Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 189)

மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்

இவையிரண்டும் ஸ்வரூபேண முடிக்குமளவன்றிக்கே பாகவத விரோதத்தையும் விளைத்து முடிக்கும்.

(தன்னைத்தானே) என்கிற வாக்யத்திள் ஸ்வரூப நாசகங்களாகச் சொன்ன அஹங்காரத்தினுடையவும் விஷயங்களினுடையவும் க்ரௌர்யத்தைத் தனித்தனியே யருளிச்செய்தார் கீழ்; உபயத்துக்கு முள்ளதொரு க்ரௌர்ய விசேஷத்தை தந்த்ரேண வருளிச் செய்கிறார் மேல் (இவை) என்று தொடங்கி.

– ”தன்னைத்தானே” என்றுள்ள சூர்ணை 180ல், ஆத்ம ஸ்வரூபத்தை அழிப்பதாக உள்ள அஹங்காரத்தின் கொடுமை பற்றியும், புலன்களின் கொடுமை பற்றியும் தனித்தனியாக உரைத்தார். இனி இவை இரண்டிற்கும் உள்ள கொடுமை குறித்த விஷயத்தை ஒரே சூர்ணையில் அருளிச்செய்கிறார்.

– அதாவது, உக்த தோஷ யுக்தமான விவ்வஹங்காரமும் விஷய ப்ராவண்யமுமாகிற விரண்டும், தானானவாகாரத்தாலே நின்று நசிப்பிக்குமளவன்றிக்கே, பாகவதாபசாரமாகிற மஹாநர்த்தத்தையும் விளைத்து ஸ்வரூபநாசத்தைப் பண்ணுமென்கை. (ஸ்வரூபேண) என்றது, ஸ்வேநரூபேண வென்றபடி. அஹங்காராதிகளிலே ப்ரவணனானாலுள்ள வளவன்றிறே பாகவதாபசாரம் பண்ணினாலுள்ள பகவந் நிக்ரஹம்.

இதுவரை கூறப்பட்டு வந்த தோஷங்களுடன் கூடிய அஹங்காரம் மற்றும் புலன்களின் இன்பங்கள் மீது விருப்பம் ஆகிய இரண்டும், ஆத்மஸ்வரூபத்தை அழிப்பதுடன் மட்டும் நிற்பதில்லை. அவை பாகவத அபசாரம் என்பதான மிகப் பெரிய கேட்டினையும் ஏற்படுத்தி ஆத்மாவை அழித்துவிடும். ஸ்வரூபேண என்பதன் மூலம் தாமான தன்மை என்பது கூறப்பட்டது. பாகவத அபசாரம் செய்தால் ஏற்படும் பகவானின் தண்டனை என்பது, அஹங்காரம் மற்றும் விஷயங்களின் மீது கொள்ளும் ஆசை என்பதான தண்டனையைக் காட்டிலும் கொடியது என்று கருத்து.