Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 202)
மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்
”தமர்களில் தலைவராய சாதியந்தணர்களேலும்” என்கையாலே.
இது தனக்கு ப்ரமாணமுண்டோ வென்னு மாகாங்க்ஷையிலே அருளிச் செய்கிறார் (தமர்களில்) என்று தொடங்கி.
– இது போன்ற பாகுபாடு இல்லை என்பதற்கான ப்ரமாணம் ஏதேனும் உண்டா என்று கேள்விக்கு விடை அருளிச்செய்கிறார்.
அதாவது ஸாங்கமாக ஸகல வேதங்களையும் அத்யயநம் பண்ணி ததீய ச்ரேஷ்ட்டருமாய் உத்க்ருஷ்ட ஜந்மாக்களுமா யிருந்தார்களேயாகிலும், தேவரீர் திருவடிகளில் ஸம்பந்தைக நிரூபகரான ஸ்ரீவைஷ்ணவர்களை ஜந்மாதிகளை யிட்டு நிந்திப்பர்களாகில், காலாந்தரே தேசாந்தரே யன்றிக்கே அப்போதே யவ்விடம் தன்னிலே யவர்கள் தாங்கள் சண்டாளரும் இவர்களுக்கொரு போலிமாத்ரமென்னும்படி யவர்களிற் காட்டி லத்யந்த நீசராவரென்று, தத்வயாதாத்ம்ய தர்சிகளான தொண்டரடிப்பொடியாழ்வா ரருளிச் செய்கையாலே யென்கை.
வேதங்கள் அனைத்தையும் அவற்றின் அங்கங்களுடன் அத்யயனம் செய்து, அடியார்களில் மிகவும் உயர்ந்தவர்களாக இருந்து, உயர்ந்த பிறவிகளைப் பெற்றவர்களாகச் சிலர் இருக்கக்கூடும். ஆனால் ஸ்ரீரங்காநாதனாகிய உனது திருவடிகளில் உள்ள தொடர்பைக் கொண்டு மட்டுமே அறியப்படும் ஒரு சிலரை, மேலே கூறப்பட்டவர்கள் நிந்தித்தார்கள் என்றால், மற்றொரு இடம் அல்லது மற்றொரு காலம் என்ற அவசியம் இல்லாமல், அந்த இடத்திலேயே அப்போதே “சண்டாளர்கள் போன்று இவர்கள் உள்ளனர்” என்று உதாரணம் கூற இயலாதபடி, சண்டாளர்களைக் காட்டிலும் தாழ்ந்த நிலையை அடைகின்றனர். இதனை உள்ளது உள்ளபடி உரைக்கவல்லவர்களின் தலைவரான தொண்டரடிப்பொடியாழ்வார் திருமாலையில் (43) உரைத்தது காண்க.