Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 187)
மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்
அஜ்ஞனான விஷயப்ரவணன் கேவல நாஸ்திகனைப்போலே; ஜ்ஞாநவானான விஷயப்ரவணன் ஆஸ்திக நாஸ்திகனைப்போலே.
ஏவம்பூத விஷய தோஷத்தை யறியாமையாலே யிதிலே ப்ரவணனானமவனுக்கும், இத்தை யறிந்துவைத்தே ப்ரவணனானமவனுக்கும் வாசியை யருளிச்செய்கிறார் மேல் (அஜ்ஞனான) என்று தொடங்கி.
– இதுவரை கூறப்பட்டதான ஐந்து புலன்களின் மூலம் அடையப்படுகின்ற இன்பங்கள் என்பதன் தோஷத்தினை அறிந்து கொள்ளாமல், அவற்றின் மீது விருப்பம் கொள்பவன், மற்றும் இவற்றின் தோஷங்களைப் பற்றி நன்றாக அறிந்த பின்னரும் அவற்றின் மீது ஆசை கொள்பவன் ஆகிய இருவருக்கும் இடையே உள்ள வேறுபாட்டினை இந்தச் சூர்ணை மூலம் அருளிச்செய்கிறார்.
(அஜ்ஞனான விஷய ப்ரவணனாகிறான்) – விஷயங்களினுடைய தோஷ பூயஸ்தையையும் ஸ்வரூப விருத்தத்தையையும் அறியாதே, அவற்றை யாசைப்பட்டு மேலே விழுகிறவன். (கேவல நாஸ்திகனாகிறான்) – தர்மாதர்ம பரலோக சேதநேச்வராதிகளுக்கு ப்ரதிபாதகமான சாஸ்த்ரத்தில் ப்ராமாண்ய புத்தியொன்று மின்றிக்கே ஸ்வைர ஸஞ்சாரபரனாய் திரிகிற சுத்த நாஸ்திகன். (ஜ்ஞாநவானான விஷய ப்ரவணனாகிறான்) – விஷயங்களினுடைய தோஷதுஷ்டதையையும் ஸ்வரூப விருத்ததையையு மறிந்துவைத்தே, அவற்றை விரும்பி மேல்விழுகிறவன். (ஆஸ்திக நாஸ்திகனாகிறான்) – தர்மாதர்மாதி ஸகல ப்ரதிபாதகமான சாஸ்த்ரத்தை ப்ரமாண மென்றிசைகையாலே யாஸ்திகனென்று சொல்லலாம்படி யிருப்பானாய். அந்த சாஸ்த்திர மர்யாதையிலடங்காதே தோற்றிற்றுச் செய்து திரிகையாலே நாஸ்திக ஸமனாயிருக்குமவன்.
“அஜ்ஞனான விஷய ப்ரவணனாகிறான்” என்பது யார்? புலன்களின் மூலம் கிட்டக்கூடிய இன்பங்கள் அனைத்தும் நிலையாக இல்லாதவை என்னும் தோஷம் கொண்டுள்ளதையும், அவை தனது ஆத்மாவின் ஸ்வரூபத்திற்கு விரோதமாக உள்ளதையும் அறியாமல், அவற்றின் மீது ஆசை கொண்டு, அவற்றில் ஈடுபட்டபடி உள்ளவன் ஆவான். “கேவல நாஸ்திகனாகிறான்” என்பது யார்? தர்மம், அதர்மம், பரலோகம், சேதனர், ஈச்வரன் உள்ளிட்ட பலவற்றையும் குறித்து உணர்த்துகின்றதான சாஸ்த்ரங்களில் எந்தவிதமான புத்தியும் இல்லாமல் தனது விருப்பத்தின்படியே திரிகின்ற முழு நாஸ்திகன் ஆவான். அதாவது புலன்களின் இன்பங்கள் பற்றிய தோஷம் அறியாமல் அவற்றில் ஈடுபடுபவன், இத்தகைய நாஸ்திகன் போன்றவன் ஆவான் என்று கருத்து. “ஜ்ஞாநவானான விஷய ப்ரவணனாகிறான்” என்பது யார்? புலன்களின் மூலம் கிட்டுகின்ற இன்பங்கள் தோஷம் நிறைந்தவை என்பதை அறிந்திருந்தும், அவை ஆத்மாவின் ஸ்வரூபத்திற்கு ஏற்பவை அல்ல என்பதை அறிந்திருந்தும், அவற்றில் ஈடுபட்டபடி உள்ளவன் ஆவான். இவன் எப்படிப்பட்டவன் என்பதை அடுத்து கூறுகிறார். “ஆஸ்திக நாஸ்திகனாகிறான்” – தர்மம் எது, அதர்மம் எது என்பதைத் தெளிவாக உரைக்கின்ற சாஸ்த்ரங்களை ப்ரமாணம் என்று இவன் ஏற்றுக் கொள்வதால் ஆஸ்திகன் என்று உரைக்கலாம்; ஆனால் அந்த சாஸ்த்ரங்களில் உரைக்கப்பட்டபோதிலும் அவற்றை மதிக்காமல், புலன்களின் இன்பங்கள் குறித்த விஷயத்தில் தனக்குத் தோன்றியபடி திரிவதால் நாஸ்திகனுக்கு ஒத்தவன் ஆகிறான்.