Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 203)
மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்
இவ்விடத்திலே வைநதேய வ்ருத்தாந்தத்தையும் பிள்ளைப் பிள்ளையாழ்வானுக்கு ஆழ்வான் பணித்த வார்த்தையையும் ஸ்மரிப்பது.
– இவ்வர்த்த விஷயமாக இரண்டு ஐதிஹ்யத்தை ஸ்மரிப்பிக்கிறார் (இவ்விடத்திலே) என்று தொடங்கி.
கடந்த சூர்ணையில் கூறப்பட்ட விஷயம் குறித்து முன்பு ஏற்பட்ட இரண்டு நிகழ்ச்சிகளை நினைவு கூர்கிறார்.
(வைநதேய வ்ருத்தாந்தமாவது) – விச்வாமித்ரன் பக்கலிலே வித்யைகளெல்லாமதிகரித்த காலவனென்கிற ப்ராஹ்மணன், குருதக்ஷிணை கொடுத்தாலொழிய நமக்கு இவ்வித்யைகள் நிலைநில்லாது என்று பார்த்து, “நானிங்குத்தைக்கு தக்ஷிணையாகத் தரத்தக்கதேது” என்று கேட்க; ”நீ நமக்கொன்றும் செய்யவேண்டா, நாமுன்னுடைய சுச்ரூஷையாலும் பக்தியாலும் மிகவும் ப்ரீதரானோம், இனியுன்னுடைய இஷ்டத்திலே போயிரு” என்று பலகாலும் சொன்னவளவிலும், இவனதுசெய்யாதே, ஸர்வதா, என்பக்கலே தக்ஷிணை வாங்கிக்கொள்ளவேணும் என்று அதிநிர்பந்தம் பண்ணுகையாலே, “கிஞ்சிதாகத ஸம்ரம்போ விச்வாமித்ரோப்ரவீதிதம் ஏகதச்ச்யாம கர்ணாநாம் சதாந்யஷ்டௌது தேஹி மே; ஹயாநாம் சந்த்ர சுப்ராணம் கச்ச காலவ மாசிரம்” என்று - அவன் குபிதனாய், இவனைப் பார்த்து, “உடம்பெங்கும் சந்த்ரமண்டலம் போலே வெளுத்து ஒரு செவி பச்சையாயிருக்கும் எண்ணூறு குதிரை நமக்குக் கொண்டு வந்து தா” என்ன; இத்தைக் கேட்டு மஹா வ்யாகுலனாய், இதுக்கினிச் செய்வதென்? என்று பஹுமுகமாக விசாரித்து, ஸர்வாபேக்ஷித ப்ரதனான ஸர்வேச்வரனை யுபாஸிப்போம் என்று உத்யோகிக்கிறவளவிலே, முன்பே யிவனுக்கு ஸகாவாயிருக்கிற பெரியதிருவடிநாயனார் இவனுக்கு வந்து முன்னிற்க; அவரை ஸ்தோத்ரம் பண்ணி, இதுக்குச் செய்ய வடுப்பதென்? என்று கேட்க; அவர், உன்னை நானிப்பூமி எங்கும் கொண்டு போகிறேன், இருவருங்கூட ஆராய்வோம் வா என்று, இவனை இடுக்கிக் கொண்டு திரிகிறவளவிலே, இளைப்பானவாறே, இங்கே யிளைப்பாறிப் போகக்கடவோம் என்று, மேல் ஸமுத்ரத்திலே ருஷபம் என்கிற பர்வதத்தின் மேலே வஸியா நிற்பாளாய் ஜ்ஞாநாதிகையா யிருக்கிற சாண்டிலி என்கிற பாகவதையைச் சென்று கண்டு அபிவாதநாதிகள் பண்ண; அவள் அத்யாதரத்தோடே மிகவும் ஸத்கரிக்க; அநந்தரம், விச்ராந்தராய் சயிக்கிறவளவிளே; இப்படி விலக்ஷணையா யிருக்கிற இவள் ஒரு விலக்ஷண தேசங்களிலே வஸிக்கப்பெற்றதில்லையே என்று பெரிய திருவடிநாயனார் விசாரித்து, இவளையிங்குநின்றும் நாமொரு திவ்யதேசங்களிலே கொண்டு போய் வைக்கக்கடவோம் என்று நினைத்துக்கொண்டு கிடக்கச்செய்தே; அந்த பாகவதையிருந்த தேசத்தைக் குறைய நினைத்த இவ்வபசாரத்திலே சிறகுகளுமுதிர்ந்து நிச்சேஷ்டராய்விட; இத்தைக்கூடப்போன ப்ராஹ்மணன் கண்டு, “கிந்நு தே மநஸா த்யாத மசுபம் பததாம்வர நஹ்யயம் பவதஸ் ஸ்வல்போ வ்யபிசாரோ பவிஷ்யதி” என்று ஏதேனுமும்முடைய திருவுள்ளத்தாலே தீங்கு நினைத்ததுண்டோ, தேவரீருக்கு அல்பமும் வ்யபிசாரம் வருகைக்கு யோக்யதையில்லையே என்ன; உண்டாய்த்துக்காண் என்று, தாமந்த பாகவதை விஷயத்தில் நினைத்த ப்ரகாரத்தை யவனுக்கருளிச்செய்து; அநந்தரம் இத்தைப் பொறுக்கவேணும் என்று அவளைச் சென்றநுவர்த்தித்து, அவளநுக்ரஹத்தாலே அவ்வபசாரம் நீங்கி முன்பு போலேயானாரென்கிறது. இதுதான், க்ருஷ்ணன் ஸ்ரீதூதெழுந்தருளினபோது நாரதாதி மஹரிஷிகள் பலரும் வந்திருக்கிறவளவிலே க்ருஷ்ணன் திருவுள்ளக் கருத்தைப் பின்செல்லுகைக்குறுப்பாக த்ருதராஷ்ட்ரனைக் குறித்துப் பல கதைகளும் சொல்லி வருகிற ப்ரகரணத்திலே, ஸ்ரீநாரதபகவான நுக்ரஹித்ததாக உத்யோகபர்வத்திலே உக்தமாகையாலே, வேதாந்தோ பப்ருஹ்மண ஸித்தமிறே. – (பிள்ளைப்பிள்ளையாழ்வானுக் காழ்வான் பணித்த வார்த்தையானது) – பிள்ளைப்பிள்ளையாழ்வானை யங்கீகரித்துநாளிலே, இவர் ஆபிஜாத்யாதிகளாலே யுத்க்ருஷ்டராகையாலே பாகவத விஷயங்களில் அவிநயமாக வர்த்தித்துக்கொண்டு போகிறபடியைக் கண்டு, “இவர்க்கு இப்பாகவதாபசாரம் இவருடைய ஜ்ஞாநாநு ஷ்ட்டாநங்களெல்லாவற்றையும் கீழ்ப்படுத்தித் தானே மேலாய் விநாச பர்யந்தமாக்கி விடும்; அதுக்கு வேலியிட்டு வைக்கவேணுமென்று திருவுள்ளம் பற்றி, ஓரயநத்தினன்று நீராடியேறினவளவிலே, இவரைப் பார்த்து, எல்லாரும் தாநம் பண்ணுகிற காலத்திலே நீரும் நமக்கொரு தாநம் பண்ணமாட்டீரோ? என்ன; அடியேனெத்தை தாநம் பண்ணுவது, எல்லாமங்குத்தையதாயிருந்ததே! என்ன; அர்த்தஸ்திதியன்றோவது, அவ்வளவு போராது”, கரணத்ரயத்தாலும் பாகவதாபசாரம் பண்ணாமல் வர்த்திக்கக்கடவன்” என்று நங்கையிலே உதகம் பண்ணித்தரவேணும் என்ன; அப்படியேயிவரும் உதகம் பண்ணிக் கொடுத்த வநந்தரம், ஒரு பாகவத தோஷத்தை பூர்வவாஸநையாலே நினைத்து, “நாமினிமுடிந்தோம்” என்று பயப்பட்டு மூடிக்கொண்டு தன் திருமாளிகையிலே கண்வளர; இவர் முன்பு வருகிற காலத்தில் வரக்காணாமையாலே, ஆழ்வானிவர் திருமாளிகையிலே எழுந்தருளி, “ஏன்தான், முசிப்பென்” என்று வினவியருள; தாம் மநஸ்ஸால் நினைத்தத்தை விண்ணப்பஞ்செய்து, கரண த்ரயத்தாலுமபசாரம் புகுராதபடி யித்தேஹத்தோடு வர்த்திக்கை யரிதா யிராநின்றது, என்செய்யக்கடவேன் என்று திருவடிளைக் கட்டிக் கொண்டு கிடந்து க்லேசிக்க; இத்தனை யநுதாபமிவர்க் குண்டாகப் பெற்றோமே! என்றுகந்தருளி, மநஸ்ஸாலே நினைத்ததுக்கு அநுதாபமுண்டாகவே ஈச்வரன் க்ஷமித்தருளும், ப்ரத்யக்ஷ தண்ட பயத்தாலே காயிகமாகவொருவரையும் நலியக்கூடாது, ஆன பின்பு அவையிரண்டு முமக்குக் கழித்துத் தந்தோம், இனி வாக்கொன்றையும் நன்றாகக் குறிக்கொண்டு வர்த்தித்துப் போரும் – என்றருளிச்செய்தது.
முதலில் கருடன் பற்றிய நிகழ்ச்சி ஒன்றை அருளிச்செய்கிறார். விச்வாமித்திரரிடம் காலவன் என்னும் ஓர் அந்தணன் அனைத்து வித்யைகளையும் கற்றுத் தேர்ந்தான். அதன் பின்னர் தனது மனதில், “இவருக்கு ஏற்ற குருதக்ஷிணை அளிக்காமல் நம்மிடம் கல்வி நிலையாக இருக்காது”, என்று எண்ணினான். ஆகவே அவரிடம், “நான் உம்மிடம் கற்ற கல்விக்கு ஏற்றபடி எந்தவிதமான தக்ஷிணை அளிக்கவேண்டும்?”, என்றான். இதனைக் கேட்ட விச்வாமித்திரர் அவனிடம், “நீ நமக்கு ஏதும் அளிக்க வேண்டாம். நீ நம்மிடம் செய்த பணிவிடைகள் மற்றும் நம்மிடம் கொண்ட பக்தி ஆகிய இரண்டிலுமே மிகவும் மகிழ்ச்சி அடைந்தோம். ஆக இங்கிருந்து புறப்பட்டுச் சென்று உனது விருப்பத்தின்படி வாழ்வாயாக”, என்று கூறினார். அவனும் இதனை ஏற்காமல் மீண்டும்மீண்டும் விண்ணப்பம் செய்ய, அவரும் பலமுறை இப்படியே உரைத்தார். இதனால் அவர் சற்றே கோபம் அடைந்தார். கிஞ்சிதாகத ஸம்ரம்போ விச்வாமித்ரோப்ரவீதிதம் ஏகதச்ச்யாம கர்ணாநாம் சதாந்யஷ்டௌது தேஹி மே; ஹயாநாம் சந்த்ர சுப்ராணம் கச்ச காலவ மாசிரம் - கோபம் கொண்ட விச்வாமித்ரர் இவ்விதமாக உரைத்தார்: ஒரு காது பச்சை நிறத்துடன், சந்த்ரன் போன்று வெளுத்த சரீரத்துடன் கூடியதான எண்ணூறு குதிரைகளை காலவனே, நீ எனக்கு அளிப்பாயாக, விரைவாகக் கொண்டு வா - என்ற வரியில் கூறியதற்கு ஏற்ப மிகவும் கோபத்துடன் காலவனை நோக்கி, “உடல் முழுவதும் சந்த்ரன் போன்று வெளுத்தும், ஒரு காது மட்டும் பச்சையாக உள்ளபடி இருக்கின்ற எண்ணூறு குதிரைகளை எனக்குக் கொண்டு வந்து தருவாயாக”, என்றார். இதனைக் கேட்டு கலக்கம் அடைந்த அவன், “இப்போது என்ன செய்வது?”, என்று பலவிதமாக ஆராய்ந்தான். அதன் பின்னர், “அனைத்து விருப்பங்களையும் அளிப்பவனாக உள்ள ஸர்வேச்வரனை உபாசித்து நிற்போம்” என்று முடிவு செய்து, அது போன்று செய்யத் தொடங்கிய உடனேயே, இவனுக்கு எப்போதும் துணையாக உள்ள கருடன் இவன் முன்பாக வந்து நின்றார். கருடனிடம் நடந்தவற்றைக் கூறி வணங்கி நின்றான். கருடன் இவனிடம், “உன்னை நான் இந்தப் பூமி முழுவதும் கொண்டு செல்கிறேன், இருவருமாகச் சேர்ந்து ஆராய்வோம், வருவாயாக”, என்று இவனைத் தன் மீது அமரவைத்தபடி பல இடங்களிலும் அலைந்தார். அப்போது களைப்பு அடைந்த அவர் சற்றே ஓய்வு எடுக்க எண்ணி, “அதோ, அங்கு சென்று சற்று ஓய்வு எடுத்துச் செல்வோம்”, என்றார். மேலே ஸமுத்திரத்தில் உள்ள ருஷபம் என்ற மலை மீது வசித்து வரும் மிகுந்த ஞானம் கொண்ட சாண்டிலீ என்னும் பாகவதை உள்ள இடத்திற்குச் சென்றனர். அவளை வணங்கி நின்றனர். அவளும் இவர்களுக்கு மிகவும் விருப்பத்துடன் உணவு அளித்து உபகாரம் செய்தாள். அதன் பின்னர் சற்று ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கும்போது கருடன் தனது மனதில், “இந்த அளவிற்கு ஞானமும் பக்தியும் கொண்ட இந்தப் பெண் ஒரு உயர்ந்த திவ்யதேசத்தில் வசிக்காமல் உள்ளாளே! இவளை நாம் இங்கிருந்து கொண்டு சென்று, ஒரு திவ்யதேசத்தில் வசிக்கும்படிச் செய்வோம்”, என்று நினைத்துக் கொண்டே உறங்கிவிட்டார். அந்தப் பாகவதை வாழ்ந்து வரும் இடத்தைத் தாழ்வாக எண்ணிய அந்த நொடியிலேயே அபசாரம் செய்தவராக, கருடனின் அனைத்து சிறகுகளும் உதிர்ந்தன. இதனை கண்ட காலவன் - கிந்நு தே மநஸா த்யாத மசுபம் பததாம்வர நஹ்யயம் பவதஸ் ஸ்வல்போ வ்யபிசாரோ பவிஷ்யதி - கருடனே! உனது மனதில் என்ன குற்றத்தை நீ செய்தாய்? இப்படிப்பட்ட அபசாரம் உனக்கு உண்டாக ஏதும் வழி கிடையாதே - என்றான். அதாவது, “உனது மனதில் ஏதேனும் தீமை நினைத்தாயோ? உனக்குச் சிறிய அபசாரம் வந்து சேர்வதற்குக் கூட வாய்ப்பு இல்லையே”, என்றான். இதனைக் கேட்ட கருடன் அவனிடம், “அபசாரம் ஏற்பட்டுவிட்டது” என்று கூறி, தான் அந்த பாகவதை விஷயத்தில் நினைத்தது பற்றி உரைத்தார். அதன் பின்னர் அந்தப் பாகவதையிடம், “எனது அபசாரத்தைப் பொறுத்துக் கொள்ளவேண்டும்”, என்று வேண்டி நின்றார். அவளது கருணையால் தனது அபசாரம் நீங்கப் பெற்று முன்பு போல மாறினார். மேலே கூறப்பட்ட நிகழ்வு பற்றி நாரதர் மஹாபாரதம் உத்யோக பர்வத்தில் அருளிச்செய்தார். அதாவது க்ருஷ்ணன் தூது சென்ற நேரத்தில் நாரதர் முதலான பல முனிவர்களும் அங்கு கூடியபோது க்ருஷ்ணனின் திருவுள்ளத்தைப் பின் செல்லுகைக்கு ஏற்றபடி த்ருதராஷ்ட்ரன் குறித்துப் பல கதைகள் கூறப்பட்டபோது இதுவும் அடக்கம். ஆகவே இது இதிஹாசத்திலே உள்ளதாகிறது. – அடுத்து, பிள்ளைப்பிள்ளையாழ்வான் விஷயத்தில் ஸ்வாமி கூரத்தாழ்வான் உபதேசித்தது பற்றி அருளிச்செய்கிறார். கூரத்தாழ்வான் தன்னுடைய சிஷ்யனாக பிள்ளைப்பிள்ளையாழ்வானை ஏற்றுக் கொண்டார். அப்போது தனது குலப்பிறப்பு போன்ற பலவற்றாலும் பிள்ளைப்பிள்ளையாழ்வான் உயர்ந்தவர் என்பதால் அவர் எந்த ஒரு பாகவதரிடத்திலும் பணிவு காண்பிக்காதபடி உள்ளதைக் கண்ட கூரத்தாழ்வான் தனது மனதில், “இவருக்கு ஏற்படும் இந்த பாகவத அபசாரம் என்பது இவரது ஞானம் மற்றும் அநுஷ்டானங்களைப் பின்னே தள்ளிவிட்டு, உயர்ந்த கேட்டினையும் ஏற்படுத்திவிடுமே”, என்று எண்ணினார். ஒருநாள் தக்ஷிணாயன காலத்தில் நீராடி வந்தபோது அவரிடம் கூரத்தாழ்வான், “அனைவரும் தானம் செய்கிறார்களே! நீரும் நமக்கு ஒரு தானம் செய்யமாட்டீரோ?”, என்றார். இதனைக் கேட்ட பிள்ளைப் பிள்ளையாழ்வான், “அடியேன் எதனைத் தானம் செய்வது?”, என்றார். இதற்கு ஆழ்வான், “பொருளின் நிலை அப்படி உள்ளது. நீவிர் பொருள் தானம் ஏதும் செய்யவேண்டாம். மனம், உடல், வாக்கு ஆகிய மூன்றாலும் இனி எப்போதும் பாகவத அபசாரம் செய்யாமல் வாழ்வேன் என்று நம்முடைய கைகளில் தண்ணீர் வார்த்து வாக்களிக்கவேண்டும்”, என்றார். இவரும் அப்படியே தண்ணீர் வார்த்து வாக்களித்தார். அதன் பின்னர் ஒருநாள் தனது மனதளவில் பாகவத அபசாரம் செய்துவிட்டு அதற்காக வருந்தி, “நாம் இனி முடிந்து விட்டோம்”, என்று எண்ணி, தனது வீட்டிலேயே உறங்கிவிட்டார். நெடுநேரம் ஆகிய பின்பும் அவர் வராத காரணத்தினால் இவரது வீட்டிற்கு இவரைத் தேடி, கூரத்தாழ்வான் வந்துவிட்டார். அவரிடம் ஆழ்வான், “ஏன் இப்படி உள்ளீர்?”, என்று வினவ, அவரும் தான் மனதால் செய்த பாகவத அபசாரம் குறித்து உரைத்து, “மூன்று கரணங்களாலும் அபசாரம் செய்யாதபடி இந்தச் சரீரத்துடன் வாழ்வது மிகவும் கடினமாகவே உள்ளது. என்ன செய்வது?”, என்றார். ஆழ்வானின் திருவடிகளைப் பிடித்துக் கொண்டு கதறினார். இதனைக் கண்ட ஆழ்வான், “இவருக்கு இத்தனை அனுதாபம் உண்டாகும்படி உயர்ந்துள்ளாரே!”, என்று வியந்தார். அவரிடம், “மனதால் எண்ணிய பாகவத அபசாரத்திற்கு நீவிர் உமது மனதால் இத்தனை வருந்துவது போதுமானது; இதனால் இதனை ஈச்வரன் பொறுத்துக்கொள்வான். கண்கூடாகத் தண்டனை கிடைக்கும் என்ற காரணத்தினால் நீவிர் உமது சரீரத்தைக் கொண்டு யாரையும் துன்புறுத்த மாட்டீர். இவை இரண்டையும் நாம் நீக்கினோம். இனி உமது நாக்கு ஒன்றை மட்டுமே கவனமாகப் பார்த்துக் கொண்டு இருப்பீராக (அதாவது மனம், சரீரம் ஆகிய இரண்டாலும் ஏற்படும் அபசாரங்கள் போக்கப்பட்டன. எஞ்சியுள்ளது வாக்கின் மூலம் உண்டாகக்கூடியது மட்டுமே)”, என்று அருளிச்செய்தார்.