Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 204)

மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்

ஜ்ஞாநாநுஷ்டாநங்களை யொழிந்தாலும் பேற்றுக்கு அவர்கள்பக்கல் ஸம்பந்தமே யமைகிறாப்போலே அவையுண்டானாலு மிழவுக் கவர்கள் பக்கல் அபசாரமே போரும்.

பகவல்லாப ஹேதுவான ஜ்ஞாநாநுஷ்டாநங்களிரண்டும் பரிபூர்ணமாக வுடையா னொருவனுக்கு பாகவதாபசாரமுண்டாய்த்ததாகிலும், பகவான் அதுக்கு லகுவானதொரு தண்டங்களைப் பண்ணிக் கூட்டிக் கொண்டுவிடானோ, அவையிரண்டு மஸத்ஸமமாய் அபசாரமே ப்ரபலமாய் எம்பெருமானை யிழந்தே போய்விடு மென்னலாமோவென்ன வருளிச்செய்கிறார் (ஜ்ஞாநாநுஷ்டாநங்கள்) என்று தொடங்கி.

ஸர்வேச்வரனை அடைவதற்குக் காரணமாக உள்ள ஞானம் மற்றும் அநுஷ்டானம் ஆகியவற்றை ஒருவன் பெற்றிருக்கக்கூடும். அப்படிப்பட்ட ஒருவன் பாகவத அபசாரம் அடைந்தான் என்றால், அத்தகைய அபசாரத்திற்குப் பலனாக ஒரு சிறிய அளவு தண்டனையை மட்டுமே அளித்துவிட்டு ஸர்வேச்வரன் அவனைத் தன் பக்கம் மீண்டும் சேர்க்கமாட்டானோ? இதனை விடுத்து, அவன் அடைந்த பாகவத அபசாரம் என்பதே முதன்மையானது என்னும் நிலை ஏற்பட்டு, ஞானம் மற்றும் அநுஷ்டானம் ஆகிய இரண்டும் அவனிடம் இல்லை என்ற நிலைக்கு ஒப்பாக ஸர்வேச்வரனை அவன் இழந்துவிடுகிறான் என்பது சரியா என்ற சந்தேகம் ஏற்படலாம். இதற்கான விடையை அருச்செய்கிறார்.

– அதாவது “உபாப்யாமேவ பக்ஷாப்யா மாகாசே பக்ஷிணாம் கதி:, ததைவ ஜ்ஞாந கர்மப்யாம் ப்ராப்யதே பகவாந் ஹரி:” என்றும், “வீசுஞ் சிறகால் பறத்தீர் விண்ணொடு நுங்கட்கெளிது” என்றும் சொல்லுகிறபடியே - பகவல்லாப ஹேதுவான தத்வஜ்ஞாநமும் ததநுரூபாநுஷ்டாநமு மின்றிக்கே யொழிந்தாலும்; பகவல்லாபத்துக்கு, “பசுர் மநுஷ்ய: பக்ஷீவா யேச வைஷ்ணவ ஸம்ச்ரயா:, தேநைவதே ப்ரயாஸ்யந்தி தத்விஷ்ணோ: பரமம்பதம்” என்றும், “யம் யம் ஸ்ப்ருசதி பாணிப்யாம் யம்யம் பச்யதி சக்ஷுஷா, ஸ்தாவராண்யபி முச்யந்தே கிம் புநர் பாந்தவா ஜநா:” என்றும் சொல்லுகிறபடியே - பாகவத ஸம்பந்தமே நிரபேக்ஷ ஸாதநமாகிறாப்போலே, அந்த ஜ்ஞாநாநுஷ்டாநங்களிரண்டும் குறைவற வுண்டாய்த்தாகிலும் பகவத் விஷயத்தை யிழந்துபோகைக்கு பகவதபிமதரான அந்த பாகவத விஷயத்தில் பண்ணுமபசாரமே நிரபேக்ஷ ஸாதநமாகப் போருமென்றபடி.

கீழே உள்ள இரண்டு ப்ரமாணங்களின்படி, ஸர்வேச்வரனை அடைவதற்குக் காரணமாக உள்ள தத்வஞானம், அந்த ஞானத்தை அடைவதற்குத் தகுதியான ஒழுக்கம் ஆகிய இரண்டும் ஒருவருக்கு இல்லை என்றாலும்: உபாப்யாமேவ பக்ஷாப்யா மாகாசே பக்ஷிணாம் கதி:, ததைவ ஜ்ஞாந கர்மப்யாம் ப்ராப்யதே பகவாந் ஹரி: - பறவைகளின் இரண்டு சிறகுகள் மூலம் எவ்விதம் அவற்றுக்கு வானில் பறக்கவல்ல நிலை ஏற்படுகிறதோ அது போன்று ஞானம் மற்றும் அநுஷ்டானம் மூலம் பகவான் ஸ்ரீஹரி அடையப்படுகிறான். திருவிருத்தம் (54) – வீசுஞ் சிறகால் பறத்தீர் விண்ணொடு நுங்கட்கெளிது. அதாவது, மேலே உள்ள வரிகளின்படி ஞானம் மற்றும் அனுஷ்டானம் ஆகிய இரண்டும் ஒருவனுக்கு இல்லை என்றபோதிலும், கீழே உள்ள வரிகளின்படி ஸர்வேச்வரனை அடையும் பேற்றுக்கு, பாகவதர்களின் தொடர்பு என்பது மட்டுமே போதுமானது; வேறு எந்தவிதமான சாதனமும் அவசியம் இல்லை என்றாகிறது: பசுர் மநுஷ்ய: பக்ஷீவா யேச வைஷ்ணவ ஸம்ச்ரயா:, தேநைவதே ப்ரயாஸ்யந்தி தத்விஷ்ணோ: பரமம்பதம் - விலங்குகள், மனிதர்கள், பறவைகள் ஆகிய எதுவாக இருந்தாலும், அவை ஒரு ஸ்ரீவைஷ்ணவனைச் சார்ந்திருந்தால் போதுமானது; அந்த ஸ்ரீவைஷ்ணவனின் ஸம்பந்தம் காரணமாகவே அவை மஹாவிஷ்ணுவின் பரமபதத்தை அடைகின்றன. பராசரஸ்ம்ருதி – யம் யம் ஸ்ப்ருசதி பாணிப்யாம் யம்யம் பச்யதி சக்ஷுஷா, ஸ்தாவராண்யபி முச்யந்தே கிம் புநர் பாந்தவா ஜநா: – ஒரு பாகவதன் எவற்றைத் தனது கரங்களால் தொடுகிறானோ, எவற்றைத் தனது கண்களால் பார்க்கிறானோ அவை நிலையான பொருள்கள் என்றாலும், மோக்ஷம் அடைகின்றன; இப்படி உள்ளபோது அவனது உறவினர்கள் மோக்ஷம் பெறுவர் என்று கூறவும் வேண்டுமோ? அதாவது, ஞானம் மற்றும் அனுஷ்டானம் ஆகிய இரண்டும் ஒருவனுக்கு எந்தவிதமான குறைவும் இன்றி நிரம்ப உண்டாகலாம். ஆனால் அவன் பகவானின் ப்ரீதிக்கு ஏற்றவர்களாக உள்ள பாகவதர்கள் விஷயத்தில் செய்யும் அபசாரம் என்பது ” பகவானின் ஸம்பந்தத்தை இழக்கும் நிலை” என்பது உருவாக மற்ற ஏதும் தேவையில்லை என்னும்படியான சாதனம் ஆகிவிடுகிறது என்று கருத்து.