Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 198)

மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்

த்ரிசங்குவைப்போலே கர்மசண்டாளனாய் மார்விலிட்ட யஜ்ஞோபவீதந்தானே வாராய்விடும்.

– இவ்வபசாரத்துக்குப் பலம் தக்தபடம்போலே நஷ்ட கல்பனாயிருந்து தேஹாவஸாநத்திலே யுருமாய்ந்து போமளவேயல்ல, இவ்வபசாரம் பண்ணினபோதே கர்ம சண்டாளனாய் விடுமென்கிறார் (த்ரிசங்குவைப்போலே) என்று தொடங்கி.

இப்படியாக பாகவத அபசாரத்தின் பலன் என்பது - வெந்த புடவையானது எவ்விதம் தனது உருத்தெரியாமல் போய்விடுமோ அது போன்று நாசம் அடைந்தவனாக, தனது சரீரத்தை விடுகின்றபோது உருமாய்ந்து போவது மட்டும் அல்ல. வேறு என்னவென்றால் – அத்தகைய அபசாரம் செய்த உடனேயே கர்மங்களின் காரணமாகத் தாழ்ந்த பிறவியை அடைந்து சண்டாளன் ஆகிறான் என்கிறார்.

அதாவது இக்ஷ்வாகு வம்ச்யனாயிருக்கிற த்ரிசங்குவாகிற ராஜா, தன் குல குருவாயிருக்கிற வஸிஷ்ட மஹர்ஷியை, “ஸசரீர ஸ்வர்காவாப்த்யர்த்தமாக வென்னை யஜிப்பிக்கவேணும்” என்றபேக்ஷிக்க; மஹர்ஷி, “அது நமக்கசக்யம்” என்ன; அங்கு நின்றும் தத்புத்ரர்கள் தபஸ்ஸு பண்ணுகிற விடத்திலே சென்று இச்செய்தியைச் சொல்லி அவர்கள் மிகவு மநுவர்த்தித்து, “நீங்க ளென்னை யிப்படி யஜிப்பிக்க வேணும்” என்று நிர்பந்திக்க, ”நீ துர்புத்தியா யிருந்தாய். மஹர்ஷி ‘போகாது’ என்றத்தை எங்களாலே செய்யப்போமோ” என்ன; ”தேஷாம் தத்வசநம் ச்ருத்வா க்ரோத பர்யாகுலாக்ஷரம் ஸராஜா புநரேவைதா நிதம் வசந அப்ரவீத். ப்ரத்யாக்க்யாதோ பகவதா குருபுத்ரைஸ் த்தைவச அந்யாம்கதிம் கமிஷ்யாமி ஸ்வஸ்திவோஸ்து தபோதநா:” என்று அவன் க்ருத்தனாய், “குருவானவரும் தத்புத்ரர்களான நீங்களும் மாட்டோ மென்றிகோளாகில் நான் மற்றோரிடத்திலே போகிறேன், நீங்கள் ஸுகமேயிருங்கோள்” என்ன; ”ருஷிபுத்ராஸ்து தச்ச்ருத்வா வாக்யம் கோராபிஸம்ஹிதம் சேபு: பரம ஸங்க்ருத்தாச் சண்டாளத்வம் கமிஷ்யஸி” என்று ஸ்வாசார்யனையும் தத்புத்ரர்களான தங்களையுமிவன் அவமதி பண்ணிச் சொன்ன வார்த்தையைக் கேட்டு அவர்கள் மிகவும் க்ருத்தராய், “நீ சண்டாளனாகக் கடவை” என்று சபிக்க; “அத ராத்ர்யாம் வ்யதீதாயாம் ராஜா சண்டாளதாங்கத: நீலவஸ்த்ர தரோ நீல: புருஷோ த்வஸ்தமூர்த்தஜ: சித்ரமால்யாங்க ராகாச்ச ஆயஸாபரணோபவத்” என்கிறபடியே அநந்தரம் அவன் கர்மசண்டாளனாய் விட்டானிறே. அப்படியே, பாகவதாபசாரம் பண்ணினபோதே கர்மசண்டாளனாய், ப்ரஹ்மவர்ச்சஸ்த்வத்துக்குறுப்பாக மார்பிலிட்ட யஞ்ஞோபவீதந்தான் சண்டாள வேஷத்துக் கடைத்த வாராய்விடுமென்கை. அங்கு சாப ஸித்தமாகையாலே ப்ரத்யக்ஷமாய்த்து; இங்கு சாஸ்த்ர ஸித்தமாகையாலே, ஜ்ஞாந த்ருஷ்டி விஷயமாக விருக்கும். “அநாசாராந் துராசாராநஜ்ஞாத்ருந் ஹீந ஜந்மந: மத்பக்தாந் ச்ரோத்ரியோ நிந்தந் ஸத்யச் சண்டாளதாம் வ்ரஜேத்” என்னக்கடவதிறே.

இக்ஷ்வாகு வம்சத்தில் வந்த திரிசங்கு என்ற அரசன் தனது குலகுருவான வசிஷ்ட முனிவரிடம் சென்று, “இந்தச் சரீரத்துடன் நான் ஸ்வர்க்கம் செல்ல ஒரு யாகம் இயற்ற நீங்கள் உதவவேண்டும்”, என்று கேட்டான். இதனைக் கேட்ட அந்த முனிவர், “இது நம்மால் செய்யத்தக்கது அல்ல”, என்று கூறிவிட்டார். உடனே அந்த அரசன் அங்கிருந்து புறப்பட்டு அவரது புத்திரர்கள் தவம் இயற்றுகின்ற இடத்திற்குச் சென்றான். அவர்களிடம் தான் முனிவரிடம் உரைத்த செய்தியையும், முனிவர் தனக்கு உரைத்த பதிலையும் கூறியவனாக, அவர்களிடம் தொடர்ந்து, “நான் இவ்விதம் ஒரு யாகம் இயற்ற நீங்கள் உதவவேண்டும்”, என்றான். இதனைக் கேட்ட அவர்கள், “நீ துர்புத்தி கொண்டவனாக உள்ளாய். மஹரிஷி இயலாது என்று மறுத்த ஒன்றை எங்களால் செய்ய இயலுமோ?”, என்று உரைத்தனர். இந்த இடத்தில் திரிசங்கு அவர்களிடம் பின்வரும் வரிகளில் உள்ளபடி உரைத்தான்: இராமாயணம் பாலகாண்டம் (58-6) - தேஷாம் தத்வசநம் ச்ருத்வா க்ரோத பர்யாகுலாக்ஷரம் ஸராஜா புநரேவைதா நிதம் வசந அப்ரவீத். ப்ரத்யாக்க்யாதோ பகவதா குருபுத்ரைஸ் த்தைவச அந்யாம்கதிம் கமிஷ்யாமி ஸ்வஸ்திவோஸ்து தபோதநா: – ஆசார்யரும் அவரது புத்திரர்களாகிய நீங்களும் எனது வேண்டுகோளை மறுத்துவிட்டீர்கள்; உங்களால் நான் தள்ளப்பட்டேன்; தவத்தில் சிறந்தவர்களே! உங்களுக்கு நன்மை ஏற்படட்டும். நான் வேறு புகலிடம் தேடிச் செல்கிறேன் – என்றது காண்க. அதாவது அந்த அரசன் வசிஷ்டரின் புத்திரர்களுடைய கோபத்துடன் கூடிய சொற்களைக் கேட்டு, அவர்களிடம் மீண்டும் உரைக்கத் தொடங்கினான். மேலே உள்ள இராமாயண வாக்கியங்களின்படி அவன் அவர்களிடம், “குருவாக உள்ளவரும், அவரது புத்திரர்களாக உள்ளவர்களும் ஆகிய நீங்கள் மறுத்து விட்டீர்கள். ஆகவே நான் வேறு இடம் தேடிச்செல்கிறேன். நீங்கள் சுகமாக இருப்பீர்களாக”, என்று உரைத்தான். இராமாயணம் பாலகாண்டம் (58-8) - ருஷிபுத்ராஸ்து தச்ச்ருத்வா வாக்யம் கோராபிஸம்ஹிதம் சேபு: பரம ஸங்க்ருத்தாச் சண்டாளத்வம் கமிஷ்யஸி – அவனுடைய உள்ளத்தில் இருந்த வெறுப்பை வெளிப்படுத்தும் வகையில் இருந்த அந்தச் சொற்களைக் கேட்ட வசிஷ்டரின் புத்திரர்கள் மிகவும் கோபத்துடன், “நீ சண்டாளனாகப் போகக்கடவாய்”, என்று சபித்தனர் - என்று கூறியது போன்று, தனது ஆசார்யனையும் அந்த ஆசார்யனின் புத்திரர்களாகிய தங்களையும் அவன் அவமரியாதை செய்யும்படியாகக் கூறிய சொற்களைக் கேட்டு மிகுந்த கோபம் கொண்டவர்களாக, “நீ சண்டாளனாக ஆவாய்”, என்று சபித்தனர். உடனேயே இராமாயணம் பாலகாண்டம் (58-9,10) - அத ராத்ர்யாம் வ்யதீதாயாம் ராஜா சண்டாளதாங்கத: நீலவஸ்த்ர தரோ நீல: புருஷோ த்வஸ்தமூர்த்தஜ: சித்ரமால்யாங்க ராகாச்ச ஆயஸாபரணோபவத் - அதன் பின்னர் அந்தச் சாபம் பெற்ற இரவுப்பொழுது கழிந்த பின்னர் அந்த அரசன் சண்டாளனாக மாறியிருந்தான்; கரியசரீரம் மற்றும் கரிய ஆடை அணிந்தவனாக, சிறிய தலைமுடி கொண்டவனாக, பிணச்சாம்பல் பூசப்பட்டவனாக, இரும்பால் செய்யப்பட்ட ஆபரணங்கள் அணிந்தவனாக நின்றான் - என்று கூறுவதற்கு ஏற்ப அவன் உடனேயே கர்மசண்டாளன் ஆகிவிட்டான். ஆக பாகவத அபசாரம் செய்தபோதே கர்மசண்டாளனாக மாறுதலும், ப்ரஹ்ம தேஜஸ் அளிப்பதான மார்பில் உள்ள யஜ்ஞோபவீதம் சண்டாள வேஷத்திற்கு ஏற்ற கயிர் போன்று மாறுவதும் நிகழும். திரிசங்கு விஷயத்தில் சாபம் மூலம் சண்டாளத்தன்மை கிட்டியதால் நம்மால் காண இயலும்படி அவன் சண்டாளன் ஆனான்; ஆனால் பாகவத அபசாரம் குறித்த விஷயத்தில் சாஸ்த்ர விதிகள் கூறுவதால் ஞானக்கண்களால் மட்டுமே கர்மசண்டாளனாக ஆனதைக் காண இயலும். ப்ரஹ்மாண்டபுராணம் - அநாசாராந் துராசாராநஜ்ஞாத்ருந் ஹீந ஜந்மந: மத்பக்தாந் ச்ரோத்ரியோ நிந்தந் ஸத்யச் சண்டாளதாம் வ்ரஜேத் – ஆசாரத்தைக் கைவிட்டவர்களாகவும், தவறான ஆசாரத்தைக் கைக்கொண்டவர்களாகவும் எனது பக்தர்கள் இருக்கலாம்; ஆயினும் அவர்களை ஒரு அந்தணன் நிந்தித்தால் உடனேயே அவன் சண்டாளத்தன்மையை அடைந்து விடுகிறான் – என்றது காண்க.