Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 192)
மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்
”ஈச்வரனவதரித்துப் பண்ணின ஆனைத்தொழில்களெல்லாம் பாகவதாபசாரம் பொறாமை” என்று ஜீயரருளிச்செய்வர்.
பாகவதாபசாரம் பண்ணினால் ஈச்வரன் அஸஹமாநனாய் உசிததண்டம் பண்ணுமென்னுமத்தை ஆப்தவசநத்தாலே யருளிச்செய்கிறார் (ஈச்வரன்) என்று தொடங்கி.
பாகவதர்களிடம் அபசாரம் செய்தால், அதனைக் காணும் ஈச்வரன் பொறுத்துகொள்வதில்லை. அதற்கு ஏற்றபடியான தண்டனையை அளிக்கிறான் என்பதை நம்பத்தகுந்தவர்களின் சொற்கள் கொண்டு இந்தச் சூர்ணையில் அருளிச்செய்கிறார்.
– அதாவது, ஸங்கல்ப மாத்ரத்தாலே ஸர்வத்தையும் நிர்வஹிக்கவல்ல ஸர்வ சக்தியான ஸர்வேச்வரன் தன்னையழியமாறி இதர ஸஜாதீயனா யவதரித்தும் கை தொடானாய் நின்று செய்த ஹிரண்ய ராவணாதி நிரஸந ரூபாத்யதிமாநுஷ சேஷ்டிதங்களெல்லாம், ப்ரஹ்லாதன் மஹர்ஷிகள் தொடக்கமான அவ்வோபாகவத விஷயங்களில் அவ்வவர் பண்ணின வபசாரம் ஸஹியாமையாலே யென்று ஆப்ததமரான நஞ்ஜீய ரருளிச்செய்வரென்கை.
தன்னுடைய நினைவு ஒன்றின் மூலம் மட்டுமே அனைத்தையும் நடத்தவல்லவனாகிய, அனைத்து வலிமையும் கொண்டவனாகிய ஸர்வேச்வரன் தன்னுடைய தன்மைகள் மற்றும் உருவத்தை மாற்றியபடி, பல குலங்களில் வந்து அவதரிக்கிறான். அப்படி அவதரித்ததுடன் மட்டுமே அல்லாமல், நினைவினாலேயே அனைத்தையும் செய்யவல்ல அவன், தனது திருக்கரங்களால் இரணியன் மற்றும் இராவணன் ஆகியோர்களை அழித்தான். இப்படியாக மனிதச் செயல்களுக்கு அப்பாற்பட்டதான செயல்கள் செய்தான். ஏன் என்றால் – அவர்கள் இருவரும் ப்ரஹ்லாதன் மற்றும் பல மஹரிஷிகளுக்குச் செய்த எல்லையற்ற அபசாரங்களைக் கண்டு பொறுத்துக் கொள்ள இயலாத காரணத்தினால்தான் என்பதை, நம்பத்தகுந்தவர்களில் மிகவும் உயர்ந்தவரான ஸ்வாமி நஞ்ஜீயர் அருளிச்செய்தார்.