Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 196)

மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்

இதுதான் அர்ச்சாவதாரத்தி லுபாதாந ஸ்ம்ருதியிலுங்காட்டில் க்ரூரம்.

இதினுடைய க்ரௌர்யம் தன்னை யருளிச்செய்கிறார் (இதுதான்) என்று தொடங்கி.

அடியார்களின் பிறவி பற்றி ஆராய்வதன் மூலம் ஏற்படவல்ல கொடுமை பற்றி இந்தச் சூர்ணையில் அருளிச்செய்கிறார்.

(இதுதான்) என்று – பாகவதஜந்ம நிரூபணத்தைப் பராமர்சிக்கிறது. (அர்ச்சாவதாரத்தி லுபாதாந ஸ்ம்ருதியாவது) ஆச்ரிதருகந்ததேதேனுமொரு த்ரவ்யத்தைத் தனக்குத் திருமேனியாகக் கொண்டு அதிலே அப்ராக்ருத திவ்ய விக்ரஹத்தில் பண்ணும் விருப்பத்தைப் பண்ணி எழுந்தருளியிருக்கிற வைபவத்தை யறியாதே, நிகர்ஷ புத்தி பண்ணி விக்ரஹோபாதாந த்ரவ்ய மின்னதன்றோவென்று சிந்திக்கை; அதிலும் காட்டில் க்ரூரமாகையாவது – அத்தைப் பற்றவும் ஸர்வேச்வரனுக்கு அத்யந்த நிக்ரஹ ஹேதுவாகை.

”இதுதான்” என்பதன் மூலம் பாகவதர்களின் பிறவியை ஆராய்தல் என்பது கூறப்பட்டது. “அர்ச்சாவதாரத்தி லுபாதாந ஸ்ம்ருதியாவது” என்றால் என்ன? ஸர்வேச்வரன் செய்வது என்னவென்றால் - அவனது அடியார்கள் அவன் மீது மிகவும் ஆசை கொண்டு, ஏதேனும் ஒரு வஸ்துவை ஸர்வேச்வரனின் திருமேனியாகவே எண்ணக்கூடும்; ஸர்வேச்வரன் தனது அந்த உலகில் உள்ள தன் திருமேனி மீது எத்தகைய விருப்பம் கொண்டபடி உள்ளானோ அதே விருப்பத்துடன் அடியார்கள் வைத்துள்ள வஸ்துவையே தனது திருமேனி என்று கொண்டு அதில் எழுந்தருளுகிறான். இத்தகைய நிலையில் உள்ள அந்த வஸ்துவின் மேன்மையை அறியாமல், “இந்த விக்ரஹம் செய்யப்படுவதற்கு முன்னர் இந்தப் பொருள் இன்ன உலோகம் அல்லவோ?” என்று எண்ணுவதே இதன் பொருள் ஆகும். இதனைக் காட்டிலும் கொடுமை என்னவென்றால் - இப்படி அந்த வஸ்துவைப் பற்றி எண்ணுவதைக் காட்டிலும், ஸர்வேச்வரனின் மிகுதியான தண்டனைக்குக் காரணமாகவே “அடியார்களின் பிறவி பற்றி ஆராய்தல்” என்ற செய்கை உள்ளது என்று கருத்து.