்ரயாத், சாகேநாஜேந யஷ்டவ்யமேவ முக்தம் வசஸ் ததா” என்கிறபடியே – அவன் தேவர்களளவில் பக்ஷபாதத்தால் ”சாகத்தாலே யஜிக்கவேணும்” என்ன; “குபிதாஸ் தே ததா ஸர்வே முநயஸ் ஸூர்யவர்ச்சஸ: ஊசுர்வஸும் விமாநஸ்த்தம் தேவ பக்ஷார்த்த வாதிநம், ஸுர பக்ஷோ க்ருஹீதஸ் தே யஸ்மாத் தஸ்மாத் திவ: பத, அத்யப்ரப்ருதி தே ராஜந் ஆகாசே விஹதா கதி, அஸ்மச்சாபாபிகாதேந மஹீம் பித்த்வா ப்ரவேக்ஷ்யஸி, விருத்தம் வேதஸூத்ராணாம் உக்தம் யதிபவேந் ந்ருப, வயம் விருத்த வசநா யதி ததா பதாமஹே” என்று – ருஷிகளெல்லாரும் குபிதராய், தேவ பக்ஷார்த்த வாதியாய் விமாநஸ்த்தனாயிருக்கிற விவனைப்பார்த்து, “நீ சொன்னது வேதஸூத்ரங்களுக்கு விருத்தமாகில், தேவ பக்ஷாபாதியாய் வார்த்தை சொன்ன நீ, த்யௌவில் நின்றும் அதர்பதியாய், இப்போது தொடங்கி யுன்னுடைய வாகாச கமநமும் மாறி பாதாளத்திலே விழக்கடவை, நாங்கள் தான் விருத்தவசநம் சொன்னோமாகில் அப்படியே பாதாளத்திலே விழக்கடவோம்” என்று சொல்லி சபிக்க; “ததஸ் தஸ்மிந் முஹூர்தேது ராஜோ பரிசரச் ததா அதோவை ஸம்பபூவாசு பூமேர் விவரகோ ந்ருப” என்கிறபடியே அப்போதே பாதாளத்திலே விழுந்தானென்கிற உபரிசரவஸு வ்ருத்தாந்தத்தில், ருஷிகளும் தர்மஸந்தேஹங்கள் தன்னைக் கேட்கும்படி வித்யாதிகளாலவர்களி லுத்க்ருஷ்டனானவன் அவர்கள் திறத்தி லபசாரத்தாலே யத:பதித்தமை காண்கையாலே, ஜந்மவ்ருத்தாதிகளா லுத்க்ருஷ்ட ரானவர்கள் அபக்ருஷ்டர் பண்ணுமபசாரமே யிழவுக் குடலாவது, அவற்றா லுத்க்ருஷ்ட ரானவர்கள் அபக்ருஷ்டர்திறத்தில் பண்ணுமபசார மிழவுக்குடலாகாதென்கிற நியமமில்லை யென்னுமது காணலாமென்கை. ஜந்மாதிக்யம் ருஷிகளுக்குண்டானாலும் ஜ்ஞாநாத்யாதிக்ய மிவனுக்குண்டாகையாலே அவர்களி லிவனுக்கேற்றம் சொல்லக் குறையில்லை. ஜன்மமும் ஜ்ஞாநாதிகளு மொருதலையானால் ஜ்ஞாநாதிகள் ப்ரபலங்களாயிறே யிருப்பது. கைசிகவ்ருத்தாந்தம் ஸ்ரீவராஹ புராணத்திலே ஸ்ரீபூமிப்பிராட்டிக்கு ஸ்ரீவராஹ நாயனாரருளிச் செய்ததாகையாலும், உபரிசரவஸு வ்ருத்தாந்தம் பஞ்சமவேதமான மஹாபாரதத்திலே மோக்ஷ தர்மத்திலே தர்மபுத்ரர்க்கு ஸ்ரீபீஷ்மராலே சொல்லப்பட்ட தாகையாலும் இவைதான் ஆப்த ப்ரமாண ஸித்தமிறே.
சரக கோத்திரத்தில் பிறந்த ஸோமசர்மா என்ற ஓர் அந்தணன் யாகம் ஒன்றை இயற்றத் தொடங்கினான். அந்த யாகத்தை இயற்றவேண்டிய முறைப்படிச் செய்யாமல், அந்த யாகம் முடிவதற்கு முன்பாக இறந்தும் போனான். எனவே அவன் மீண்டும் ப்ரஹ்ம ராக்ஷஸனாகப் பிறந்து எங்கும் திரிந்தபடி இருந்தான். மத்பக்தம் ச்வபசம் வாபி - என்னிடம் பக்தி கொண்ட ஒருவன் நாயின் மாமிசத்தை உண்ணுகின்ற தாழ்ந்தவனாக உள்ளபோதிலும் – என்கிற ப்ரமாணத்தின்படி மிகவும் தாழ்ந்த பிறவியுடன் கூடியவராகவும், பகவத்பக்தி என்பதன் மூலம் இவரை அறியலாம் என்று கூறப்படும்படி இருப்பவரும் ஆகிய பாகவதர் (இவரது பெயர் நம்பாடுவான் என்பதாகும். இனி இந்தப் பெயரையே நாம் பயன்படுத்துவோம்) ஒருவர் இருந்தார். அவர் ஓர் உத்தான ஏகாதசியில் (கார்த்திகை மாதம் சுக்லபக்ஷத்தில் வரும் ஏகாதசி) இரவுப்பொழுதில், வாமன அவதாரம் நிறைந்த இடமான திருக்குறுங்குடியில் எழுந்தருளியுள்ள நம்பி என்ற திருநாமம் கொண்ட ஸர்வேச்வரனைப் பாடி, தனது ஸ்வரூபத்தை விளங்க வைக்கும் பொருட்டு, வீணையைக் கையில் கொண்டபடி சென்றார். அப்படிச் செல்லும் பாதையில் அந்த ப்ரஹ்மராக்ஷஸன் அவரை உண்ணும் பொருட்டு வழியை மறித்தான். நம்பாடுவான் அதனிடம், தான் சென்று நம்பியைப் பாடிவிட்டு வரும்போது நிச்சயமாக உணவாக இருப்பேன் என்று பலவிதமான சபதங்களை அந்த ப்ரஹ்மராக்ஷஸனுக்குச் செய்த பின்னரே அவர் செல்ல அனுமதித்தது. அவரும் அனுமதியைப் பெற்று, தனது விருப்பத்தின்படி நம்பியைச் சென்று சேவித்து மகிழ்ந்தார். பின்னர் அந்தப் ப்ரஹ்மராக்ஷஸன் இருந்த இடத்திற்கு மீண்டும் விரைவாக வந்தார். அவனிடம், “யதேஷ்டம் – உனது விருப்பத்தின்படியே இனி நீ என்னை உணவாகக் கொள்ளலாம்”, என்றார். அந்த ப்ரஹ்மராக்ஷஸன் இவரது ஸத்யத்தின் உறுதியைக் கண்டு வியந்தான். தொடர்ந்து அவரிடம், “நீ இன்று பாடிய பாடலின் பலனை எனக்கு அளித்து விடு; உன்னை நான் உயிருடன் விட்டுவிடுகிறேன்”, என்றான். அவர் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. இதற்கு அவன், “முழு பலனையும் நீ அளிக்க வேண்டாம்; நடு இரவில் பாடிய பாடலின் பகுதிக்கு மட்டும் ஏற்படும் பலனை அளிப்பாய்; அல்லது கடைசி யாமத்தில் கிட்டிய பலனை மட்டுமே அளிப்பாய்”, என்று பலவிதமாக உரைத்தான். இதற்கு அவர், “நான் அவ்விதம் அளிக்கமாட்டேன். நீ முன்பு உரைத்தபடியே என்னை உண்பாயாக”, என்றார். இப்படியாக உறுதியுடன் நின்றார். இதனைக் கண்ட அவன் – த்வம் வை கீதப்ரபாவேந நிஸ்தாரயிது மர்ஹஸி, ஏவமுக்த்வாத சண்டாளம் ராக்ஷஸச் சரணம் கத: – உம்முடைய இசையின் மஹத்வம் காரணமாக என்னை இந்த ராக்ஷஸப் பிறவியில் இருந்து மேலே உயர்த்துவதற்கு நீரே ஏற்றவர் - என்று கைசிகமாஹாத்மயத்தில் உள்ளது போன்று, “நீவிர் உம்முடைய இசையின் ப்ரபாவம் காரணமாக என்னை இந்தப் பாவத்திலிருந்து கரையேற்றவேண்டும்”, என்று கூறிச் சரணம் அடைந்தான். உடனே அவர் - யந்மயா பச்சிமம் கீதம் ஸ்வரம் கைசிகமுத்தமம் - கைசிகம் என்ற பண் என்னால் கடைசி யாமத்தில் பாடப்பட்டது - என்று கைசிகமாஹாத்ம்யத்தில் உள்ளபடி, தான் பாடிய கைசிகம் என்ற பண்ணின் பலனை அவனுக்கு அளித்தார்; கர்மத்தின் தோஷம் காரணமாக ஏற்பட்டிருந்த ப்ரஹ்மராக்ஷஸப் பிறவியை நீக்கினார்; முன்பு போன்று அவன் அந்தணனாக, அதிலும் பாகவதனாக மாறிப் பிழைக்கும்படிச் செய்தார். இதனைக் கைசிகமாஹாத்மயத்தில் காணலாம். இதன் மூலம் உணரப்படுவது என்ன? பிறப்பு போன்ற பலவற்றால் உயர்ந்துள்ள பாகவதர்களின் ஸம்பந்தம் மட்டுமே உய்வதற்கான காரணத்தை ஏற்படுத்தும்; பிறப்பு போன்றவற்றால் தாழ்ந்த பாகவதர்களின் ஸம்பந்தம் உய்வதற்கான காரணம் ஆகாது என்பது போன்றதான எந்தவிதமான வேறுபாடும் இல்லை என்பதே ஆகும். – (அடுத்து மற்றொரு நிகழ்வு பற்றி அருளிச்செய்கிறார்). உபரிசரவஸு என்னும் ஓர் அரசன் இருந்தான். இவன் எப்படிப்பட்டவன் என்றால் - ரிஷிகளும் தேவர்களும் கூட தர்மங்கள் பற்றி தங்களுக்கு உள்ள சந்தேகங்களைத் தன்னிடம் கேட்டுத் தெளிவு அடையும்படியாகக் கல்வியில் மேம்பட்டவன்; தனது க்ஷத்ரிய வர்ணத்திற்கு ஏற்ற செயல்பாடுகளை மட்டுமே அறிந்திராமல், ஸாத்த்வதந்த்ரத்தில் நிபுணனாக இருந்தவன்; ஸர்வேச்வரனின் ஆராதனத்தில் எப்போதும் நிலைநிற்பவன், அதனால் சிறந்த ஒழுக்கம் நிறைந்தவன்; தனது தவத்தின் வலிமையால், தனது வாகனங்கள் அனைத்துடனும் ஆகாயத்தில் சஞ்சாரம் செய்கின்ற நிலையை அடைந்தவன் ஆவான். ஒரு சமயம் ரிஷிகளும் தேவர்களும் யாகத்தில் பயன்படுத்தப்படும் பசு பற்றி விவாதம் ஒன்றைச் செய்தபடி இருந்தனர். அப்போது - மார்க்காகதோ ந்ருபச்ரேஷ்டஸ் தம்தேசம் ப்ராப்தவாந் வஸு:, அந்தரிக்ஷ சரச் ஸ்ரீமாந் ஸமக்ரபலவாஹந: தம் த்ருஷ்ட்வா ஸஹஸாயாந்தம் வஸும் தேத்வந்தரிக்ஷகம், ஊசுர் த்விஜாதயோ தேவா ஏஷச்சேத்ஸ்யதி ஸம்சயம் - விரிந்த தனது படைகளுடனும் வாகனங்களுடனும் கூடியபடி ஆகாயத்தில் சஞ்சரிக்கின்றவனும், நிறைந்த செல்வங்கள் கொண்டவனும், அனைத்து அரசர்களுக்குத் தலைவனும் ஆகிய உபரிசரவஸு என்னும் அரசன் விவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்த அந்த இடத்திற்கு வந்தான்; ஆகாயத்தில் உள்ளவனும், மிகவும் விரைவாகச் சென்றபடி உள்ளவனும் ஆகிய அவனைக் கண்ட ரிஷிகளும் தேவர்களும், “இவன் நமது சந்தேகத்தைத் தீர்ப்பான்” - என்று கூறுவதற்கு ஏற்ப, ஆகாயத்தில் சென்று கொண்டிருந்த அவனைக் கண்டு, அவன் நமது சந்தேகத்தைத் நீக்கவல்லவன் என்று முடிவு செய்து, அவனிடம் சென்றனர். அவனிடம், “நாங்கள் என்ன செய்யவேண்டும்?”, என்றனர். இதற்கு அவன், “உங்களது இரண்டு பிரிவுகளின் வாதங்கள் என்ன என்பதை முதலில் கூறுங்கள்”, என்றான். இதற்கு அவர்கள் – தாந்யைர் யஷ்டவ்யமித்யேஷ பக்ஷோ ஸ்மாகம் நராதிப, தேவதாநாம் ஹி பசுபி: பக்ஷோ ராஜந் வதஸ்வந: - தானியங்களால் உண்டாக்கப்படும் அரைத்த மாவு கொண்டு யாகம் செய்யவேண்டும் என்பது ரிஷிகளான எங்கள் வாதம்; பசுவைக் கொண்டு யாகம் செய்யவேண்டும் என்பது தேவர்களின் வாதம்; அரசனே! நீயே சரியான முடிவை உரைக்கவேண்டும் - என்று கூறுவதற்கு ஏற்ப, “தானியங்கள் மூலம் யாகம் இயற்றப்படவேண்டும் என்பது எங்கள் முடிவு; பசுக்களால் இயற்றப்படவேண்டும் என்பது தேவர்கள் முடிவு; நாங்கள் என்ன செய்யவேண்டும் என்பதை உரைப்பாயாக”, என்றனர். இதற்கு – தேவாநாந்து மதம் ச்ருத்வா வஸுநா பக்ஷ ஸம்ச்ரயாத், சாகேநாஜேந யஷ்டவ்யமேவ முக்தம் வசஸ் ததா - தேவர்கள் முடிவைக் கேட்டு, அந்த முடிவை ஏற்றுக்கொண்டு வெள்ளாடு ஒன்றை வைத்து யாகம் இயற்றப்படவேண்டும் என்பது அவனால் உரைக்கப்பட்டது - என்றபடி முடிவு உரைத்தான். அதாவது, தேவர்கள் மீது அவன் காண்பித்த பாரபக்ஷமான எண்ணம் காரணமாக, “வெள்ளாடு ஒன்றைக் கொண்டு யாகம் இயற்றவேண்டும்”, என்றான். இதனைக் கேட்ட முனிவர்கள் – குபிதாஸ் தே ததா ஸர்வே முநயஸ் ஸூர்யவர்ச்சஸ: ஊசுர்வஸும் விமாநஸ்த்தம் தேவ பக்ஷார்த்த வாதிநம், ஸுர பக்ஷோ க்ருஹீதஸ் தே யஸ்மாத் தஸ்மாத் திவ: பத, அத்யப்ரப்ருதி தே ராஜந் ஆகாசே விஹதா கதி, அஸ்மச்சாபாபிகாதேந மஹீம் பித்த்வா ப்ரவேக்ஷ்யஸி, விருத்தம் வேதஸூத்ராணாம் உக்தம் யதிபவேந் ந்ருப, வயம் விருத்த வசநா யதி ததா பதாமஹே - அனைவரும் மிகவும் கோபம் கொண்டனர்; சூரியன் போன்ற ஒளியைக் கொண்ட அவர்கள் விமானத்தில் அமர்ந்தவனும், தேவர்கள் பக்கம் பாரபக்ஷமாக தீர்ப்புக் கூறியவனும் ஆகிய அந்த அரசனைப் பார்த்து உரைத்தனர்; எந்த ஒரு காரணத்தினால் உன்னால் தேவர்களின் வாதம் ஏற்கப்பட்டதோ அதே காரணத்தினால் நீ ஆகாயத்திலிருந்து பூமியில் விழுவாய்; ஆகாயத்தில் ஸஞ்சாரம் செய்தல் உனக்கு இன்று முதல் இயலாமல் போவதாக; வேதங்களுக்கு முரணாக நீ பேசியது இருந்தது என்றால் எங்கள் சாபம் காரணமா, நீ பூமியைப் பிளந்து விழுவாயாக; நாங்கள் வேதங்களுக்கு முரணாகப் பேசியிருந்தோம் என்றால் அப்படியே நாங்கள் விழுவோமாக – என்றனர். அதாவது இவன் கூறியதைக் கேட்ட முனிவர்கள் மிகவும் கோபம் கொண்டு, தேவர்களின் பக்கமாக முடிவு உரைத்தவனும் விமானத்தில் உள்ளவனும் ஆகிய அவனிடம், “நீ உரைத்த முடிவு என்பது வேதவாக்கியங்களுக்கு முரண்பட்டதாக உள்ளது என்றால் தேவர்கள் பக்கம் சாதமாக உள்ளபடி உரைத்த நீ ஆகாயத்தில் இருந்து கீழே விழுவாய்; இப்போதிலிருந்து ஆகாயத்தில் சஞ்சாரம் செய்வது உனக்குக் கூடாமல், பாதாள லோகத்தில் விழுவாயாக. மாறாக நாங்கள் கூறும் கொள்கை வேதங்களுக்கு முரணாக உள்ளது என்றால், நாங்கள் அது போன்று பாதாளத்தில் விழுக்கடவோம்”, என்று சபித்தனர். அப்போது – ததஸ் தஸ்மிந் முஹூர்தேது ராஜோ பரிசரச் ததா அதோவை ஸம்பபூவாசு பூமேர் விவரகோ ந்ருப - அவ்விதம் சபிக்கப்பட்ட அந்த நொடியிலேயே உபரிசிரவஸு என்ற அந்த அரசன் தலைகீழாகப் பூமியின் பாதாள லோகத்தில் விழுந்தான் – என்றது காண்க. அதாவது, அந்த நேரத்திலேயே பாதாளத்தில் விழுந்தான். இந்தச் சரிதத்தில், ரிஷிகளும் தேவர்களும் கூட தன்னிடம் தர்மம் குறித்த சந்தேகங்கள் கேட்கும்படியாக, கல்வி உள்ளிட்ட பலவற்றிலும் அவர்களைக் காட்டிலும் மேன்மையாக உபரிசரவஸு இருந்தான். ஆனால் ரிஷிகளிடம் அபசாரம் ஏற்பட்ட காரணத்தினால் பாதாளத்தில் விழுந்த நிலையைக் காண்க. ஆக பிறவி, ஒழுக்கம் போன்றவற்றால் உயர்ந்தவர்கள் விஷயத்தில், அவர்களைக் காட்டிலும் தாழ்ந்தவர்கள் அபசாரம் செய்தால் மட்டுமே அந்தத் தாழ்ந்தவர்கள் அழிந்து போவார்கள்; பிறவி மற்றும் ஒழுக்கம் ஆகியவற்றால் தாழ்ந்த பாகவதர்கள் விஷயத்தில் அவர்களைக் காட்டிலும் பிறவி உள்ளிட்ட அனைத்தாலும் உயர்ந்தவர்கள் அபசாரம் செய்தால் அவர்கள் அழிவிற்கு அது ஏதுவாகாது - என்னும் விதிமுறை ஏதும் இல்லை. பிறப்பு என்பதால் ரிஷிகளுக்கு உயர்வு உண்டு என்றபோதிலும், ஞானம் மூலம் உபரிசரவஸுக்கு உயர்வு உண்டு என்பதால், அவர்களைக் காட்டிலும் இவனுக்கு மேன்மை உண்டு என்று கூறுவதில் எந்தவிதமான தவறும் இல்லை. பிறவி, ஞானம் போன்ற பலவும் ஒருவரிடம் ஒன்றாக அமைந்தாலும், ஞானம் என்பது மட்டுமே மேன்மையான ஒன்றாகக் கருதப்படும். – மேலே உள்ள கைசிக நிகழ்வு என்பது ஸ்ரீவராஹ புராணத்தில் ஸ்ரீவராஹப்பெருமான் ஸ்ரீபூமிப்பிராட்டிக்கு அருளிச்செய்த ஒன்று என்பதாலும், உபரிசிரவஸு பற்றிய நிகழ்வு என்பது ஐந்தாவது வேதமான மஹாபாரதத்தின் மோக்ஷதர்மத்தில் தர்மபுத்திரருக்கு பீஷ்மரால் உரைக்கப்பட்டது என்பதாலும் - இந்த இரண்டும் நன்மையை உபதேசிக்க எண்ணுபவர்களால் கூறப்பட்ட ப்ரமாணம் என்பது உறுதியாகிறது.