Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 188)

மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்

கேவல நாஸ்திகனைத் திருத்தலாம்; ஆஸ்திக நாஸ்திகனை யொருநாளும் திருந்த வொண்ணாது.

த்ருஷ்டாந்தபூதரான விவர்களிருவர்க்கும் விசேஷமேதென்ன வருளிச் செய்கிறார் (கேவல) இத்யாதியாலே.

– உவமையாக கூறப்பட்ட இந்த இருவருக்கும் உள்ள விசேஷம் என்ன என்ற கேள்விக்கு விடை அருளிச்செய்கிறார்.

– அதாவது, சாஸ்த்ரத்தை யில்லையென்று, தோற்றிற்றுச் செய்து திரிகிறவனை சாஸ்த்ராஸ்திக்யம் பிறக்கைக் குறுப்பான உபதேசங்களைப் பண்ணி விதிநிஷேத வச்யனாம்படி திருத்தலாம்; சாஸ்த்ராஸ்திக்யமுடையனாய் தத்ப்ரதிபாத்ய ப்ரமேயங்களையும் அறிந்துவைத்து, பாப பயமின்றியே, நாஸ்திகவத் ஸ்வைரம் ஸஞ்சரிக்கிறவனைச் சொல்லி யறிவிக்கத்தக்க தொன்றில்லாமையாலே உபதேச முகத்தா லொருநாளும் திருத்தவொண்ணாதென்கை. இத்தால் – அஜ்ஞனான விஷயப்ரவணனை, விஷயதோஷாத்யுபதேச முகத்தாலே விரக்தனாம்படி திருத்தலாம்; ஜ்ஞாநவானான விஷய ப்ரவணனை, விஷயதோஷாதிகளை வ்யக்தமாக வறிந்துவைத்தே ப்ரவர்த்திக் கிறவனாகையாலே ததுபதேசத்தா லொருநாளும் திருத்த வரிதென்றதாய்ந்து. “அஜ்ஞஸ் ஸுகமாராத்யஸ் ஸுகதர மாராத்யதே விசேஷஜ்ஞ:, ஜ்ஞாநலவதுர்விதத்தம் ப்ரஹ்மாபி நரம் நரஞ்ஜபதி” என்னக்கடவதிறே. ஆகையால் அவனிலுமிவன் நிக்ருஷ்டதமனென்று கருத்து.

– ”சாஸ்த்ரங்களே இல்லை” என்று கூறியபடி, தனக்குத் தோன்றியபடி திரிபவனை, நாம் சாஸ்த்ரங்களில் நம்பிக்கை ஏற்படும்படிச்செய்யலாம்; எப்படி என்றால் தகுந்த உபதேசங்கள் செய்து, சாஸ்த்ரங்களில் விதிக்கப்பட்டவை மற்றும் விலக்கப்பட்டவை குறித்து உபதேசம் செய்து அந்த நாஸ்திகனைத் திருத்திவிடலாம். ஆனால் சாஸ்த்ரங்களே தகுந்த ப்ரமாணங்கள் என்ற அறிவு கொண்டவனாக, அவற்றில் கூறப்படும் பாவங்கள் பற்றி எந்தவிதமான அச்சமும் இல்லாமல், நாஸ்திகன் போன்று தனது மனதின் வழியே திரிகின்றவனைச் சொல்லித் திருத்த ஏதும் இல்லாத காரணத்தினால், எந்த உபதேசம் மூலமும் அவனைத் திருத்த இயலாது. ஆக அறிவில்லாத காரணத்தினால் புலன்களின் இன்பங்கள் மீது விருப்பம் கொண்டு திரிபவனை, அவற்றில் உள்ள தோஷங்கள் போன்றவற்றை அவனுக்கு விளங்கும்படி எடுத்துக்கூறி, இதனால் அவன் அந்த விஷயங்களில் வைராக்யம் கொண்டவனாக ஆகும்படிச் செய்யலாம். ஆனால் அனைத்தும் தெரிந்திருந்தும் புலன்களின் இன்பங்களின் பின்னே செல்பவன், அவற்றின் தோஷங்கள் குறித்து விளக்கமாக உணர்ந்தவன் என்பதால் எந்தவிதமான உபதேசம் மூலமும் அவனை ஒருநாளும் திருத்த இயலாது. அஜ்ஞஸ் ஸுகமாராத்யஸ் ஸுகதர மாராத்யதே விசேஷஜ்ஞ:, ஜ்ஞாநலவதுர்விதத்தம் ப்ரஹ்மாபி நரம் நரஞ்ஜபதி - ஏதும் அறியாமல் உள்ளவன் எளிதாக சாஸ்த்ர ஞானத்தைப் பெறும் தகுதி கொண்டவன்; ஞானம் உள்ளவன் மிகவும் எளிதாக அறியத்தக்கவன்; சிறியதான அற்ப ஞானம் கொண்டவன் கர்வம் உள்ளவன் என்பதால் அவனை நான்முகனாலும் திருத்த இயலாது – என்றது காண்க.