Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 190)

மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்

நாமரூபங்களையுடையராய் பாகவதவிரோதம் பண்ணிப்போருமவர்கள் தக்தபடம் போலே.

ஆனால் பாகவத விரோதம் விளைந்தபோதே ஸ்வரூப நாசம் பிறக்குமாகில், பாகவத விரோதத்தைப் பண்ணிப் போராநிற்கச்செய்தே ஸ்வரூபாநுரூபமான நாமரூபங்களையுடையராய் கொண்டிருக்கிறபடி யெங்ஙனே யென்ன வருளிச்செய்கிறார் (நாம ரூபங்களை) என்று தொடங்கி.

– பாகவத அபசாரம் ஒன்றே ஸ்வரூபத்திற்கு அழிவை ஏற்படுத்தப் போதுமானது. இப்படி உள்ளபோது, பாகவதர்களிடம் விரோதம் பாராட்டுவது மட்டும் அல்லாமல், தங்களது ஸ்வரூபத்திற்கு ஏற்றபடி “தாஸன்” என்ற பெயரையும், திருமண் உள்ளிட்ட பலவற்றையும் தரித்துக்கொண்டவர்கள் உள்ள நிலை என்ன என்ற கேள்விக்கு விடை அருளிச்செய்கிறார்.

– அதாவது, வைஷ்ணவத்வ சிஹ்நமான தாஸ்ய நாமத்தையும் ததநுகுணமான ரூபத்தையுமுடையராய்க் கொண்டு, உள்ளொரு பசையின்றிக்கே அஹங்காராதி வச்யராய் பாகவதர்கள் திறத்திலே விரோதத்தைப் பண்ணிப் போருமவர்கள், உருக்குலைய வெந்திருக்கச்செய்தே உருவுடைத்துப்போலே தோற்றிருக்கும் தக்த படத்தோடு ஸத்ருசரென்கை.

வைஷ்ணவர்கள் என்றுள்ள தன்மைக்கு ஏற்றபடி “தாஸன்” என்ற பெயரை ஏற்றுக்கொள்ளுதல், அதற்கு ஏற்றபடியான ரூபத்தையும் கொள்ளுதல் (பன்னிரண்டு திருமண்காப்பு தரித்தல் போன்றவை) ஆகியவற்றை ஒரு சிலர் செய்யக்கூடும். ஆனாலும் தங்கள் மனதில் வைஷ்ணவத்தில் எந்தவிதமான ஈடுபாடும் இல்லாமல், அஹங்காரம் போன்ற பலவற்றில் ஊறியவர்களாக, பாகவதர்களிடம் விரோதம் பாராட்டியபடி இருப்பார்கள். இவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்றால், உள்புறம் நன்றாகத் தீயில் வெந்து போய், ஆனால் புடவை என்ற தோற்றம் மாறாமல், மடிப்பு கலையாமல் உள்ள “மடித்த வெந்த புடவை” போன்றவர்கள் ஆவர்.