Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 205)

மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்

இதில் ஜன்ம வ்ருத்தாதி நியமமில்லை.

இதில் ஜந்மவ்ருத்தாதி நியமமுண்டோ வென்னுமாகாங்க்ஷையிலே யருளிச் செய்கிறார் (இதில்) என்று தொடங்கி.

– பகவத்பேறு என்பதை அடைவதில் பாகவத ஸம்பந்தம் மட்டுமே போதுமானது, பகவத் ஸம்பந்தம் இழத்தல் என்பதில் பாகவத அபசாரம் மட்டுமே போதுமானது என்ற நிலையில் - பிறப்பு, ஒழுக்கம் ஆகியவற்றால் ஏதும் பேதம் உள்ளதா என்ற கேள்விக்கு விடை அருளிச் செய்கிறார்.

(இதில்) என்றது “பேற்றுக்கு பாகவத ஸம்பந்தமே யமையும். இழவுக்கு அவர்கள் பக்கலபசாரமே போரும்” என்று சொன்ன விவையிரயிரண்டிலுமென்றபடி. (ஜந்ம வ்ருத்தாதி நியமமில்லை) என்றது, ஜந்ம வ்ருத்தாதிகளாலுத்க்ருஷ்டரான பாகவதர்களோடுண்டான ஸம்பந்தமே பேற்றுக்கு ஹேதுவாவது, அவற்றால் அபக்ருஷ்டரானவர்களோட்டை ஸம்பந்தம் பேற்றுக்கு ஹேதுவாகாது என்கிற நியமமும் ஜந்மவ்ருத்தாதிகளா லுத்க்ருஷ்டரானவர்கள் திறத்தில் பண்ணூமபசாரமே யிழவுக் குடலாவது; அவற்றாலபக்ருஷ்டரானவர்கள் திறத்தில் பண்ணும் அபசாரம் அப்படி யிழவுக் குடலாகாதென்கிற நியமமில்லை யென்றபடி.

“இதில்” என்பது என்ன? பாகவத ஸம்பந்தமே பகவத் பேற்றுக்குப் போதுமானது, அவர்களிடம் ஏற்படும் அபசாரம் என்பது மட்டுமே பகவத் ஸம்பந்தம் இழப்பதற்குப் போதுமானது என்பதைக் குறிப்பதாக “இதில்” என்ற பதம் உள்ளது. அதாவது “இந்த இரண்டிலும்” என்று பொருள். “ஜந்ம வ்ருத்தாதி நியமமில்லை” என்பது என்ன? பிறப்பு மற்றும் ஒழுக்கம் ஆகியவற்றால் உயர்ந்தவர்கலாக உள்ள பாகவதர்களின் தொடர்பு மட்டுமே பகவத்பேற்றுக்குக் காரணமாகும்; இவற்றால் தாழ்ந்த பாகவதர்களின் தொடர்பு அத்தகைய பேற்றுக்குக் காரணமாகாது என்ற விதி இல்லை. இதே போன்று, பிறப்பு மற்றும் ஒழுக்கம் ஆகியவற்றால் உயர்ந்த பாகவதர்களிடம் செய்யும் அபசாரம் மட்டுமே பகவத் ஸம்பந்தத்தை இழக்கும்படிச் செய்யும்; அவற்றில் தாழ்ந்த பாகவதர்களின் விஷயத்தில் செய்யும் அபசாரம் என்பது பகவத் ஸம்பந்தத்தை இழக்கும்படிச் செய்யாது என்ற விதியும் இல்லை.