Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 191)
மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்
மடிபுடவை வெந்தால் உண்டையும் பாவுமொத்துக் கிடக்கும்; காற்றடித்தவாறே பறந்துபோம்.
தக்தபடத்தின்படிதன்னை தர்சிப்பிக்கிறார் மேல் (மடி) என்று தொடங்கி.
வெந்த புடவையின் தன்மை எப்படிப்பட்டது என்பதை அருளிச்செய்கிறார்.
– அதாவது, தட்டிமடித்திருக்கிற புடவையானது தட்டுருவவெங்கும் வெந்திருக்கச் செய்தே உண்டையும் பாவும் முன்புபோலே யொத்திருக்கும். ஒரு காற்று வந்து சிதறவடித்தவாறே யுருக்காணவொண்ணாதபடி பாறிப் பறந்து போமென்கை. அப்படியே, அபசாராக்நி தக்தராய் வைத்து நாமரூபங்களோடே யிருக்கிறவர்களும் பகவந் நிக்ரஹ விஷேத்தாலே பாறவடியுண்டு உருமாய்ந்து போவர்களென்று கருத்து.
– மடிப்புடவை என்றால் மடித்து வைக்கப்பட்ட துணி ஆகும். மடித்து வைக்கப்பட்ட நிலையிலேயே தீயில் எரிந்து போன ஒரு துணியை எடுத்து அதன் மடிப்பு கலையும்படி பிரித்துப் பார்த்தால், தறியில் உள்ள நூலும், தறியின் அடிப்பாகத்தில் உள்ள நூலும் எவ்விதம் சேர்த்திருக்குமோ (ஒத்தபடி இருக்குமோ) அது போன்றுதான் காணப்படும். ஆனால் அப்போது பலமாக ஒரு காற்று வீசும்போது துணி என்ற வடிவமே சிதைந்து போகும்படி, சிதறி, பறந்துவிடும். அது போன்று அபசாரம் என்ற தீயினால் எரிக்கப்பட்டவர்கள், திருமண் மற்றும் தாஸன் என்பதான அடையாளங்களுடன் உள்ளபோதிலும், ஸர்வேச்வரனின் தண்டனை காரணமாக உருமாறிச் செல்வார்கள் என்று கருத்து.